top of page

கர்த்தருடைய மகிமை வெளிப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?

சகோ. எட்வின் கார்டர் (சோஹார் -  ஓமான்) 

வேதம் சொல்லுகிறது, முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் – ஆகாய் 2:9.

பிந்தின ஆலயத்தை மகிமைப்படுத்துகிற காரியங்கள்...

1.கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட வேண்டும்

2.கர்த்தருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்க வேண்டும்

3.கர்த்தருக்குப் பயப்பட வேண்டும்

4.கர்த்தருக்குள் திடன் கொள்ள வேண்டும்

5.கர்த்தருடைய வேலையைச் செய்ய வேண்டும்

6.கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாய் இருக்க வேண்டும். ஆகாய் 1 மற்றும் 2 ஆம் அதிகாரம்

முன்னுரை: ஒவ்வொரு மனுஷனுடைய துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு சம்பூரணமாய் இருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய சிந்தையாயிருக்கிறது. ஒரு காரியத்தை சம்பூரணமாய் அதாவது ஆரவாரமாய் தொடங்கின மனுஷன் அந்த காரியத்தை சரியாக முடிக்க திராணியில்லாமல் போகுமானால் உலகம் அவனை பரிகாசம் செய்யுமல்லவா? இதேபோலத்தான் ஒவ்வொரு மனுஷனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் காணப்படுகிறது.

இரட்சிக்கப்படும் போது பலவிதமான காரியங்களை கர்த்தருக்காக செய்வேன் என்று பலவிதமான உறுதிமொழிகளை கர்த்தருக்குச் செய்து கொடுப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் தங்கள் உறிதிமொழிகளையெல்லாம் மறந்து இந்த உலகத்திற்கு சேவை செய்கிறவர்களாய் மாறிப் போகிற அவலட்சணமான நிலைமையை பார்க்க முடிகிறது.

உதாரணாமாக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட எருசலேம் ஆலயம் அதன் பிறகு பல அன்னிய அரசர்களால் சூறையாடப்பட்டது, கொள்ளயடிக்கப்பட்டது மற்றும் இடிக்கப்பட்டது என்று வேதத்தில் பார்க்கிறோம். இதற்கு காரணம் யார் என்று பார்ப்பீர்களானால், தேவனுடைய ஜனம் என்று சொல்லப்பட்ட இஸ்ரவேலரே ஆவார். இப்படியாக தொடர்ந்து இந்த காரியங்கள் நடைபெற்று வருவதற்கு காரணம் என்னவென்று பார்ப்பீர்களானால், யாரிடத்திலும் தேவ மகிமை காணப்படாததே ஆகும் என்று வேதம் சொல்லுகிறது.

பல தேவ மனிதர்களுடைய வாழ்க்கையிலும் இத்தகைய காரியங்கள் சம்பவிப்பதை நாம் அறிகிறோம். ஏன் தேவ மனிதர்களிடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ வேண்டும்.

பென்னிகின் என்கிற ஒரு தேவ மனிதர் இப்படியாக எழுதியிருந்தார், அவருடைய கன்வென்ஷன் கூட்டத்தில் அளவில்லாமல் தேவ மகிமை இறங்கினதாம். ஒரு தடவை அவர் தன்னுடைய கன்வென்ஷன் கூட்டத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாராம். இப்படியாக அவர் ஆயத்தமாகி கொண்டிருந்த வேளையில் திடீரென அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அனேக நாட்களுக்குப் பின்பு அவரைத் தேடி வந்தாராம். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் பென்னிகின் ஐயா அவரோடு சமயத்தை செலவிட விரும்பினாராம். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இடைப்பட்டு, கன்வென்ஷன் கூட்டத்திற்காக ஜெபிக்கும்படி ஏவினாராம்.

பென்னிகின் ஆண்டவரைப் பார்த்து சொன்னாராம், அனேக நாட்களுக்குப் பிறகு என்னுடைய நண்பர் என்னைத் தேடி வந்திருக்கிறார், ஆகவே சிறிது நேரம் அவருடன் இருக்க விரும்புகிறேன் என்று சொன்னாராம். உடனே பரிசுத்த ஆவியானவரும் அதைக் குறித்து ஒன்றுமே சொல்லவில்லை.

அடுத்த நாள் கன்வென்ஷன் கூட்டத்திற்கு சென்ற பென்னிகின் ஐயாவுக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம் எப்படியென்றால் அந்த கூட்டத்தில் எந்தவொரு அற்புதமும் நடக்கவில்லையாம். அதாவது தேவ மகிமை அந்த கூட்டத்தில் வெளிப்படவில்லை என்பதை இவர் நன்றாக அறிந்து கொண்டாராம்.

எனக்குப் பிரியமான ஜனங்களே இந்த தேவ மகிமையை இவர் இழப்பதற்குக் காரணம் கீழ்ப்படியாமையே ஆகும். இன்று அனேகர் சபைகளில் தேவ மகிமையை பார்க்க முடியாமல் போவதற்குக் காரணம் இதே போன்று தேவனுக்குப் பிரியமில்லாத அனேக காரியங்கள் நம்மிடத்தில் காணப்படுவதே ஆகும் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆகவேதான் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு ஜனங்கள் எந்த காரியத்தையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறார். அப்பொழுதுதான் கர்த்தர் அவர்களுடைய ஆலயத்தை மகிமைப்படுத்த முடியும் என்கிற காரியத்தை நாம் ஆகாய் புஸ்தகத்தில் வாசிக்கிறோம். இத்தகைய செய்தியையே உங்களுக்கு மறைவான மன்னாவில் உணவாக கொடுக்க விரும்புகிறேன்.

முதலாவது: கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட வேண்டும்

கர்த்தர் சொல்லுகிறார், திரளாய் விதைக்கிறீர்கள் ஆனால் கொஞ்சமாய் அறுக்கிறீர்கள். நீங்கள் புசித்து திருப்தியாகவில்லை, குடித்தும் பரிபூரணமடையவில்லை, நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை. கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். இதற்குக் காரணம் என்னவென்றால்,

தேவனுடைய ஆலயங்கள் ஒருபக்கம் இடிக்கப்பட்டும், பாழாயும் போய் கொண்டிருப்பதை நம்முடைய அரணான வீட்டில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் [ ஆகாய் 1:4 ]. இந்த வசனத்தின்படிதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எப்பொழுதும் நம்முடைய தேவைகளை மாத்திரம் கர்த்தரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர, உலகத்தில் மரித்துக் கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக ஒருபோதும் ஜெபம் செய்யவதில்லை. இன்று அனேக ஊழியக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அநியாயமாய் கொல்லப்படுகிற செய்தியை கேட்கிறோம், சிலர் அதை நேரடியாகவும் பார்க்கிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்கிறார்கள். அத்தகைய காரியத்தைக் குறித்து வருத்தம் அடைகிறார்களே தவிர ஒருபோதும் அதற்காக கண்ணீர் வடித்து ஜெபம் செய்வதில்லை. இப்படி இருக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் தேவ மகிமை எப்படி வரும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

பாருங்கள் நெகேமியா என்கிற தேவ மனுஷனைப் பற்றி நாம் வேதத்தில் படித்திருக்கிறோம். அந்த மனுஷன் இராஜ அரண்மனையில் இருந்த போதும் அவர் தன்னுடைய சொகுசான வாழ்க்கையைக் குறித்து சந்தோஷப்படாமல் தம்முடைய ஜனத்தைக் குறித்தும் தேவனுடைய ஆலயத்தைக் குறித்தும் அவர் எடுத்துக் கொண்ட பக்தி வைராக்கியத்தை பின்வருமாறு பார்க்கலாம். வேதம் சொல்லுகிறது, நெகேமியா தன் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும் வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வருகிறார்கள் அவர்களிடம் தம்முடைய ஜனத்தைக் குறித்து விசாரிக்கிறார். அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள் எருசலேமின் அலங்கம் இடிப்பட்டதும் அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட போது நான் உட்கார்ந்து அழுது சில நாளாய்த் துக்கித்து உபவாசித்து மன்றாடி பரலோகத்தின் தேவனை நோக்கி - நெகேமியா 1:3,4. பாருங்கள், நெகேமியா கர்த்தருடைய மகிமை தங்களை விட்டு போனதினால்தான் இப்படி தங்களுக்கு நேரிட்டது என்கிற காரியத்தை அறிந்து கர்த்தருக்கு முன்பாக ஜெபிக்க ஆரம்பிக்கிறார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து நெகேமியா அதிகாரத்தை வாசிக்கும் போது அவர் தம்முடைய பிதாக்கன்மார்களுடைய பாவத்தையெல்லாம் நினைவு கூர்ந்து கர்த்தருக்கு முன்பாக அவைகளை அறிக்கை செய்து மன்றாடுவதைப் பார்க்க முடிகிறது.

இப்படியாக அவர் ஜெபித்ததின் நிமித்தம் அதாவது கர்த்தருடைய ஆலயத்தைக் குறித்த்தான அவருடைய பக்திவைராக்கியம் தேவனுடைய அலங்கத்தை 52 நாட்களுக்குள் கட்டி முடிக்கச் செய்தது என்று வேதத்தில் பார்க்கிறோம் [ நெகேமியா 6:15 ].

இரண்டாவது: கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்க வேண்டும்

 

வேதம் சொல்லுகிறது, ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம் – 1 சாமுவேல் 15:22.

ஏலி என்கிற மனுஷனை கர்த்தர் இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கவும் அவர்களுக்கு ஆசாரியனாகவும் நியமித்திருந்தார். ஆனால் இந்த ஏலியோ ஜனங்களை நியாயம் விசாரிப்பதில் செலுத்திய கவனத்தை தன்னுடைய பிள்ளைகள் விஷயத்தில் கவனிக்காமல் போனார்.

இத்தகைய காரியத்தை தேவன் ஏலிக்கு பல தடவைகள் வெளிப்படுத்தின போதிலும் இந்த மனுஷன் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமல் போனான் இதனால் என்ன நடந்தது, அவன் குமாரர் தங்கள் மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும் அவர்களை அடக்காமற் போன பாவத்தினிமித்தம், தாம் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன் – 1 சாமுவேல் 3:13. கர்த்தருடைய வார்த்தையை அசட்டை செய்ததின் நிமித்தம் ஏலியின் குடும்பம் ஆசாரிய ஊழியத்திலிருந்து தள்ளப்பட்டனர் மற்றும் ஏலியும் அவருடைய பிள்ளைகளும் பரிதாபமாய் இறந்து போனார்கள் அவருடைய மருமகள் இப்படியாக புலம்புகிறாள், எப்படியென்றால்? மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப் போயிற்று என்றார் – 1 சாமுவேல் 4:19 – 22. அடுத்தப்பக்கம் பார்ப்பீர்களானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்த பேதுரு மற்றும் வோவானிடம் வந்து ஆசாரியர்களும் சேனைத் தலைவனும் அந்த நாமத்தைக் குறித்து பேசக் கூடாது என்று கட்டளை போடுகின்றனர். அதைக் கேட்ட பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரயுத்தரமாக

தேவனுக்குச் செவி கொடுக்கிறதைப் பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்கள் நிதானித்துப்பாருங்கள் – அப்போஸ்தலர் 4:19. இப்படியாக இவர்கள் தேவனுடைய வார்த்தைக்கும் செவிகொடுத்து கர்த்தருடைய இஷ்டப்படி வாழ்ந்ததின் நிமித்தம் இவர்களுடைய வாழ்க்கை முழுவதும் தேவ மகிமை தங்கியிருந்ததை இவர்கள் மூலம் நடந்த அற்புதங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

 

மூன்றாவது: கர்த்தருக்குப் பயப்பட வேண்டும்

 

வேதம் சொல்லுகிறது, கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும் – ஏசாயா 11:3.

மேலும், கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம் – ஏசாயா 33:6 இன்றைய நாட்களில் நடைபெறுகிற ஆராதனைகளும் இன்று வாழுகிற அனேக ஊழியக்காரர்களும் மற்றும் விசுவாசிகளும் ஏன் கர்த்தருக்கு உகந்த வாசனையாயிருக்க முடியவில்லையென்று பார்ப்பீர்களானால், அவர்கள் கர்த்தருக்குப் பயப்படுவதைப் பார்க்கிலும் மனுஷனுக்கு அதிகமாக பயப்படுவதே ஆகும். இந்த பயத்தின் நிமித்தம் சிலர் கர்த்தரைப் புகழுவதற்குப் பதிலாக மனுஷனையே பெரும்பாலும் உயர்த்தி சபைகளில் பேசுவதைப் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் சில ஊழியக்காரர்கள் தங்களுக்கு அதிக காணிக்கை வேண்டும் என்பதற்காக மனுஷர்கள் செய்கிற தவறைக் கூட சுட்டிக் காட்டுவதில்லை. இதனால் என்ன நடக்கிறது அந்த சபைகளில் ஒரு நாளும் தேவ மகிமையைப் பார்க்க முடியாமல் போகிறது.

ஆனால் வேதத்தில் மிகாயா என்கிற உண்மையும் உத்தமுமான கர்த்தருடைய ஊழியக்காரன் கர்த்தருக்குப் பயந்து கர்த்தர் என்ன சொன்னாரோ அதை மாத்திரம் ராஜாவுக்குப் பதிலாக கொடுப்பதை நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது.

மிகாயாவுக்குத் தெரியும் ராஜாவால் தன்னை கொல்ல முடியும் ஆனால் அதற்குப் பயந்து ஒருபோதும் உலக ராஜாவுக்கு அவர் அடிமையாகவில்லை. இதனிமித்தம் அவர் தேவ தரிசினத்தையும் தேவ மகிமையையும் தனக்குள் சுமக்கிறவராகக் காணப்பட்டார் என்று பார்க்கிறோம்.

நாமும் இவரைப் போல தேவ தரிசினங்களைக் காண வேண்டுமானால், முதலில் இந்த உலகத்திற்குப் பயப்படுவதை விட்டு விட வேண்டும்.

நான்காவது: கர்த்தருக்குள் திடன் கொள்ள வேண்டும்

 

மாமிசத்தின் பெலனினால் எதையாவது கர்த்தருக்காக சபைகளிலும் சமுதாயத்திலும் செய்துவிடலாம் என்று ஒருபோதும் தப்பான எண்ணம் கொள்ள வேண்டாம். இதனால் அனேகர் ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்வியையே சந்தித்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். கர்த்தர் வேதத்தில் சொன்ன எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்குள் முதலாவது திடன் கொள்ள வேண்டும். அதாவது பெலனடைய வேண்டும்.

ஆகவேதான் கர்த்தர் அழகாக எழுதி வைத்திருக்கிறார், எப்படியென்றால்?, பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சகரியா 4:6 ல் வாசிக்கிறோம். பாருங்கள் மோசேக்கு பின்பு இஸ்ரவேல் ஜனங்களை நடத்தும் பொறுப்பு யோசுவாவுக்கு வருகிறது இதோ இஸ்ரவேல் என்னும் பெரிய கூட்டத்தை எப்படி நடத்திச் செல்ல போகிறேன் என்கிற ஒரு குழப்பம் மறுபக்கம் தன்னுடைய எதிரிகளை எப்படி முறியடிக்கப் போகிறேன் என்கிற கலக்கத்தோடு அதாவது மாமிசத்தில் கற்பனை செய்துக் கொண்டிருந்த யோசுவாவைப் பார்த்து கர்த்தர் சொன்ன காரியம், நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு திகையாதே, கலங்காதே நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார் – யோசுவா 1:9

இந்த வார்த்தையைக் கேட்ட யோசுவாவுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும் ஆனால் கர்த்தர் அடுத்ததாக சொன்ன ஒரு காரியம் நீ கர்த்தருடைய பெலனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதாவது எனக்குள் பெலன் பெற்று நிற்க வேண்டுமானால் நீ செய்ய வேண்டிய காரியம், இந்த நியாயப்பிரமான புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய் – யோசுவா 1:6. 

இந்த வசனம் என்ன சொல்லுகிறது என்றால் கர்த்தருக்குள் திடன் கொள்ள வேண்டுமானால் முதலாவது நாம் தேவனுக்குப் பிரியமாய் வாழ வேண்டும் அதாவது அவர் காண்பித்த வழிகளில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் தெய்வீக பெலத்தைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக தேவ மகிமை வெளிப்படும்.

யோசுவாவும் கர்த்தர் சொன்னபடி செய்தான். இதன் மூலம் தேவ மகிமை அவனுடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்தது என்று யோசுவா புஸ்தகத்தை வாசிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.

ஐந்தாவது: கர்த்தருடைய வேலையைச் செய்ய வேண்டும்

 

இன்று அனேகருடைய ஆசீர்வாதங்களும், தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த செல்வங்களும் கொள்ளையாக கொண்டு போகப்படுவதற்குக் காரணம் கர்த்தருடைய வேலையில் அசதியாயிருப்பதினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

பாருங்கள் கர்த்தர் ஆறு நாளைக்குள் எல்லாவற்றையும் உண்டாக்கி அதாவது மனுஷனையும் அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் உண்டாக்கி ஓய்ந்திருந்தார் என்று பார்க்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் கர்த்தர் தாம் உண்டாக்கின மனுஷரிடம் சொன்னது நீங்கள் பலுகிப் பெருகி சகலத்தையும் நீங்கள் ஆளுகை செய்ய வேண்டும். ஆனால் என்ன நடந்தது, ஆளுகை செய்ய வேண்டிய மனுஷன் உலகத்திற்கு அடிமையாகிப் போனான். அதாவது உலகத்தால் ஆளுகை செய்யப்பட்டான் என்று பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன, வேதம் சொல்லுகிறது, தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும், காக்கவும் வைத்தான் என்று ஆதி 2:15 ல் வாசிக்கிறோம். ஆனால் ஆதாமோ கர்த்தர் சொன்ன வேலையைச் செய்யாததின் நிமித்தம் பிசாசு ஆதாமுடைய வீட்டிற்குள் நுழைந்து விட்டான். இதனால் தேவன் தந்த மகிமையை இழந்து போனான் என்று பார்க்கிறோம்.

இதேபோல கர்த்தருடைய வேலையை நாம் செய்யாமல் போவோமானால் அதாவது கர்த்தரைப் பற்றி சொல்ல வேண்டியவர்களுக்கு கர்த்தரைப் பற்றி சொல்ல வேண்டும். எப்பொழுதும் கர்த்தரைத் துதித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்காக சபைக்குச் சென்று கர்த்தரை ஆராதிக்க வேண்டும். பரிசுத்தமாக வாழ வேண்டும். இவைகளை நாம் செய்யும் போது மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய மகிமையைக் காண முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாம் கர்த்தருடைய வேலையைச் செய்வோமானால் கர்த்தர் நம்முடைய வேலையைச் செய்வார் என்பதை மறந்து போக வேண்டாம். யோசுவாவும் அவனுடைய கூட்டமும் கர்த்தரைத் துதித்தது, கர்த்தருடைய மகிமை இறங்கி எரிகோ கோட்டையை வீழ்த்தியது என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

6.கடைசியாக: கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தமாய் இருக்க வேண்டும்

கர்த்தர் சொல்லுகிறார், உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் நான் பரிசுத்த ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே – 1பேதுரு 1:15,16.

கர்த்தருடைய மகிமையை எப்பொழுதும் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் கர்த்தர் சொன்ன பரிசுத்த ஆடையை தங்களுடைய வாழ்க்கை முழுவதும் அணிந்திருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் நாம் ஒருபோதும் கர்த்தரை தரிசிக்க முடியாது என்பதை மறந்து விட வேண்டாம். கர்த்தர் தம்முடைய பரிசுத்தத்தில் மிகவும் வைராக்கியமுள்ளவர் என்பதை மறந்து போகாதீர்கள்.

எந்தவொரு ஆராதனையாய் இருந்தாலும் முதலில் நம்முடைய சபையையும் அதிலுள்ள விசுவாசிகளையும் ஊழியக்காரர்களையும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் விசேஷித்த ஆராதனைகளை நடத்த வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் சபைகளில் நல்ல இசைக்கருவிகளின் சத்தத்தையும், மனுஷருடைய சப்தத்தையும் மாத்திரம் கேட்க முடியும்.

பாருங்கள், அன்றைய நாட்களில் கர்த்தர் தம்மை இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிப்படுத்த விரும்பினார். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் சொன்ன காரியம் எல்லாரும் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.

வேதம் சொல்லுகிறது, மோசே மலையிலிருந்து இறங்கி ஜனங்களிடத்தில் வந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான். அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள் – யாத்திரகாமம் 19:14. இதன்பிறகே, கர்த்தர் சீனாய் மலையின் மேல் அக்கினியில் இறங்கினபடியால் அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது. அந்தப் புகை சூளையின் புகையைப் போல எழும்பிற்று மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது – யாத் 19:18. இப்படியாக பரிசுத்தத்தின் நடுவில் வாசம்பண்ணுவதே நம்முடைய கர்த்தரின் விருப்பமாயிருக்கிறது, பரிசுத்தமில்லாத இடத்திலும், ஜனங்களிடத்திலும் கர்த்தர் தமது மகிமையை ஒருபோதும் அனுப்புவதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வேதம் சொல்லுகிறது, பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே – எபிரெயர் 12:14.

மேலும், கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தன – வெளி 4:8.

ஆகவே நம்முடைய சரீரமாகிய ஆலயமும் நம்முடைய சபையும் இனிவருகிற நாட்களில் மகிமையாக விளங்க வேண்டுமானால் ஆகாய் அதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்த ஆறு காரியங்களையும் நம்முடைய வாழ்க்கையில் கிரியைகளில் கொண்டு வர வேண்டும். அப்பொழுது மாத்திரமே தேவ மகிமையை அளவில்லாமல் அனுபவிக்க முடியும் என்பதை ஒருபோதும் மறந்து விட வேண்டாம்.

வேதம் சொல்லுகிறது, இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் ன்றப் பண்ணும் பொருட்டாக எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.   2 கொரிந்தியர் 4:6.

தேவன் தாமே ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

bottom of page