top of page

பலியை பார்க்கிலும்

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

பழைய ஏற்பாட்டின் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிக்கும் போது பலி செலுத்துவது வழக்கம். பலி அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்று. ஆடுமாடு ஆகியவைகளின் இரத்தம் மனிதனுடைய பாவத்தை நிவிர்த்திசெய்யமாட்டாது; ஆகையால் தேவன் தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை சகல உலகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்யும்  கிருபாதார பலியாக அனுப்பி மனிதனை பாவத்தினின்று மீட்டு இரட்சித்தார். எனவே அவருடைய இரத்தத்தினால்  உடன்படிக்கை செய்த நாம் பலி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பழைய ஏற்பாட்டின் பலியைப் பார்க்கிலும் தேவன் பிரியப்படுகிற சில காரியங்களை நாம்  வேதவசனங்களின் அடிப்படையில் தியானிக்கலாம்.

கீழ்ப்படிதல்

 

கர்த்தர் சவுல் ராஜாவிடம் அமலேக்கியர்களை முறியடித்து அவர்களில் எல்லாவற்றையும் சங்கரித்து கொன்றுபோடக்கடவாய் என்று சாமுவேல் தீர்க்கத்தரிசியியை அனுப்பி கட்டளை கொடுத்தார். ஆனால் சவுல் ராஜாவும் ஜனங்களும் அமலேக்கிய ராஜாவாகிய ஆகாகையும் ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும் இரண்டாந்தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும் நலமான எல்லாவற்றையும் கொன்று போடாமல் தப்பவிட்டான். அப்பொழுது கர்த்தர் சாமுவேல் தீர்க்கத்தரிசியிடம் சவுலை ராஜாவாக்கினதற்காக மனஸ்தாபபட்டார். சாமுவேல் தீர்க்கத்தரிசி சவுல் ராஜாவிடம் விசாரித்த போது தேவனுக்கு பலியிட ஜனங்கள் இவைகளை கொண்டுவந்தார்கள் என ஜனங்களின் மேல் பழிபோடுவதை நாம் காணலாம். அப்பொழுது சாமுவேல் தீர்க்கத்தரிசி என்றார் [1சாமுவேல்:15:22]. தேவன் எல்லாவற்றையும் அழித்து போட சொன்னார், ஆனால் சவுல் ராஜா தான் இச்சித்த சிலவற்றை அழிக்காமல் தப்பவிட்டு தனதாக்கிகொண்டார்.சவுல் ராஜா முழுமையாக தேவனுக்கு கீழ்ப்படியாமல் தன்னுடைய சுயசித்தத்தை முன்னிறுத்தி பகுதியாய் கீழ்ப்படிந்தார். நம்முடைய கீழ்ப்படிதலைக் குறித்து தேவன் சந்தோஷப்படுவாரா இல்லை மனஸ்தாபப்படுவாரா? நம்மை நாமே சற்று நிதானித்து அறிவோம். தேவன் நம்முடைய முழுமையான கீழ்ப்படிதலை  விரும்புகிறார். கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவகோபாக்கினை வரும் என வேதம் நம்மை எச்சரிக்கிறது [கொலோசெயர்:3:6].

 

கீழ்ப்படிதல் தான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முதல்படி. கீழ்ப்படிதல் இல்லாமல் நான் தேவனில் அன்பாயிருக்கிறேன் என்றோ விசுவாசிக்கிறேன் என்றோ சொல்ல முடியாது. தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் நாம் செலுத்தும் காணிக்கைகள் தசமபாகங்கள் கூட தேவனுக்கு உகந்ததாய் இருக்காது. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமிடமிருந்து நாம் முழுமையான கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ளலாம். தாம் போகும் இடம் இன்னதென்று தெரியாமலே ஆபிரகாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து தன் தேசத்தையும் இனத்தையும் விட்டு புறப்பட்டான். தேவன்ஈசாக்கை பலி செலுத்த சொன்னபோது எந்த மறுப்பும் சொல்லாமல் முழுமனதோடும் கீழ்ப்படிந்தான். ஆபிரகாம் தேவனுடைய சொல்லுக்கு கீழ்ப்படிந்ததால் பூமியிலுள்ள சகல ஜாதிகளைப் பார்க்கிலும் தேவன் அவன் சந்ததியை மிகவும் ஆசீர்வதித்தார். அதுமட்டுமல்லால் பஞ்ச காலத்தில் ஈசாக்கை ஆசீர்வதித்து உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என வாக்குத்தத்தம் பண்ணினார்[ஆதியாகமம்:26:3-5]. ஆபிரகாமைப் போல தேவனுக்கு கீழ்ப்படிய முழுமையாய் நம்மை அர்ப்பணிப்போமா?

 

இரக்கம்

 

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய் கற்றுக்கொள்ளுங்கள் [மத்தேயு:9:13]. நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். நம்முடைய மீறுதல்களுக்கும் பாவங்களுக்கும் தக்கதாய் நம்மை தண்டியாமல் நமக்காக தம்முடைய குமாரனையே பலியாக தந்தவர் நம்முடைய தேவன். தேவன் நம்மேல் காண்பித்த இரக்கம் பெரியது. ஒருமுறை இயேசு கிறிஸ்து போஜனப்பந்தியிருக்கையில் ஆயக்காரரும் பாவிகளும் வந்து அவரோடு கூட போஜன பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதை கண்டு கேள்வி கேட்ட போது இயேசு கிறிஸ்து பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என பதிலளித்தார். இயேசு கிறிஸ்து நீதிமான்களை மட்டுமல்ல பாவிகளையும் நேசித்தார். அவர் பாவிகளை  இரட்சிக்கவே உலகத்தில் வந்தார். அதற்கு ஆதாரமாக தன்னருகில் சிலுவையில் தொங்கின கள்ளன் தன்னை நோக்கி வேண்டின போது இயேசு கிறிஸ்து இரக்கம் காண்பித்து “இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசில் இருப்பாய்” என சொல்லி அவனை இரட்சித்தார்.பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று சொல்லி நம்மையும்   இரக்கமுள்ளவர்களாய் இருக்க அறிவுறுத்துகிறார். இயேசுவின்  சீஷர்கள் ஓய்வுநாளிலே பயிர்வழியே சென்றனர். சீஷர்கள் தங்கள் பசியை அடக்க கதிர்களை கொய்து தின்றதை பார்த்து பரிசேயர் குற்றப்படுத்தினர். அப்பொழுது இயேசு கிறிஸ்து பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்தை அறிந்தீர்களானால் குற்றப்படுத்தமாட்டீர்கள் என்று கூறுவதை நாம் காணலாம் [மத்தேயு:12:7]. நாமும் பிறருக்கு இரங்க வேண்டும். இரக்கமில்லாமல் சக மனிதர்களை குற்றப்படுத்துவதையோ துன்புறுத்துவதையோ தேவன் விரும்புவதில்லை. வேதம் கூறுகிறது, இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்[யாக்கோபு:2:13]. பாவிகளான நமக்கு தேவன் இரக்கம் காண்பித்தது போல பிறரை குற்றப்படுத்துவதை விட்டு நம்மில் அன்புகூருகிறவர்களுக்கு மட்டுமல்லாது எல்லாருக்கும் இரக்கம் காண்பிப்போம். வேதம் கூறுகிறது இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்[மத்தேயு:5:7]. நல்ல சமாரியனைப் போல எந்த எதிர்பார்ப்புமின்றி  உதவிகள் செய்து  நாமும் இயேசுவை நம் வாழ்க்கையில் காண்பிக்க முயற்சிப்போம்.

 

நீதி நியாயம்

பலியிடுவதைப் பார்க்கிலும் நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்[நீதிமொழிகள்:21:3]. தாவீது ராஜா கூறுகிறார் “உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மை துதிக்கிறேன் [சங்கீதம்:119:164]. நம்முடைய தேவன் நீதியுள்ள நியாதிபதி, நீதியை சரிகட்டுகிற தேவன். வேதம் கூறுகிறது அவர் கண்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர்  நீதியும் செம்மையுமானவர். அவரை போலவே நாமும் நீதி நியாயமுள்ளவர்களாய் வாழ எதிர்பார்க்கிறார்.  கர்த்தர் சொல்லுகிறார் நீங்கள் நியாயத்தைக் கைகொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாய் இருக்கிறது[ஏசாயா:56:1] நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நியாயமானதா  தேவ நீதிக்கு உட்பட்டதா என நம்மை சீர்தூக்கி பார்ப்போம். ஏனெனில் நம்முடைய நீதி தேவனுக்கு முன்பாக அழுக்கும் கந்தையுமாய் இருக்கிறது.

 

யோவான் ஸ்நானனின் பெற்றோராகிய சகரியா எலிசபெத்து தம்பதியினர் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள் என்று வேதம் சாட்சி கொடுக்கிறது[லூக்கா:1:6]. தேவனுடைய கற்பனைகள் எல்லாம் நீதியுள்ளவைகள். கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும் இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது... [சங்கீதம்:19:8-10]. தேவனுடைய நீதி நியாயங்களை நன்கு அறிந்த தாவீது ராஜா கூறுகிறார் நியாயம் நீதியினிடமாக திரும்பும்; செம்மையான இருதயத்தார் அதை பின்பற்றுவார்கள். எனவே நாம் தேவனைப் பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் செம்மையான இருதயத்தோடும் அவருடைய வேதத்தின் அடிச்சுவடுகளாகிய கற்பனைகளையும் நியமங்களையும் கைகொண்டு  நீதியின் வழியில் நடக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஆகாப் ராஜாவும் அவன் மனைவி  யேசபேலும்  நீதி நியாயமற்ற முறையில்  நாபாலைக் கொன்று  திராட்சை தோட்டத்தை அபகரித்தனர். அவர்கள் முடிவு மிக கொடியதாய் இருந்தது. ஆமான் மொர்தெகாயை கொலை செய்ய தந்திரமாய் செய்த தூக்குமரத்தில் அவனே சாகும்படியாயிற்று. நீதியாய் நடந்து, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானம் வாங்காமல், ஏழை எழியவர்களின் நியாயத்தை புரட்டாமல் நீதியாய் செயல்படுவோம். வேதம் கூறுகிறது நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம் [ஏசாயா:32:17]. பக்தனாகிய யோபு கூறுகிறார் நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது [யோபு:29:14]. கிறிஸ்தவர்களாகிய நாம் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவோம்.  நீதியின் சூரியனாகிய தேவனை தரித்துக்கொண்டு தேவ நீதியை நிறைவேற்றுகிறவர்களாய் வாழுவோம்.

 

அன்புகூருதல்

 

வேதபாரகரில் ஒருவன் கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று இயேசுவிடம் கேட்டான். அதற்கு இயேசு  : கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்பு கூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறது போல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.அதற்கு இயேசு “ நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல” என்றார். தேவன் நம்மீது காண்பித்த அன்பு அளவில்லாதது. அவரது அன்பின் அகலம் ஆழம் நீளம் அளவிட முடியாதது. தன்னை சிலுவையில் அறைந்த மனிதர்களையே நேசித்த மகா பெரிய அன்பு. அந்த அன்பிற்கு நாம் பாத்திரவான்களல்ல. தேவன் தகுதியில்லாத நம்மை இவ்வளவாய் நேசித்து நம் மீது அன்புகூர்ந்திருக்க நாமும் முழு மனதோடும் இருதயதோடும் ஆத்துமாவோடும் பலத்தோடும் அவரிடம் அன்புகூர கடனாளிகளாய் இருக்கிறோம்.  நம்மில் அன்புகூருகிறது போல பிறனிடத்திலும் அன்புகூர கடனாளிகளாய் இருக்கிறோம். இது தேவனின் கட்டளை.வேதம் கூறுகிறது தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்  [1யோவான்:5:12,17]. தேவனுடைய அன்பு நம்மில் பூரணப்படுகிறபோது நியாயத்தீர்ப்பு நாளிலே நமக்கு தைரியமுண்டாகிறது, ஏனென்றால் அவர் இருக்கிறப்பிரகாரமாகவே நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பானவர்களே தேவனில் முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து கிறிஸ்துவின் அன்பை இவ்வுலகிற்கு வெளிபடுத்தும்  பாத்திரங்களாய் மாறும்போது நாமும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு சமீபமானவர்களாய் மாறுகிறோம் என்பதில் ஐயமில்லை.

 

செவிகொடுத்தல்

 

ஞானத்தில் தலைசிறந்த சாலொமோன் ராஜா கூறுகிறார் “ பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்”. கிறிஸ்தவர்களாகிய நம்மில் அநேகர் தேவனிடம் நம்முடைய தேவைகளை பட்டியலிடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறோம். தேவனுடைய செவிகொடுத்து  அவருடைய சித்தத்தை அறிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை. தேவனுக்கு செவிகொடுத்தால் மட்டுமே நாம் அவருக்கு கீழ்ப்படிய முடியும். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் வழிநடத்தினார். ஆனால் அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை. என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை ; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. ஆ என் ஜனம் எனக்கு செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாய் இருக்கும்! என சங்கீதக்காரன் தேவனின் இருதயத்தின் ஏக்கத்தை கூறுகிறார் [சங்கீதம்:81:11,13]. நாமும் அவருக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது தேவனின் விருப்பமாய் இருக்கிறது. தாவீது ராஜாவைப் போல கர்த்தரை நமக்கு மேய்ப்பராகக் கொண்டு ஆடுகளைப் போல நாம் அவருக்கு செவிகொடுத்து வாழ்ந்தால் நாம் ஒருபோதும்  தாழ்ச்சியடைவதில்லை. யோவான் 10-ம் அதிகாரத்தை நாம் வாசிக்கும் போது ஆடுகளை குறித்து மிகவும் அழகாக சொல்லப்பட்டிருக்கும். ஆடுகளின் குணாதிசயங்களில் ஒன்று அது தன் மேய்ப்பனையும்,மேய்ப்பனின் குரலை நன்கு அறிந்திருக்கும். தன் மேய்ப்பனின்  குரலுக்கு மட்டுமே செவிகொடுத்து அவனை பின்பற்றும்.

 

ஒருமுறை ஒரு வெளிநாட்டு பயணி பாலஸ்தீனம் சென்ற போது ஆடுகள் தன் மேய்ப்பனின் குரலுக்கு செவிகொடுத்து பின்பற்றுவதை கண்டு மெய்சிலிர்த்து போனார். எனவே அந்தமேய்ப்பனின் ஆடையை வாங்கி தான் அணிந்துக் கொண்டு ஒருபுறத்தில் நின்று ஆடுகளை அழைத்தார். மறுபுறம் உண்மையான மேய்ப்பன் நின்று ஆடுகளை அழைத்தார். ஆடுகள் உண்மையான மேய்ப்பனின் குரலுக்கு செவிகொடுத்து அவரையே பின்பற்றியது.அதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

 

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை மேய்ப்பராக கொண்ட நாம் அவருடைய குரலுக்கு செவிகொடுத்து உண்மையாய் அவரை பின்பற்றுகிறோமா? சற்று சிந்தித்துப் பார்ப்போம். கிறிஸ்தவர்களாகிய நாம் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து விசுவாசத்தை விட்டு விலகி போகாமல், மேய்ப்பனின் குரலுக்கு செவிகொடுத்து பின்பற்றுகிற ஆடுகளாய்நம்மை காத்துக்கொள்ள வேண்டும். நாம் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு உண்மையாய்செவிகொடுக்கும் போது பட்டணத்திலும், குடும்பத்திலும், தொழிலிலும், பிரயாணத்திலும்,, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஆசீர்வதிக்கப்படுவோம்.[உபாகமம்:28:1-14] தேவனுக்கு உண்மையாய் நாம் செவிகொடுக்கும் போது அவர் நம்மை வாலாக்காமல் தலையாக்குவார்; கீழாக்காமல் மேலாக்குவார்.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் நம்முடைய சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமான ஜீவபலியாய் ஒப்புக்கொடுப்போம். அப்பொழுது பலியை பார்க்கிலும் தேவன் விரும்புகிற குனாதிசயங்களாகிய அன்பு, இரக்கம் ,நீதி-நியாயம், செவிகொடுத்தால், கீழ்ப்படிதல் ஆகிய நற்குணங்களால் தேவன் நம்மை அலங்கரிப்பார்.பலயிடுவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்ப்படிதலும் செவிகொடுத்தலும் உத்தமமானது. பலியை பார்க்கிலும் இரக்கத்தையே தேவன் விரும்புகிறார்; நீதியும்நியாயமும் செய்வதே தேவனுக்கு பிரியம். பலியை பார்க்கிலும் தேவனிடத்தில் முழு இருதயதோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தொடும் அன்புகூருவதும் ; தன்னிடத்தில் அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவது முக்கியமானது. இப்படியாய் அன்புகூரும் போது நாமும் அவரை போலவே இவ்வுலகத்தில் வாழ்வதால் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு சமீபமானவர்களாய் மாறுகிறோம். தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் தம்முடைய சிலுவையின் நிழலில் மறைத்து உன்னதமான ஆசீர்வாதங்களினால் நிறைத்து வழிநடத்துவாராக. ஆமென்.

bottom of page