top of page

ஆக்கினைத் தீர்ப்பு

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

ஒரு மனிதனுக்கு பிறப்பு எவ்வளவு முக்கியமோ அதே போன்று மரணமும் முக்கியம் வாய்ந்தது. மரணத்திற்கு பின் நித்திய நித்தியமான வாழ்க்கையை தேவன் நமக்கு வாக்களித்திருக்கிறார். ஆனால் தேவனை விசுவாசியாத ஒவ்வொரு மனிதனுக்கும் நித்திய ஆக்கினையையும் அவர் வைத்திருக்கிறார். மேலாக வாழ்வை எதிர்நோக்கி இருக்கும் நாம், அந்த வாழ்வை அடையாமல் ஏமாற்றமடைந்து போனால் நம் வாழ்வு வீணாகும் அல்லவா. கொடுக்க பட்ட காலங்களில் தேவனுக்காய் வாழ்வதோடு மட்டும் அல்லாமல் நாம் தேவ பாதையில் நடக்கிறோமா என்பதை சோதித்து அறிந்து, நம்மை அந்த பாதையில் நிலையாய் ஓட செய்வது நம் ஆவிக்குரிய வாழ்விற்கு நன்மை தரும். நித்தியத்தை பார்த்து ஓட கற்றுக்கொண்ட நாம், வேதத்தின் படி யார் யாருக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு என நாம் தியானித்து நம்மை அந்த கூட்டத்திலிருந்து விலக்கி காப்போம். சற்றே நம் சிந்தனையை வேதத்திற்கு நேராக திருப்புவோம். யார் யார் ஆக்கினை தீர்ப்பு அடைவார்கள்? என்பதை தியானிப்போம்.

தேவனை விசுவாசியாதவர்களுக்கு  

 

 விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் [மாற்கு:16:16].அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று[யோவான்:3:18].நம்முடைய தேவனாகிய கர்த்தர் தன் சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி நம்மை மீட்டுக் கொள்ளும்படி நம்முடைய பாவங்கள் அக்கிரமங்களுக்காக அவரை சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து  தம்  சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது இந்த ஆக்கினை தீர்ப்பினின்று விடுவிக்கப்படுவான். இயேசு கிறிஸ்து கூறுகிறார் என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

 

சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறவர்களுக்கு

         

ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு [2தெசலோனிக்கேயர் :2:10-11]. இயேசு கிறிஸ்துவே நமக்கு  வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். அவருடைய வசனமே சத்தியம். வேதம் கூறுகிறது சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். அவரே நமக்கு சத்தியம்; அவருடைய வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்;  சத்தியத்தை விசுவாசிக்கிறவன் இரட்சிப்படைகிறான். ஆனால் சாத்தானோ பொய்யன். வேதம் கூறுகிறது அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்[யோவான்:8:44]. நாமும் தேவ மகிமையை தேடாமல் நம் சுயமாய் செயல்படும் போது அநீதியில் பிரியம் வைக்கிறோம். வேதம் கூறுகிறது அநீதியெல்லாம் பாவந்தான்[1யோவான்:5:17]. சுயமாய் பேசுகிறவன் தன் சுயமகிமையை தேடுகிறான்.தன்னை அனுப்பினவரின் மகிமையை தேடுகிறவனோ உண்மையுள்ளவனாய் இருக்கிறான். அவனிடத்தில் அநீதியில்லை [யோவான்:7:17]. ஆவிக்குரிய வாழ்க்கையில் சுயமகிமையை நாடி  வேஷம் போடும் போது நம் பெருமையினால் தேவனை தூஷிக்கிறோம் என்பதை நாம் மறந்துபோக வேண்டாம். எதை செய்தாலும் நம்முடைய சுயமகிமையை நாடாமல்  பிதாவாகிய  தேவனுக்கு மகிமையை செலுத்தி தேவனிடத்தில் உண்மையுள்ளவர்களாய் வாழுவோம். சத்தியம் என்னும் கச்சையை நம் அரையில் கட்டிக்கொள்ளும்போது நம்மில் அநீதி காணப்படுவதில்லை.சத்தியத்தை விசுவாசித்து சத்தியத்தில் நிலைத்திருபோம்.

ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவன்

 

ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்[நீதிமொழிகள்:28:20]. நான்  ஐசுவரியவானாய் மாற வேண்டும் என்று போட்டியிடும் மனிதர்கள் பலர். உலக ஐசுவரியம் மாயையாய் இருக்கிறது. உலக ஐசுவரியத்தினால் நாம் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியாது. வேதம் கூறுகிறது உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப் படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம். பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும் ராஜாவாகிய சலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாய் இருந்தார்.

 

ஆனாலும்  சலொமோன் ஞானி கூறுகிறார் ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்[நீதிமொழிகள்:22:4;23:4]. ஆம் பிரியமானவர்களே நம்முடைய தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். அவருடைய சுதந்தரராகிய  நாம், பரம தகப்பன் நமக்காக வைத்திருக்கும் உன்னதமான ஆசீர்வாதங்களை விசுவாசிக்க வேண்டும். விசுவாசிகளின் தந்தை ஆபிரகாம், தாவீது ராஜா உலகப்பிரகாரமாக ஐசுவரியத்தை சம்பாதிக்க தீவிரிக்கவுமில்லை தேவனிடத்தில் ஐசுவரியத்தை கேட்கவுமில்லை. அவர்கள் தேவனுக்கு பயந்து தேவனுடைய சித்தத்திற்கு கீழ்படிந்து வாழ்ந்தார்கள். தேவன் அவர்களை ஐசுவரியவான்களாய் மாற்றினார். நம்முடைய தேவன்  தம்முடைய ஐசுவரியத்தின்படி நம் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். நாமும் தேவனை   உண்மையாய் பின்பற்றி அவருக்கு பிரியமாய் வாழும் போது அவர் நம்மை பரிபூரணமாய் ஆசீர்வதிப்பார் என்பதில் ஐயமில்லை.

மாம்சத்தின்படி நடக்கிறவர்களுக்கு

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை[ரோமர்:8:1]. மாம்சத்தின்படிநடக்கிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு. மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை ஆகியவைகள் உலகத்தினால் உண்டானவைகள். வேதம் கூறுகிறது மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம். மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகையாய் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. முற்காலத்தில் நமது மாம்ச இச்சைகளின்படி நடந்து நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்து சுபாவத்தினாலே மற்றவர்களைப் போல கோபாக்கினையின் பிள்ளைகளாய் இருந்தோம்[எபேசியர்:2:1-5].  ஆனால் தேவன் தமது மிகுந்த இரக்கத்தினாலே நம்மில் அன்புகூர்ந்து தமது கிருபையினாலே நம்மை இரட்சித்தார். அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்புக்கு நாம் பாத்திரவான்கள் அல்ல. ஆவியினாலே கிறிஸ்துவோடு ஐக்கியமான நாம் சரீரத்தின் செய்கைகளை அழிப்போம்.ஆவிக்கேற்றவைகளை சிந்தித்து ஆவிக்குரியவர்களாய் நடந்துக்கொள்ளுவோம். பவுலடியார் கூறுகிறார்  கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள் [கலாத்தியர்:5:24]. கிறிஸ்து இயேசுவினாலே பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையான நாம் ஆவிகேற்றவைகளை சிந்தித்து ஆவியின்படி நடக்க அழைக்கப்படுகிறோம்.

 

வேதத்தை புரட்டுகிறவர்களுக்கு

 

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலை தவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ் செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே [தீத்து:3:10,11]. இன்றைய காலங்களில் அநேகர் வேதத்தை புரட்டி பேசுகிறார்கள்.நாம் தினமும் வேதத்தை வாசித்து ஆவியானவரின் பெலனோடு அதை புரிந்து கொள்ளும் போது மட்டுமே இவர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். அவர்கள் விட்டு விலகும்படி வேதம் நம்மை எச்சரிக்கிறது. வேதத்தில் இருந்து நாம் போதிக்கும் போது எதையும் கூடி, குறைத்து, மாற்றி பேச நமக்கு அதிகாரமில்லை.

தேவன் சொல்லிருக்கிற வார்த்தைகளை நாம் தேவ சமுகத்தில் காத்திருந்து தியானித்து பின்பற்றவோ போதிக்கவோ வேண்டும். நம் சுயமாய் எதையும் பேச எத்தனிக்க கூடாது. வேத வசனங்களுக்கு நம் சுய அர்த்தம் கொடுக்குதல் கூடாது. நம் சூழ்நிலையை வைத்து வசனத்தை புரிந்து கொள்ள கூடாது. மாறாக வேத வசனத்தை வைத்து நம் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள வேண்டும். வேதம் கூறுகிறது  ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்[வெளி:22:19]. அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்று வேதம் நம்மை எச்சரிகிறது.வேதம் கூறுகிறது கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்[2பேதுரு:2:1].கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் கிறிஸ்துவை உடையவனல்ல. அந்த உபதேசத்தைக் கொண்டு வருகிறவர்களை நம் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவர்கள் அவர்களுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குகுள்ளவனாகிறார்கள்.இந்த கடைசி காலங்களில் வாழுகிற நாம் அனுதினமும் வேதத்தை வாசித்து தியானிப்போம். வேதபுரட்டர்களை  அடையாளம் கண்டு அவர்களை விட்டு விலகுவோம்.தேவன் நமக்கு தந்த பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளை நாமும் புரட்டாதவாறு காத்துக்கொள்ளுவோம்.

அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன்

 

கர்த்தருடைய பந்தியில் அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்[1கொரிந்தியர்:11:29]. நாம் கர்த்தருடைய  அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறோம். பாவமில்லாத பரிசுத்த தேவன் பாவிகளான நமக்காய் பலியாகி நம்மை மீட்டெடுத்த அன்பினை உணர்த்தவர்காய் நன்றியுணர்வோடு நாம் கர்த்தருடைய பந்தியில் சேரக்கடவோம். அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறவனோ,   கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. திரு விருந்து என்னும் அந்த ஐக்கியத்தில் நாம் பங்கு பெறும்போது நாம் நம்மை நாமே சோதித்து அறிந்து பங்கு பெறுவோம். விசுவாசத்தை நாமே சோதித்து அறிந்து அந்த ஐக்கியத்தில் பங்கு பெறுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

பின்வாங்குகிறவர்கள்

 

முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்[1தீமோத்தேயு:5:12]. வேதம் கூறுகிறது முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாம் முடிவுபரியந்தம் அவரை விசுவாசித்து அவரில் நிலைத்திருக்க வேண்டும். உலகத்தின் உபத்திரவங்கள், நெருக்கங்கள், பாடுகள், கஷ்டங்கள் பார்த்து நாம் பயந்து பின்வாங்க கூடாது.

 

உலகக்கவலை, ஐசுவரியத்தின் மயக்கம், இச்சை போன்ற முட்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். நாம் வேராகிய கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் போது மட்டுமே அவருடைய வசனத்தை ஏற்றுகொண்டு கனிகொடுக்க முடியும். திராட்சைசெடியாகிய அவரில் நாம் நிலைத்திராவிட்டால் சாத்தான் நம் இருதயத்தில் விதைக்கப்பட்ட வசனங்களை எடுத்துப்போடுவான்; களைகளை விதைப்பான். ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,மறுதலித்துப் போனவர்கள் தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம் என வேதம் நம்மை எச்சரிக்கிறது[எபிரெயர்:6:4-6].பண ஆசை, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களும் நம்மை விசுவாசத்தை விட்டு விலக செய்ய கூடும். எனவே கிறிஸ்துவின் பரம அன்பை ருசித்த நாம் நித்திய நித்தியமாய் அவரோடு வாழும்படிக்கு முடிவுபரியந்தம் அவரில் நிலைத்திருப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவனுடைய பரிசுத்த இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம் ஞான கன்மலையாகிய அவரைப் பற்றிக்கொண்டு அவர் மேல் விசுவாசம் வைத்து அவர் நமக்கு தந்த இரட்சிப்பில் முடிவுபரியந்தம் நிலைத்திருப்போம்.  வேதம் கூறுகிறது நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள். மாம்சத்தின்படி நடவாமல் ஆவிக்கேற்றபடி வாழ்வோம். வழுவாதபடி நம்மை காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்தில் மிகுத்த மகிழ்ச்சியோடே நம்மை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் அவர் ஒருவரே. மெய் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் நமக்கு காட்டிய பாதையில் வாழுவோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் பரிபூரண ஆசீர்வதங்களினால் நிறைத்து வழிநடத்துவாராக. ஆமென்.

bottom of page