top of page

ஜீவ பலி

சகோ. எட்வின் கார்டர் (சோஹார் -  ஓமான்) 

 

வேதம் சொல்லுகிறது, கிறிஸ்துவுடனே கூட நாம் மரித்தோமானால் அவருடனே கூடப் பிழைத்தும் இருப்போம் – ரோமர் 6:8.

கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் அவருக்கு ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் ஒரு சாதாரண பலியாக அல்ல ஒரு மிருகத்தை பலியாகவோ அவர் கேட்கவில்லை ஏனென்றால் இவைகளால் தேவனுடைய நாமம் மகிமைப்படவேயில்லை என்று வேதம் சொல்லுகிறது.

ஒரு மரித்துப் போன பலியினால் ஒருபோதும் தேவனுக்கு ஒரு நல்ல ஆராதனை தர முடியாது மற்றும் தேவ நாமம் மகிமைப்படவும் ஒருபோதும் முடியாது. அப்படியென்றால் எப்படிப்பட்ட பலி கர்த்தரை திருப்திப்படுத்த முடியும் என்பதை வேதத்தின் மூலம் அறியலாம்.

வேதம் சொல்லுகிறது, மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார் – சங்கீதம் 6:5.

மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள் – சங்கீதம் 115:17

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக – சங்கீதம் 150:6. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான் – சங்கீதம் 51:17 [பிப]

மேலே சொல்லப்பட்ட வசனங்களிலிருந்து இரணடு காரியங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

1.நம்முடைய பலிகளில் ஜீவன் இல்லாமல் இருந்தால் அவைகள் தேவ சமுகத்திற்கு செல்ல முடியாது.

2. நம்முடைய பலிகளில் ஜீவன் இருக்குமானால் அவைகள் தேவ சமுகத்தை சென்றடையும் என்பதை அறிகிறோம். இன்றும் அனேகர் பல வழிகளில் பலிகளை கர்த்தருக்குக் காணிக்கையாக படைப்பதுண்டு.

என்றைக்காவது நாம் செலுத்துகிற பலிகள் தேவனுக்குப் பிரியமாய் இருந்தது உண்டா? என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

நம்முடைய பலிகள் எப்படியிருந்தால் அதை கர்த்தர் ஏற்றுக் கொள்வார் என்பதை பின்வருமாறு தியானிக்கப் போகிறோம்.

முதலாவது: நம்முடைய பலி இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் இருக்க வேண்டும் வேதம் சொல்லுகிறது,  இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சினேகிப்பான் அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது – மத்தேயு 6:24.

மேலும், அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள் – 1இராஜாக்கள் 18:21. மேலும் யோவான் எழுதுகிறார், உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை – 1யோவான் 2:15.

மேலே சொல்லப்பட்ட வசனங்களின் அர்த்தம் என்னவென்றால் நாம் உலகத்தோடு ஐக்கியம் வைத்துக் கொண்டு அதாவது இந்த பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்துக் கொண்டு கர்த்தரை திருப்திப்படுத்தலாம் என்று நினைப்பீர்களானால் அது முடியாத காரியம் ஆகும்.

இன்று அனேகருடைய விசுவாச வாழ்க்கையும் தாம்பத்ய வாழ்க்கையும் ஊழியங்களும் உடைந்து போவதற்குக் காரணம் ஆவியில் தொடங்கின இவர்களுடைய வாழ்க்கை மாமிசத்தைக் கொண்டு செயல்படுகிற இப்பிரபஞ்சத்தின் மேல் பிரயாணம் செய்ய ஆசைப் படுவதினால் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

இப்பிரபஞ்சத்தின் அதிகாரி நம்முடைய ஆவிக்குரிய கண்களை குருடாக்கி தேவனைப் பார்ப்பதற்குப் பதிலாக இந்த உலகத்தை பார்க்க வைத்து விடுகிறான். ஆகவே இப்பிரபஞ்சத்தை வெறுத்தால் மட்டுமே நாம் ஜீவ பலியாக தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும்.

பாருங்கள் யோசபாத் என்கிற ராஜா தன்னை கர்த்தருடைய கட்டளை மற்றும் கற்பனைகளுக்கு உட்படுத்தி கர்த்தர் நேசிக்கிற ஒரு ஜீவ பலியாக வாழ்ந்து வந்தான். ஆனால் ஆகாப் என்கிற இஸ்ரவேல் ராஜா இப்பிரபஞ்சத்தின் நட்பை சொல்லி அதாவது மாமிசத்தில் நாமெல்லாம் சகோதரர்கள் என்று சொல்லுகிறான்.

இதன் மூலம் யோசபாத்திற்கும் கர்த்தருக்கும் இடையே இருந்த நட்பை முறிக்க காரணமாயிருந்தான் என்று அறிகிறோம். இதானல் ஒரு கட்டத்திலே இந்த யோசபாத்தின் உயிரே போகும் அளவுக்கு சூழ்நிலைகள் வந்ததை நம்மால் வேதத்தில் வாசிக்க முடிகிறது.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இப்பிரபஞ்சம் உங்களை அழிக்கு நேராக கொண்டு போகும் ஆனால் ஆவிக்குரிய பிரபஞ்சமோ உங்களை நித்திய ஜீவனுக்கு கொண்டு போகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இரண்டாவது: தேவனுடைய நன்மை இருக்க வேண்டும்.

வேதம் சொல்லுகிறது, நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார் தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். அப்போஸ்தலர் 10:38.

மேலும், நீ தீமையினாலே வெல்லப்படாமல் தீமையை நன்மையினாலே வெல்லு – ரோமர் 12:21. மேலும், வேதம் சொல்லுகிறது, ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள் – ரோமர் 12:17.

நன்மை செய்வது யாரிடத்தில் எல்லாம் இல்லையோ அவர்களால் நிச்சயமாக கர்த்தரை திருப்திப்படுத்த முடியாது. ஏழை ஜனங்களுக்கும் நம்மை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யாமல் நாம் எத்தனை பலிகளை செலுத்தினாலும் அவைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை மறந்து போகக் கூடாது.

முதலாவது தேவனுடைய நன்மை என்பது என்ன?

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் உங்களை நித்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் -மத்தேயு 5:44.

கர்த்தர் இப்படிப்பட்ட நன்மையையே விரும்புகிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்தேவான் என்கிற மனுஷனும் தன்னை இப்படிப்பட்ட பலியாகவே கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்தார். எப்படியென்றால்? 

கர்த்தருடைய சுவிஷேத்தைச் சொல்லி ஜனங்களை இரட்சிப்பின் வழியில் நடத்த வேண்டும் என்கிற சிந்தையுடையவராய் கிறிஸ்துவைக் குறித்து அங்கு பிரசங்கம் பண்ணுகிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனங்களோ அதைக் கேட்க மனதில்லாமல் அவனை கல்லினால் எறிந்து காயப் படுத்தி கொலை செய்வதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் இந்த ஸ்தேவானோ அப்படிப்பட்ட துன்பத்திலும் அந்த ஜனங்களை திட்டமாலும் சபிக்காமலும் அவர்களை மன்னிக்கும்படி தேவனிடம் மன்றாடுவதை நாம் வேதத்தில் வாசிக்கிறோமே.

ஆகவே நாமும் நம்மை நன்மை செய்கிற ஒரு ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க தேவனிடம் மன்றாடுவோம்.

வேதம் சொல்லுகிறது, உங்கள் அன்பு மாய மற்றதாயிருப்பதாக தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொண்டிருங்கள் – ரோமர் 12:9.

மூன்றாவது: கர்த்தருக்குப் பிரியமானவர்களாக இருக்க வேண்டும்.

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு இந்த உலகத்தில் பிறந்த போது தூதர்கள் சொன்ன வாழ்த்துதல் எப்படியிந்தது என்றால்? உன்னதத்திலிருந்து தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று நாம் லூக்கா 2:13,14 ல் வாசிக்கிறோம்.

கிறிஸ்து இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்பு வரை தேவனுக்கு நாம் ஒவ்வொருவரும் பகைஞர்களாக இருந்தோம். ஆனால் கிறிஸ்து பிறந்த உடனே நாம் அவருடைய பிள்ளைகளாக மாறும் சிலாக்கியம் கிடைத்தது.

எப்படியென்றால்?, நம்முடைய கிரியைகளினால் தேவனுக்கு பிரியமானதை செய்ய முடியாததை இயேசு கிறிஸ்து தம்முடைய கிரியைகளினால் அதைச் செய்து நம்மை கர்த்தருக்கு பிரியமானவர்களாக மாற்றினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

கர்த்தருக்குப் பிரியம் என்பது அவருக்கு சித்தமானதை செய்ய நம்மை ஒப்புக் கொடுப்பது ஆகும். வேதம் சொல்லுகிறது, நம்முடைய இரட்சகராக இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததின் காரணம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதே ஆகும்.

பாருங்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படியாத சவுலையும் அவனுடய ஜனங்களையும் பார்த்து கர்த்தருடைய ஊழியக்காரன் என்ன சொல்லுகிறார் என்பதை பாருங்கள். அதற்கு சாமுவேல் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும் ஆட்டுக் கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்   1 சாமுவேல் 15:22.

ஆயிரத்தைப் பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமானதாக ஒன்றை கொடுப்பது சிறந்ததாக இருக்கும். இன்று அனேகர் பலவிதமான வழிகளில் பலிகளை கொடுக்கிறார்கள். ஆனால் இவர்களோ ஒருபோதும் தேவனுக்குப் பிரியமாய் நடக்காதவர்களாய் இருந்தால் இவர்கள் செலுத்துகிற பலிகளினால் இவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

எனக்குப் பிரியமான ஜனங்களே வேதத்தில் அனேக இடங்களில் தேவன் பிரியப்படுகிற காரியங்கள் என்னவென்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அத்தகைய காரியங்களைக் கண்டு பிடித்து அதின்படி செய்யப் பழகுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்கள் பலிகளின் மேல் சந்தோஷமாய் இருப்பாய் என்பதை மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது, பலியை அல்ல இரக்கத்தையும் தகன பலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன். ஓசியா 6:6. உங்களுக்குப் பிரியமானதை தேவனுக்குக் கொடுப்பதை விட கர்த்தருக்குப் பிரியமானதை அவருக்குக் கொடுக்க பழகிக் கொள்ளுங்கள். அப்பொழுது மாத்திரமே கர்த்தருக்கு உங்கள் நிமித்தம் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்.

நான்காவது: தேவனுடைய பரிபூரணமான சித்தத்தின் படி நடக்க வேண்டும்?

தேவ சித்தம் என்ன என்பதை பார்க்கலாம், தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் - பிலிப்பியர் 2:13. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தெசலோனிக்கேயர் 5:18. எதற்காக நாம் அவருடைய சித்தத்தின் படி செய்ய வேண்டும், அப்பொழுது மாத்திரமே தேவனுடைய நாமம் மகிமைப்படும் அப்படியில்லாத பட்சத்தில் ஜனங்கள் மனுஷர்களை புகழ்கிற சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

தேவனுடைய சித்தம் செய்யாதவர்களைப் பார்த்து கர்த்தர் என்ன சொல்லுகிறார்?, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே உமது நாமத்தினாலே தீர்க்க தரிசினம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:21,22,23.

நாமும் இப்படிப்பட்ட சூழ் நிலைகளுக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு அழகான ஜெபத்தைக் கற்றுக் கொடுத்தார், எப்படியென்றால், உம்முடைய சித்தம் பரமணடலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. மத்தேயு 6:10. 

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே ஆவிக்குரிய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் தேவ சித்தம் மாத்திரம் முன்னோக்கி நிற்க வேண்டும். நம்முடைய சித்தமோ எப்பொழுதும் தேவ சித்தத்தைப் பின்பற்றுவதாக இருக்க வேண்டும். இத்தகைய காரியத்தை நன்றாக அறிந்த அப்.பவுல் இப்படியாக ஜெபிக்கிறார், நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்? அப்போஸ்தலர் 9:6.

ஐந்தாவது: புது சிருஷ்டியாய் வாழ வேண்டும்.

நாம் புது சிருஷ்டியாக மாறினால் மாத்திரமே தேவனுக்குப் பிரியமான கனிகளைக் கொடுக்க முடியும் இன்னும் பழைய மனுஷனாகிய ஆதாமின் சுபாவத்தோடு வாழ்வோமானால் அந்த மனுஷன் கர்த்தருக்கு எப்பொழுதும் புளிப்பான கனிகளை மாத்திரமே தர முடியும்.

நாம் புதிய ஆதாமின் சுபாவத்தை எப்பொழுது தரித்துக் கொள்ள முடியும். வேதம் சொல்லுகிறது,

இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான் பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின-     2கொரி 5:17.

நாம் எப்பொழுது கிறிஸ்து சொன்ன சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்ன ஞானஸ் நானங்களைப் பெற்றுக் கொள்கிறோமோ? அப்பொழுது மாத்திரமே அந்த பழைய மனுஷனிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் அப்படியில்லாத பட்சத்தில் நமக்கு நரகம் தான் வீடாக மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வேதம் சொல்லுகிறது, இப்படியாக புது சிருஷ்டியாக மாறுகிற பலிகள் மாத்திரமே தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைய முடியும். கலாத்தியர் 5:24.

இத்தகைய வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்ட அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்

கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன் ஆயினும் பிழைத்திருக்கிறேன் இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்து தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2:20.

கர்த்தர் நமக்குக் கொடுக்கிற வெளிப்பாடுகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் நம்முடைய துருத்தியானது புதிதாக இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் சொர்க்கத்திலிருந்து வரும் மன்னா நம்முடைய துருத்தியை கிழித்து போட்டுவிடும்.

அப்பொழுது நாம் நம்மை கர்த்தருக்கு முன்பாக ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

நாம் புதுசிருஷ்டியாக மாறும் போது மட்டுமே கர்த்தர் நமக்கு கொடுக்கிற புது நாமத்தினாலே அழைக்கப்படுவோம் என்பதை நினைவில் வைத்து இப்பொழுதுதே நம்முடைய பழைய வஸ்திரத்தை கழற்றி போட்டுவிட்டு கர்த்தர் தருகிற அபிஷேகம் என்கிற புதிய வஸ்திரத்தை அதாவது கிறிஸ்துவை வஸ்திரமாக தரித்துக் கொள்வோம்.

ஏனென்றால் இப்படிப்பட்ட கலியாண வஸ்திரங்கள் இல்லாதவர்கள் எல்லாரையும் தேவன் தம்முடைய பந்தியில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.

எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே மேலே சொல்லப்பட்ட குண நலன்கள் நம்மிடத்தில் இல்லாத பட்சத்தில் நம்மை ஒருபோதும் அவருக்கு உகந்த ஜீவ பலியாக மாற்ற முடியாது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

ஏனென்றால் வேதம் சொல்லுகிறது,நாம் நம்மை ஜீவ பலியாக மாற்றும் போது மட்டுமே கர்த்தர் பிரியப்படுகிற ஒரு புத்தியுள்ள ஆராதனையை செய்ய முடியும். ரோமர் 12:1.

அப்படியில்லாத பட்சத்தில் தேவன் நாம் நடத்துகிற ஆராதனைகளில் ஒருபோதும் பிரியப்படமாட்டார்.

கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

குறிப்பு: சாலமோன் ஆயிரம் தகன பலிகளைச் செலுத்தினான் இதனால் தேவன் அவன் மேல் பிரியம் கொண்டு அவனை ஆசீர்வதிக்கும்படி கீழே இறங்கி வந்தார். தேவனுக்கு பிரியமான பலிகள் சொர்க்கத்தை திறக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.   

bottom of page