top of page

எப்பொழுதும் தேவனோடு...

 

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் தேவனோடு நெருங்கி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரயாசப்படுகிறவர்கள் அநேகர். தினமும் மூன்று முறை ஜெபிப்பது வாரத்தில் ஒரு முறை உபவாசம் இருப்பது போன்ற பல பழக்க நல்ல வழக்கங்களை கையாளுகிறோம். ஆனாலும் காலம் செல்ல செல்ல உலகக் கவலைகள் சிற்றின்பங்கள் ஐசுவரியத்தின் மயக்கம் நம்மை நெருக்கி நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை  அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வலுவிழந்து போகிறது. நாம் எப்பொழுதும் தேவனோடு கூட வாசம் செய்ய வேதாகமம்  சில காரியங்களை நமக்கு போதிக்கிறது, அதனை  வேத வசனங்கள் வாயிலாக நாம் தியானிப்போம்.

  1. எப்பொழுதும் தேவனுக்கு முதலிடம் கொடு (தேவனை உனக்கு முன்பாக வை)

 

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று தாவீது ராஜா அழகாக கூறுகிறார் [சங்கீதம்:16:8]. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது  நம் தேவாதி தேவனாகிய இயேசு கிறிஸ்துவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி வைத்து அவரையே சார்ந்திருப்பது. அதாவது நம்முடைய உலகப்பிரகாரமான எல்லா உறவுகளையும் விட, நமக்கிருக்கிற எல்லாவற்றையும் விட  தேவனுக்கு முதலிடம் கொடுத்து அவர் மேல் நம் முழு  நம்பிக்கையும் வைத்து வாழும் விசுவாச வாழ்க்கையாகும். இதற்கு உதாரணமாக நாம் தாவீது ராஜாவை சொல்லலாம். தாவீது ராஜா கூறுகிறார் “நான் எப்பொழுதும்  உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர் [சங்கீதம் 73:23]. இவ்வசனம் தாவீது ராஜா தேவனிடம் கொண்டுள்ள ஆழமான உறவை எடுத்துக்காட்டுகிறது.தாவீது ராஜா தன்னுடைய  வாழ்க்கையில் பல பிரச்சனைகள், நெருக்கங்கள்   போராட்டங்கள் சந்தித்த போதும் அவர் “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்” என்று அருமையாக சாட்சிக் கொடுத்தார்.

ஒருமுறை தாவீதும் அவன் மனுஷரும் பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு போயிருந்த போது, அவர்கள் மனைவிகள் பிள்ளைகள் எல்லாரையும்   அமலேக்கியர் சிறைப்பிடித்து சென்றனர். தங்கள் மனைவிகள் பிள்ளைகளினிமித்தம் தாவீதின் மனுஷர் அவன்மேல் கல்லெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அந்த நெருக்கத்தின் மத்தியில் தாவீது ராஜா எந்த மனுஷரையும் நாடி செல்லவில்லை. கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக்கொண்டு “கர்த்தாவே நான் அந்த தண்டை பின்தொடரவேண்டுமா?அதை பிடிப்பேனா?” என்று தேவனை  தன் முன்னிறுத்தி முறையிடுவதை நாம் வேதத்தில் வாசிக்கலாம்[1சாமுவேல்:30:1-8]. நம்முடைய வாழ்க்கை எப்படியாய் இருக்கிறது?நாம் யாரை முன்னிறுத்தி வாழுகிறோம்?நெருக்கமான சூழ்நிலைகளில் நம் மனம் யாரை நாடி செல்கிறது?  சற்று சிந்திப்போம். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக வாழ்ந்த போது எல்லா நேரத்திலும் பிதாவை தனக்கு முன்பாக வைத்திருந்தார். ஆம் பிரியமானவர்களே நாம் எப்பொழுதும் நம் தேவாதி தேவனை நம் தலைவராக நம் முன் நிறுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்போஸ்தலராகிய பவுலைப் போல   உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் தூசியும் குப்பையாக எண்ணுவோம்;  இனி ஜீவிப்பது நான் அல்ல கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார் என்று  உறுதியோடு நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை ஒடுவோம்.

 

எப்பொழுதும் துதித்துக்கொண்டிரு

 

நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்[சங்கீதம்:71:6 ]. வேதாகமத்தில்  எப்போதும் தேவனை துதித்து புகழ்ந்து பாடிய தாவீது ராஜா “ என் வாய் உமது துதியினாலும் நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக” என்று கூறுகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஆலய ஆராதனையில் தேவனை துதிப்பது மட்டுமல்ல, நம் அனுதின வாழ்க்கையில்  எப்பொழுதும் நம்மை படைத்த தேவாதி தேவனை எண்ணி அவருடைய அதிசயங்கள் மகத்துவங்களை நினைத்து துதிக்க வேண்டும். அவருடைய துதி எப்போதும் நம் வாயில் இருக்க வேண்டும்.

 நம்மில் சிலர் வாழ்க்கையில் எல்லாம் ஆசீர்வாதமாக இருக்கும் போது தேவனைத் துதிப்போம். ஆனால் ஒரு சிறு கவலை அல்லது பிரச்சினைகள் வந்தால் உடனே நாம் கலங்கி சோர்ந்து போய் விடுவோம். தாவீது ராஜாவை பாருங்கள்,  சவுலுக்கு பயந்து வேஷம்மாறி அபிமெலேக்குவிடம் சென்று தஞ்சம் தேடுகிறார். அங்கு துரத்திவிடப்படுகையில்  “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” என இக்கட்டான நேரத்திலும் தேவனை துதித்ததை நாம் சங்கீதம் 34-ல் காணலாம். பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் தேவனை துதித்து பாடின போது சிறைச்சாலை கட்டுகள் கழன்று போயிற்று. நமது நெருக்கத்திலும் இக்கட்டிலும் தேவாதி தேவனை துதித்து பாடும் போது அவர் நம் கட்டுகளை அகற்றி நம்மையும்  விடுவிப்பார் என்பதில் சந்தேகமில்லை. வேதம் கூறுகிறது  நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்[எபிரெயர்:5:13]. ஆம் பிரியமானவர்களே அவருடைய இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்களாகிய நம்முடைய வாய்  அவரை துதிக்கும் துதியினால் எப்போதும் நிறைந்திருப்பதாக.

எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திரு

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ண வேண்டும் [லூக்கா: 18:1]. இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் தேவனிடம் கொண்டுள்ள தனிப்பட்ட உறவின் அடையாளம் ஜெபம். சாத்தானின் தந்திரங்களில் சிக்கிகொள்ளாமல் நம்மை பாதுகாக்கும் ஒரே பேராயுதம் ஜெபம்.  ஜெபம் ஒவ்வொரு கிறிஸ்தவனின் சுவாசமாய்  இருக்க வேண்டும்.  ஒருவன்  சுவாசிக்க மறந்தால் எப்படி மரிக்கிறானோ, அதுபோல ஜெபமில்லாத கிறிஸ்தவ வாழ்வு உயிரற்றது. ஒரு பிறந்த சிறுகுழந்தை உணவிற்காக உடைக்காக பராமரிப்புக்காக பாதுகாவலுக்காக எப்படியாய் தன் தாயை நோக்கிபார்த்து காத்திருக்கிறதோ அதே போல ஒரு கிறிஸ்தவன் தேவனையே நோக்கிப் பார்த்து  தேவ சமூகத்தை எப்பொழுதும் நாடுவது தான் ஜெபம்.

பழைய ஏற்பாட்டில் எப்படி நுனிதோலின் மாம்சம் வெட்டப்பட்டு விருத்தசேதனம் செய்கிறார்களோ, அதுபோல சுயத்தின் மேலுள்ள நம்பிக்கையை தூக்கி எறிந்து விட்டு தேவன் மேல் நம்பிக்கை வைத்து எல்லா நேரமும் அவரை நம்பி வாழும் ஜெப வாழ்க்கையாகிய ஆவிக்குரிய விருத்தசேதனம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவை. நம்மால் எதிர் கொள்ள முடியாத காரியங்களை மட்டுமல்ல நம்மால் எதிர் கொள்ளமுடிகிற  பகுதிகளையும் நாம் தேவகரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்து மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்த போது எப்பொழுதும்  பிதாவின் சமூகத்தை தரிசித்தார் என நாம் வேதத்தில் வாசிக்கலாம். தானியேலின் ஜெபவாழ்க்கை நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையட்டும். புதிய ஏற்பாட்டில் கொர்நேலியு என்னும் நூற்றுக்கதிபதி தேவனுக்குப் பயந்தவனாயிருந்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தான். அவன் மூலமாய் அவன் உறவினரும் சிநேகிதரும் இரட்சிக்கப்பட்டார்கள்.நம்முடைய ஜெபவாழ்க்கை எப்படி இருக்கிறது?அன்பானவர்களே  நம்முடைய  ஜெபங்களும் கூட குடும்பத்தில் தேசத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். நாம் எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருக்க வேண்டும் என வேதம் நம்மை எச்சரிக்கிறது[லூக்கா:21:36 ].  ஏனெனில் நாம் நினையாத நேரத்தில் ஒரு கண்ணியைப் போல கர்த்தருடைய நாள்  நம்மேல் வரும். எனவே  அதில் சம்பவிக்கப்போகிறவைகளுக்கெல்லாம் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி தேவ உறவில் விழித்திருக்க வேண்டும். ஆம் பிரியமானவர்களே நம் சுய பெலத்தினால் நாம் எதையும் செய்ய முடியாது. ஜெபத்தினால் தேவனோடு உறவாடி தேவ பெலனைப் பெற்று இவ்வுலகத்தை ஜெயிப்போம் கர்த்தருடைய நாளில் அவருக்கு முன்பாக பாத்திரவான்களாய் நிற்க நம்மை ஆயத்தப்படுத்துவோம்.

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் [Iதெசலோனிக்கேயர் 5:16]. நாம் நினைத்தபடி நம்முடைய வாழ்க்கை அமையவில்லை என்றால் நம்முடைய சந்தோஷம் பறிபோய் நாம் துக்க முகத்துடன் இருப்போம். எப்பொழுதும் சந்தோஷமாய் இருப்பது என்பது கடினம் தான். ஆதனால் தான் வேதம் நமக்கு கற்று தருகிறது கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் “கர்த்தருக்குள்  எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்;  சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்”[பிலிப்பியர்:4:4].நம்முடைய சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாய் இருந்தாலும், ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என புலம்ப வேண்டாம். வேதம் கூறுகிறது அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்[ரோமர்:8:28].ஆம் பிரியமானவர்களே என் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார், என் தேவைகளை யாவையும் நிச்சயம் சந்திப்பார் என்ற விசுவாசத்துடன் கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருக்க நாம் பழகுவோம். தாவீது ராஜாவின் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள்,உயிரை பறிக்க சவுல் துரத்திக் கொண்டு வந்தாலும் அவர் கர்த்தரை துதித்து கர்த்தருக்குள் மகிழ்வதை விட்டுவிடவில்லை. அதேபோல அன்னாளுக்கு குழந்தை இல்லை, ஆனால் தேவசமூகத்தில் தன் பாரத்தை இறக்கி வைத்த பின் அவள் துக்க முகமாய் இருக்கவில்லை என வேதம் கூறுகிறது. ஆம் பிரியமானவர்களே அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள்   மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆண்டவராகிய   கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப் பண்ணுவார்[ஆபகூக்:3:17-19] என்ற ஆபகூக் தீர்க்கரின் சங்கீதம் நம் இருதயத்தில் எப்பொழுதும் தொனிக்கட்டும். நம்முடைய துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுகிறவர் நம் தேவன் ஒருவரே. அவர் நமக்காய் பெரிய காரியங்களை செய்வார். அந்த நம்பிக்கையிலே சந்தோஷமாய் இருந்து ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போம்.

எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிரு

 

இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்[அப்போஸ்தலர் 24: 16 ]. வேதாகமத்தில் தானியேலை குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது. அவன் உண்மையுள்ளவனாய் இருந்தபடியால் அவன் மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறையும் காணப்படவில்லை. நம்முடைய வேலை ஸ்தலத்தில் அல்லது குடும்பத்தில்  நம்மை குறித்து இப்படி ஒரு சாட்சி சொல்லுவார்களா?சற்று நம்மை ஆராய்ந்து பார்ப்போம். நாம் எந்த ஒரு காரியத்தை செய்யும் போதும் நம் மனசாட்சி நம்மோடு பேசுகிறது.குறிப்பாக நாம் ஒரு தவறு செய்யும் போது பரிசுத்த ஆவியானவர் நம் மனசாட்சியின் வழியாய் நம்மை கண்டித்து உணர்த்துகிறார். நாம் தவறான எண்ணத்தோடு நற்கிரியைகள் செய்தாலும் உலகம் நம்மை போற்றும் ஆனால் நம் மனசாட்சி நம்மை தேவனுக்கு முன்பாக குற்றவாளியாய் நிறுத்தும்.நம் மனசாட்சி நம்மை கண்டித்துணர்த்தும் போது நாம் தேவ சமூகத்தை நாடி மன்னிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். பவுலடியார் கூறுகிறார் நாம் தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக குற்றமற்ற மனசாட்சி உள்ளவர்களாய் வாழ வேண்டும்.சகேயுவுடைய வாழ்க்கையில் இயேசு கடந்து வந்த போது அவன் தேவனிடத்தில் இரட்சிப்பை பெற்றுக்கொண்டதோடு நின்றுவிடாமல் மனிதர்களுக்கு முன்பாகவும் தன் மனசாட்சியை குற்றமற்றதாய் காத்துக்கொள்ள பிரயாசப்பட்டான். சகேயு தன் மனசாட்சியில் குத்துண்டவனாய் தான் அநியாயமாய் சேர்த்துக் கொண்டதை நாலத்தனையாய் திரும்பக் கொடுத்தான். பொல்லாங்கான இந்த உலகத்தில் வாழும் நாமும் பரிசுத்த ஆவியானவரின் பெலனை பெற்று நம்முடைய மனசாட்சியை குற்றமற்றதாய் காத்துக்கொள்ள எப்பொழுதும் பிரயாசப்படுவோம்.    

 

எப்பொழுதும் கிருபையுள்ள வார்த்தைகளை பேசு

 

அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக [கொலோசெயர்:4:6]. நம்முடைய பேச்சுக்கள் பிரயோஜனமுள்ளவைகளும் கிருபை பொருந்தினதாயும் இருக்க வேண்டும். நாம் உணவு உண்ணும் போது எப்படியாய் உப்பின் சுவை உடனடியாக தெரிகிறதோ, அதேபோல நம்முடைய வார்த்தைகளும் கிருபையுள்ள வார்த்தைகளாக கேட்கிறவர்களுக்கு சுவைக்க  வேண்டும். ஒரே நாளில் நாம் கிருபையுள்ள வார்த்தைகளை பேச முடியாது ஆனால் அதற்காய் முயற்சிக்க வேண்டும். நாம் தேவனோடு ஐக்கியமாக இருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நம் வாயில் கிருபை பொருந்திய ஞானமுள்ள வார்த்தைகளை அருளுகிறார்.இயேசு கிறிஸ்து இவவுலகில் வாழ்ந்த போது  எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட   கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் என வேதம் கூறுகிறது [லூக்கா 4:22 ]. வேதம் கூறுகிறது ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். ஆம் பிரியமானவர்களே  நம் வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தாமல் பிறருக்கு நன்மை அளிப்பதாய் சந்தோஷத்தை கொடுப்பதாய் இருக்க வேண்டும். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்[நீதிமொழிகள்:18:21]. நம் வாயினால் விதைத்த ஒவ்வொரு வார்த்தைகளின் கனியை நாம் புசிக்க வேண்டியது வரும். எனவே நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாய் பேச வேண்டும். வீணான பேச்சுக்கள் பேசுவதை நாம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வேதம் கூறுகிறது மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்[லூக்கா:4:22].இயேசுவின் தாயாகிய மரியாளும் எலிசபெத்தும் தங்கள் பேறுகாலத்தில் சந்தித்த போது பரிசுத்த ஆவியினால் நிறைந்து பேசினார்கள் என நாம் வாசிக்கிறோம். வரும் நாட்களில் நாமும் கூட நம் சுய வார்த்தைகளை துணிந்து பேசாமல் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு கிருபை நிறைந்த வார்த்தைகளை பேச தேவ உதவியை நாடுவோம்.

 

  1. எப்பொழுதும் இயேசுவின் மரணத்தை சுமந்து கொண்டிரு

  2. இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்[IIகொரிந்தியர்:4:10].இயேசு கிறிஸ்துவின் விலையேற்றப் பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்ட பாவிகளான நாம் தேவனால் நமக்கு அருளப்பெற்ற மிகப்பெரிய ஈவாகிய நித்திய ஜீவனில் நிலைத்திருக்குபடி அவருடைய மரணத்தை நம் சரீரத்தில் சுமக்க கடனாளிகளாய் இருக்கிறோம். அதாவது தினமும் அவருடைய சிலுவையை சுமந்து கொண்டு அவரை பின்பற்ற நாம் பாத்திரவான்களாய் இருக்கிறோம்.

 

 

தினமும் நம் சுயத்தை சாகடித்து தேவனுடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும். நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய சித்தம் செய்ய வேண்டும். ஒருவேளை நம்முடைய விரும்பம் தேவ சித்தத்திற்கு மாறானதாக இருந்தாலும் நாம் நம் சுய சரீரத்தின் விருப்பத்தை சாகடித்து தேவ சித்தம் செய்ய நம்மை அர்பனிப்பதே நம் சரீரத்தில் இயேசுவின் மரணத்தை சுமப்பது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மாம்சமாய் வாழ்ந்தாலும் அவர் தேவ சித்தத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின் படி  செய்து அவருடைய கிரியையை முடிப்பதே அவருடைய போஜனமாய் இருந்தது[யோவான்:4:34].பிதாவாகிய தேவனின் சித்தப்படியே தன்னை ஜீவபலியாய் ஒப்புகொடுத்தார். நாம் அவருடைய சித்தம் செய்ய நம்மை ஜீவபலியாய் ஒப்புக்கொடுப்பதே நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனை. நாம் நம்மால் ஏற்றுகொள்ள கூடிய காரியங்களில் தேவசித்தம் நாடுவோம். நம்மால் தேவ சித்தத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாத காரியங்கள் இன்னும் நம் வாழ்க்கையில் உண்டல்லவா? என்னுடைய சித்தத்திற்கு வாழ்வதா? இல்லை என்னுடைய சுயத்தை சாகடித்து தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதா? அன்பானவர்களே சிந்தித்து  இன்றைக்கே  நாம் ஒரு தீர்மானம் எடுப்போம்.ஆண்டவரே  நான் உம்முடைய மரணத்தை என் சரீரத்தில் எப்பொழும் சுமந்து கொள்ள ஒப்புக்கொடுக்கிறேன். சிலுவை என் முன்னே!உலகம் என் பின்னே! என்று சொல்லி நம்மை அர்ப்பணிப்போம்.

கர்த்தருடைய கிரியையிலே பெருகுகிறவனாயிரு

 

  • எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக [1கொரிந்தியர்:15:58]. நாம் உலகத்திற்காக செய்கிற எந்த ஒரு வேலையும் நிரந்தரமற்றது. ஆனால் நம் தேவனுக்காக படுகிற ஒவ்வொரு பிரயாசத்திற்கும் நித்திய நித்தியமாய் பலன் உண்டு. ஒருவேளை நாம் தேவனுக்காக படுகிற பிரயாசத்திற்கு உலகில் பாராட்டுகள் கிடைக்காமல் போகலாம், மாறாக அவமானங்கள் நிந்தைகள் பரியாசங்களை அனுபவிக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் தேவனுடைய பார்வையில் அது விலையேறப் பெற்றதாய் இருக்கிறது. வேதம் கூறுகிறது ஏனென்றால்,  உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே[எபிரெயர்:6:10]. நம்முடைய பிரயாசங்கள் ஒருநாளும் வீண்போகாது. இதனை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் உறுதியோடும் அசையாதவர்களாயும் தேவனுடைய கிரியையில் பெருக வேண்டும்.

 

  •  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், நியாயங்களையும்,கற்பனைகளையும்    எப்பொழுதும்  கைக்கொள்வோம். வேதம் கூறுகிறது பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று[வெளி:14:13].எவ்வளவு பாக்கியம் பாருங்கள். தேவனுடைய பாதத்தில் நாம் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் விலையேறப்பெற்றது . ஆண்டவரே இன்று முதல் நான் உமக்காக ஏதாவது ஒன்றை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுப்போம். நம்முடைய நேரத்தை, தாலந்தை, பணத்தை அவருக்காய் செலவிடுவோம். மழையானாலும் வெயிலானாலும் சாக்குபோக்கு சொல்லாமல் அவருக்காய் ஓடுவோம், அவருக்காய் உழைப்போம்.நாம் இந்த மண்ணில் வாழும் போது மட்டும் தான் நாம் அவருக்காய் பிரயாசபட முடியும். ஆனால் நம்முடைய கிரியைகள் பரலோகத்தில் நம்மோடு கூட வரும் நமக்கு பலனை சேர்க்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் தாவீதைப் போல எப்பொழுதும் நம் தேவாதி தேவனை நம் முன்பாக வைத்திருப்போம்.தாவீதைப் போல அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் எப்பொழுதும் நம் தேவாதி தேவனை துதித்து படி அவரில் மனமகிழ்ச்சியாய் இருப்போம்.ஒவ்வொரு நிமிடமும் ஜெபம் நாம் மூச்சாக இருக்கட்டும். என்ன வேலை செய்தாலும் நம் மனம் தேவனோடு உறவாடட்டும். நாம் தேவனுக்கும் மனிதர்களுக்கு முன்பாக குற்றமற்ற மனசாட்சியுள்ளவர்களாய் வாழ தேவ உதவியை நாடுவோம். எப்பொழுதும் இயேசுவை நம் வாழ்க்கையில் காண்பிக்கும்படி கிருபையுள்ள வார்த்தைகள் நம் வாயிலிருந்து புறப்படட்டும். இயேசுவின் மரணத்தை நம் சரீரத்தில் சுமந்தவர்களாய் சிலுவையை எடுத்துக் கொண்டு தேவகிருபையிலே பெருகுகிறவர்களாய் அவருக்காய் ஓடுவோம் உழைப்போம் செயல்படுவோம். தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் தம்முடைய பரிசுத்த பிரசன்னத்தினால் நிறைத்து நம்மோடு கூட வாசம் பண்ணுவாராக. தேவகரம்  நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும். தேவனுடைய மெய்யான ஆசீர்வாதம் நம் ஒவ்வொருவரோடுங்கூட இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் இருப்பதாக. ஆமென். ஆமென்.

bottom of page