top of page

பரலோகத்தின் கிரீடங்கள்

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

 

நாம் ஒரு சிறிய காரியத்தை செய்தாலும் அதற்காய் மற்றவர்கள் நம்மை  புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நம் மனம் ஏங்குவதுண்டு. உலக வாழ்க்கையில் தான் பணி செய்யும் இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் பல பரிசுகள், விருதுகள் பெற வேண்டும் என கடினமாய் உழைப்பவர்கள் அநேகர் உண்டு. உலகப்பிரகாரமான போட்டிகளில்  பங்கேற்றால் அதில் எப்படியாவது வெற்றி பெற்று பரிசை அல்லது பதக்கத்தை வென்று விட வேண்டும் என்று தூக்கத்தை களைந்து கடினமாய் உழைப்போம். அது நல்லது தான். ஆனால் இந்த உலகத்தில் நாம் பெறும் பாராட்டுகள் பரிசுகள் விருதுகள் எல்லாம் நிரந்தரமற்றது.

 

இரட்சிப்பும்,  நித்திய ஜீவனும் இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்ட எல்லாரும் இலவசமாக கொடுக்கப்பட்ட ஈவு.  கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும் விசுவாச ஒட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தில் வெற்றி பெறுகிறவர்களுக்கு  தேவன் விலையேறப்பெற்ற கிரீடங்களை வைத்திருக்கிறார்.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாய் பீமா ஆசனத்தில் அமர்ந்து நம்முடைய கிரியைகளுக்கு தக்க பலனை அளித்து கிரீடங்கள் சூட்டி நம்மை மகிழ்விக்க போகிறார்[Performance Awards for Running a Good Christian Race]. நித்திய நித்தியமாய் அவரோடு கூட வாழப் போகிற நாம் இதை குறித்து கவலைப்படுகிறதுண்டா? அதற்காய் உழைக்கிறோமா? மணவாளனாகிய என் ஆத்தும நேசரின் கையிலிருந்து பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும் என வாஞ்சிக்கிறோமா?  ஆயத்தப்படுகிறோமா? சிந்திப்போம் அன்பானவர்களே! பரலோகத்தில் உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் என  வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.  “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என வேதம் நம்மை எச்சரிக்கிறது[வெளி:22:12]. பரலோக ராஜ்ஜியத்தில் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதியாய் நம்முடைய கிரியைகளுக்கேற்ற பலனை நமக்கு அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்.அவர் நமக்காக வைத்திருக்கும் கிரீடங்கள் என்ன என்பதை  வேதத்தின் வாயிலாக நாம் தியானிக்கலாம்.

 

ஜீவ கிரீடம்

இந்த பொல்லாங்கான உலகில் சோதனைகளை பாடுகளை உபத்திரவங்களை சகித்து அவருக்காய் ஜீவனையும் கொடுக்க துணிபவர்கள்  ஜீவகிரீடத்துக்கு சுதந்தரவாளியாகலாம். எவ்வித நெருக்கத்திலும் தேவனாகிய கர்த்தரில் உண்மையாய் அன்புகூர்ந்து அவரை உத்தமமுமாய் பின்பற்றுகிற விசுவாசிக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசு ஜீவகிரீடம். கிறிஸ்துவுக்காக எல்லவற்றையும் அற்பமும் குப்பையுமாக எண்ணி வாழுகிற வைராக்கியமான விசுவாச வாழ்க்கை நமக்கு தேவை. விசுவாசத்தினாலே மோசே அநித்தியமான பாவசந்தோஷங்களை அனுபவிப்பதை பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதை தெரிந்துக்கொண்டு இனிவரும் பலன் மேல் நோக்கமாய் இருந்து எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி கிறிஸ்துவுக்காக தன் வாழ்க்கையைப்  தியாகம் செய்தான். வேதாகமத்தில் தேவனால் அடக்கம் பண்ணப்பட்ட ஒரே மனிதன் மோசே. வேதம் கூறுகிறது சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்[யாக்கோபு:1:12]. ஆவியானவர் சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுதும் போது “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” என்று சொல்லுகிறார் [வெளி:2:10]. பிரியமானவர்களே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சோதனைகளையும் பாடுகளை சந்தோஷமாய் தாங்கி மரணபரியந்தம் அவரில் உண்மையுள்ளவர்களாய் நிலைநிற்போம்.  ஏனெனில் வேதம் கூறுகிறது உங்களை சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றிஎரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்[1பேதுரு:4:12-14]. பவுல் தீமோத்தேயுவுக்கு கூறுகிறார் நீ இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்சேவகனாய் தீங்கநுபவி. ஆம் பிரியமானவர்களே அவருக்காக நாம் பாடுகளை சகித்தால் அவரோடு கூட நாம் ஆளுகை செய்வோம்.

 

அழிவில்லாத கிரீடம்

 

அழிவில்லாத கிரீடத்தை நாம் வெற்றியின் கிரீடம் என்றும் சொல்லலாம். விசுவாச ஓட்டத்தில் உறுதியோடும் உண்மையோடும் ஒழுக்கத்தோடும் ஓடி வெற்றி பெறுகிறவன் அழிவில்லாத கிரீடத்தை சுதந்தரிக்க முடியும். அதாவது கிறிஸ்துவுக்காக தங்கள் ஆசை இச்சைகளை சிலுவையில் அறைந்து  அவர் அழைத்த அழைப்பில் உண்மையாய் இருந்து அதற்கு பாத்திரவான்களாய் நாம் ஓடும் போது அழிவில்லாத கிரீடம் நமக்கு சொந்தமாகும்.  

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்[1கொரிந்தியர்:9:24-25]. கிறிஸ்தவ வாழ்க்கையை பவுலடியார் ஒரு ஓட்டப்பந்தயம் என குறிப்பிடுகிறார். முதலாவதாக தேவன் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு  வைத்திருக்கும் திட்டத்தை அறிந்துக் கொண்டு ஓட்டத்தை  ஆரம்பிக்க வேண்டும். நம்முடைய சுய திட்டத்தில் ஓட முயற்சிக்க கூடாது. தேவன் நமக்கு வைத்திருக்கும் இலக்கு என்ன என்பதை அறிந்துகொண்டு அந்த இலக்கை அடைய தடையாயிருக்கிற  உலக காரியங்களை உதறி தள்ளிவிட்டு ஓடும் போது மட்டுமே நாம் ஓட்டத்தை வெற்றியாய் முடிக்க முடியும்.

 

கிறிஸ்துவின் அன்பை ருசிபார்த்த நம் எல்லாருக்கும்  தேவனுக்காய் ஏதாவது செய்ய வேண்டும் என ஆசையிருக்கும். உடனே நாம் ஆலயத்தில் என்ன ஊழியம் செய்யலாம் என யோசித்து அதற்கு முயற்சிப்போம்.  அதாவது நமது சௌகரியமான சூழ்நிலையில் ஊழியம் செய்வதை வாஞ்சிப்போம். தேவன் நம்மை எந்த ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார் அவருடைய திட்டம் என்ன ஊழிய களம் எது என்பதை சிந்திக்காமல் செயல்படுவோம். ஒருவேளை தேவன் நம்மை மிஷனரியாக ஊழியம் செய்ய அழைத்தால் தேவன் காண்பிக்கும் இடத்திற்கு நாம் நம்முடைய சொந்த வீடு, நிலம், பணம் எல்லாவற்றையும் விட்டு ஓட தயாராக வேண்டும். இப்படி தேவ திட்டத்தை அறிந்து செயல்படும்போது மட்டுமே நம் ஓட்டம் வெற்றியாய் முடியும். ஒரு ஓட்டப்பந்தய வீரன் தன்னுடைய இலக்கை நிர்ணயித்து,  தன் உடம்பை ஒடுக்கி,  விளையாட்டின் விதிமுறைகளை கவனமாய் பின்பற்றி  வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஒடுவான். அதே போல விசுவாச வாழ்க்கையிலும் தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டத்தை அறிந்து, நம் இலக்கை நிர்ணயித்து,  சட்டதிட்டங்களாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிற கட்டளைகளுக்கு கீழ்படிந்து, நம்முடைய சரீரத்தை உலகத்திற்கு ஏற்ற வேஷம் போடாதபடிக்கு  இச்சையடக்கத்தோடு காத்துக்கொண்டு ஓட வேண்டும். தேவன் நமக்கு கொடுத்த அழைப்பின் திட்டத்தை வெற்றியாய் செயல்படுத்தி  முடிக்க நாம் செய்த  அர்ப்பணத்திற்கும்  தியாகத்திற்கும்  ஈடாக அழியாததும் மாசற்றதும் வாடாததுமான அந்த சுதந்திரம் பரலோகத்தில் நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசிகளின் தந்தையாகிய ஆபிரகாமை போல எந்த இடம் எனக்கு காட்டினும் இயேசுவே உம் சித்தம் செய்ய  இதோ போகிறேன் என்று சொல்லி நம்மை அற்பனிப்போமா?

 

மகிமையுள்ள வாடாத கிரீடம்

தேவனுடைய மந்தையை உண்மையாய் மேய்க்கும் மேய்ப்பர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம். சபை நடத்தும் ஊழியர்கள், தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கும் ஊழியர்கள், வேதாகம பள்ளியில் போதிக்கும் ஆசிரியர்கள், மிஷினரிகள் ஆகியோர் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை பிரதிபலித்து தங்கள் மந்தையை விசுவாச பாதையில் தேவனிடம் வழிநடத்தும் கருவிகளாய் செயல்பட தேவன் விரும்புகிறார். வேதம் கூறுகிறது உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.

அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்[1பேதுரு:5:1-4]. தேவன் நமக்கு கொடுத்த மந்தை  சிறியதாக இருந்தாலும்  நாம் உற்சாக மனதோடும் மனப்பூர்வமாயும் ஊழியம்   செய்ய வேண்டும். தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்த ஒவ்வொரு ஆத்துமாக்களுகாய் உத்திரவாதம் பண்னுகிறவர்களாய் நாம் விழித்திருக்க கடமைப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியின்  பெலனை பெற்று புத்தியோடும் அறிவோடும் நம் மந்தையை மேய்க்கக்கடவோம். நல்ல மேய்ப்பனாகிய இயேசுவை பின்பற்றி மந்தைக்கு ஆவிக்குரிய மேய்ச்சல் காட்டி, காணாமற் போனதை தேடி, துரத்துண்டதை திரும்ப கொண்டுவந்து, எலும்பு முறிந்தை காயங்கட்டி, நசல்கொண்டதை திடப்படுத்தி தேவனுடைய மந்தையில் சேர்ப்பதே ஒரு மேய்ப்பனின் பிரதான பணி. அன்பர்களே தேவன் நமக்கு கொடுத்த ஊழியத்தில் சுயநலம், சுயமகிமை, சுயலாபம் எதிர்பார்க்க வேண்டாம்.  மந்தையை மேய்க்காமல் தங்களை மேய்க்கிற மேய்ப்ர்களுக்கு ஐயோ! என வேதம் நம்மை எச்சரிக்கிறது[எசேக்கியல்:34] வாய்வழியாய் கிறிஸ்துவை குறித்து பேசுவது அல்ல கிறிஸ்தவம்.  நாம் கிறிஸ்துவின் மாதிரிகளாய் வாழ்ந்து காட்டி மற்றவர்களும் கிறிஸ்துவை பின்பற்ற கற்றுக்கொடுப்பதே கிறிஸ்தவம்[Let Christ be our Model and Lifestyle]. புதுமையான ஆவியின்படி ஊழியம் செய்ய தெரிந்துக்கொள்ளப்பட்ட நாம் உண்மையோடும் மனப்பூர்வமாயும்   தேவனுடைய நாமம் மாத்திரம் மகிமைப்படும்படிக்கு உற்சாகமாய் செய்வோம். ஊழியத்தின் பாதையில் கஷ்டங்கள் போராட்டங்கள் நிந்தைகள் அவமானங்கள் உண்டு கர்த்தருக்காய் அதை சகிப்போம். சாட்சியாய் வாழுவோம். தேவன் மகிமையுள்ள வாடாத கிரீடத்தினால் நம்மை அலங்கரிப்பார்.

நீதியின் கிரீடம்

கிறிஸ்துவுக்காய் நல்ல போராட்டத்தை போராடி ஓட்டத்தை முடித்து தேவனுடைய வருகையை ஆவலோடு எதிர்பார்க்கும் பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம். பவுல் கூறுகிறார் நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,  நீதியுள்ள நியாதிபதியாகிய கர்த்தர்  அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்[2தீமோத்தேயு:4:6-8]. நம்முடைய சுயநீதியினால் நாம் எதையும் சம்பாதிக்க முடியாது. தேவன் நம்முடைய நீதியின் கிரியையினால் நம்மை இரட்சியாமல் தம்முடைய மிகுந்த இரக்கங்களின்படி மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். கிறிஸ்துவின் மரணத்தினாலே பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு நீதிக்கு அடிமைகளான நாம் தேவனுக்கு அடிமைகளானதால் பரிசுத்தமாகுதல் நமக்கு கிடைக்கும் பலன். எனவே பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நீதிக்கு அடிமைகளாக நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம்.தேவனுடைய விலையேறபெற்ற இரத்தத்தினால் கழுவப்பட்ட நீதிமான்களாகிய நமக்கு பரலோகராஜ்ஜியத்தில் நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது.  அதை  நம்முடைய நடை, சிந்தை, செயல்,  வார்த்தையில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். பெலவீன பாண்டங்களாகிய நாம் பல நேரங்களில் தவறுகிறோம். பவுல் கூறுகிறார் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமை உண்டென்கிற ஒரு பிரமாணத்தை காண்கிறேன். நம் மனது நல்லது செய்ய விரும்பினாலும் நம் அவயவங்களிருக்கிற பாவப் பிரமாணம் நம்மை சிறையாக்கி நன்மை செய்ய விடாமல் தடுக்கிறது. வேதம் கூறுகிறது நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்[ரோமர்:6:13].ஆம் பிரியமானவர்களே பவுலை போல நல்ல போராட்டத்தை போராடுவோம்; விசுவாசத்தை காத்துக்கொள்ளுவோம்;அவருடைய பிரசன்னமாகுதலை அனுதினமும் வாஞ்சிப்போம். மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுவோம்.நீதியென்னும் மார்கவசத்தை அணிந்துகொள்ளுவோம்  பரலோக தேவனின் கையிலிருந்து  நீதியின் கிரீடத்தை நானும் பெற்றுக் கொள்ளுவேன் என்ற நிச்சயத்தோடு ஓடுவோம்.

 

மகிழ்ச்சியின் கிரீடம்

 

ஆத்துமா ஆதாயம் செய்கிறவர்களுக்கு கொடுக்கப்படும் கிரீடம். நாம் தேவனுக்காய் ஆதாயப்படுத்தின ஆத்துமாக்களே கர்த்தரின் சந்திதானதில் மகிழ்ச்சியின் கிரீடமாய் நமக்கு இருப்பார்கள். எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள் என பவுல் தெசலோனிக்கேய சபைக்கு எழுதுகிறார். [1தெசலோனிக்கேயர்: 2:19]. “அறுவடை மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்”. கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டோம். இது நம்மால் உண்டானதல்ல; தேவனுடைய ஈவு. சுவிசேஷம் அறிவிப்பது நம் மேல் விழுந்த கடமை என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் இலவசமாய் பெற்ற இரட்சிப்பை பிறருக்கும் உயர்த்தி கூறி அவர்களையும் இரட்சிப்பின் பாதையில் வழிநடத்தி தேவனுடைய ராஜ்ஜியத்தின் அங்கமாக்குவோம். நாம் தேவனின் கிருபையையும், இயேசு கிறிஸ்துவைவையும் பற்றி பிறருக்கு அறிவிப்பதே இந்த பூமியில் செய்யும் மிகப்பெரிய தொண்டு. “ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல்,......  வெட்கத்தோடே ஆண்டவா! வெறுங்கையனா உம்மை கண்டுகொள்ளல் ஆகுமா? என்று பக்தன் பாடுகிறார். நம்மை இரட்சித்த அன்பு தேவனின் முன்பு ஒரு ஆத்துமாவும் இல்லாமல் நாம் மட்டும் நிற்பது வெட்கக்கேடு. நாம் எத்தனை ஆத்துமாக்களை கொண்டு செல்கிறோம் என்பதை விட நம் மனதில் சுவிசேஷம் சொல்ல நாம் கொண்டுள்ள வாஞ்சையையும் உற்சாகத்தையும் அதற்காய் நாம் படும் பிரயாசத்தையும் தான்  தேவன் பார்க்கிறார்.  பரலோகம் செல்லும் போது நாம் தேவனுக்காய் ஆதாயப்படுத்தின ஆத்துமாக்கள் நம்மை மகிழ்ச்சியின் கிரீடங்களாய் அலங்கரிப்பார்கள். ஏனெனில் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகராஜ்ஜியத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கிறது.  வேதம் கூறுகிறது தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். இன்றே  தேவனுக்காய் ஓடுவோம். ஆத்துமா ஆதாயம் செய்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியாமனவர்களே உலகத்தில் நாம் எதையும் கொண்டு வந்ததுமில்லை எதையும் எடுத்து செல்லுவதுமில்லை. நாம் நிரந்தரமற்ற உலகப்பிரகாரமான பொக்கிஷங்களை சேர்க்க எவ்வளவு பிரயாசப்படுகிறோமோ அதை விட பரலோகத்தின் பொக்கிஷங்களை பலன்களை கிரீடங்களை சம்பாதிக்க பிரயாசப்படுவோம். இந்த உலகத்தில் நாம் தேவனுக்காக படுகிற ஒவ்வொரு பிரயாசத்திற்கும் பலன் உண்டு. எனவே உலக மாயையில் சிக்கி நம் வாழ்க்கையை அழித்து போடாமல் என்றென்றைக்கும் நித்திய நித்தியமாய் வாழும் பரலோக ராஜ்ஜியத்தின் பொக்கிஷங்களை சம்பாதிப்போம். நாம் கிரீடங்கள் பெற கிரியை செய்கிறவர்களாக அல்லாமல் தேவனில் கொண்டுள்ள உண்மையான அன்பினால் கிரியை செய்வோம். பரலோக வாழ்கையை நம் ஆசையாக மாறட்டும். பரலோகத்தின் கிரீடங்களை என்  அன்பர் இயேசுவின் கையிலிருந்து பெற்றுக் கொள்ள  வேண்டும் என்ற ஆசையோடு உண்மையாய் அவரை பின்பற்றுவோம். நாம் தேவனுக்காய் இந்த உலகில் பட்ட ஒவ்வொரு பிரயாசத்திற்கும் பலனை பெற்றுக்கொள்ளும் நாளில் தேவன் நம்மை கிரீடங்களினால் முடிசூட்டுவார். அந்த தருணம் எவ்வளவு ஆனந்தமானது. தேவனின் பிரசன்னமாகுதலை அனுதினமும் நம் வாழ்க்கையில் வாஞ்சிப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

-----------------------------------

bottom of page