top of page

ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் திறவுகோல்கள்

 

சகோதரி. அனு ஃபெஸ்லின்

இந்த புதிய வருடத்தில் புதுதுவக்கத்தை தந்து புதிய கிருபையினாலும் புதிய நன்மையினாலும் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்தி வருகிற நம் தேவாதி தேவனை ஸ்தோத்தரிப்போம். புதிய வருஷம் மிகுந்த ஆசீர்வாதமாய் அமைய வேண்டும் என நாம் எல்லாரும் வாஞ்சிப்போம். உலகப்பிரகாரமாக செல்வம், ஆஸ்தி, அந்தஸ்து, நோயில்லாத வாழ்வு என இவைகளை மட்டுமே  நாம்   ஆசீர்வாதங்கள் என எண்ணுகிறோம். ஆனால் ஆசீர்வாதம் என்கிற எபிரேய சொல்லின் அர்த்தம் சந்தோஷத்தைக் குறிக்கிறது.  உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள் நமக்கு நிரந்தரமான சந்தோஷத்தை, சமாதானத்தை, மகிழ்ச்சியை எப்போதும் தருவதில்லை. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்று வேதம் வேதம் கற்றுத் தருவதாலே நம் இருதயம்  ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை  வாஞ்சிக்க  வேண்டும். நமக்கும் தேவனுக்கும் உள்ள  உறவு சரியான முறையில் இருக்கும் போது உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களை நாடி நாம் ஓட வேண்டாம் அவற்றை தேவன் நமக்கு தருவார். இந்த புதிய வருடத்தில் இயேசு கிறிஸ்து தம்முடைய மலைப்பிரசங்கத்தில் சொன்ன ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை குறித்து நாம் தியானிப்போம்.

 

ஆவியில் எளிமை

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது[மத்தேயு:5:3 ]. இயேசு கிறிஸ்து கூறுகிறார் பரலோக ராஜ்ஜியம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நாம் நம்முடைய சுயத்தை சாகடித்து ஆவியானவர் நம்மை  ஆளுகை செய்ய முழுவதுமாய் ஒப்புக்கொடுத்து ஆவியில் எளிமையோடு வாழும் போது, இந்த பூமியிலே பரலோக வாழ்வை அனுபவிக்கிறவர்களாய் இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. அதாவது தாவீது ராஜாவைப் போல நான் சிறியவன்  எளியவன் என்னில் ஒன்றுமில்லை;  தேவனே! நீரே பெரியவர் உயர்ந்தவர் என்ற ஆவியின் சிந்தையோடு வாழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஆவியில் எளிமை என்பது நம்முடைய மனத்தாழ்மையை குறிக்கிறது. வேதம் கூறுகிறது பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்[Iபேதுரு: 5:5 ].

”தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று ஜெபித்த ஆயக்காரனின் ஜெபம் நாம் யாவரும் அறிந்ததே. நம் ஜெப வேளையில் நம்  ஆவியில் எளிமை இருக்கட்டும். இந்த ஆயக்காரன்  தன் கண்களை வானத்திற்கு ஏறெடுக்க துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு ஆவியில் எளிமையோடு ஜெபிப்பதை நாம் காணலாம். ஆனால் பரிசேயனோ மற்றவர்களை ஒப்பிட்டு, அவர்களை விட நான் உயர்த்தப்படிருக்கிறேன் என்ற எண்ணத்தோடு தன் சுயநீதியை வெளிப்படுத்தி பெருமையோடு ஜெபித்தான். தேவன் ஆயக்காரனின் ஜெபத்தை அங்கீகரிப்பதையும்   தாழ்மையுள்ளவர்களை அவர்  உயர்த்துகிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சமமாயிருந்ததை கொள்ளையாடின பொருளாய் எண்ணாமல் அடிமையின் ரூபமெடுத்தார். அவருடைய மனத்தாழ்மையை அணிந்துக்கொண்டு நாம் ஆவியில் எளிமையயோடு  வாழ்வோம் பரலோக இன்பத்தை நாடுவோம்.

 

சாந்தம்

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்[மத்தேயு:5:5]. வேதம் கூறுகிறது சாந்த குணமுள்ளவர்கள்   பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

 

சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தி யடைவார்கள் [சங்கீதம்37:11;22:26]. சாந்தகுணம் ஆவியின் கனிகளில் ஒன்று; அழியாத அலங்கரிப்பு. நம்முடைய வாழ்க்கையில் மனிதர்களால் கஷ்டங்கள் பிரச்சனைகள் வரும் போது, நம்மில் யார் பெரியவன் பார்த்துக்கொள்ளலாம் என்று மோதுவதுண்டு. இது விசுவாச வாழ்க்கைக்கு அழகல்ல. விசுவாசிகளாகிய நாம் நம்முடைய பிரச்சனைகளை ஆவியானவரின் பெலனோடும் துணையோடும் பொறுமையோடும்  சாந்தமாய் அணுக கற்றுக்கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து சொல்கிறார் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் தன்னோடு மோதினவர்கள், தன்னை அவமானபடுத்தியவர்கள், நெருக்கடி கொடுத்தவர்களை எந்த அகங்காரமும்[EGO] இல்லாமல் சாந்தத்தோடு அணுகுவதை  நாம் பார்க்கலாம். வேதம் கூறுகிறது அழியாத அலங்கரிப்பாயிருக்கிற  சாந்தமும்   அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது[1பேதுரு3:4]. பரலோக ராஜாவின் பிள்ளைகளாகிய நாம் சாந்தமும் அமைதலுள்ள ஆவியினால்  நம்மை அலங்கரித்து  மனத்தாழ்மையும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி வாழும் போது மிகுந்த சமாதானத்தினாலும்  மனமகிழ்ச்சியினாலும் தேவன் நம்மை வழிநடத்துவார்.

 

நீதி

 

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். நம்முடைய தேவன் நீதிபரர். அவர் நீதியில் பிரியப்படுகிற தேவன். இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்ட நாமும் நீதியுள்ளவர்களாய் வாழ  நம்மை அர்ப்பனிக்க வேண்டும்.  வேதம் கூறுகிறது நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்  பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது[மத்தேயு:5:5,10]. வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. இந்த பொல்லாத உலகத்தில் நீதியும் நியாயமும் இல்லை நான் மட்டும் எப்படி நீதியாய் வாழ முடியும் என எண்ணலாம். நோவா வாழந்த காலமும் பொல்லாதது தான் ஆனாலும் அவர் நீதிமான் என வேதம் சாட்சி பகருகிறது.  சில சூழ்நிலைகளில் நாம் நீதியாய் செயல்படும் போது துன்பம் அனுபவிக்க கூடும். ஆனாலும் நாம் தேவ நீதியை நிறைவேற்றுவதில் பசிதாகமுள்ளவர்களாய் இருக்க  வேண்டும் [Do Just at any Cause]. அநேக சூழ்நிலைகளில் நாம் நம்முடைய சுயநீதியை காண்பித்து  பெருமைப்படுவோம். இயேசுகிறிஸ்து பரிசேயரை பார்த்து கூறுகிறார் “நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது”. நாம் தேவனுக்கும் மனிதனுக்கும்  முன்பாக நீதியாய் வாழும் போது  பாவத்தினின்றும்  குற்றமனசாட்சியிலிருந்தும்  விடுதலை பெறுகிறோம். வேதம் கூறுகிறது நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்[வெளி:22:11]. தேவநீதியை நிறைவேற்றுவதே நம்முடைய  ஆவிக்குரிய பசியாயிருக்கட்டும்; அதற்காய் துன்பத்தையும் அனுபவிப்போம் தேவ ராஜ்ஜியத்தின் சுதந்தராய் மாறுவோம்.

 

இரக்கம்

இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள் [மத்தேயு:5:7]. நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் பாவத்தில் மரித்து போயிருந்த நம்மை தம்முடைய சொந்த இரத்தத்தினால் மீட்டு தம்முடைய சொந்த பிள்ளைகளாய் நம்மை மாற்றினார். இதை உணர்ந்தவர்களாய் நாமும் பிறருக்கு இரக்கம் காண்பிக்க வேண்டும். தேவன் நம் பாவத்தை மன்னித்தார் அதே போல நாமும் நம் சத்துருக்களையும் பகைஞரையும்  மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தேவன் நமக்கு பாராட்டின இரக்கத்தை நாமும் காண்பிப்போம். நாம் அநேக நேரங்களில் பிறர் நமக்கு  செய்த தீமையை மனதில் வைத்துக்கொண்டே வாயினால் மன்னிப்பு என்று சொல்லுகிறோம். அந்த காரியத்தை மறந்து விடாமல் எத்தனை வருடங்கள் ஆனாலும் அசை போட்டுக்கொண்டே இருப்போம். கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாவற்றையும்  மறந்து மன்னித்து விட்டு ஆதியிலே கொண்ட அன்பை காண்பிக்க தவறுகிறோம் அல்லவா? கிறிஸ்துவின் அன்பை உணர்ந்தவர்களாய் இரக்கம் காண்பிப்போம். அதுமட்டுமல்லாமல் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். நாம் மற்றவர்களுக்கு இரங்கும் போது தேவன் நமக்கும் இரக்கம் காண்பிக்கிறார்.  நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.


அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்று இயேசுகிறிஸ்து நமக்கு போதித்துள்ளார்.வேதம் கூறுகிறது இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்[யாக்கோபு:2:13].நாமும் பிறருக்கு இரக்கத்தை காண்பிப்போம் நாமும் தேவ இரக்கத்தை சுதந்தரித்துக்கொள்ளுவோம்.

 

இருதயத்தில் சுத்தம்

 

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்[மத்தேயு:5:8]. இருதய சுத்தம் என்பது நம்முடைய இருதயத்தின் பரிசுத்தத்தை குறிக்கும். வேதம் கூறுகிறது பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது. நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்தமற்ற சிந்தனைகள் என்ணங்கள் செயல்கள் இருக்குமாயின் நம் தேவ உறவு பாதிக்கப்படும். தேவ உறவு இல்லாத மனிதன் தேவனை தரிசிக்க கவனம் அற்றவனாய் போய் விடுகிறான். இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் நம் கண்களில் இருக்கிற உத்திரத்தை உணராமல் பிறர் கண்களில் இருக்கிற துரும்பை நீக்க முயற்சிக்கிறோம். அன்பானவர்களே நாம் முதலாவது நம்மை சீர்தூக்கி பார்ப்போம். வேதம் கூறும் வாழுவு முறை அதுவே. தாவீது ராஜா பாவம் செய்த போது “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்; நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” என விண்ணப்பம் செய்தார்[சங்கீதம்:51:10]. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்[சங்கீதம்:73:1,13]. என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? [நீதிமொழிகள்:20:9]. நாம் எவ்வளவு சுத்தமாய் இருதயத்தை காக்க நினைத்தாலும் அது எளிதில் கறைப்பட கூடியது விசுவாசத்தினாலே நம்முடைய இருதயங்களை சுத்தமாக்குகிறவர் தேவன். எனவே நாம் சுத்த இருதயத்தை நம்மில் சிருஷ்டிக்கும் படி அனுதினமும் தேவ உதவியை நாடுவோம். பரிசுத்தம் என்பது தேவனுக்காய் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கையை குறிக்கும். நாம் உலகத்தாரை போல இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் போடாமல் கர்த்தருடைய பரிபூரணமான சித்தத்திற்கு நம்மை முழுவதும் அர்ப்பணித்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி வாழுகிற வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை. தேவன் நம்மை பரிசுத்த ஜனமாய் தெரிந்தெடுத்தார் அல்லவா அதற்கு நன்றியுள்ளவர்களாய் நாம் பரிசுத்தத்தை பேணி காப்போம்.வேதம் கூறுகிறது பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்[வெளி:22:11]. அவருடைய பரிசுத்த ஜனமாகிய நாம் அவரை கீர்த்தனம் பண்ணி அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலை கொண்டாடுவோம் அனுதினமும் தேவனை தரிசிப்போம்.

 

சமாதானம்

 

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்[மத்தேயு:5:9]. எல்லாரோடும் சமாதானமாய் இருப்பது கடினமான காரியம். முதலாவது நமக்குள் உள்ளான சமாதனம் வேண்டும். வேதம் கூறுகிறது  ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்[ஏசாயா:48:18].நம்முள் சமாதானம் நதியைப் போல பாயும் போது மட்டுமே  நாம் நம் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் மற்றும் சமூதாயத்தில் சமாதானமாயிருக்க முடியும். நாம் தீமைக்கு தீமை செய்யாமல் இயேசுவின் அளவில்லாத அன்பை எண்ணி நமக்கு தீமை செய்கிறவர்களுக்கும் நன்மை செய்ய பழகுவோம். தனக்கு துரோகம் பண்ணின சகோதரர்களை மன்னித்து அவர்களிடம் உங்களுக்கு சமாதானம் என்று சொல்லி நன்மை செய்த யோசேப்பை பாருங்கள். யோசேப்பின் வாழ்க்கை நமக்கு உதாரணமாக அமையட்டும். நம்மில் பலர் எல்லாரோடும் சமாதானமாய் பழகுவோம் ஆனால் மற்றவர்கள் சண்டை போட ஏதுவாயிருந்து அதில் மகிழுவோம். பிரியமானவர்களே நாம் எல்லாரிடமும் சமாதானமாய் இருக்க வேண்டும். பிறருடைய வாழ்க்கையில்  இடறல் உண்டாக்காமல் வாழ வேண்டும். மனுஷர் நமக்கு எவைகளை செய்ய விரும்புகிறோமோ, அவைகளை நாமும் செய்ய வேண்டும்.  வேதம் கூறுகிறது சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார் [1கொரிந்தியர்:7:15]. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்[ரோமர்:12:8]. தேவனுடைய ராஜ்ஜியம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது[ரோமர்:14:17 ]. சமாதானத்தின் தேவன் தாமே நம்மோடிருந்து அவருடைய புத்திரராய் சமாதானம் பண்ணுகிறவர்களாய் நம்மை வழி நடத்துவராக.

 

தேவனுக்காக துன்பப்படுதல்

 

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. [மத்தேயு:5:11]. நாம் தேவனுக்காய் ஊழியம் செய்யும் போது பல இன்னல்கள் நிந்தைகள், துன்பங்கள் அவமானங்கள் நேரிடலாம். ஆனால் நம் தேவன் அவைகளை கவனித்து பார்த்து நம்மில் பிரியமாய் இருக்கிறார் என்பதை நாம் மறந்து போக வேண்டாம்.  உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் என்று இயேசு நமக்கு கற்பித்திருக்கிறார். எனவே நம்மை சந்தோஷப்பட்டு களிகூரும்படி தேவன் கூறுகிறார். வேதம் கூறுகிறது நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் [வெளி:2:10]. நாம் தேவனுக்காய் படுகிற  பிரயாசம் பாடுகள் ஒருபோதும் வீண்போகாது அதற்கு மிகுந்த பலன் உண்டு என்பதை உணர்ந்தவர்களாய் இன்னும் அவருக்காய் எழுந்து பிரகாசிப்போம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த புதிய வருடத்தில் நாம்  ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அதிகமாக வாஞ்சிப்போம். அப்பொழுது நம்முடைய பரலோக ராஜாவாகிய தேவன் பரலோகத்தின் கதவுகளை திறந்து நம்மை ஆசீர்வதிப்பார் என்பதில் சந்தேகமில்லை. வேதம் கூறுகிறது கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்[எரேமியா:17:7].இந்த வருடத்தில் நம் முழுநம்பிக்கையும் அவர் மேல் வைப்போம். மேற்கூறிய ஆவிக்குரிய குணாதிசயங்களை பெறுவதற்கு தேவனையே நம்பி அவரில் நிலைத்திருப்போம். அதுமட்டுமல்லாமல் தினமும் ஜெபம், வேத தியானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். வேதம் கூறுகிறது  கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்[சங்கீதம்:1:2,3]. இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானித்து அதின் படி வாழ்ந்து எல்லா காலத்திலும் தேவன் விரும்புகிற கனிகளைக் கொடுப்போம். ஜெபத்தினால் தேவனோடு இறுக்கமான உறவை ஏற்படுத்துவோம். தேவ குணாதிசயங்களை உலகிற்கு காண்பிப்போம்.

 

கிறிஸ்தவர்களாகிய நாம் உலக சாயலை தரித்தது போதும். தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட நாம் தேவ சாயலை வெளிப்படுத்துவோம். நாம் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு பெருக செய்து ஆசீர்வதித்து கர்த்தர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென்.

bottom of page