
உடன்படிக்கை
நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள்.
ஆகாய் 2:5.பிதாவானவர் தாமாகவே முன்வந்து ஆதாம்,நோவா ஆபிரகாம் ஈசாக்கு தாவீது இன்னும் பலருடன் உடன்படிக்கை செய்தார். இதை போல மனிதவர்க்கமும் கடவுளை நோக்கி கைநீட்டியுள்ளது. இதை யோசுவா எலியா இஸ்ரவேலர்கள் வாழ்க்கையில் காணலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான உடன்படிக்கை தேவன் தன் குமாரன் மூலமாக நம்முடன் செய்த உடன்படிக்கை. ( நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், எபிரேயர் 13:20)
நீங்கள் இரட்சிப்படைய அவருடன் உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்வது போலவே உங்கள் சொந்த தேவைகளை பெற்று கொள்ளவும் அவருடன் ஒரு பொருத்தனை செய்து கொள்ளலாம். அவர் அந்த காரியத்தை அருளி செய்து ஆசீர்வதிக்கும் போது நீங்கள் எதை செய்ய அல்லது விட்டு கொடுக்க ஆயத்தமாயிருக்கிறீர்களென்று திட்டமாகவும் உண்மையான மனதுடனும் பொருத்தனை செய்வதை தேவன் கனப்படுத்துகிறார்,நீங்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்த போது தேவன் உங்களோடு செய்து கொண்ட நித்திய உடன்படிக்கையின் விளைவாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் பிரவேசித்திருக்கிறார். கிறிஸ்துவானவர் உங்களுக்கு தரும் செய்திகளை ஆவியானவர் உங்களுக்கு தருகிறார். இந்த முக்கியத்துவத்தை நாம் மறந்து விட கூடாது. சிம்சோன் ஆண்டவருடன் கொண்ட உடன்படிக்கையையும் அழைப்பையும் அலட்சியம் செய்ததை உணரவே இல்லை.ஆவியானவர் தன்னை விட்டு விலகி விட்டதை உணராமல் இன்னும் தனக்கு பலம் இருப்பதாக எண்ணிக் கொண்டான். இறுதியில் பிடிக்கப்பட்டான். இன்றைக்கு அநேகர் பாவம் செய்து ஆண்டவரோடு பண்ணிய உடன்படிக்கையை அலட்சியம் செய்து தேவன் தனக்கு கொடுத்த அபிஷேகத்தையும் கிருபைகளையும் இழந்து போனதை அறியாமல் சாத்தானின் அதிகாரங்களுக்கு எதிராய் போய் நிற்க்கும் போது ஒரு பெரிய வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். இது போன்ற காரியமே சவுலுக்கும் நேரிட்டது.தேவன் அவரை ராஜாவாக இராதபடி புறக்கணித்தார்.அவன் என்னை விட்டு திரும்பி என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்று சொன்னார். (1சாமு 15-11)( கர்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.
1 சாமுவேல் 16:14)இன்றைக்கு அநேகர் தங்களுடைய மீறுதல்களினால் சகல சத்தியத்துக்கு நம்மை நடத்த வேண்டிய பரிசுத்த ஆவியானவரை இழந்து போய் கடைசியில் பிசாசின் பொல்லாத ஆலோசனைகளுக்கும் மனிதர்களுடைய பொல்லாத வழி நடத்துதலுக்கும் செவி கொடுத்து மீண்டும் மீண்டும் துணிகரமாக பாவம் செய்கின்றனர்.எனவே உங்கள் வாழ்க்கையின் ஆண்டவருடைய ஆசீர்வாதங்களை இழந்து போகாதபடி அவர் உங்களோடு செய்தஉடன்படிக்கைகளிலும் நீங்கள் அவரோடு செய்த பொருத்தனைகளிலும் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருங்கள். ஆதாமிடம் தேவன் செய்த உடன்படிக்கையை மீறின போது தேவன் ஏதேன் தோட்டத்தின் மேல் அவனுக்கு கொடுத்த அதிகாரங்களையும் ஆளுகையையும் இழந்து போய் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே துரத்தப்பட்டான்.
எனவே சத்தியத்தை அறிந்த நீங்கள் பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவனுக்கு கீழ்படிய உங்களை ஒப்பு கொடுங்கள். ஆமென்.