நான் உன்னோடு இருப்பேன்
சகோ. எட்வின் கார்டர் (சோஹார் - ஓமான்)
வேதம் சொல்லுகிறது, நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன் நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை - யோசுவா 1:5.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோசுவாவைப் பார்த்து சொன்ன வாக்குத்தத்தம் தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது, எந்த சூழ் நிலையில் என்பதைத்தான் பின்வருமாறு கூற விரும்புகிறேன், பாருங்கள் எப்படி இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்குள்ளாக வழி நடத்தப் போகிறேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார் யோசுவா என்கிற தேவனுடைய பிள்ளை ஏனென்றால் யோசுவாவையும் இஸ்ரவேல் ஜனங்களையும் வழி நடத்தி வந்த மோசே என்கிற தேவ மனுஷன் மரித்துப் போனான் இந்த மோசேதான் யோசுவாவின் கவலைக்கு காரணமாக அமைந்தார் என்பது தான் உண்மை ஆகும்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ யோசுவாவை நோக்கி என்னுடைய தாசனே நான் உன்னோடு இருப்பேன் நீ செய்ய வேண்டிய காரியங்கள் என்னவென்றால், எப்படி மோசேயோடு கூட நான் நடந்தேன் என்பது உனக்கு நன்றாக தெரியும் அத்தகைய மகிமையான என்னுடைய இளைப்பாறுதலை மோசே எப்படி பெற்றுக் கொண்டான் என்பதும் உனக்குத் தெரியும்.
அப்படிப்பட்ட மகத்தான காரியங்களை நீயும் உன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றி நடப்பாயானால் நான் நிச்சயமாக உன்னோடு வந்து உன் சத்துருக்களையும் உன் கையில் ஒப்புக் கொடுப்பேன் என்பது என் வாக்குத்தத்தமாக இருக்கும்.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நாம் கர்த்தர் மோசேயோடு சஞ்சரிப்பதற்கு மோசே கர்த்தருக்கு கொடுத்த மகத்தான காரியங்களையே இந்த மறைவான மன்னாவில் தியானிக்கப் போகிறோம். நாமும் இந்த அர்ப்பணிப்பை கர்த்தரிடத்தில் காண்பிக்கும் போது அவர் நம்மோடும் கூட கடந்து வருவார் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.
மோசேயின் [ அர்ப்பணிப்புகள் ] குணநலன்கள்:
1.கீழ்ப்படிதல்
2.தாழ்மை
3.உண்மை
4.ஜெபம்
5.விசுவாசம்
1.குண நலன் ஒன்று: கீழ்ப்படிதல்
மோசே என்கிற தேவ மனுஷன் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்பட்ட சோர்வுகளை மேர்கொண்டதும் மற்றும் கடைசி வரை கர்த்தர் நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடு ஓட்டத்தை ஓடி முடிக்கவும் காரணமாய் இருந்தது இந்த கீழ்ப்படிதல் என்கிற குண நலனே என்று சொன்னால் அது மிகையாகாது
பாருங்கள் வேதம் சொல்லுகிறது, அவன் பார்க்கும் படி அதாவது கர்த்தர் வெளிப்பட்ட அந்த மகத்தான காட்சியைப் பார்ப்பதற்காக கிட்டே நெருங்கும் போது அந்த இடத்திலிருந்து ஒரு சத்தத்தை கேட்கிறார், எப்படியெனில்?! முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி மோசே மோசே என்று கூப்பிட்டார் அவன் இதோ அடியேன் என்றான். யாத் 3:4. இந்த வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்றால், மோசே எந்தவொரு கேள்வியும் கேட்காமல் தன்னை முழுமையாக கர்த்தரிடம் ஒப்படைப்பதேயே கீழ்ப்படிதல் என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன். இன்று அனேகர் ஊழியத்திற்கு வந்த பின்னர் அவர்கள் சொல்லுகிற காரியம் மிகவும் ஆச்சரியமாய் இருப்பதை பார்க்க முடிகிறது. அவர்கள் சொல்லுவார்கள் கர்த்தர் ஏன் இத்தகைய காரியத்தை செய்தார் என்னிடம் சொல்லவில்லையே நான் என்ன சொன்னாலும் அவர் கேட்பாரே என்றெல்லாம் பிதற்றுவதை பல இடங்களில் பலவிதமான ஊழியங்களில் நாம் பார்க்க முடிகிறது.
ஆகவேதான் இவர்களுடைய ஊழியத்தில் கர்த்தருடைய மகிமையைப் பார்ப்பதற்குப் பதிலாக உலகத்தின் மகிமையை மாத்திரம் ஜனங்கள் பார்த்து அவர்களும் ஏமாந்து போவதை நாம் காணலாம்
இதற்கு காரணம் இவர்களிடத்தில் காணப்படாத கீழ்ப்படியாமையே காரணம் ஆகும் ஆனால் இந்த தேவ தாசனோ அதாவது மோசேயோ எல்லா இடத்திலும் கர்த்தருடைய கீழ்ப்படிதலின் கீழாகவே ஊழியம் செய்தார் ஆகவேதான் எல்லா இடத்திலும் ஜெயத்தையே பெற்றுக் கொண்டார் என்று ஆகமங்களை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
எனவேதான் இந்த தேவ மனுஷனாகிய மோசே தான் ஜனங்களுக்கு முன்னே நடந்து செல்லாமல் கர்த்தரையே முன்பாக நடக்கச் செய்து தானும் தன்னுடைய ஜனங்களும் கர்த்தருக்கு பின்பாக நடந்து வந்ததால் கர்த்தர் மோசேக்கும் அவனுடைய ஜனங்களுக்கும் கொடுத்த வாக்குறுதி என்னத் தெரியுமா?
வேதம் சொல்லுகிறது, அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன் நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்த பின்பு நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள். யாத்திரகாமம் 3:12 [முப]
ஆகவே நாமும் இந்த மோசேயைப் போல கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்வோம் அப்பொழுது கர்த்தர் நமக்காக வைத்திருக்கிற காரியங்களை நாம் பார்க்க முடியும்.
2. இரண்டாவது குண நலன்: தாழ்மை
மோசேயின் ஆவிக்குரிய வாழ்க்கையில் உயர்வுக்கு காரணமான இரண்டாவது படி இந்த தாழ்மை என்கிற குண நலனே ஆகும். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்யாக்கோபு 4:6.
இன்று அனேக கிறிஸ்தவர்களிடம் இந்த தாழ்மையான குண நலன் இல்லாததால் இவர்கள் அனேக இடங்களில் விழுந்து போவதை நம்முடைய வாழ்க்கையில் பார்க்க முடிகிறது.
பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகவும் உயர்ந்தவராய் இருந்த போதிலும் அதாவது உலகம் கற்பனை செய்ய முடியாத உயரமான இடத்தில் இருந்த போதிலும் அவர் தம்மைத் தாமே தாழ்த்தி இந்த உலகத்திற்கு கடந்து வந்தார். எதற்காக அவர் இப்படி செய்ய வேண்டும், தாழ்ந்து போய் இருக்கிற நம்மை உலக சேற்றிலிருந்து தூக்கி எடுக்கும்படியாக என்பதை மறந்து விடாதீர்கள்.
பாருங்கள் வேதம் சொல்லுகிறது, கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும் தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார் மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். சங்கீதம் 138:6.
மேலும், அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார் எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்
அவனைப் பிரபுக்களோடும் தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். சங்கீதம் 113:6,7,8
நாம் ஏன் இன்றைய நாட்களில் வல்லமையாக கர்த்தருக்கு முன்பாக எழுந்து பிரகாசிக்க முடியவில்லைத் தெரியுமா? நம்மிடத்தில் இயேசு கிறிஸ்து தம்மை தாழ்த்தினது போல தாழ்த்துகிற ஆவி இல்லாமல் மாறாக நம்மிடத்தில் காணப்படுகிற மேட்டிமையின் ஆவியே என்பதை மறந்து விடாதீர்கள் ஆனால் கர்த்தர் தெரிந்து கொண்ட மோசேயோ மிகவும் தாழ்மை குணம் படைத்தவராய் காணப்பட்டர்.
கர்த்தர் தன்னை அழைத்து தம்முடைய கூட்டத்திற்கெல்லாம் தலைவனாக மாற்றின போது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
வேதம் சொல்லுகிறது, அப்பொழுது மோசே தேவனை நோக்கி பார்வோனிடத்துக்குப் போகவும் இஸ்ரவேல் புத்திர்ரை எகிப்திலிருந்து அழைத்து வரவும் நான் எம்மாத்திரம். யாத் 3:11. மேலும், அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி ஆண்டவரே இதற்கு முன்னாவது தேவரீர் உமது அடியோனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். யாத் 4:10
இத்தகைய தாழ்மையுள்ளவனையே கர்த்தர் மோசேயின் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே முன் குறித்து தன்னுடைய ஊழியத்திற்கு தெரிந்தெடுத்து பின்னர் வனாந்தரத்திலே அழைத்துக் கொண்டு முடிவிலே மகிமைப்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று நம்மில் அனேகர் அழைக்கப்படுகிறோம், தெரிந்து கொள்ளப்படுகிறோம் ஆனால் முடிவிலே கர்த்தருடைய மகிமை நமக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது.
இதற்கு காரணம் நம்மிடத்தில் காணப்படுகிற மன மேட்டிமையான குண நலன் ஆகும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
வேதம் சொல்லுகிறது, அழிக்கு முன்னானது அகந்தை விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. நீதிமொழிகள் 16:18.
3. மூன்றாவது குண நலன்: உண்மை
வேதம் சொல்லுகிறது, கர்த்தரே மோசேயைக் குறித்து சாட்சிக் கொடுத்தார் எப்படித் தெரியுமா?
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தான். எபிரெயர் 3:2
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு அவர்களுடைய திறமையின் படி பலவிதங்களில் தாலந்துகளைக் கொடுக்கிறார் என்று நாம் மத்தேயு என்கிற சுவிசேஷத்தில் வாசிக்கிறோம்.
அவர்களில் சிலர் தங்களுக்கு தேவன் கொடுத்த தாலந்துகளை உண்மையாகவே கர்த்தருக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இதே போலத்தான் தேவனுடைய மனுஷனாகிய மோசே கர்த்தர் தனக்குக் கொடுத்த தாலந்துகளை புதைத்து வைக்காமலும் தன்னுடைய குடும்பத்திற்காகப் பயன்படுத்தாமலும் அவைகளை ஒன்றும் வீணாக்காமல் கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்காக உண்மையாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.
பாருங்கள் கர்த்தருடைய ஊழியம் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாது மற்றும் கர்த்தருடன் செய்த உடன்படிக்கை ஒருபோதும் முறிந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய குடும்பத்தைக் கூட தனியாக விட்டு விட்டு கர்த்தருக்காக தன்னுடைய ஆவிக்குரிய எல்லா இடத்திலும் உண்மையாகவே பயணம் செய்தார் என்பதை நாம் யாத்திராகமம், லேவியராகமம் மற்றும் எண்ணாகமம் என்னும் ஆகமங்களை வாசிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே சபையின் ஊழியக்காரர்களே கர்த்தருடைய ஊழியத்திலும் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நாம் கர்த்தருக்கு எவ்வளவு தூரம் உண்மையாகக் காணப்படுகிறோம் என்பதை சிந்தித்து பாருங்கள்.
வேதம் சொல்லுகிறது, உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். நீதிமொழிகள் 28:20
ஒரு காரியத்தை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் வேதம் முழுவதிலும் கர்த்தர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே உண்மை உள்ளவரை நம்முடைய வாழ்க்கையில் சபைகளில் பார்க்க வேண்டுமானால் நாம் கர்த்தர் தந்த எல்லாவற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரும் போது நம்மைப் பார்த்து இப்படியாக சொல்ல வேண்டும், எப்படியென்றால்?! உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய் அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி. மத்தேயு 25:21.
4. குண நலன் நான்கு: ஜெபம்
வேதம் சொல்லுகிறது, இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசெயர் 4:2.
இன்றைய கிறிஸ்தவம் மகிமை இல்லாமல் போவதற்குக் காரணம் அவர்களிடத்தில் ஜெபம் என்கிற ஆயுதம் இல்லாமல் இருப்பதே ஆகும். ஆகவேதான் பிசாசானவன் எளிதாக ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் விசுவாசிகளையும் உடைத்துச் சிதறப்பண்ணுவதை நாம் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ஆனால் மோசேயின் ஊழியத்திலோ பிசாசானவன் எந்த ஒரு இடத்தையும் தொட முடியவில்லை. இதற்குக் காரணம் மோசே நாட்கணக்கில் ஜெபிக்கிற ஒரு மனுஷனாகக் காணப்பட்டான் என்பதே உண்மையாகும்.
பாருங்கள் சீஷர்கள் இயேசுவோடு கூட இருந்த போதிலும் அவர்களால் ஒரு அற்புதத்தைக் கூட செய்ய முடியவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் ஒருபோதும் இயேசுவோடு கூட சேர்ந்து ஜெபித்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படியாக சீஷர்களைப் பார்த்து சொல்லுகிறார், நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் ஆவி உற்சாகமுள்ளது தான் மாம்மிசமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41. ஆனால் மோசேயின் வாழ்க்கையில் பிசாசானவன் எந்த சோதனைகளைக் கொண்டு வந்தாலும் அதை எளிதாக மேற்கொண்டார். மேலும் இஸ்ரவேல் ஜனங்களுக்கான பத்து கற்பனைகளையும் கர்த்தரிடன் இருந்து நேரடியாக பெற்றுக் கொண்டவன் இந்த மோசேயே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கர்த்தர் சொல்லுகிறார், மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் காணப்படவில்லை. அதுமாத்திரமல்ல அவர் மரிக்கும் வரை அவருடைய பெலன் குறைந்து போகவே இல்லையென்று வேதத்தில் வாசிக்கிறோம். இதற்கான காரணத்தை வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வேதம் சொல்லுகிறது, அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பது நாள் கர்த்தரோடே இருந்தான். யாத்திராகமம் 34:28. இத்தகைய ஜெபம் நம்முடைய வாழ்க்கையிலும் தொடருமானால் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் பெரிய ஜெயத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
-
ஜெபிக்கிற ஒரு மனுஷனால் மாத்திரமே கர்த்தருடைய ஊழியத்தில் கடைசி வரை நிற்க முடியும்
-
ஜெபிக்கிற ஒரு மனுஷனையே கர்த்தரும் பரலோகத்திலிருந்து தேடிக் கொண்டிருக்கிறார்
-
ஜெபிக்கிற ஒரு மனுஷனால் மாத்திரமே பிசாசின் தந்திரங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்
-
ஜெபிக்கிற ஒரு மனுஷனே எல்லாவற்றையும் பொறுமையுடன் செய்ய முடியும்
-
ஜெபிக்கிற ஒரு மனுஷனே சபையில் அதிகமாக ஆத்துமாக்களைக் கொண்டு வர முடியும்
-
ஜெபிக்கிற ஒரு மனுஷன் யாருடனும் வாக்குவாதம் செய்யாமல், தனக்கு விரோதமாக கிரியை செய்கிற சக ஊழியக்காரர்களை மன்னிக்கிறவனாய் இருப்பான்.
-
ஜெபிக்கிற ஒரு மனுஷன் உலகத்தைப் பார்க்காமல் கர்த்தர் என்னைக் குறித்து என்ன சொல்லுகிறார் என்பதை கவனிப்பான்
ஜெபியுங்கள் பிசாசின் கோட்டைகளை உடையுங்கள்.
5. ஐந்தாவது குண நலன்: விசுவாசம்
வேதம் சொல்லுகிறது, விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28:16. சந்தேகப்படுகிறவன் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. அப்படிப்பட்டவன் காற்றினால் அடிப்பட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் என்று வேதம் யாக்கோபு 1 ஆம் அதிகாரத்தில் விசுவாசியாதவனின் நிலைமையை சுட்டுக் காட்டுகிறது.
இன்று அனேகர் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மூலம் பல விதமான வாக்குத்தத்தங்களை பெற்றும் அதை அனுபவிக்காமல் போவதற்குக் காரணம் நம்மிடத்தில் காணப்படுகிற அவிசுவாசமே அதுமட்டுமல்லாமல் இன்று அனேக ஊழியங்கள் உடைந்து போகவும் கெட்ட பெயரை சம்பாதிப்பதற்கும் காரணம் என்ன தெரியுமா?
இவர்கள் கர்த்தரை நம்புவதற்குப் பதிலாக விசுவாசிகளின் காணிக்கை மேலேயே அதிக விசுவாசம் வைத்து இருப்பது ஆகும் ஆகவேதான் பலவிதமான நெருக்கடிகளை அடிக்கடி இப்படிப்பட்ட ஊழியங்கள் அதாவது கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்காமல் உலகத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் சந்திக்க நேரிடுகிறது.
ஆனால் தேவனுடைய தாசனாகிய மோசேயோ கர்த்தரையே முழுமையாக நம்பினான் அவன் பார்வோனின் செழிப்பான அரண்மனையில் வளர்க்கப்பட்டான் அப்படியென்றால் மிகுந்த செல்வந்தனாக இருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால் அந்த அரண்மனையில் தன்னுடைய வாழ் நாட்களை கழித்திருக்க முடியும்.
ஆனால் மோசேயோ எல்லாவற்றையும் விட்டு விட்டு கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து வனாந்தர பயணத்தை மேற்கொண்டான் என்று வேதம் சொல்லுகிறது.
இத்தகைய காரியத்தை நாம் பின்வரும் வசனங்களில் பார்க்கலாம்..
வேதம் சொல்லுகிறது, விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று என்னப்படுவதை வெறுத்து அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்து கொண்டு, இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருந்து எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கிமென்று எண்ணினான்.
விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல உறுதியாயிருந்து ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தை விட்டு போனான். எபிரெயர் 11: 24 – 27.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே கர்த்தர் இந்த வருடம் முழுவதும் நம்மோடு கூட வர வேண்டுமானால் நாம் எப்பொழுதும் கர்த்தர் விரும்புகிற காரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் சொல்ல முடியும் கர்த்தர் என்னை ஒருபோதும் தனியே இருக்க விட்டதில்லை.
எனவே இனிமேலாவது நம்முடைய கரத்தை மனுஷரிடம் கொடுக்காமல் கர்த்தரிடம் கொடுக்கக் கற்றுக் கொள்வோம்.
ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118: 8,9
இப்படிப்பட்ட குண நலன்கள் வழியாக பயணம் செய்யும் போது நிச்சயமாக கர்த்தர் நம் ஒவ்வொருவரோடும் கூட வருவார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் அன்பின் முத்தங்களால் முத்தம் செய்வாராக! ஆமென்!