top of page

சிலுவை

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

சிலுவை என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவில் வருவது பாடுகள் தான். நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கொல்கெதா மலையில் அகோர குருசில் தொங்கின காட்சி நம் அனைவரது இருதயத்தையும் கிழித்து நம் கண்களில் கண்ணீர் வடிய செய்யும். இப்படியாய் ரோமர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் சிலுவை மரணம் என்பது ஒரு கொடுமையான தண்டனையாய் இருந்தது. வேதம் கூறுகிறது மரத்தில் துக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். எனவே சிலுவை ஒரு தண்டனையின், அவமானத்தின், சாபத்தின் சின்னமாக பிரதிபலிக்கப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் சரித்திரத்தையே மாற்றியது. அவருடைய மரணம் நமக்கு  பாவமன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெற்று தந்தது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் சிலுவை கிறிஸ்தவர்களின் புனித சின்னமாக மட்டுமல்ல அன்பின், மீட்பின், மன்னிப்பின், வெற்றியின் சின்னமாய் திகழ்கிறது. நாம் அனுதினமும் சுமக்க வேண்டிய சின்னமாய் மாறிற்று. இயேசு கிறிஸ்து கூறுகிறார் “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னை தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன்”. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு  பாத்திரன் அல்ல[மாற்கு:8:34;மத்தேயு:10:38]. வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற ஐந்து  விதமான சிலுவையைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.

 

நிர்பந்திக்கப்பட்ட சிலுவை.

பிலாத்து இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய போர்சேவகரிடம் ஒப்புக்கொடுத்தான். போர்சேவகர்கள் அவருக்கு முள்முடி சூட்டி, துப்பி, பரியாசம் பண்ணி பின்பு சிலுவையில் அறைய கொண்டு போனார்கள். அப்பொழுது சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள் [மாற்கு:15:20,21]. லூக்கா சுவிசேஷகத்தில் சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து சிலுவையை அவர் பின்னே கொண்டுவரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள் என கூறப்பட்டிருக்கிறது[லூக்கா:23:26]. எனவே இச்சிலுவையை நாம் பலவந்தம் பண்ணப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட சிலுவையாக கூட கொள்ளலாம். சிரேனே என்பது ஆப்பிரிக்காவில் உள்ள ஊர் என்றும் இங்கு யூதர்கள்  வாழ்ந்து வந்தார்கள் எனவும், சீமோன் எருசலேமுக்கு பஸ்கா பண்டிகையை ஆசரிக்க அல்லது வணிகத்தின் காரணமாக வந்திருக்கலாம் என வேத அறிஞர்கள் கூறியுள்ளனர். சீமோன் தானாக முன்வந்து இயேசுவுக்கு உதவி செய்யவில்லை. அவ்வழியே வந்த அவனை போர்சேவகர்கள் பலவந்தம் பண்ணினார்கள். எனவே சாபத்தின் சின்னமாகிய சிலுவையை அவன் ரோமர்களுக்கு பயந்து சுமந்திருக்கலாம். சீமோனுடைய சூழ்நிலையை நாம் சிந்தித்து பார்த்தால் அவனுக்குள் பயம், எரிச்சல், அவமானம், நான் செய்யாத குற்றத்திற்காக ஏன்  சிலுவை சுமக்க வேண்டும்? என்ற தவிப்பு, ஏன் எனக்கு மட்டும் இப்படியாய் நடக்கிறது என்ற அங்கலாய்ப்பு இருந்திருக்கலாம். எனவே அவன் கொஞ்ச தூரம் மட்டுமே சுமந்திருக்கலாம். வேதம் கூறுகிறது நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை; நான் உங்களை தெரிந்துக்கொண்டேன்[யோவான்:15:16]. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் தேவனுடைய அநாதி திட்டம். அத்திட்டத்தில் தேவன் சிலுவையை சுமக்க சீமோனையும் தெரிந்துக்கொண்டது அவனை இரட்சிப்பின் பாதையில் அழைத்து செல்லும், தேவனின் மறைமுக அழைப்பாக கூட இருக்கலாம். கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும் எனக்கு தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள் என பவுல் ரோமர்:16:13 குறிப்பிட்டுள்ளது சீமோனின் குமாரனாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

நீங்களும் ஒருவேளை நிர்பந்திக்கப்பட்ட பாடுகளை சுமக்கும் மனிதராக இருக்கலாம். வேறுவழியின்றி நான் இதை ஏற்றுக்கொண்டேன் என எண்ணலாம். சீமோனைப் போல தேவன் உங்களையும் தெரிந்திருக்கலாம் அல்லவா?  தேவனுடைய நிர்பந்தத்தின் பேரில் நினிவே சென்ற யோனா தீர்க்கத்தரிசி சோர்ந்து போய் “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் “ என்று அங்கலாய்த்த போது   தேவன் ஆமணக்கு செடியின் மூலம் பாடம் புகட்டினார். நீ வளர்க்காத ஆமணக்கு செடிக்காய் பரிதபிக்கிறாயே; வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கும் அதிகமான நினிவே மனுஷருக்காய் நான் பரிதபியாமல் இருப்பேனோ?[யோனா:4:10,11].இந்த சூழ்நிலை யோனாவுக்கு ஒரு நிர்பந்திக்கப்பட்ட சிலுவையை போல இருந்தாலும்  இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கும் அதிகமான நினிவே ஜனங்கள் இரட்சிக்கப்பட தேவன் அவனை தெரிந்து கொண்டார். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நிர்பந்திக்கப்பட்ட பாடுகளை சுமக்கும் போது சோர்ந்து போக வேண்டாம். வேதம் கூறுகிறது நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்;  ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள் [ரோமர்:12:12]. ஒருவேளை உலகம் நம்மை அற்பமாய் எண்ணலாம். ஆனால் யோபுவை போல கிறிஸ்துவுவை முன்னிறுத்தி பொறுமையோடும் விசுவாசத்தோடும் பாடுகளை சகிக்க கற்றுக்கொள்ளும்  போது தேவன் இரட்டிப்பான நன்மைகளினால் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.

நிந்தித்த சிலுவை

 

வேதம் கூறுகிறது அவரோடே கூட சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்[மத்தேயு:27:41-44; மாற்கு:15:22; லூக்கா:23:39]. இந்த திருடன் தான் குற்றவாளி என்பதை உணர்ந்து கொள்ளவில்லை. உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அருகிலிருந்தும் அவன் ஆவிக்குரிய கண்கள் அவரை கண்டுக்கொள்ளவில்லை. தன்னை சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்த கிறிஸ்துவின் அன்பை அவனால்  புரிந்துகொள்ள முடியவில்லை. இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் அருகே நின்ற வேதபாரகர், ஜனங்கள், அதிகாரிகள் அவரை பரியாசம்பண்ணி இகழ்ந்தனர். இதை பார்த்த திருடன் ரோமபோர்சேவகரோடு சேர்ந்து இயேசுவை இகழ்ந்து அவர்களை  பிரியப்படுத்தினால் சிலுவையிலிருந்து விடுதலை கிடைக்கும் என எண்ணியிருக்கலாம். பாடுகளின் போது அவன் கண்கள் உலகத்தாரையே நோக்கி பார்த்தது. அந்த நேரத்தில் அவன் கண்களுக்கு தன் பாடுகள் தான் பெரிதாய் காணப்பட்டது. எனவே அவன் சிலுவை மரணத்திலிருந்து அந்த நேரம் தப்பினால் போதும் என எண்ணினான்(He seeked a temporary relief from death).  வேதம் கூறுகிறது மனுஷனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம் [சங்கீதம்:118:8,9].

இஸ்ரவேல் ஜனங்களை தேவன் செய்த எத்தனயோ அற்புதங்கள் அதிசயங்களை தங்கள் கண்களால் கண்டிருந்தும் பாடுகளின் போது  அவரை நிந்தித்து முறுமுறுத்து தேவனுக்கு எரிச்சலூட்டினர். விசுவாசிகளாகிய நாமும் கூட பாடுகளின் போது அல்லது நாம் எதிர்பார்க்கிற காரியம் நடக்காத போது எப்படியாய் நடந்து கொள்ளுகிறோம்?  தேவனை நோக்கிப் பார்க்கிறோமா? இல்லை மனிதனை நோக்கி ஓடுகிறோமா?சிந்தித்துப் பார்ப்போம்.  கிறிஸ்து நம் அருகிலிருந்தும் அவருடைய அபிஷேகம் நமக்குள் இருப்பதை உணர்ந்துக் கொள்ளாமல் மனிதரை நம்பி ஓடும் போது கிறிஸ்துவின் வல்லமையை மட்டுப்படுத்துகிறோம் என்பதில் ஐயமில்லை. மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு  கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆனால்  கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான். [எரேமியா:17:5,7,8]. ஒருவேளை நாம் உபத்திரவப்படும் போது சத்துரு உலகத்தாரைக் கொண்டு அவிசுவாச களைகளை நம் இருதயத்தில் விதைக்கலாம். ஆனால் என் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என தேவனை விசுவாசித்து அவர் மேல் நம் முழு நம்பிக்கையையும் வைத்து அவரையே நோக்கிப் பார்க்கும் போது தேவன் நம்மை எல்லா இக்கட்டுகளுக்கும் தப்புவித்து நம் தலையை உயர்த்துவார்.

ஏற்றுக்கொண்ட சிலுவை

இயேசு கிறிஸ்து இரண்டு திருடர்களின் நடுவே சிலுவையில் அறையப்பட்டார். முதலாவது திருடன் உலகத்தாரோடு சேர்ந்து அவரை நிந்தித்தான். ஆனால் இரண்டாவது திருடன் “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?   நாமோ நியாயப்படி தண்டிக்கப் படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” என்று மற்ற திருடனைக்  கடிந்து கொண்டான்[லூக்கா:23:40-43]. அவன் இயேசுவைக்  குறித்து முன்னமே அறிந்திருக்கலாம் அல்லது இயேசு கிறிஸ்து சிலுவையில் தன்னை அறைந்த மனிதர்களுக்காக பிதாவிடம் மன்றாடியதை கண்டு மனந்திரும்பி இருக்கலாம். எப்படியாயினும் அவன் தேவனுக்கு பயப்படுகிறவனாய் இருந்தான். அதுமட்டுமல்ல தன் தவறை உணர்ந்தவனாய் இயேசு குற்றமற்றவர் எனவும் அறிக்கை செய்தான். அவனுடைய ஆவிக்குரிய கண்கள் அவரை மேசியா என  ஏற்றுக்கொண்டது.   எனவே அவன் இயேசுவை நோக்கி “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்றான். அதற்கு இயேசு “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்”  என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்த  திருடன்  பாடுகளின் மத்தியில் தன் பாடுகளை பெரிதாய் எண்ணாமல் தன் இரட்சிப்பை குறித்து கவலைப்பட்டான்[He pleaded for relief from eternal death]. அவன் உலகப்பிரகாரமாக சிலுவை மரணத்தினின்று விடுதலை நாடவில்லை மாறாக நித்திய மரணத்தினின்று தன் ஆத்துமாவை தப்பித்துக்கொள்ளும்படி தேவனிடம் மன்றாடினான். அவனுடைய விசுவாசத்தைக் கண்ட இயேசு அவனுக்கு பரதீசின் வாழ்வை உடனடியாக வாக்களித்தார்.

 

அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? [ரோமர்:8:36]. ஆம் பிரியமானவர்களே எப்பாடுகளின் மத்தியிலும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசய்பட வேண்டும். ஏனெனில் வேதம் கூறுகிறது முடிவு பரியந்தம் நிலைத்திருக்கிறவனே இரட்சிக்கப்படுவான். பாடுகளை பார்த்து பயந்து தேவனை விட்டு பின்வாங்க கூடாது. பாடுகளை பெரிதாய் பார்க்காமல் அதை விட என் தேவன் பெரியவர் என்பதை உணர்ந்து தேவ ஆலோசனையையும் அவருடைய ஞானத்திற்காகவும் வழிநடத்துதலுக்காய் நாம் தேவனிடம் ஜெபிக்க கற்றுகொள்ள வேண்டும். தாவீது ராஜாவை போல பாடுகளின் மத்தியில் தேவனை நமக்கு முன்பாக வைத்து “கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்கு தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதியும் “ என அவர் பாதத்தில் அமர்ந்திருந்து பரிசுத்த ஆவியானவரின் பெலனைப் பெற்றுக்கொள்ளுவோம்.  

 

  1. மற்றவர்களுக்காய் தன்னை அர்பணித்த சிலுவை

நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைக்கும்படி இயேசு கிறிஸ்து தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார் [1பேதுரு:2:24].தம்முடைய  பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை  ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்க அவர் நமக்காக சிலுவையில் தொங்கினார். பாவமில்லாத பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து பாவிகளான நம்முடைய மீட்பிற்காக சிலுவையில் தொங்கி தம் ஜீவனையும் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவை பின்பற்றி நாமும் பிறரின் இரட்சிப்பிற்காக பாடுபட வேண்டும். இயேசு கிறிஸ்து எனக்காக மட்டுமல்ல சகல உலகத்தின் பாவத்திற்காய் சிலுவையில் தொங்கினார் என்பதை உணர்ந்தவர்களாய் புறஜாதிகளும் இயேசுவை அறிந்துகொள்ளும் கருவிகளாய்  நாம் செயல்பட வேண்டும். நான் மட்டுமல்ல என்னோடு ஒரு கூட்ட ஆத்துமாக்களை பரலோகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற வாஞ்சை நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

பவுல் கூறுகிறார் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன். இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள்  பிழைத்திருக்கிறார் [1கொரிந்தியர்:12:10-11].பாவமில்லாத பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து  அவமானம், நிந்தை, பரியாசம்,வேதனை எல்லாவற்றையும் சகித்து சிலுவையில் தொங்கி பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார். வேதம் கூறுகிறது ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்[1பேதுரு:4:16]. பாடுகளின் மத்தியிலும் இயேசுவைப் போல துன்பங்களை சகித்து விசுவாசம், அன்பு, மன்னிப்பு, தாழ்மை, கீழ்ப்படிதல் போன்ற கிறிஸ்துவின் குணங்களை காண்பிப்போம். மிஷினரி கிரகாம் ஸ்டேயின்ஸ் அவருடைய இரு குழந்தைகளோடு,   இந்து தீவிரவாதிகளால்  உயிரோடு எரிக்கப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய மனைவி எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக சகித்துக் கொண்டு அவர்களை மன்னித்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தினார். ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சம் கொடுக்க வேண்டும் என்றால் அதின் மெழுகு உருக வேண்டும். நாமும் கிறிஸ்துவின் ஒளியை உலகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்றால் மெழுகை போல நம்முடைய சுயத்தை அழிக்க  வேண்டும். கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகளை பொறுமையோடு சகித்து முடிவுபரியந்தம் அவரில் உண்மையாயிருக்கும் போது தேவன்  நம்மை ஜீவகிரீடத்தினால் அலங்கரிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

 

உன் சிலுவை

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றாதவன் எனக்கு பாத்திரன் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட சிலுவை வேறு. நம்மில் பலர் ஐயோ! எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை, பாடுகள் என புலம்புவதுண்டு. வேதம் கூறுகிறது ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்[லூக்கா:9:23].

முதலாவதாக நாம் நம் சுயத்தை சாகடிக்க வேண்டும். அதாவது நம்மை முழுமையான ஜீவபலியாய் தேவனுக்கு அர்ப்பணித்து, பிதாவே என்னுடைய சித்தம் அல்ல உம்முடைய சித்தமே ஆகட்டும் என எல்லாவற்றிலும் நம்மை அவர் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். நம் சிந்தை செயல் எல்லாம் இயேசுவை போல மாற வேண்டும்[Let your ego die, think and walk like Jesus]. பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதே இயேசுவின் போஜனமாய் இருந்தது. கெத்செமனே தோட்டத்திலும் பாடுகளின் மத்தியிலும் இயேசுகிறிஸ்து “பிதாவே என்னுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது” என ஜெபித்ததை நாம் காண்கிறோம். இரண்டாவதாக நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை அனுதினமும் நாம் சுமந்து தேவனை பின்பற்ற வேண்டும். நாம் ஒருபோதும் ஐயோ என்னால் முடியவில்லை என பின்வாங்க கூடாது. இயேசுவை முன்னிறுத்தி நமக்கு கொடுக்கபட்ட சிலுவையை தைரியத்தோடு சுமப்போம்.  பவுல் கூறுகிறார் நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மணமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும் படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப் படுகிறோம் [2கொரிந்தியர்:4:8-11]. உதாரணமாக ஒருவர் நம்மை துன்புறுத்தும் போது ஒன்று அல்லது இரண்டு முறை சகிப்போம். ஆனால் மூன்றாவது முறை நம்மை அறியாமல் நாம் கோபப்பட்டு அந்த உறவையே முறித்துக்கொள்ளுவோம். இது நம்முடைய சுயம். இந்த சிலுவையையும் நாம் தேவபெலனோடு சகிக்க கற்றுகொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய பாவச்சரீரம் ஒழிந்துபோகும் பொருட்டு நாம் அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டு அவருடைய உயிர்த்தெழுதலில் சாயலில் இணைக்கப்பட்டு அவரோடு கூட பிழைத்தும் இருக்கிறோம். நாம் நம்முடைய அவயவங்களை பரிசுத்தத்தை நடப்பிக்கும்படி  நீதிக்கேதுவான கீழ்படிதலுக்கு அடிமைகளாக அல்லவா ஒப்புக்கொடுத்திருக்கிறோம். எனவே பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்ட நாம் இப்பொழுது தேவனுடைய அடிமைகளானதால்; பரிசுத்தமாகுதல் நமக்கு  கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன் இந்த சிந்தை நம் மனதில் தொனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அன்பானவர்களே பவுலைப் போல உறுதியான விசுவாசத்தோடு கர்த்தராகிய இயேசுவின் அச்சடையாளங்களை சரீரத்திலே தரித்துக்கொண்டு நம்மையே வெறுத்து அனுதினமும் நம் சிலுவையை சுமந்துக் கொண்டு இயேசுவை பின்பற்றுவோம்.

வேதம் கூறுகிறது அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்[2:தீமோத்தேயு:3:12]. இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்லும் போது தனக்காக அழுத எருசலேம் குமாரத்திகளைப் பார்த்து “பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்”. அன்பானவர்களே குற்றமில்லாத பரிசுத்தராகிய அவருக்கே இவ்வளவு பாடுகள் என்றால் சாதாரண மனிதர்களாகிய நாம் எங்கே? நாம் தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும். ஆவிக்குரிய வாழ்க்கையில் சிலுவை  என்பது ஒரு அழகான சுமை அல்லது சுகமான பாடு என்றும் சொல்லலாம். ஏனென்றால் சிலுவை இல்லாமல் ஜீவன் இல்லை. பவுல் கூறுகிறார் அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்[2கொரிந்தியர்:12:10].பக்தன் இவ்விதமாய் பாடுகிறார்..

என் மீட்பர் சென்ற பாதையில்

செல்ல ஆயத்தமா?

கொல்கெதா மலை பாதையின்

பங்கை சுமப்பாயா?

                        சிலுவையை நான் விடேன்; சிலுவையை நான் விடேன்(2)

ஊரார் இனத்தார் மத்தியில்

துன்பம் சகிப்பாயா?

மூர்க்கர் கோபிகள் நடுவில்

துக்கம் சகிப்பாயா?

 

ஆம் பிரியமானவர்களே நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவை எப்படிப்பட்டதாயினும் அதை விடாமல் பற்றிக்கொள்ளுவோம். “கிறிஸ்து எனக்கு ஜீவன்; சாவு எனக்கு ஆதாயம்” என்ற தைரியத்தோடும் தேவபெலனோடும்  நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை  அனுதினமும் சுமந்து தேவனை பின்பற்றுவோம். வேதம் கூறுகிறது “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்” என்று அவர் நமக்கு வாக்களித்திருக்கிறார் [வெளி:2:10]. அவரோடு கூட நாம் பாடுகளை சகித்தால் அவரோடு கூட ஆளுகையும் செய்வோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் உன்னதமான ஆசீர்வாதங்களினால் நிரப்பி திருப்தியாக்கி வழிநடத்துவாராக. ஆமென்.

bottom of page