top of page

பரம கானானா? சோதோமா?

சகோதரி. அனு ஃபெஸ்லின்

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நித்தியத்தை நோக்கியதான ஒரு பிரயாணம். இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுகொண்டு விசுவாசிகளான நாம் ஒவ்வொருவரும் இந்த மோட்ச யாத்திரையில் (பிரயாணத்தில்) நடந்துக்கொண்டிருக்கிறோம். இந்த பிரயாணத்தில் “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்க வேண்டும்” என்று அப்போஸ்தலராகிய பவுல் அறிவுறுத்துகிறார்[IIகொரிந்தியர்:5:6]. உன் வழிகள் என் வழிகள் அல்ல என்பது வேதத்தின் கூற்று. ஆம் பிரியமானவர்களே நாம் தரிசித்து நடக்க அழைக்கப்பட்டவர்கள் அல்ல; விசுவாசத்தினால் தேவனையே நோக்கி பார்த்து தேவன் காட்டும் வழியில் நடக்க  அழைக்கப்பட்டவர்கள். சிலுவை என்  முன்னே உலகம் என் பின்னே என்பது நம்முடைய  விசுவாச யாத்திரையின் குறிக்கோளாய் இருக்கட்டும். நம்முடைய வேதாகமத்தில் தேவ அழைப்பை பெற்று பிரயாணம் செய்தவர்கள் பலர் உண்டு. இந்த விசுவாச யாத்திரையில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை நாம் எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் விசுவாச வீரர்களின் பட்டியலில் காணலாம். விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமை தேவன்  அழைத்த போது ஆபிரகாமின் சகோதரனாகிய லோத்துவும் தேவனை விசுவாசித்து  தன் தேசத்தையும் தன் இனத்தையும் விட்டு ஆபிரகாமோடு புறப்பட்டு போனார். ஆபிரகாம், சாராள், லோத்து ஆகியோர் சேர்ந்தே விசுவாச யாத்திரையை ஆரம்பித்தனர். ஆனால் லோத்துவின் பேர் விசுவாச வீரர்கள் பட்டியலில் நாம் காண்பதில்லை. ஆபிரகாம் விசுவாசித்து நடந்ததால் கிடைத்த நன்மைகளையும்  லோத்து தரிசித்து நடந்ததால் அடைத்த தீமைகளையும் குறித்து வேத வசனங்கள் வாயிலாக நாம் தியானிப்போம்.

தேவனுடைய சித்தமா - சுய சித்தமா

ஊர் என்கிற கல்தேயர் தேசத்திலிருந்து ஒன்றாய் புறப்பட்ட ஆபிரகாமும் லோத்துவும் சிறிது காலம் சந்தோஷமாய் சேர்ந்து வாழ்ந்தனர். பெத்தேலில் குடியிருந்த போது அவர்கள் இருவருடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் வந்தது. அவர்கள் இருவரும் ஒருமித்து குடியிருக்க முடியாதபடி அவர்கள் ஆஸ்தி மிகுதியாயிருந்தது. ஆபிரகாம் தானாக முன்வந்து சகோதரராகிய நமக்குள் வாக்குவாதம் வேண்டாம்  நீ இடதுபுறம் அல்லது வலதுபுறம் போகலாம் என லோத்துவுக்கு ஆலோசனை கொடுக்கிறான். ஆபிரகாமோ தேவனை பற்றும் விசுவாசத்தோடு இங்கு விட்டுக்கொடுத்து போவதை நாம் காணலாம்.  லோத்து இன்னும் தன் ஐசுவரியத்தை பெருக்கும் எண்ணத்தோடு தன் கண்களுக்கு செழிப்பாய் நீர்வளமுள்ளதாய் தெரிந்த யோர்தானுக்கு அருகான சமபூமியை தெரிந்தெடுத்து சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். லோத்து தன் சுயசித்தத்தின்படி உலகத்தின் செழிப்பை தெரிந்துக்கொண்டான்.சோதோம் தேவன் காண்பித்த இடம் அல்ல.ஆபிரகாமும் லோத்துவும் சேர்ந்து கானான் தேசத்தை சேர்ந்த போது தேவன் ஆபிரகாமுக்கு காண்பித்த இடம் கானான். ஆனால் லோத்து அதை மறந்து போய் சோதோமுக்கு நேராக கூடாரம் போடுவதை நாம் காணலாம். கிறிஸ்தவர்களாகிய நாமும் பல நேரங்களில் நம் விசுவாச வாழ்க்கையை விட்டு லோத்துவை போல நம் கண்களுக்கு செழிப்பாய் தோன்றுகிற காரியங்களுக்கு நேராய் திரும்புவதுண்டு. தேவன் மேல் விசுவாசமாய் இருத்த ஆபிரகாமுக்கு தேவன் இடத்தை காண்பித்தார். நீ வடக்கையும் தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் நோக்கிபார் நீ பார்க்கிற பூமிமுழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி தருவேன் என்று ஆசீர்வதித்தார்.ஆபிரகாம் எபிரோனில்  மம்ரே என்னும் சமபூமியில் குடியிருந்து கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டினான்.[ஆதியாகமம்:13:1-18].எவ்வளவு மேன்மையான ஆசீர்வாதம் பாருங்கள். நாம் விசுவாசத்தோடு தேவனுக்கு பிரியமாய் நடக்கும் போது நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும்  சேர்த்து தேவன் ஆசீர்வதிக்கிறார். வேதம் கூறுகிறது ஆகையால் நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று  உணர்ந்துகொள்ளுங்கள்[எபேசியர்:5:17].நம் சுயத்தினால் உலகத்தில் நம் கண்கள் கண்ட செழிப்பை எதிர்நோக்கி அதை தரிசித்து நடப்போமானால் நம்முடைய ஆசீர்வாதம் ஒரு சிறிய எல்லைக்குள்ளே இருக்கும். பிரியமானவர்களே நம் கண்களுக்கு செழுமையாய் தோன்றுகிற எல்லவற்றையும் தள்ளி விட்டு தேவனை சார்ந்தே நடப்போம்.

தேவனுடைய சிநேகிதன் – உலக சிநேகிதர்கள்

வேதம் கூறுகிறது சோதோம் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். சோதோமுக்கு நேராக கூடாரம் போட்ட லோத்து பின்பு சோதோமிலே குடியிருந்தான். நம்முடைய வாழ்க்கையிலும் உலகத்தின் செழுமைகள் ஆசாபாசங்கள் முதலில் நம் கண்களை ஈர்க்கும். பின்பு அதற்கு நேராய் நிரந்தரமாய் இழுத்து செல்லும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். வேதம் கூறுகிறது அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து[2பேதுரு:2:7,8]. இருதயத்தில் வாதிக்கப்பட்டும் லோத்து சோதோமிலிருந்து வெளியே வராமல் அங்கேயே தங்கியிருந்தான். தேவன் ஒரு எச்சரிப்பை கொடுக்கிறார். யுத்தத்தில் லோத்துவும் அவன் குடும்பமும் சிறையாக கொண்டுபோகப்பட்டனர். ஆபிரகாம் அவனை மீட்டெடுக்கிறான், ஆனாலும்  லோத்து மீண்டும் தேவ மனிதனாகிய ஆபிரகாமோடு சேராமல் மீண்டும் போய் சோதோமிலே குடியிருக்கிறான். தூதர்கள் ஆபிரகாமை சந்திக்க சென்ற போது ஆபிரகாம் கூடாரவாசலிலே இருந்தான்.லோத்துவோ சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். பட்டணத்து வாசலில் முதியவர்கள் உட்கார்ந்து அன்றாட காரியங்களையும் வழக்குகளையும் குறித்து விவாதிப்பார்கள். லோத்து மகா பாவிகளான சோதோமின்  மனுஷரோடு உலகப்பிரகாரமான  காரியங்களை விவாதித்தான். ஆனால் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவர் நீதியாக  எண்ணினார். அவன்  தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்[யாக்கோபு:2:23]. தன்னுடைய சிநேகிதனான ஆபிரகாமின் கூடாரத்திற்கு தேவன் சென்றார் என்று வேத அறிஞர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமானார் அவன் கண்களை ஏறெடுத்து பார்த்த போது மூன்று புருஷர் நின்றார்கள். அதுமட்டுமல்ல ஆபிரகாமின் கூடாரத்திற்கு சென்ற  மூன்று பேரில் இரண்டு பேர் மட்டுமே லோத்துவின் வீட்டிற்கு சென்றனர். நம்முடைய வாழ்க்கை முறை எப்படியாய் இருக்கிறது?

 

ஆபிரகாமை போல தேவ தரிசனத்தோடு வாழ்கிறோமா? இல்லை லோத்துவை போல தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்தை தள்ளிவிட்டு நாம் உலக நண்பர்களை சேர்த்துக்கொண்டு உலகபிரகாரமாக ஜீவிக்கிறோமா? வேதம் கூறுகிறது மோசம் போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷனைகள் நல்லொழுக்கங்களை கெடுக்கும்[1கொரிந்தியர்:15:33]. கிறிஸ்தவர்களாகிய நாம் எப்பொழுதும் தேவ பிள்ளைகளோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் ஆவிக்குரிய காரியங்களை சம்பாஷித்து தேவனில் வளர வேண்டும்.

 

நற்செய்தி – துர்செய்தி

 

தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணினார். ஆபிரகாமின் வீட்டிற்கு வந்த தூதர்கள் “சாராள் ஒரு குமாரனை பெறுவாள்” என நற்செய்தி கூறினார்[ஆதியாகமம்;18:10]. ஆபிரகாமின் வீட்டிலே வந்த தேவ மனிதர்களை அவர்கள் குடும்பமாக உபசரித்தனர். தேவன் எல்லாவற்றையும் ஆபிரகாமோடு தரிசனத்தில் பேசினார். கர்த்தர் ஆபிரகாமோடு சோதோமின் அழிவை குறித்தும் பேசுகிறார்.ஆபிரகாம் சோதோமுக்காக விண்ணப்பம் பண்ணி  தேவனுக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்தான்.

லோத்தும் தன்னுடைய வீட்டிற்கு வந்த தூதர்களை நன்றாய் உபசரித்தான்.சோதோமின் மனிதர்கள் தூதர்களுக்கு எதிராக அக்கிரமம் செய்ய துணிந்த போது தன் குமாரத்திகளை கொடுக்க கூட முன்வந்தான்.ஆனால் லோத்துவுக்கு தேவனோடு நெருங்கிய உறவு காணப்படவில்லை. லோத்து பட்டணத்தில் பெரிய பிரபலமான மனிதனாய் இருத்தும் அவர்கள் லோத்துவின் பேச்சை கேட்கவில்லை.  லோத்துவின் வீட்டிற்கு வந்த தூதர்கள் “நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாய் இருக்கிறது[ஆதியாகமம்;18:12,13]. இதை அழிக்க கர்த்தர் எங்களை அனுப்பினார் என துர்செய்தி கூறினார்கள்.

ஆனாலும் இரக்கமுள்ள தேவன் ஆபிரகாமை நினைத்து லோத்துவை அழிவின் நடுவில் இருந்து தப்பி போகப் பண்ணினார் [ஆதியாகமம்;19:29]. அதுமட்டுமல்ல சோதோமின்  அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்துவை இரட்சித்தார்[2பேதுரு:2:7,8]. லோத்து ஆபிரகாமை போல தூதர்களை ஏற்றுக்கொண்டான் காப்பாற்றினான். லோத்து நீதிமானாய் இருந்து சோதோமின் பாவத்தை குறித்து அனுதினமும் வருத்தப்பட்டான். ஆனாலும் சோதோமில் லோத்து கட்டிய வீடும் சம்பாதித்த ஆஸ்திகளும்  அவனை  சோதோமை விட்டு தேவனிடம் வரத்தடுத்தது. லோத்துவை போல நம் மனம் வாதித்தும் நாம் வெளியே வர முடியாத காரியங்கள் வாழ்க்கையில் உண்டல்லவா? எல்லவற்றையும் விட்டு தேவகரத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். தேவன் நம்மை பத்திரமாக அச்சூழலிலிருந்து அழைத்து வருவார்.

முழுமையான கீழ்ப்படிதல் – தாமதம்

தேவன் ஆபிரகாமிடம் உன் ஏகசுதனும் நேசக்குமாரனுமாகிய பலியிடு என்று சொன்ன போது ஆபிரகாம் எந்த மறுப்பும் சொல்லாமல் காலதாமதமின்றி உடனடியாக அதிகாலையிலே எழுந்து தன் குமாரன் ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரிய மலையில் தேவன் தனக்கு குறித்த இடத்திற்கு புறப்பட்டு போனான். ஆபிரகாம் தேவன் சொன்ன கட்டளைக்கு முழுமனதோடு கீழ்ப்படிந்தான். மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார் என்று எண்ணி தனக்கு ஒரேபேறானவனையே ஒப்புக்கொடுத்தான். மரித்தோரிலிருந்து அவனை பாவனையாக திரும்பவும் பெற்றுக்கொண்டான் [எபிரெயர்:11:18,19]. ஆபிரகாமும் நம்மை போல ஒரு மனிதன் தான் ஆனால் தான் மிகவும் நேசித்த குமாரனைக் தேவன் கேட்ட போது விசுவாசத்தோடு அர்ப்பனிக்கிறான்.  ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கை நம்முடைய  விசுவாசத்தை  தூண்டுகிறதல்லவா. ஆபிரகாம் தேவனுடைய சொல்லுக்கு கீழ்படிந்தபடியால் தேவன் ஆபிரகாமின் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என ஆசீர்வதித்தார். இன்றும் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

லோத்துவிடம் வந்த தூதர்,  பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.

அவன்  தாமதித்துக் கொண்டிருக்கையில்  கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டு   “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டு பாராதே; இந்த சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடி மலைக்கு ஓடிப்போ” என்று சொன்னார்கள். ஆனாலும் லோத்து கீழ்படியாமல் மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது நான் மரித்துப்போவேன் என்று அவிசுவாச வார்த்தைகளை கூறி தன் சுயசித்தத்தின்படி ஒரு ஊருக்குள் ஓடிப்போக விண்ணப்பித்தான். மீண்டும் லோத்து தன்னுடைய விருப்பப்படியே இடத்தை தெரிந்தெடுத்தான்.லோத்துவின் மனைவி கீழ்படியாமல் பின்னிட்டு பார்த்து உப்புதூண் ஆனாள்[ஆதியாகமம்:19:16-26]. சோதோமில் அவர்கள் சம்பாதித்த ஆஸ்தி ஐசுவரியங்கள் அநேகம். அக்காலத்தில்  சவக்கடலை லோத்துவின் கடல் என்று சொல்லுவதுமுண்டு. அதை முழுமனதோடு விட்டு வர அவர்கள் இருதயம் இடங்கொடுக்கவில்லை. நம்முடைய வாழ்க்கையை சற்று சீர்தூக்கிப் பார்ப்போமா? நம்முடைய வாழ்க்கையில் தேவதரிசன பாதையில் ஓட முடியாதபடி நம்மை பின்னுக்கு தள்ளுகிற காரியம் என்ன? ஆண்டவரே எனக்கும் உமக்கும் இடையில் எதுவும் வராமல் நீரே பார்த்துக்கொள்ளும் என்று சொல்லி  முழுமனதோடு தேவனுக்கு நேராய் ஓட நம்மை அர்ப்பணிப்போமா?

ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததி – சபிக்கப்பட்ட சந்ததி

ஆபிரகாமின் வாழ்க்கையில் தினமும் தேவனை தரிசித்து அவரோடு பேசுகிற பழக்கமிருந்தது. ஆபிரகாம் எங்கெல்லாம் வாழ்ந்தானோ அங்கு எல்லாம் கர்த்தருக்கு பலிபீடம் கட்டி தேவனை தொழுது கொள்ளுவதை நாம் காணலாம். தேவன் ஆபிரகாமை சிநேகிதனாக எண்ணினார். நாம் நம்முடைய  சிநேகிதனிடம் எப்பொழுதும் பேசிக்கொள்ளுகிறது போல தேவன் அவனோடு பேசினார். ஆபிரகாமிடம் தேவன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்.  இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமையாய் இருப்பது குறித்தும் நானூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் கானான் வருவார்கள் என எல்லாவற்றையும் அறிவித்தார். சோதோமின் அழிவை குறித்து கூட தேவன் ஆபிரகாமுக்கு அறிவித்தார்.வேதம் கூறுகிறது நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.பாருங்கள் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பன் என்பதை தேவனே சாட்சிக்கொடுக்கிறார் [ஆதியாகமம்:18:18,19]. ஆபிரகாம் தான் மட்டுமல்ல தன் குடும்பத்தையும் தேவதரிசனத்துக்கு நேராய் வழிநடத்தினான்.சாராளும் ஆபிரகாமை ஆண்டவனே என்று சொல்லி அவனுக்கு கீழ்படிந்திருநாள் என்று வேதம் கூறுகிறது[1பேதுரு:3:6].அவன் குமாரனாகிய ஈசாக்கும் தன் வாலிப வயதில்[20yrs]  தகப்பன் சொல்லுக்கு முற்றிலுமாய் கீழ்படிந்து தன்னை ஜீவபலியாய் தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதை நாம் காணலாம். ஆம் அன்பானவர்களே தேவனை தரிசித்து அவருக்கு கீழ்படிந்து தேவன் காட்டும் வழியில் பிரயாணம் செய்யும் போது மட்டுமே ஒரு மனிதன் தன் குடும்பத்தையும் தேவனுக்காய் ஆதாயம் செய்ய முடியும். வேதம் கூறுகிறது “ அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே “[மல்கியா:2:15].  ஆபிரகாம் மூலமாக தேவன் ஒரு ஆசீர்வாதமான ஆவிக்குரிய சந்ததியை எழுப்பினார். நாமும் ஆவிகுரிய இஸ்ரவேலாராய் ஆபிரகாமின் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறோம் அல்லவா.

லோத்து ஆபிரகாமோடு தேவனை விசுவாசித்து புறப்பட்டாலும் வேதத்தில் எந்த இடத்திலும் பலிபீடம் கட்டவோ தேவனை தொழுதுகொண்டதாகவோ நாம் காண முடியாது. தேவனை தரிசித்து தேவனோடு பேசினதையும் நாம் காண்பதில்லை. தேவனுடைய இரக்கத்தைப் பெற்று சோதோமின் அழிவிலிருந்து தன்னை காப்பாற்ற வந்த தூதர்களை மட்டுமே லோத்து தரிசித்ததை நாம் காண்கிறோம். தூதர்கள் லோத்திடம் வந்த போது லோத்து மட்டுமே அவர்களை உபசரித்தான்.தன் குடும்பத்தாரை ஆவிக்குரிய சூழ்நிலைக்கு பழக்கப்படுத்தவில்லை. லோத்து உலகத்தின் பார்வையில் ஒரு ஐசுவரியவான் பிரபலமான நபர். ஆனால் லோத்துவால் சோதோமின் அழிவில் இருந்து ஒரு மனிதரை கூட தேவனுக்காய் ஆதாயப்படுத்த முடியவில்லை. தன் மருமக்களையும் தன் மனைவியை கூட காப்பாற்ற முடியவில்லை.

சோதோமின் பாவ சூழ்நிலைகளை பார்த்து வளர்ந்த  லோத்துவின் குமாரத்திகள் தங்கள் சொந்த தகப்பன் மூலமாய் உலகத்திற்கு மோவாபியர் அம்மோனியர் என்னும் தேவனால் சபிக்கப்பட்ட வெறுக்கப்பட்ட  இரு சந்ததிகளை உருவாக்கினர்.  வேதம் கூறுகிறது பிள்ளையானவன் நடக்க  வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்[நீதிமொழிகள்:22:6]. தேவபக்தியுள்ள சந்ததியை உருவாக்க தேவன் நம்மை படைத்தார்; நாம் எப்படிப்பட்ட சந்ததியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? பெற்றோராகிய நாம் நம் பிள்ளைகளுக்கு ஆஸ்தி ஐசுவரியம் கொடுக்கிறோமோ இல்லையோ இயேசுவை கொடுப்போம். தேவனுக்கு பிரியமான பக்தியுள்ள சந்ததியை உருவாக்குவோம்.

சோதோமின் பாவத்தினால் தேவன் எப்படியாய் அக்கினியையும் கந்தகத்தையும் வருஷிக்க பண்ணி அதை அழித்துப்போட்டாரோ அதே போல தேவனுடைய நாளில் நடக்கும். வானங்கள் வெந்து அழிந்து பூதங்கள் எரிந்து உருகிப்போம். நம்முடைய தேவன் நீதியுள்ள நியாயாதிபதியாய் வரப்போகிறார். அவர் பாவத்தை தண்டியாமல் இருப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள் மட்மே தப்பித்துக்கொள்ள முடியும். ஜீவபுஸ்தகத்திலே பேர் எழுதப்படாதவன் அக்கினிகடலிலே தள்ளப்படுவான்[வெளி:20:11-15]. சோதோம் கொமோரா பட்டணங்களை தேவன் சாம்பலிலே கவிழ்த்து போட்டு ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு திருஷ்டாந்தமாக வைத்தார். நம்முடைய விசுவாச யாத்திரையில் ஆபிரகாமைப் போல தேவனின் அருகாமையில் இருக்கிறோமா? இல்லை லோத்துவைப் போல தொலைவில் இருந்து தேவனைப் பார்த்துக்கொண்டு உலகத்தை தரிசித்து ஓடுகிறோமா? சிந்திப்போம் அன்பானவர்களே! தேவனுடைய நாள் மிகச்சமீபம்.

 

 

விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை முன்னிறுத்தி அவருடைய சித்தத்தை செய்கிறவர்களாய் கீழ்படிதலோடே ஓடுவோம்.முடிவு பரியந்தம் இரட்சிப்பில் நிலைத்திருப்போம்.பரம கானானை சுதந்தரிப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

bottom of page