top of page

இசைந்திருக்கும் குடும்பத்தில் தான் தெய்வீக ஆசீர்வாதம்!!

(இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.


எபேசியர் 5-31 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியிடத்திலும் அன்புகூரக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். எபேசியர் 5:33 )

 

தேவனுடைய பார்வையில் கணவனும் மனைவியும் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள். இவர்கள் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது, இவர்கள் இருவரும் இசைந்து அதாவது ஒரு முகமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.இன்றைக்கு தேவன் அவர்களுக்கு வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியாதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கிடையே நிலவும் பிரச்சனைகளே.

 

திருமணத்தின் போது தேவ சமூகத்தில் இவர்கள் உடன்படிக்கை செய்து கொண்டு வாழ்கைப்பயணத்திலே ஒருவரை ஒருவர் ஏமாற்றி தேவனுக்கு முன்பாக செய்த உடன்படிக்கையை துணிகரமாக மீறுகிறார்கள். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பு காணப்பட வேண்டும். தன்னை நேசிப்பது போல பிறனை நேசிக்க வேண்டும் என்ற கட்டளையை முதலில் தங்கள் வீட்டிலே செயல்படுத்த வேண்டும். இருவருக்கிடையே எந்தவிதமான மறைவான காரியங்களும் இருக்க கூடாது. குடும்பத்தில் இருவரும் ஒருமித்த கருத்துடையவர்களாய் காரியங்களை குறித்து ஆலோசித்து  தீர்மானிக்க வேண்டும். இன்றைக்கு பிசாசானவன் ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சித்தது போல இன்றைக்கு மூன்றாம் நபர் மூலமாக குடும்பத்தில் நுழைந்து தவறான ஆலோசனை மூலம் பெலவீனமானவர்களை ஆளுகை செய்து குடும்பத்தில் பிரிவினைகளை கொண்டு வந்து விடுகிறான். தேவன் நம்மை கள்ளமற்றவர்களாகவும் கபடற்றவர்களாகவும் பொய் பேசாதவர்களாகவும் இருங்கள் என்று எச்சரிக்கிறார். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் என்று வேதம் சொல்கிறது, இன்றைக்கு அநேக குடும்பங்களில் காணப்படும் உண்மையற்ற தன்மையும் இவர்களுக்கிடையான பிறரை நோக செய்யும் கசப்பான பேச்சும் இவர்களுக்கிடையே உள்ள ஒரு மனதை கெடுத்துவிடுகிறது.

 

எங்கு சண்டையும் வாக்குவாதங்களும் பேதங்களும் இருக்கிறதோ அங்கு தெய்வீக ஆசீர்வாதங்களுக்கு இடமில்லை. அநேக குடும்பங்களில்  குறிப்பாக பணவிஷயத்தில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை ஏமாற்றுகிறார்கள். பிறகு சண்டை போடுகிறார்கள். பணத்தை கையாள்வதில் நீதியோடும் நியாயத்தோடும் நேர்மையோடும் ஒருவரையொருவர் கலந்து ஆலோசித்து செயல்படும் போது எந்த ஒரு கருத்து வேறுபாடும்  வராது.பிள்ளைகளுக்கு பெற்றோர்களே சேர்த்து வைக்க வேண்டும் என்று 1கொரி 11-14 ல் பவுல் எழுதுகிறார். பெற்றோரையும் கனம் பண்ண வேண்டும் என்று வேதம் சொல்கிறது. எனவே பெற்றோர்களையும் நாம் தாங்க வேண்டும். குடும்பத்தில் கஷ்டத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் உதவி செய்யலாம், ஆனால் உங்கள் பணத்தை நம்பி அவர்கள் வேலைக்கு போகாமல் இருந்து விட நீங்கள் காரணமாகிவிட கூடாது. மேலும் பண விஷயத்தில் பொய் சொல்லி ஏமாற்றுகிற சுயநலவாதிகள் உங்கள் குடும்பத்திலே இருப்பார்கள். தங்களிடம் இருக்கும் சேமிப்பை செலவு செய்ய விரும்பாமல் சுயநலத்தோடு ஏமாற்றும் நோக்கத்தோடு  உங்களிடம் வருவார்கள்.

 

எனவே எதையும் பகுத்தறியும் ஞானத்தோடும் தேவ ஆலோசனையோடும் நாம் செயல்பட வேண்டும் எனக்கு ஒரு குடும்பத்தை தெரியும். அந்த சகோதரி வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள், கணவன் இவர் அனுப்பும் பணத்தை தாறுமாறாக செலவழித்தார். சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் அள்ளி அள்ளி கொடுத்தார். இவரது பிள்ளைகளுக்கு இவர் ஏதும் சேர்த்து வைக்கவில்லை, அந்த சகோதரி எவ்வளவு சொல்லியும் அவர் கீழ்படியவில்லை, இவரது சகோதர சகோதரிகள் எல்லாரும் நன்றாக settle ஆகிவிட்டார்கள். காலம் கடந்தது ஒருநாள் இவர் நோய்வாய்பட்டு மரித்து விட்டார், இவரது மனைவி வேலையை விட்டு விட்டு வந்து விட்டார்கள். எத்தனையோ வருஷங்கள் வெளிநாட்டில் வேலை செய்த போதும் ஒரு சேமிப்பும் இல்லை. இவரால் பயனடைந்தவர்கள் கஷ்டப்படும் இவர்களை வந்து பார்ப்பதில்லை. இன்றைக்கு பிள்ளைகளை படிக்க வைக்க முடியாதபடி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தேவன் ஆசீர்வதிக்கும் போது நாம் ஞானமாக நடந்து கொள்ள வேண்டும்.

 

அடுத்ததாக, அவனவன் தன் சொந்த வேலையை செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. சிலர் வேலைக்கு போவதில்லை, சோம்பேறியாக  சுற்றி கொண்டிருப்பார்கள். மனைவி சம்பாதிக்கும் பணத்தை ஏதோ தான் சம்பாதிப்பது போல டாம்பீகமாக செலவு பண்ணுவார்கள். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் காசு கொடுக்க வேண்டுமென்று மனைவியிடம் ஓயாமல் சண்டை போட்டு கொண்டிருப்பார்கள். இவர்கள் சூடு சொரணையற்றவர்கள்.... தேவ நீதிக்கு அப்பாற்பட்டவர்கள், வீட்டில் இருக்கும் மனைவிமார்களும் கணவன் கொடுக்கும் பணத்தை அவருக்கு தெரியாமல் தங்கள் குடும்பத்துக்கு செலவு பண்ணுவார்கள், இதுவும் தவறான காரியம். மனைவியும் கணவன் அனுமதியுடன் தன் வீட்டிற்க்கு உதவி செய்வதே சரியானது. கணவனும் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக காரியங்களை செய்வது இருவருக்கும் இடையே தேவன் காண்பித்த இசைவை மற்றும் உண்மை நிலையை இல்லாமல் செய்து விடுகிறது. எந்த குடும்பத்தில் ஒருமனம் இருக்கிறதோ அந்த குடும்பம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறது.

 

கணவன் மனைவிக்கு உண்மையாகவும் மனைவி கணவனுக்கு உண்மையாகவும் இருந்து அன்பினால் கட்டப்பட்டு ஒருவருக்கொருவர் இசைந்து வாழும் வீடுகளில் தேவ பிரசன்னம் தங்கியிருக்கும். இவர்கள் குடும்ப ஜெபங்களில் விண்ணப்பிக்கும் காரியங்களுக்கு தேவன் உடனடியாக பதிலளிப்பார். இவர்கள் வீடுகளில் தான் சுகமும் சமாதானமும் சந்தோஷமும் இருக்கும். (அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 18-19). ஆமென்

bottom of page