சிலுவையின் மேன்மையான அழைப்பு
சகோதரி. அனு ஃபெஸ்லின்
அன்பான சகோதர சகோதரிகளுக்கு நமக்காய் மரித்து உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும். இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார்[மத்தேயு:16:24].
சிலுவை என்பது கிறிஸ்துவின் பாடுமரணத்தை நினைவுட்டும் இரட்சிப்பின் சின்னமாக இருந்தாலும் மறுபுறம் கிறிஸ்துவின் அன்பின், மன்னிப்பின், கிருபையின், மகிமையின் சின்னமாய் நம்மை மகிழ்விக்கிறது. தேவன் தம்முடைய ஒரே குமாரனை இந்த உலகத்தில் அனுப்பி நம் எல்லாரையும் இவவசமாய் மீட்டு இரட்சித்தார். நம்முடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்து இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாய் கொடுத்து சிலுவையில் தொங்கினார். இந்த சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மேன்மையான அழைப்பை கொடுக்கிறது. “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்கிற அழைப்பின் குரலே அது. ஆம் அன்பானவர்களே நமக்காக சிலுவை சுமந்த இயேசு இந்த மேலான அழைப்பை எல்லா மனிதருக்கும் இலவசமாய் விடுக்கிறார். இரட்சிப்போடு இணைந்தது தான் சிலுவையின் அழைப்பும். இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இந்த அழைப்புக்கு பாத்திரவான்கள். அந்த மேன்மையான அழைப்பை உணர்ந்து நாமும் அவரை பின்பற்ற வேதம் நமக்கு சொல்லும் ஆலோசனைகளை சிந்திப்போம்.
பொதுவான அழைப்பு
“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்[மத்தேயு:16:24].அதாவது சாத்தானுக்கு அடிமைகளாய் வாழ்ந்த நம்மை தமது இரத்தத்தால் மீட்டெடுத்த தேவன் நித்திய நித்தியமாய் அவரோடு வாழ வழியை காண்பித்து தன்னை பின்பற்றுமாறு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இது நிர்பந்திக்கப்பட்ட அழைப்பு அல்ல மாறாக ஒரு பொதுவான அழைப்பு [Choice is yours]. அதாவது ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன்” என்று அழைக்கிறார். இயேசு கிறிஸ்து தான் சிலுவை சுமக்காமல் நம்மை சிலுவை சுமக்க அழைக்கவில்லை. சிலுவையை சுமந்து மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாள் மரித்தோரிலிருந்து எழுந்து பரத்துக்கேறி பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். சிலுவையின் பாடுகளை நன்கு உணர்ந்தவராய் பாடுகளின் முடிவில் பலன் அளிக்கிறவராய் நம்மையும் அழைக்கிறார். அவர் சுமந்த பாரமான சிலுவையை சுமக்க அழைக்கவில்லை. உன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்று என்று சொல்கிறார். சிலுவையின் பாடுகளை மட்டுமே நினைத்து கொண்டிராமல், இந்த அழைப்பின் மகத்துவத்தையும் அதின் பலனாகிய நித்திய ஜீவனையும் அவரோடு மகிமையில் பிரவேசிக்கும் அனுபவத்தையும் உணரும் போது நாம் ஒருபோதும் இந்த அழைப்பை உதாசீனபடுத்த மாட்டோம். இன்றே தீர்மானிப்போம்.
சீஷத்துவ அழைப்பு
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்[லூக்கா:14:27]. இயேசு கிறிஸ்துவின் சிலுவை நம் ஒவ்வொருவரையும் தேவனின் மகிமையான ராஜ்ஜியத்தின் சீடர்களாக அழைக்கிறது. இது ஒரு நிர்பந்திக்கப்பட்ட அழைப்பு அதாவது சிலுவை சுமக்காமல் சீஷனாய் இருக்கமுடியாது.
வேதம் கூறுகிறது சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும்[மத்தேயு:10:28]. இன்றைய காலகட்டத்தில் நம் எல்லாருக்கும் இயேசு வேண்டும் சீஷத்துவ ஊழியம் வேண்டும் ஆனால் சிலுவை வேண்டாம். அதாவது சிலுவை சுமக்காமல் கிரீடம் வேண்டும். வேதம் கூறுகிறது “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” [லூக்கா:9:23]. நாம் அவரின் சீஷனாக பின்பற்றவேண்டுமானால் நம்மை வெறுமையாக்கி, அனுதினமும் நம் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை பின்பற்ற வேண்டும்.
முதலாவது தன்னை தான் வெறுப்பது என்று சொல்லும் போது சுயத்தை சாகடிப்பது.நம் சுயம் சாம்பலாய் மாற வேண்டும். பவுல் கூறுகிறார் “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்[கலாத்தியர்:2:20]. அதாவது நம்முடைய பழைய மனுஷனையும், மாம்சத்தையும், ஆசை இச்சைகளையும், உலகத்தையும் சிலுவையில் அறைந்து ஆவியானவரின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுத்து, நம்மை வெறுமையாக்கி இனி நான் அல்ல கிறிஸ்துவின் சித்தமே என் வாழ்வில் செயல்பட வேண்டும் என முழுவதுமாய் அர்ப்பணிப்பது. பவுல் கூறுகிறார். சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இயேசு கூறுகிறார் “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால் அதினால் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துக் கொள்ளுவார்கள்[யோவான்:13:34-35]. ஆம் அன்பானவர்களே நம் சுயத்தை எப்போதும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் போது மாம்சத்தின் கிரியைகளை நம்மை விட்டு அகன்றுபோம். அப்பொழுது பாவிகளாகிய நம்மேல் கிறிஸ்து காண்பித்த அன்பை பிறரிடத்தில் காண்பிப்பது எளிதாகும். மற்ற மனிதர்களை காணும்போது அவர்களுடைய தவறுகளை, அவர்கள் மேல் உள்ள பகையை அல்லது அவர்கள் நமக்கு செய்த தீமைகளை அல்ல, அவர்களையும் நம்மை மன்னித்தது போல இயேசு மன்னித்தார் என்னும் உணர்வு உண்டாகும்.
அன்பின் ஊற்று பெருக்கெடுக்கும். நாமும் கிறிஸ்துவின் சீஷர்களாய் மாறுவோம் என்பதில் ஐயமில்லை. இனி நான் அல்ல அவரே எல்லாம் என முடிவு செய்வோம்; ஆவி ஆத்துமா சரீரம் யாவற்றையும் அவர் பணிக்கே ஒப்புக்கொடுப்போம்.
இரண்டாவதாக வேதம் கூறுகிறது உன் சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் என்னை பின்பற்று. சிலுவை சுமப்பது என்பது உலகத்தின் பரியாசங்கள் நிந்தைகள் துன்பங்கள் அவமானங்கள் உபத்திரவங்கள் பாடுகள் அனைத்தையும் கிறிஸ்துவுக்காய் சகிக்கும் வாழ்க்கை. வேதம் கூறுகிறது இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்[1பேதுரு:4:1]. நம்முடைய சிலுவை பாரமோ இலகுவோ கிறிஸ்துவின் நுகத்தை ஏற்று நல்ல போர்சேவகனாய் அவருக்காக பாடுகளை அனுபவிப்போம். ஜீவனற்றவர்களாய் இருந்த நமக்கு தமது இரத்தத்தினால் ஜீவனை கொடுத்த கிறிஸ்துவுக்காக ஜீவனையும் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். சிலுவை நம்முடைய ஆத்துமாவின் நங்கூரம். பரமனிடம் நம்மை அழைத்து செல்லும் பாதையில் தடுமாற்றம் வராமல் தாங்கும் நங்கூரம். சிலுவை நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. பாரமான சிலுவை என்று எண்ணுவதை விட்டுவிட்டு நாம் அடையபோகும் மகிமையை உணர்ந்தவர்களாய் மகிழ்ச்சியோடு சிலுவையை சுமப்போம்.
மூன்றாவதாக நாம் தினமும் சிலுவை சுமக்க வேண்டும்.வேதம் சொல்லுகிறது ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாய் இருக்கிறது அதை கண்டுபிடிப்பவர்கள் சிலர். சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் அவரை பின்பற்றும் போது இடுக்கமான வாசலுக்கு நேராய் நாம் வழிநடத்தப்படுக்கிறோம். பிரியமானவர்களே லெந்து நாட்களில் மட்டும் சிலுவையை குறித்து தியானித்து, தேவ சமூகத்தில் காத்திருந்து புனித வெள்ளி ஆராதனையில் சிலுவை பாடுகளை உணர்ச்சிபொங்க தியானித்து பின்பு அதை குறித்து கவலை அற்றவர்களாய் இருப்பது அல்ல கிறிஸ்தவ வாழ்வு. மழையோ வெயிலோ புயலோ காற்றோ தினமும் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து சிந்தித்து உனக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை சுமந்தது அவரை பின்பற்று என்பதே வேதத்தின் அழைப்பு. நாம் சுமக்கும் சிலுவையினால் பிறர் கிறிஸ்துவை ருசித்து இரட்சிப்பின் பாதையை கண்டுகொள்ளட்டும்.
பாத்திரராய் மாற்றும் அழைப்பு
“தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல [மத்தேயு:10:37-38]. நாம் எல்லாவற்றையும் விட்டு தேவனுக்கு முதலிடம் கொடுத்து சிலுவையை சுமக்கும் போது மட்டுமே நாம் அவருக்கு பாத்திரராய் மாறுகிறோம். உதாரணமாக அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். நாம் பல நேரங்களில் நினைக்கலாம் நான் ஏன் குடும்பத்தை விட்டு செல்ல வேண்டுமா? அதினால் எனக்கு என்ன பயன்? தேவனுடைய வேலையை நாம் முதன்மையாக கருதி முழு முக்கியத்துவம் கொடுத்து எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் செய்ய வேண்டும். ஒருமுறை பேதுரு இயேசுவிடம் இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்று கேட்டதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்.
எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள்.நாம் படும் ஒவ்வொரு பிரயாசத்திற்க்கும் பலன் அளிக்கிறவர் நம் தேவன். வேதம் கூறுகிறது “நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவராய் இருக்கிறார்[2தெசலோனிக்கேயர்:1:5].ஆமென்.
பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க அழைப்பு
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்[மாற்கு:10:21]. ஐசுவரியமான தலைவனிடம் உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு; பின்பு என்னை பின்பற்றி என்று இயேசு சொன்ன போது அவன் மிகுந்த துக்கமடைந்தவனாய் போனான். இங்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவன் துக்கமடைந்தான் என தன் கொள்கையை மாற்றவில்லை.
நாம் எப்போதும் நமக்காக உலக பொக்கிஷங்களை சேர்க்கிறோம்.ஆனால் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க இயேசு கிறிஸ்து நம்மை அறிவுறுத்துகிறார்[லூக்கா:12:21].
ஏனெனில் மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?[மத்தேயு:16:26] மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாது. பரலோகத்தின் பொக்கிஷமாகிய நம்முடைய ஆத்துமாவை எதை நஷ்டப்பட்டாகிலும் நாம் சம்பாதிக்க வேண்டும். அன்பானவர்களே நம்முடைய பொருட்கள் ஐசுவரியம் யாவும் கர்த்தர் தந்தது. அதை பிரயோஜனப்படுத்தி தேவனுக்காய் ஆத்துமாக்களை சம்பாதித்து அவர்களையும் தேவனுக்கு சீடராக்குவோம். சீஷத்துவம் ஒரு தொடர்செயல்; சீஷராவோம் சீஷராக்குவோம்.[Discipleship is a chain process. So be a Disciple and Make Disciples]
மோசே தான் உலக சந்தோஷங்களை வெறுத்து தேவனுக்காய் பொக்கிஷங்களை சேர்த்து தேவனுக்கு முன்பாக ஐசுவரியவனான். மோசேயைப் போல நாமும், தேவனை பின்பற்ற தடையாய் இருக்கிற எல்லாவற்றையும் விட்டுவிட்டு பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து தேவனை பின்பற்றுவோம்.
இன்றைய கிறிஸ்தவ உலகம் சிலுவையை பற்றி போதிப்பதை விட “நீ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் நோயில்லாத கடனில்லாத ஆசீர்வாதமான நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்” என்று ஆசீர்வாதத்தை மட்டுமே போதித்து அழைக்கின்றன. கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எப்படியாய் வளர்வது, பரிசுத்தமாய் வாழ்வது எப்படி என்று உணர்த்துகிற வசனங்களை விட ஆசீர்வாத வசனங்களை தான் எங்கும் பார்க்க முடிகிறது. சிலுவையின் போதனைகளை நாம் கேட்பது மிக அரிது. இதனால் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்க வேண்டும் என்பதை உணராமல், நம் இருதயம் பூமிக்குரிய பொக்கிஷங்களை சேர்க்க வாஞ்சிக்கிறது. இதனால் ஆசீர்வாதங்களை மட்டுமே நம்பி வரும் ஜனங்கள் உபத்திரவங்கள் பாடுகள் வரும் போது, அவைகள் முட்களைப் போல அவர்களை நெருக்குவதால் விசுவாசத்திலிருந்து விழுந்து போக ஏதுவாய் அமைகிறது. பவுலைப் போல கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி சிலுவையை சுமப்போம் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்.
கிறிஸ்துவின் பாடு மரணத்தை இந்நாட்களில் தியானிக்கிற நாம் ஒவ்வொருவரும் சிலுவையின் மேன்மையான அழைப்பை உணர்ந்தவர்களாய் நம்மை வெறுமையாக்கி சாத்தானின் சதிகளை முறியடித்து அனுதினமும் சிலுவையை சுமந்து அவருக்கு சீஷராகுவோம். மற்றவர்களையும் சீஷராக்குவோம். ஆத்துமாக்களை தேவனுக்கு ஆதாயப்படுத்துவது மட்டுமல்ல புதிய சீஷர்களையும் உருவாக்குவோம். இந்த உலகத்தை தேவனுக்காய் ஆதாயப்படுத்துவோம். “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற கட்டளையை இயேசு கிறிஸ்து பரமேறுமுன் நமக்கு கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவர் விட்டுசென்ற பணியை செய்து நிறைவேற்றினர். இன்று இந்த பனியை செய்து நிறைவேற்ற நம்மை அழைக்கிறார். இந்த மேன்மையான அழைப்புக்கு நம்மையும் அர்ப்பணிப்போமா? நமக்கு கொடுக்கப்பட்ட சிலுவையை தினமும் சுமந்து சிலுவையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைப்போம்.தேவனுடைய வருகை மிக சமீபம். ஆயத்தமாவோம் ஆயத்தமாக்குவோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் பாத்திரராய் மாறுவோம்.
இயேசு கிறிஸ்துவின் நல்சீடராகுவோம்
விசுவாசத்தில் முன்நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம்.
இந்த பாடல் வரிகள் நம் இருதயத்தில் எப்போதும் தொனித்து கொண்டே இருக்கட்டும். செயல்படும் கிறிஸ்தவர்களாய் மாறுவோம்.தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.