top of page

தேசத்துக்காக ஒன்று சேர்ந்து ஜெபிக்க வாருங்கள்

 

சமீபத்தில் சென்னையில் எல்லா சபையினரும் சேர்ந்து சென்னை நகரத்துக்காக உபவாசத்தோடு ஜெபித்தார்கள், ஆனால் அநேக ஊழியக்காரர்கள் தேசத்துக்காக ஜெபிக்க வராமல் ஜெபத்தை புறக்கணித்தார்கள். ஏன்? இவர்கள் ஜெபிக்க வரவில்லை என்று விசாரித்த போது தங்கள் ஆரம்ப நாள்களில் சிறியவர்களாக இருந்த இவர்கள் இன்றைக்கு அவர்கள் ஊழியம் பெருகிவிட்டதால் பெரியவர்களாகி விட்டார்களாம். எனவே அங்கீகாரம் கிடைக்காத இடங்களுக்கு போக மாட்டார்களாம்.ஒரு விசுவாசி  இப்படியாக சொன்னார். அவர் பெரிய paster ஆகி விட்டார். இதற்கெல்லாம் வரமாட்டார் என்றார்.

 

ஆரம்ப நாள்களில் மனத்தாழ்மையாக இருந்த இவர்கள் தேவனிடமிருந்து கிருபைகளையும் வரங்களையும் பெற்று உயர்த்தப்படும் போது பெருமையினால் வீழ்ந்து விட்டார்கள் என்பது தான் உண்மை.ஜனங்களெல்லாரும் ஒன்று கூடி தேசத்துக்காக ஜெபிக்க வரும் போது Pastor என்ற பட்டத்தை உதறி விட்டு நானும் ஜனங்களோடு ஜனங்களாக தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபிக்க வருகிற ஊழியக்காரனே இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறவன். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் சிலுவை பரியந்தம் தன்னை தாழ்த்தினார். கானாவூர் கல்யாண வீட்டிலே இயேசு கிறிஸ்து எந்த அங்கீகாரத்தையும் நாடவில்லை.வேலைகாரர்களுடனே இருந்தார்.அவர்கள் மூலமாக தான் அற்புதம் செய்தார்.இன்றைக்கு தேவனுடைய குரலை கேட்டு அவர் சொல்லும் வேலையை செய்வதற்க்காக அழைக்கப்பட்ட அப்பிரயோஜனமான வேலைக்காரர்கள் தங்கள் சுய இச்சையின்படி அநேககாரியங்களை செய்வதால் பிசாசானவன் இன்றைக்கு அதிகாரங்களை பயன்படுத்தி ஊழியங்களுக்கு விரோதமாக வல்லமையாக செயல்படுகிறான்.இன்றைக்கு சபைகள் ஒன்று கூடி ஜெபிப்பதற்க்கு  ஊழியக்காரர்களே தடையாக இருக்கின்றனர். (எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.ரோமர் 10-3) தேவன் இவர்களுக்கு அதிகாரங்களையும் வரங்களையும் கிருபைகளையும் கொடுத்து ஊழியக்காரன் என்ற அந்தஸ்தையும் கொடுத்ததை இவர்கள் மறந்து தாங்கள் கடந்து வந்த பாதைகளை பார்க்காமல் தங்கள் இருதயத்தில் மேட்டிமை சிந்தை கொண்டதினாலே  ஜனங்களோடு ஜனங்களாக இவர்கள் உட்கார முடியாமல் இருக்கிறார்கள். இவர்கள் இயேசுவின் தாழ்மையை பற்றி வாய் கிழிய பிரசங்கித்தும் அந்த உபதேசத்துக்கு தாங்களே கீழ்படியாமல் தங்கள் சுயத்தை சிலுவையில் அறையாத மாயமாலமான பிரசங்கிகள்.எல்லா அந்தஸ்துகளையும் தூக்கி போட்டு விட்டு தங்களை தாழ்த்தி ஜனங்களோடு ஒன்று சேர்ந்து ஜெபிப்பவர்களை தேவன் நிச்சயம் கனப்படுத்துவார்.சமீபத்தில் ஒரு சபையின் விசுவாசிகள் தங்கள் போதகரிடம் தேசத்துக்காக அனைத்து சபைகளும் ஒன்று சேர்ந்து ஜெபிக்கிறார்கள்.நாமும் ஏன் அவர்களோடு போய் ஜெபிக்க கூடாது என்று கேட்ட போது அந்த ஊழியக்காரர் நாம் நம் சபையிலே திறப்பின் வாசல் ஜெபத்தை ஆரம்பித்துவிடலாம் என்று சொல்லி மாதத்தில் நான்காவது சனிக்கிழமை அவர்கள் சபையில் ஆரம்பித்து விட்டார்கள்.

 

பிரியமான ஊழியக்காரர்களே! நான் என்கிற சுயத்தை நீங்கள் சிலுவையில் அறையாவிட்டால் நீங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற மாட்டீர்கள். நினிவேயில் அழிவு வருவதை அறிந்த ஜனங்கள் மற்றும் ராஜா உட்பட எல்லாரும் ஒன்று கூடி ஜெபித்த போது தேவன் அவர்கள் மேல் வரவிருந்த நியாயதீர்ப்பை நீக்கி போட்டார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்து அடிமையின் ரூபமெடுத்து உன் இரட்சிப்பு நிறைவேறுவதற்க்காக தன்னை தாழ்த்தினார், ஆனால் நீயோ ஊழியக்காரன் என்ற ஸ்தானத்தை பெற்றதினாலே ஜனங்களோடு ஜனங்களாக தேசத்தின் இரட்சிப்புக்காக ஜெபிக்க முடியாமல் இருக்கிறாய், உன் சபை ஐனங்களை அனுப்ப முடியாதபடி உன்னை தடை செய்வது யார்? நான் போதகர்  என்கிற உன் ஸ்தானம் (அபிஷேகம்)ஒரு நாள் பிடிங்கி போடாதபடிக்கு தேவ சமூகத்தில் உன்னை தாழ்த்து. ஒரு வேளை நீ அவர்கள் சரியில்லை இவர்கள் சரியில்லை என்று குறை சொல்லி கொண்டிருக்கலாம். ஆண்டவர் உன்னை பார்த்து மாயக்காரனே முதலாவது உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தை எடுத்து போட சொல்லுவார். நீ உண்மையிலேயே பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்பட்டால் இயேசுவை போல மனத்தாழ்மையை என்ற நுகத்தைஅணிந்து கொண்டிருப்பாய். இன்றைக்கு தேசத்துக்காக ஜெபிக்க வராதபடிக்கு உன்னை தடை செய்வது தேவன் உனக்கு கொடுத்த ஊழியமும் ஊழியக்காரன் என்ற ஸ்தானமும் தானே.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்து சீஷர்களின் கால்களை கழுவின மாதிரி  இன்றைக்கு எங்கே???? அநேக ஊழியக்காரர்கள்  மாயமாலமான மனத்தாழ்மையினாலும் மனப்பெருமையினாலும் ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள்.தேவன்  பெருமையுள்ளவர்களை எதிரியாக காண்கிறார். சாத்தானோ பெருமை என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தான் விழுந்து போனதை போல அநேகரை கீழே விழத் தள்ளுகிறான், ஊழியக்காரனே ஒரு இடத்தில் நீ புறக்கணிக்கப்பட்டால்  சந்தோஷப்படு. ஏனென்றால் நீ உன் சுயத்தை கிறிஸ்துவுக்குள்ளாய் அடக்கம் பண்ணியிருக்கிறாய். அவரும் புறக்கணிக்கப்பட்டவராக இருந்தார். கிறிஸ்துவின்ஆவியை உடையவனாயிருந்து அவருடைய அடிச்சுவடை பின்பற்றுகிறவனே உண்மையும் உத்தமுமான ஊழியக்காரன், பல தேசங்களில் கூட திறப்பில் நின்று ஜெபிப்பதற்க்காக அநேக ஊழியக்காரர்கள் வருவதில்லை,தங்கள் சபை ஜனங்களை போக  கூடாதபடிக்கு  மறைமுகமாக தடை செய்கிறார்கள்.

 

பிரியமான ஊழியக்காரர்களே! தேவன் நம் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார், தேசத்தில் தேவ சித்தத்துக்கும் தேசத்தின் எழுப்புதலுக்கும்  விரோதமாக செயல்படாதீர்கள். ஊழியம் செய்து கொண்டு ஆகாதவனாய் போகாதீர்கள், நாம் கடைசி நாள்களில்  இருக்கிறோம் என்கிற உணர்வு இருக்கட்டும். தேசத்தின் எழுப்புதலுக்காகவும் ஜனங்கள் இரட்சிக்கபடுவதற்க்காகவும் ஜெபிப்பதற்காக ஒன்று சேருங்கள்,அதற்க்காக கிரயம் செலுத்துங்கள், அவரும் நமக்காக கிரயம் செலுத்தி நம்மை மீட்டிருக்கிறாரே.எனவேஉங்க எல்லா ஸ்தானத்தையும் தூக்கி எறியுங்கள், நாம் நம்மை நாமே வெறுத்து சிலுவை சுமக்க அழைக்கப்பட்டவர்கள் என்பதை மறக்க வேண்டாம்,நாம் தேவனை மகிமைபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவர்கள்,தேசத்தில் அவருடைய சித்தத்தை செய்து அவர் நாமத்தை உயர்த்துவோம்.

 

சிலுவையில் நமக்காக தன் ஜீவனையே தந்த அன்பு தெய்வத்தின் சித்தத்தை நிறைவேற்றுவோம். அல்லேலூயா.

bottom of page