யார் இவர்?
சகோ. எட்வின் கார்டர்
இன்று அனேக ஜனங்கள் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் வாழுகிறார்களே தவிர அவர்களிடத்தில் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவைப் பற்றியதான ஒரு அறிவு இல்லாமலேயே இருக்கிறது. இயேசு என்று தங்களுடைய உதடுகளினாலும், வாயினாலும் சொல்லுகிறார்களே தவிர அவர்களிடத்தில் அதாவது அவர்களுடைய இருதயத்தில் இந்த மகத்தான இயேசுவைப் பார்க்க முடிவதில்லை.
இதை எப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்பீர்களானால், அதற்கு வேதம் வசனம் இருக்கிறது, எப்படியென்றால் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும், இவர்களுடைய செய்கைகள் அதாவது இவர்களுடைய கிரியைகளைப் பார்க்கும் போது இவர்களுடைய உள்ளத்தில் இயேசு இருக்கிறாரா? இல்லையா என்பதை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது.
இத்தகைய காரியத்தை நன்றாக அறிந்திருந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பார்த்து இப்படியாக கேட்டார், ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் [ லூக்கா 9:18 ]. அப்பொழுது, அதற்கு அவர்கள் சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும் சிலர் எலியா என்றும் வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் – லூக்கா 9:19. இதற்குக் காரணம் என்னவென்று பார்ப்பீர்களானால், இவர்கள் இயேசுவை விடவும் மனுஷர்களைக் குறித்து அதிகமாக அறிந்திருந்தனர். இவர்கள் அற்புதங்கள் அதிசயங்கள் செய்யும் போது இத்தகைய கிரியகளை நடப்பிக்கிற இயேசுவைப் பார்க்காமல் அவருடைய ஊழியக்காரர்களையே இவர்களுடைய கண்கள் பார்த்தது. ஆகவேதான் இன்று அனேக ஜனங்கள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அதிகமாக தோல்விகளையே சந்தித்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் வேதத்தை படிப்பதை விட ஊழியக்காரர்களின் சுயசரித்திரத்தையே அதிகமாக தியானிப்பதே இத்தகைய தோல்விக்குக் காரணம் ஆகும். இதைக் குறித்து ஊழியக்காரர்களும் கண்டு கொள்வதே இல்லை.
ஆனால் சீஷர்களிடமும் இயேசு இதேக் கேள்வியை மறுபடியும் கேட்டார், எப்படியென்றால், அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார் பேதுரு பிரதியுத்தரமாக நீர் தேவனுடைய [குமாரன்] கிறிஸ்து என்றான் – லூக்கா 9:20. இப்படியாக பேதுரு சொல்லுவதற்கு காரணம் என்ன, அவர்களுக்கு இயேசுவைத் தவிர வேறொன்றையும் கர்த்தர் கற்றுக் கொடுக்கவில்லை.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நமக்கு இந்த உலகம் எப்படிப்பட்டது உலகத்திலுள்ள ஜனங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிவதற்கு நம்முடைய மனதை உபயோகிக்க வேண்டாம். இதனால் நமக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே இனி வருகிற நாட்களில் நம்முடைய இயேசுவை மாத்திரம் அறிவதற்கு உங்கள் மனதை பயன்படுத்துங்கள், இயேசு எல்லாவற்றையும் உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.
நாம் இயேசுவை அதிகமாக அறிய வேண்டுமானால் முதலாவது அவர் எழுதிய புஸ்தகமாகிய பரிசுத்த வேதாகமத்தை நன்றாக படிக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே நாம் இயேசு யார் என்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். முதலில் இயேசு யார் என்கிற வெளிப்பாடு ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்குள்ளும் வந்து விட்டால் போதும் நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கான தீர்வு வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த மறைவான மன்னாவில் பரிசுத்த ஆவியின் துணை கொண்டு வேதத்தின் மூலம் இயேசுவை பற்றியதான ஒரு சில வெளிப்பாடுகளை இங்கு எழுத விரும்புகிறேன். அப்பொழுது உங்களுக்கு இயேசு யார் எங்கிறதான கேள்விக்குப் பதில் கிடைத்து விடும்.
முதல் வெளிப்பாடு: இரட்சகர்
வேதம் சொல்லுகிறது, அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் – மத்தேயு 1:21. எதற்காக நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு மனுஷகுமாரனாய் வர வேண்டும். எதற்காகவென்றால் அவர் ஏசாயா 53ல் சொல்லப்பட்ட அத்தகைய வேதனைகளுக்கு தம்மை உட்படுத்த வேண்டும். ஏன் தெரியுமா? வேதம் சொல்லுகிறது, எல்லாரும் பாவஞ் செய்து தேவ மகிமையற்றவர்களாகி. - ரோமர் 3:23.
ஆம், நம்முடைய பிதாவாகிய ஆதாம் செய்த பாவத்தினிமித்தம் நாம் எல்லாரும் அவருடைய பாவத்திற்குள்ளாக அடைக்கப்பட்டோம். ஆகவே நம்முடைய சுபாவமும் ஒரு பாவமுள்ள் சுபாவமாகவே காணப்படுகிறது என்பதை நம்முடைய கிரியைகளின் மூலம் அறியப்படுகிறது.
இதற்காக ஏன் இயேசு கிறிஸ்து இரத்தத்தை சிந்த வேண்டும் என நாம் கேட்கலாம் ஏனென்றால் நம்முடைய பிதாவாகிய ஆதாமிற்குள் ஓடின அதே பாவ இரத்தம்தான் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். ஆகவேதான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த பாவ இரத்தத்தை முழுவதுமாக எடுத்து விட்டு தம்முடைய நரிசுத்த இரத்தத்தை நம் ஒவ்வொருவருக்கும் இலவசமாக வழங்கினார்.
ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது
எனவேதான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தை சிந்தி நம்முடைய அக்கிரமங்களையும் பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரித்தார் என்று 1யோவான் 1:7ல் நாம் வாசிக்க முடிகிறது.
பாருங்கள், இருதயத்தில் குத்தப்பட்டு தாங்கள் பாவி என்பதை உணர்ந்த அந்த சிறைச்சாலை காவல்காரர்கள் அப்.பவுலிடம் கேட்டார்கள் ஆண்டவன்மார்களே நாங்கள் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொன்னார்கள். அப்போஸ்தலர் 16:31.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே ஒரு காரியத்தை மறந்து விடாதீர்கள் அதுஎன்னவென்றால்,
பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் நித்திய ஜீவன். ரோமர் 6:23. இப்படியே பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்போமானால் நாம் நிச்சயமாக நரகத்திற்குத்தான் செல்ல முடியும்.
அதுமட்டுமல்லாமல் சிலர் உண்மையாக இரட்சிப்பை பெற முடியாதபடி அவர்களுடைய பாரம்பரிய சபையையும், அவர்களுடைய சமுதாயமும் தடையாக இருப்பதை நாம் ஒவ்வொரு இடத்திலும் பார்க்க முடிகிறது. ஆகவே இப்பொழுதே பாரம்பரிய சபைகளையும் தங்களை இரட்சிப்பிற்குள்ளாக நடத்தாத ஊழியக்காரர்களையும் தங்களுடைய ஜாதியையும் விட்டு விட்டு நம்மை பரலோகத்திற்கு அழைத்துச் செல்லுகிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் நமக்கு காண்பித்த வழியில் மாத்திரம் நடந்து செல்வோம்.
இயேசுவை அல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை என்பதை மறந்து விடாதீர்கள் ஏனென்றால் அவரையல்லாமல் வேறொருவராலும் நம்மை இரட்சிக்க முடியாது என்று கர்த்தர் வேதத்தில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறார் ஆகவேதான் அவருக்கு இரட்சகர் என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே இப்பொழுதே மனந்திரும்புவோம் இயேசு என்னும் இரட்சகரைத் தேடி செல்வோம்.
குறிப்பு:
இப்படிப்பட்ட இரட்சகருக்கு நாம் பிள்ளைகளாய் மாற வேண்டுமானால் நாம் ஜலத்தினாலும் ஆவியினாலும் ஞானஸ் நானம் பெற வேண்டும். அதாவது தண்ணீரில் மூழ்கி ஞானஸ் நானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு எந்த ஞானஸ் நானமும் [அதாவது இரட்சிப்பின் அடையாளமாக முதல் படி] வேதத்தில் சொல்லப்பட வில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.
நரகம் வேணுமா? அல்லது பரலோகம் வேணுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இரண்டாவது வெளிப்பாடு: நான் ஒப்புக் கொடுத்ததை கடைசி வரை காத்துக் கொள்ள வல்லவர்
சிலர் வெளியூர் செல்லும் போது தங்களுடைய உடைமைகளை தங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்களிடமே ஒப்படைத்து விட்டு செல்லுவார்கள், ஏன் தெரியுமா? இவர்கள் மாத்திரமே தங்களுடைய பொருட்களை அவர்களுடைய சொந்தப் பொருட்களைப் போல பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கைத் தான்.
இதே போலத்தான் ஆவிக்குரிய வாழ்க்கையும் காணப்படுகிறது, பாருங்கள் கர்த்தருக்குள் வந்த அப்.பவுல் தன்னுடைய விசுவாச வாழ்க்கையை அதாவது ஆவிக்குரிய வாழ்க்கையை தன்னை இரட்சிப்பிற்குள்ளாக இழுத்த இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைப்பதை நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது. எப்படியென்றால்? அதனிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அநுபவிக்கிறேன் ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை ஏனென்றால் நாம் விழுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிகிறேன். நான் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்த்தை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்து இருக்கிறேன் என்று 2தீமோத்தேயு 1:12ல் அழகாக தன்னுடைய விசுவாச வாழ்க்கையை இயேசுவால் மட்டுமே கடைசி வரைக்கும் ஜெயமாக கொண்டு செல்ல முடியும் என்பதை நன்றாக அப்.பவுல் அறிந்திருந்தார்.
ஆனால் இன்று கிறிஸ்தவர்களின் மத்தியில் நடக்கிற பரிதாபம் என்னவென்றால் இவர்கள் தங்களுடைய விசுவாச வாழ்க்கையை இயேசுவிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக தங்களை இயேசுவிடம் நடத்துவதற்காக அழைக்கப்பட்ட மாமிசமான ஊழியக்காரர்களை முழுமையாக நம்பி ஒப்படைத்து விடுகின்றனர் இதனால் என்ன நடக்கிறது இவர்களுடைய வாழ்க்கையில் திடீரென சறுக்கலும் பயமும் வருகிறது.
இதனால் இவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்மாற்றத்திற்குள்ளாக நடத்தப்பட்டு கர்த்தரை மறுதலிக்கிறவர்களாய் மாறிப் போய் விடுகிறார்கள். இன்று அனேக சபைகள் உடைக்கப்படுவதற்கும் மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கைகள் உடைந்து போவதற்கும் காரணம் மாமிசத்தின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே ஆகும்.
வேதம் சொல்லுகிறது, மனுஷர் மேல் நம்பிக்கை வைத்து மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள் மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 17:5. எனவே மனுஷர்களால் நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு நல்ல உத்தரவாதத்தை தர முடியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் நம்மை சாபமான ஒரு வாழ்க்கைக்குள்ளாக நடத்திவிடுகின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆகவேதான் அப்.பவுல் எழுதுகிறார் அவருடைய விசுவாச வாழ்க்கையில் அனேக மனுஷர்களை தம்முடைய ஊழியத்தில் பார்க்கிறார். அவர்கள் எல்லாரும் நல்ல ஊழியக்காரர்கள் என ஒருவேளை பவுல் தன்னுடைய உள்ளத்தில் நினைத்திருக்கக் கூடும். ஆனால் என்ன நடக்கிறது, சிலர் பணத்தின் மேலும் வேறு சிலர் இப்பிரபஞ்சத்தின் மேலும் ஆசை வைத்து கர்த்தரை விட்டு உலகத்திற்குள்ளாக பயணம் செய்கிறார்கள். சிலர் கர்த்தரை மேன்மைப்படுத்துவதற்காக தங்களை மேன்மைப்படுத்துகிறார்கள். சிலர் விசுவாசப் பிள்ளைகளின் பணத்தை மட்டுமே குறி வைக்கிறார்கள்
இப்படிப்பட்டவர்களால் எப்படி ஜனங்களை நல்ல ஆவிக்குரிய விசுவாச வாழ்க்கைக்குள்ளாக நடத்த முடியும். இப்படிப்பட்டவர்களின் கீழே இருக்கிற விசுவாசிகள் ஒருபோதும் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.
ஆகவேதான் அப்.பவுல் யாரிடத்தில் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும் என்று தீமோத்தேயுக்கு அழகாக எழுதுகிறார். ஏன் தெரியுமா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே வேதத்தில் இப்படியாக எழுதுகிறார்.. நான் இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களுடனேகூட இருக்கிறேன். மத்தேயு 28:20. அதுமாத்திரமல்ல இயேசு என்ன சொல்லுகிறாரா அதை நிறைவேற்ற உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.
எனவே மனுஷர்களையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்கிற ஊழியக்காரர்களையும் நோக்கி ஓடாமல் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி ஓடுங்கள் ஏனென்றால் அவரால் மாத்திரமே நம்முடைய விசுவாசம் தொலைந்து போகாமல் கடைசி வரைக்கும் பாதுகாக்க முடியும் என்பதை ஆணித்தரமாக இங்கு எழுதுகிறேன்.
மூன்றாவது வெளிப்பாடு: சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவர் [ எபி 2:12 ]
வேதம் சொல்லுகிறது, ஆதலால் அவர் தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். எபிரெயர் 2:18. இந்த உலகத்தில் இருக்கும் வரை ஒவ்வொருவருக்கும் சோதனை வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படியாக எழுதி வைத்திருக்கிறார். என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். மத்தேயு 24:9. அதுமட்டுமல்லாமல் இந்த சோதனையின் வழியாகத் தான் ஒவ்வொரு கிறிஸ்தவனும் புடமிடப்படுகிறார்கள். மேலும் இந்த சோதனைகள் இல்லாத கிறிஸ்தவனால் நிச்சயமாக கர்த்தருக்கு சாட்சியாக இந்த உலகத்தில் இருக்க முடியாது என்பதையும் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்.
அப்படியென்றால்? ஏன் இயேசு கிறிஸ்து சோதனையை ஏற்று கொள்ள வேண்டும், எதற்காகவென்றால் நாம் சோதனையைப் பார்த்து பயந்து கர்த்தரை விட்டு பின்வாங்கி விடக்கூடாது என்பதற்காக் அவர் மனுஷகுமாரனாய் வந்து, இந்த உலகத்தினால் வந்த எல்லா பிரச்சனைகளிலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெயம் எடுத்தார்.
ஆகவே அவரை யாரெல்லாம் சார்ந்து வாழ்கிறார்களோ அவர்களும் நிச்சயமாக ஜெயம் எடுப்பார்கள், என்பதற்காகவே அவர் எல்லா சோதனை வழியாக பயணம் செய்து இவைகள் கஷ்டமானவைகள் அல்ல என்றும் இவைகள் எல்லாருக்கும் பொதுவானவைகள் என்பதையும் தம்முடைய வாழ்க்கையின் மூலம் நிரூபித்துக் காட்டினார். ஆகவே தான் அப்.பவுலைக் கொண்டு கர்த்தர் இப்படியாக எழுதுகிறார்.
மஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங் கொடாமல் சோதனையைத் தாங்கத் தக்கதாக சோதனையோடுகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். 1கொரி 10:13. இத்தகைய வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்டு அப்.பவுல் தனக்கு வந்த எல்லா சோதனைகளிலும் இயேசு கிறிஸ்துவின் மூலம் அவரால் ஜெயம் எடுக்க முடிந்தது. ஆகவேதான் அவரால் இப்படியாக எழுத முடிந்தது, இயேசு கிறிஸ்துவின் அன்பை விட்டு யார் என்னை பிரிக்க கூடும்.
ஆனால் நாமோ சின்ன பிரச்சனைகள் வந்து விட்டாலோ உடனே புலம்பத் தொடங்கி விடுகிறோம். அதுமட்டுமல்லாமல் அதற்காக தேவனையும் குறைச் சொல்ல தொடங்கி விடுகிறோம். இதற்குக் காரணம் நம்முடைய கர்த்தர் சோதனையை ஜெயித்தவர் மற்றும் அவ்வழியின் வழியாக கடந்து செல்கிறவர்களுக்கு உதவி செய்கிறவர் என்கிற வெளிப்பாடு நமக்கு இல்லாத்தே ஆகும்
வேதம் சொல்லுகிறது, என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் – மத்தேயு 5:11.
நான்காவது வெளிப்பாடு: பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியர்
வேதம் சொல்லுகிறது, நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல் எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். எபிரெயர் 4:15. இன்று அனேக ஜனங்கள் யார் அதிகமாக பணத்தையும் செல்வத்தையும் வைத்திருக்கிறார்களோ அவர்களோடே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது நஷ்டமோ அல்லது நோயோ வந்துவிட்டால் அவர்களை விட்டு ஓடிப் போவதை நாம் இன்றைய நாட்களில் பார்க்க முடிகிறது.
பாருங்கள் கெட்ட குமாரன் தன்னுடைய தந்தையிடம் இருந்து தன்னுடைய நண்பர்களின் பேச்சைக் கேட்டு தனக்குரிய பங்கையெல்லாம் பிரித்து வாங்கி விட்டு தன்னுடைய நண்பர்களோடு பாவம் நிறைந்த உலகத்திற்குள் கடந்து செல்கிறான். நாளடைவில் என்ன நடக்கிறது அவன் தன்னுடைய செல்வத்தை இழந்து சாப்பிட்டிற்கே வழியில்லாமல் பெலவீனமாய் நின்ற போது அவனுடைய நண்பர்கள் எல்லாரும் அவனை விட்டு ஓடி விடுகிறார்கள்.
ஒரு காரியத்தை புரிந்து கொள்ள வேண்டும் உலகம் ஒரு பெலவீனமான மனுஷரோடு ஒருபோதும் தொடர்பு வைத்துக் கொள்ளாது. அதுமட்டுமல்லாமல் இந்த உலகம் நம்முடைய பெலவீனங்களைக் குறித்து ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள். ஆனால் ஒருவேளைப் பரிதாபப்படலாம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்காக நம்முடைய பெலவீனங்களை சுமந்து பெலவீனத்தின் மத்தியில் சிலுவையில் அறையப்பட்டார். ஆகவேதான் அந்த பெலவீனத்தின் அருமை அவருக்கு மாத்திரமே தெரியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஆகவேதான் அப்.பவுல் தன்னுடைய பெலவீனத்தில் எல்லாம் தன்னோடு கூடிய சீஷர்களைத் தேடி ஓடாமலும் மற்றும் தான் திடப்படுத்தின சபை மக்களைத் தேடி ஓடாமலும் தன்னை அதிகமாக சிநேகித்த இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடினான். எனவேதான் அப்.பவுல் பிலிப்பியர் அதிகாரத்தில் இப்படியாக எழுதுகிறார், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே பெலவீன நேரத்தில் நம்முடைய உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் தேடி ஓடாமல் மற்றும் அவர்கள் வந்து கேட்க வேண்டும் என்று நினைக்காமல் நம்முடைய பெலவீனங்களில் உதவி செய்ய வல்லவராகிய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடுங்கள் அப்பொழுது மாத்திரமே நம்முடைய பெலவீனங்களுக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் இல்லாவிட்டால் இந்த பெலவீனங்களை வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல வேண்டும்.
வேதம் சொல்லுகிறது, மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். ஏசாயா 53:4 [பிப].
ஐந்தாவது வெளிப்பாடு: வேண்டிக் கொள்வதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாக கொடுக்கிறவர். வேதம் சொல்லுகிறது, நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்ச் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென். எபேசியர் 3:20,21. நம்முடைய ஆண்டவர் நாம் வேண்டிக் கொள்வதற்கும் முன்னமே நமக்கு என்னத் தேவை என்பதை நன்றாக அறிந்திருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. அப்படி இருக்கையில் நமக்கு எப்படிப்பட்ட பலனைக் கொடுப்பார் என்பதை சிந்தித்து பாருங்கள். ஆகவேதான் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளைக் கொண்டு இப்படியாக எழுதுகிறார், ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?. மத்தேயு 7:11
ஆகவே யார் நமக்கு உதவி செய்வார்கள் அல்லது யார் எங்களுடைய கடனை அடைப்பார்கள் என்று நாசியில் சுவாசமில்லாத மனுஷர்களிடம் கையை ஏந்தாதப்படி நமக்கு அளவில்லாமல் தம்முடைய வானத்தின் மதகுகளைத் திறந்து நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிக்கிற இயேசு கிறிஸ்துவிடம் நம்முடைய கையை உயர்த்துவோம்.
பாருங்கள் சாலமோன் என்கிற ராஜா தான் சிறுபிள்ளையாய் இருப்பதினால் தன்னுடைய ஜனங்களை நீதியாய் நடத்துவது தன்னால் முடியாத காரியம் என்பதை அறிந்திருந்தார். ஆகவே தம்முடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கி மன்றாடுகிறான். எதற்காக தனக்கு அதிகமான நீதியைக் கொடுப்பதற்காக ஆனால் என்ன நடந்தது, சாலமோன் மனுஷர்களிடம் சென்று இந்தக் காரியத்தைக் குறித்து விவாதிக்காமல் தன்னுடைய ஆலோசனையைக் கேட்டதால் கர்த்தர் அவன் மேல் பிரியம் கொண்டு, உன் வார்த்தைகளின்படி செய்தேன் ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன். இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன் இருந்ததுமில்லை. உனக்குச் சரியானவன் உனக்குப் பின் எழும்புவதுமில்லை.
இதுவுமன்றி நீ கேளாத ஐசுவரியத்தையும், மகிமையையும் உனக்குத் தந்தேன். உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. 1இராஜாக்கள் 3:9-13
எனக்குப் பிரியமான ஜனங்களே நம்முடைய குறைவுகளை மனுஷர்களிடம் சொல்லாதிருங்கள் ஏனென்றால் ஒருவேளை ஒரு தடவை ஜனங்கள் நம்முடைய குறைவுகளுக்கு உதவி செய்யலாம். ஆனால் மறுபடியும், மறுபடியும் அந்த குறைவு நம்முடைய வாழ்க்கையில் வரும். அப்பொழுது என்ன செய்வீகள்?
ஆனால் குறைவுகளை நிறைவாக்குகிற இயேசு கிறிஸ்துவிடம் உங்களுடைய ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் ஒப்புக் கொடுப்பீர்களானால் நிச்சயமாக அவைகளை ஐயாயிரமாய் மாற்றி உங்களை என்றென்றைக்கும் நிறைவுள்ளவர்களாக மாற்றுவார் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை.
வேதம் சொல்லுகிறது,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவர். ரோமர் 4:17. அதுமட்டுமல்லாமல், அவர் குறைவுகளை நிறைவாக்குகிறவர் என்று 1கொரி 13:10 ல் எழுதி வைத்திருக்கிறார். ஆகவே தற்காலிகமான உதவி தேவையா? அல்லது நிரந்தர உதவி தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆறாவது வெளிப்பாடு: வழுவாதப்படிக் காக்கிறவர் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர்
வேதம் சொல்லுகிறது, வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும். யூதா 1:24
இப்படியாக ஒரு கதையைப் படித்தேன். ஒரு ஊரிலே மனுஷன் ஒருவன் வாழ்ந்து வந்தான் அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒருநாள் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டான். இப்படியாக இயேசுவின் பிள்ளையாக மாறிய அவன் இயேசுவுக்காக வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் திடீரென இயேசு கிறிஸ்து அவனுடைய வீட்டைத் தேடி வந்தார். அந்த மனுஷனும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெரிய வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். அந்த மனுஷனுடைய வீடானது அனேக அறைகளை கொண்டிருந்தது. இதனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு அறையின் திறவுகோலை அவரிடம் கொடுத்து அங்கே தங்க வைத்தான்.
அதன் பிறகு அந்த மனிதன் தூங்குவதற்காக தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். இப்படியாக தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென நடுராத்திரியில் யாரோ கதவைத் தட்டுகிற சத்தத்தைக் கேட்டான். யார் கதவைத் தட்டுகிறது என்பதைப் பார்ப்பதற்காக தன்னுடைய அறையில் இருந்து இறங்கி வந்து கதவைத் திறந்தான். அவனுக்கு ஒரே அதிச்சியாக இருந்தது. ஏனென்றால் அங்கு வந்து நின்றது ஒரு சாத்தான் ஆவான், எப்படியோ கதவை அடைத்து விட்டு வந்து , மிகுந்த ஆச்சரியத்துடன் என்னுடைய வீட்டில் இயேசு இருக்கும் போது ஏன் இப்படி சம்பவிக்கிறது என்று யோசனைன் பண்ணினான்.
எல்லாவற்றையும் மறந்து உடனே தூங்குவதற்காக தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். இதோ தூங்கி கொண்டிருக்கும் போது மறுபடியும் யாரோ கதவைத் தட்டுகிற சத்தத்தைக் கேட்டான். எனவே யார் என்பதைப் பார்ப்பதற்காக எழுந்து சென்று கதவைத் திறந்தான். இப்பொழுது ஒரு பிசாசு சென்று தன்னோடு இன்னும் அனேக பிசாசுகளை அழைத்து வந்திருந்தன. இதைப் பார்த்து அந்த மனுஷனுக்கு பயங்கர அதிர்ச்சி, எப்படியோ போராடி கதவை அடைத்து விட்டான். இப்பொழுது இயேசுவிடம் வந்து இத்தகைய காரியத்தைக் குறித்து விவாதிக்க ஆரம்பித்தான்.
கர்த்தாவே உமக்கு உம்முடைய பிள்ளையைக் குறித்து ஒரு கவலையும் இல்லையா என்று துக்கத்தோடு அவரிடம் கேட்டான். இதற்கு இயேசு மறுமொழியாக மகனே எனக்கு உன்னைப் பற்றி அதிக அக்கறை உண்டு ஆனால் நீயோ எனக்கு ஒரே ஒரு அறையை மட்டும் தந்து, அதற்கான திறவுகோலை மட்டும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். மற்ற அறைகளின் திறவுகோல்கள் உன்னிடத்தில் அல்லவோ இருக்கிறது என்றார். இப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது, உடனே எல்லா திறவுகோல்களையும் இயேசுவிடம் ஒப்படைத்து விட்டு அவன் நிம்மதியாக தூங்க சென்று விட்டான்.
மறுபடியும் கதவைத் தட்டுகிற சத்தம். இப்பொழுது எழுந்து பார்த்தான். இதோ இயேசு கிறிஸ்து கதவைத் திறப்பதற்காக எழுந்து சென்றார். இயேசு கதவைத் திறந்தார், இயேசுவைப் பார்த்த பிசாசுகள் அதிர்ச்சியடைந்தன, உடனே அவைகள் சொன்னது நாங்கள் தவறான விலாசத்திற்கு வந்து விட்டோம்.
ஏன் இன்று நம்முடைய விசுவாச வாழ்க்கை தராசு ஆடுகிறது போல இங்கும் அங்கும் ஆடுவதற்குக் காரணம் நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்தவர் மேல் செல்ல வேண்டிய நம்பிக்கை பெரும்பாலும் நம்மேலும், இந்த உலகத்தின் மேலும் செல்வதினால்தான். இதனால் காற்றும் மழையும் அடிக்கும் போது திசை தெரியாமல் போய் விடுகிறார்கள். ஆகவேதான் அப்.பவுல் இப்படியாக எழுதுகிறார், நிற்கிறேன் என்று சொல்லுகிறவன் விழாதப்படி தன்னைக் காத்துக் கொள்ளக் கடவன்.
கர்த்தரை மாத்திரம் முழுமையாக நம்பி வாழும்போது மட்டுமே அவர் நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு காவலாளியாக மாறுவார். அப்படியில்லாத பட்சத்தில் அந்த வீடு பாதி வழியிலே காணாமல் போய்விடும். இன்று அனேகருடைய விசுவாச வாழ்க்கை காணாமால் போவதற்கு மேலே சொல்லப்பட்ட காரியங்கள் தான் முக்கிய காரணாமாக அமைகிறது.
சங்கீதக்காரன் எழுதுகிறார், கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. சங்கீதம் 127:1,2
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே நல்ல ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையையை வாழ வேண்டுமானால் முதலாவது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்துகிறவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அவர் நமக்கு கொடுத்திருக்கிற பரிசுத்த வேதாகமத்தை நம்முடைய உயிராக எண்ணி தியானிக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே நாம் சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேர முடியும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே உங்கள் ஒவ்வொருவரையும் நன்மையினால் நிரப்புவராக, ஆமென்!