காலம் வருமுன் எதை குறித்தும் தீர்ப்பு சொல்லாதிருங்கள்
என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன். ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை. என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தர். 1 கொரிந்தியர் 4:4.
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
1 கொரிந்தியர் 4:5 பரிசுத்தாவியானவரால் ஆளுகை செய்யப்பட்டு தேவனுக்காக வைராக்கியமாக ஊழியம் செய்த பவுல் தன்னை தாழ்த்தி என்னிடத்தில் நான் ஒரு குறையையும் காணவில்லை,ஆனாலும் அதனாலே நான் நீதிமானாவதில்லை என்றார். சமீபத்தில் ஒரு Special prayer என்று ஏற்படுத்தபட்ட ஒரு ஜெபக்கூடுகையில் கலந்து கொண்டேன். ஜெபம் முடிந்து எல்லோரும் சென்று விட்ட நிலையில் அங்கிருந்த ஊழியக்காரர்களும் மூப்பர்களும் பிற ஊழியக்காரர்களையும் பிற ஊழியங்களையும் பற்றி பேச ஆரம்பித்தார்கள்,ஏதோ தாங்கள் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்கள் போல நினைத்து கொண்டு மற்றவர்களை அற்ப்பமாக நினைத்து பேசிக்கொண்டார்கள். அதாவது அவ்வளவு நேரம் ஜெபத்தில் தேவ மகிமையினாலே ஆளுகை செய்யப்பட்ட அவர்கள் சில நொடிப் பொழுதில் தேவமகிமையை இழந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களிடம் தேவ ஆவியானவர் மற்றவர்களை புறங்கூறி அற்ப்பமாக பேசாதீர்கள் என்று நிச்சயமாக சொல்லியிருப்பார்.இவர்களும் செவிக்கொடுக்காததினால் ஆவியானவர் துக்கத்துடனே விலகி சென்றிருப்பார். இன்றைக்கு அநேகர் கொஞ்சம் ஊழியம் செய்தவுடன் பிறர் செய்யும் ஊழியங்களை அற்ப்பமாக எண்ணி பேச ஆரம்பித்து கடைசியில் தேவன் இவர்களுக்கு கொடுத்த கிருபைகளை இழந்து விடுகிறார்கள். அடுத்ததாக இன்றைக்கு அநேகர் தங்களது குறைகளை நிதானித்து அறியாமல் ஏதோ தாங்கள் நீதிமான்கள் என்று எண்ணிக்கொண்டு பிறரை துச்சமாக நியாயம் தீர்க்கிறார்கள். ஒரு நாள் மற்றவர்களை பற்றி பிறர் முன்பு பேசிய தவறுகளை தங்களே செய்யும் போது அதே நியாயத்தீர்ப்புக்கு பங்குள்ளவர்களாக மாறி போகிறார்கள். இப்படி புறங்கூறி திரிகிற தாங்களே அதே தவறை செய்யும்படியாக அனுமதிக்கப்படும் காலம் நிச்சயமாக வரும்.அப்போழுது நாமும் குற்றவாளியாக தீர்க்கப்படுவோம். எனவே தான் காலத்துக்கு முன்பாக எதை குறித்தும் தீர்ப்பு சொல்லாதிருங்கள் என்று பவுல் எழுதியிருக்கிறார். (ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
ரோமர் 2-1) இன்றைக்கு நாம் அநேகர் மேல் குற்றம் சாட்டுகிறோம்,ஆனால் தங்களிடம் உள்ள குறைகளை நிதானித்து அறிந்து அதை விட்டு விட வாஞ்சையாயிருப்பவனே தேவனுடைய இருதயத்துக்கு பிரியமானவனாய் மாறுகிறான்.தாவீது இப்படியாக விண்ணப்பம் செய்வதை பாருங்கள் வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
சங்கீதம் 139-5.இன்றைக்கு நாமும் பிறரைப் பற்றி குறை சொல்லாமல் நியாயம் தீர்க்காமல் தாவீது ஜெபித்ததை போல ஜெபிக்க ஆரம்பிப்போம்.தேவன் நம்மை பார்த்து மாயக்காரனே என்று சொல்லாதபடிக்கு நம்மிடம் உள்ள குறைகளை களைந்து போட வகைப்பார்ப்போம். (மாயக்காரனே நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
லூக்கா 6-42),மேலும் பிரியமானவர்களே, பிறருக்கு விரோதமாக குறை கூறி திரிகின்றவர்களை விட்டு உடனே விலகி சென்று விடுங்கள். பிறரை பற்றி பேசுவதை கேட்பது மிகவும் ஆர்வமாக இருக்கும்.ஆனால் கொஞ்ச நேரத்தில் நீங்களும் உங்களை அறியாமல் அதே ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டு அதே தவறை செய்து செய்து கொண்டிருப்பீர்கள்.நாம் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயதீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று இயேசு சொன்ன வார்த்தைகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இந்த கடைசி நாள்களில் நம் அவயவங்களாகிய நாவு செவி கண்களை நீதி செய்யும் படி ஒப்பு கொடுப்போம்,ஆமென்.