top of page

ஊ ழி ய த் தி ல்  வீ ழ் ச் சி

இன்றைக்கு ஊழியங்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தேவ சித்தத்தையும் தேவதிட்டத்தையும் தங்கள் ஊழியத்தில் செயல்படுத்தாமல் தங்கள் சுய இஷ்டங்களின் படி செயல்படுவதால் தேவ ஆலோசனையை இழந்து கடைசியில், ஒன்றுக்கும் உதவாமல் வீழ்ச்சியடைந்து போகின்றனர்.

 

சர்வ வல்லவரான தேவனே நமக்கு எஜமானன், அவரே சர்வ ஞானி, அவர் அழைத்த  அழைப்பின்படியே அவர் ஆலோசனையின் படியே அவர் சித்தப்படியே ஊழியத்தின் எல்லா பகுதிகளிலும் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நாம் அவருடைய வேலைக்காரர்கள், அதுவும் அப்பிரயோஜனமான வேலைக்காரர்கள். ஏனென்றால்? நம் ஊழியத்தின் எல்லா பகுதிகளிலும் கிரியை செய்கிறவர் அவரே. அவரால் நாம் பயன்படுத்தப்படுகிறோம் .அவரே விளையச்செய்கிறார், எனவே ஊழியத்தில் நாங்கள் சாதித்து விட்டோம் என்று பிரசங்க பீடத்திலும் இணையத்தளத்திலும் மேன்மை பாராட்டுவது சரியானதல்ல.

 

ஏனென்றால்? அதிகாரத்தையும் வல்லமையையும் சத்துவத்தையும்  கிருபையையும் தந்தவர் அவரே. இன்றைய ஊழியங்களில் முக்கிய பிரச்சனை என்னவென்றால்  அந்தஸ்தில் உயர்ந்தவர்களையும் தங்கள் குடும்பத்தார்களையும் தனக்கு பக்கபலமாக ஜால்ரா போடுகிறவர்களையும் தேவ சித்தத்திற்கு மாறாக ஊழியத்தில் நியமிக்கிறார்கள்.

 

சமீபத்தில் ஒரு சபையில்  உள்ள ஒருவர் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட காரியம்  என்னவென்றால் தனக்கு வயதாகிவிட்டதால் ஊழியத்துக்கு சம்பந்தமே இல்லாத தன் மகனை பொறுப்பாளராக நியமித்துவிட்டார். ஊழிய அழைப்பே இல்லாத அவர் தலைமை பொறுப்பில் வந்து மாம்சீக பெலத்தில் சபையை நடத்த ஆரம்பிக்க குழப்பங்களும் பிரச்சனைகளும் வர ஆரம்பித்தது. உங்கள் வாரிசுகளை பொறுப்பாளர்களாக தேவன் அனுமதிக்காத பட்சத்தில் உங்க சுயபுத்தியை சார்ந்து முடிவுகளை எடுக்காதீர்கள். அப்படி எடுக்கும் பட்சத்தில் அது உங்கள் வாரிசுகளுக்கு சாபத்தையே கொண்டு வரும். ஏனென்றால் இந்த கனமான ஊழியத்தை தேவனே ஏற்படுத்துகிறார். நீங்களாகவே ஏற்படுத்துகிற ஊழியங்கள் மனுஷீக தன்மையோடு தான் இருக்கும். அது அழிந்து போய் விடும்.

 

மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை எபிரேயர் 5-4. தேவனுடைய அழைப்பு இல்லாமல் தேவ சித்தமில்லாமல் உங்க வாரிசுகளை ஊழியங்களின் தலைமை பொறுப்பில் அதாவது போதகராக்காதிருங்கள். ஒரு வேளை நீங்கள் அதிக பணத்தை செலவு பண்ணியிருக்கலாம், அதிகமாக உழைத்திருக்கலாம் .ஆனால் உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு ஊழியம் செய்ய பெலனை கொடுத்தது தேவனல்லவா. ஊழியத்தில் உங்க இஷ்டப்படி முடிவு எடுக்க இது உங்களுக்கு சொந்தமானதல்ல. சர்வ வல்லவருடைய உன்னதமான பணி. எனவே தேவ சமுகத்தில் காத்திருந்து தேவன் யாரை நியமிக்க சித்தமாயிருக்கிறாரோ அவரை மாத்திரமே நியமியுங்கள். தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதை மட்டும் கவனமாக செய்யுங்கள்.. என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3-.

 

இன்றைக்கு போதகராவது ஒரு Fashion ஆக மாறி விட்டது. இன்றைக்கு மாம்சீகத்தில் ஊழியம் செய்பவர்கள் பிசாசின் சகல தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கின்றனர். ஜனங்களையும் உலகத்துக்குறியவர்களாக மாற்றி ஆவிக்குறிய விபச்சாரர்களாக மாற்றுகின்றனர்.

 

சமீபத்தில் ஒரு சபையில் பிரசங்கம் பண்ணுகிற ஒருவர் தான் வேலைப்பார்க்கும் இடத்தில் அநேகரோடு பேசுவதில்லை. ஏனென்றால் வாக்குவாதம் சண்டை மற்றும் மாம்சத்தோடு போராட்டம். இப்படி ஆவிக்குறியவர்கள் என்று சொல்லி கொள்ளும் மாயமாலமானவர்கள் ஆராதிக்கும் சபையில் ஜனங்களும் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் தான் போராடி கொண்டிருப்பார்கள். நித்திய ஜீவனுக்கு போகும் வழியையே அறியாதவர்களாகிய இவர்கள் எப்படி ஜனங்களை நித்திய ஜீவனுக்கு நேராக வழி நடத்துவார்கள்.  கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும் போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். 2 தீமோத்தேயு 2-24. சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். ரோமர் 2-8.  நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். யோவான் 13-35. சீஷத்துவத்தின் அடிப்படை தகுதிகள் கூட இல்லாதவர்கள் சபையை ஆளுகை செய்யும் போது அந்த ஊழியம் வீழ்ச்சியை நோக்கி தான் செல்லும்.

 

இன்றைக்கு  சபையில் ஜனங்களின் எண்ணிக்கையை வைத்தே ஊழியத்தின் வளர்ச்சியை கணிக்கின்றனர். ஆனால் தேவனோ ஆத்துமாக்களின் எண்ணிக்கையைஒரு போதும் பார்ப்பதில்லை. தவறான உபதேசங்களை போதிக்கிற சபைகளில் கூட அதிக எண்ணிக்கை இருக்க தான் செய்கிறது. ஆவிக்குறிய சபைகளில் கூட தேவனை விட உலகத்தை நேசிக்கிறவர்கள் சுபாவ அன்பில்லாதவர்கள் மற்றும் சத்தியத்தை விட பாரம்பரிய சட்டங்களை நேசிக்கிறவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால் தேவனோ எண்ணிக்கையை ஒரு போதும் பார்ப்பதேயில்லைஜனங்களின் கனிகளினால் அவர்களை அறிகிறார். தேவ அன்பினால் நிறைந்து தன்னை போல பிறனை நேசித்து கிறிஸ்துவின் திவ்விய சுபாவங்களால் நிறைந்து அவருடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து உலகத்துக்கு வெளிச்சமாக வாழும் மக்கள் நிறைந்த சபையை அவர் ஆராய்ந்து அறிகிறார். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும்,எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

மாற்கு 3:35 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21.  அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். மத்தேயு 7:22 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். மத்தேயு 7:23 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதிகாரத்துடன் போதித்த இந்த வசனங்களை படித்து உணர்ந்து பயத்தோடும் நடுக்கத்தோடும் ஊழியம் செய்யுங்கள். பிசாசுகள் தங்களுக்கு கீழ்படிவதற்காக சந்தோஷப்பட்ட சீஷர்களை பார்த்து பரலோகத்தில் உங்கள் பெயர்கள் எழுதியிருப்பதற்காக சந்தோஷப்படுங்கள் என்று இயேசு சொன்னார்.இப்பொழுது எது முக்கியம்?? என்பதை உணர்ந்து விட்டீர்களா?நீங்கள் எவ்வளவு தான் ஊழியம் செய்தாலும் தேவ சித்தம் செய்யவில்லையென்றால் தேவனுக்கு கீழ்படியவில்லையென்றால் அக்கிரம செய்கைகாரரே என்று சந்திப்பின் நாளிலே தேவன் நம்மை பார்த்து சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.

 

நாம் கண்டிப்பாக தேவனுக்காக ஊழியம் செய்ய வேண்டும். ஆனால் எஜமானன் சொல்படி தான் செயல்பட வேண்டும். உங்கள்  மாம்சமும் மனசும் விரும்பினதை ஊழியத்தில் செயல்படுத்தி ஆகாதவனாக போகாததற்க்கு பதிலாக ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்குள் பிரவேசிப்பது நலமாயிருக்கும்.  எப்படியென்றால்??, அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். ரோமர் 10-3)  ஆமென்.

bottom of page