top of page

எஜமானர்களே உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறார்!!!

எச்சரிக்கை எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள். கொலோசெயர் 4:1.

இன்றைக்கு அநேக விசுவாசிகள் தொழில் செய்கிறார்கள். இவர்கள் தேவனுடைய ஊழியத்தை தாங்குகிறார்கள், சிலர் ஊழியமும் செய்கிறார்கள். ஆனால் தங்களுக்கு கீழே வேலை செய்கிற வேலைகாரர்களை அற்பமாக நினைக்கிறார்கள். வேலைக்காரர்களுக்கு அநியாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக கிடைக்கும் கூலியை கொடுப்பதில்லை. வேலைக்காரர்கள் விஷயத்தில் அநீதி செய்கிறார்கள்.

 

ஒரு முறை ஒரு Camp ல் வேலை செய்கிற சிலரை சந்தித்த போது அவர்கள் சொன்ன காரியம் எங்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஐந்து மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை தங்கள் மனைவி பிள்ளைகள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுவதாக கண்ணீரோடு சொன்னார்கள். ஆனால் அவர்களின் எஜமானனோ தனக்கு வந்த பணத்தை ஊரில் சபை கட்டுவதிலும் Convention கூட்டங்கள் நடத்துவதிலும் பணத்தை செலவு பண்ணி கொண்டிருந்தார். தன் வேலைக்காரர்களின் குடும்பங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. தேவனுடைய சபையை கட்ட வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தார். வேலைக்காரர்களுக்கு சம்பள பாக்கி வைத்து அவர்களை கஷ்டப்படுத்தி  தேவனுக்காக பணத்தை செலவு பண்ணுவதை தேவன் ஒருகாலும் அங்கிகரிப்பதில்லை. இவர்களது காணிக்கையையும் ஊழியத்தையும் தேவன் நிச்சயமாக புறக்கணிப்பார். இவர்கள் பரலோகத்தின் பலனை இழந்து போகிறார்கள். இவர்கள் வேலைக்காரர்களை மாத்திரம் ஏமாற்றவில்லை தேவனையே ஏமாற்றுகிறார்கள்.

 

இன்றைக்கு ஊழியம் செய்து கொண்டு தொழில் செய்கிற அநேகர் தங்கள் வேலைக்காரர்கள் விஷயத்தில் நாட்டு சட்ட திட்டத்தையே மீறுகின்றனர். குறைவான சம்பளத்தை கொடுத்து விட்டு சரியான சம்பளத்தை கொடுத்ததாக கணக்கு காட்டி அரசாங்கத்தை ஏமாற்றுகின்றனர். அதிக நேரம் வேலை வாங்கி கொண்டு அதற்கான கூலியை கொடுப்பதில்லை. இதற்கு காரணம் அதிக பணத்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற பண ஆசை மற்றும் சுய நலம். (ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7-2 என்று இயேசு சொன்னது போல சத்தியத்தை அறிந்து கொண்டு வேலைக்காரர்களை வஞ்சிக்கும் இவர்களுக்கு இவர்கள் வேலைக்காரர்களுக்கு குறைவாக அளந்த அளவின் படி அளக்கப்படும். வேலைக்காரர்களுக்கு நீதியும் செவ்வையானவைகளை செய்யாமல் ஊழியங்களை செய்கிறவர்களை தேவன் எப்படி ஆசீர்வதிக்க முடியும்?. ஏனென்றால் இவர்கள் வேலைக்காரர்களின் கூலியை அபகரிக்கிறார்கள்(இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது. அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. யாக்கோபு 5-4. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுது போகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும், அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான், அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான், அது உனக்குப் பாவமாகும்.உபாகமம் 24-15.

இன்றைக்கு பண ஆசையினால் வேலைக்காரர்களுக்கு அநீதி செய்து அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை மறைமுகமாக திருடி தங்களுக்காக பணத்தை சேர்த்து வைத்து கொண்ட அநேகர் தாங்கள் செய்த அநியாயத்தை அறுக்கிறார்கள், பிதாக்களுடைய பாவத்தை பிள்ளைகளுடைய மடியில் சரிகட்டும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் கடந்து வரும் போது அவர்களால் அதை தாங்க முடிவதில்லை.(பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6-10.

இன்றைக்கு ஊழியம் செய்கிறவர்களை கூட பண ஆசை விட்டு வைப்பதில்லை. அதிக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற இச்சையினால் சத்தியத்துக்கு கீழ்படியாமல் உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து தேவனை விட்டு விலகி அநியாயம் செய்து அதிக வேதனைகளை அனுபவிக்கிற அநேகரை பார்க்கலாம். நான் அநியாயமாக சம்பாதித்தேன் அதனால் அந்த அநியாயம் என்னை பின் தொடர்ந்து வருகிறது. மேலும் நான் செய்த பாவம் என் வீட்டு வாசலில் படுத்திருப்பதை நான் உணருகிறேன். நான் தவறு செய்து விட்டேன் என்று அநேகர் கதறுகிறார்கள். வேலைக்காரர்களின் கண்ணீருக்கும் மேலும் அவர்கள் வருத்தத்தோடும் சிந்தின  வியர்வைக்கான பலனை இவர்கள் இன்றைக்கு அறுத்து கொண்டிருக்கிறார்கள்.(ரோமர் 2-8 சத்தியத்துக்கு கீழ்படியாமல் அநியாயத்துக்கு கீழ்படிகிறவர்களுக்கு உக்கிர கோபாக்கினை வரும்) என்று பவுல் எழுதுகிறார்.

 

எனவே பிரியமானவர்களே நாம் நியாயம் தீர்க்கபடாதபடி  வேலைக்காரர்கள் விஷயத்தில் நீதியை செய்வோம். ஐசுவரியமும் கனமும் தேவனிடத்திலிருந்து வருகிறது. தேவன் தருகிற ஆசீர்வாதமே நிலையானது.அநியாயமாக தொழில் செய்து பணத்தை சம்பாதிப்பது நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் சாபத்தையே கொண்டு வரும். எனவே நம்முடைய தொழிலை தேவன் ஆசீர்வதிக்கும் படி நம் தொழிலில் உண்மையுள்ளவர்களாக இருப்போம். உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் அல்லேலுயா. (எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்டசபாதம் இல்லையென்றும் அறிந்து கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். எபேசியர் 6:9.

சகேயு அநியாயமாக சம்பாதித்த பணத்தை திரும்ப கொடுத்த போது அவன் இரட்சிப்பை பெற்று கொண்டான். ஒருவேளை நீங்கள் வேலைகாரர்களிடம் உள்ள சம்பள பாக்கியை கொடுக்காமல் இருந்தால் உடனே திரும்ப கொடுத்து அவர்களோடு உள்ள குறையை உடனடியாக சரி செய்யுங்கள்.

 

நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க அழைக்கப்பட்டவர்கள் என்று அறிந்து உங்களுக்கு தேவன் கொடுத்த வேலைக்காரர்களை ஆசீர்வதியுங்கள், ஆமென்

bottom of page