வசனத்தை கைக்கொண்டு போதிக்கிறவன் எங்கே ???

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.மத்தேயு 5:19.

 

இன்றைக்கு அநேகர் பரிசுத்த ஆவியானவராலே எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமத்தை எடுத்து கொண்டு பிரசங்கம் பண்ணுகிறார்கள். சத்தியத்தை போதிக்கிறார்கள். ஆனால் போதிக்கிற சத்தியத்தின் படி நடக்கிறார்களா என்பதே முக்கியம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான் போதித்த சத்தியத்தின் படி நடந்தார்.நாம் நடக்கும்படியான அடிச்சுவட்டை அதாவது மாதிரியை வைத்து விட்டு சென்றார்.அதே மாதிரியை நாம் பின் பற்றுகிறவர்களாய் இருந்து கொண்டு சத்தியத்தை போதிக்க வேண்டும். மேலும் ரோமர் 2-21 ல் மற்றவனுக்கு போதிக்கிற நீ உனக்கு தானே போதியாமலிருக்கலாமா?என்று பவுல் எச்சரிக்கிறார். இன்றைக்கு நம்முடைய பிரசங்கங்களில் ஏன் தேவ வல்லமை இல்லை? ஏன் கேட்கிற ஜனங்கள் உணர்த்தப்படவில்லை ஏன் ஜனங்கள் இரட்சிக்கப்படவில்லை தெரியுமா?நாம் பிரங்கிக்கிற காரியங்களுக்கு நாமே கீழ்படிவதில்லை. (உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.1 தீமோத்தேயு 4:16)

நாம் உபதேசிக்கும் வசனங்களுக்கு நாம் கீழ்படியும் போது மாத்திரமே கேட்கிற ஜனங்கள் ஆதாயப்படுத்தப்படுவார்கள். இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் மாயமாலமானவர்களாகவே இருக்கின்றனர். பிரசங்கிக்கிற உபதேசத்துக்கு அவர்களே கீழ்படிவதில்லை. இப்படியிருக்க சபையில் எப்படி பக்தி விருத்தி உண்டாகும்.எப்படிஜனங்கள் வசனத்தினால் உயிர்பிக்கப்படுவார்கள்??.இத்தகய பிரசங்கிகள் குருடருக்கு வழிகாட்டும் குருடர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை பற்றி இயேசு கிறிஸ்து இவர்கள் சொல்கிற படி செய்யுங்கள். இவர்கள் செய்கிற படி செய்யாதிருங்கள் என்று எச்சரித்தார்.ஏனென்றால் இவர்கள் சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்றார். (ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.மத்தேயு 23-3)

தேவ சித்தத்தை செய்யாத இவர்களை தான் சந்திப்பின் நாளிலே அக்கிரம செய்கைகாரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்லுவேன் என்றார். (மற்றவர்களுக்கு பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய் போகாதபடிக்கு என் சரீரத்தை  ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.1 கொரிந்தியர் 9 -27 ல் பவுல் சொல்வதை ஒவ்வொரு ஊழியக்காரனும் நிதானித்து அறிய வேண்டும்.ஊழியம் செய்து மற்றவர்களுக்கு பிரசங்கிக்கிறவன் தன்னை தானே வஞ்சிக்கிறான். அடுத்து, தேவனை வஞ்சிக்கிறான். அடுத்ததாக, வசனத்தை கேட்கிற சபை ஜனங்களை வஞ்சிக்கிறான்.எனவே தான் அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அநேகர் ஊழியக்காரராகாதிருங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார்.யாக் 1-22 ல் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் என்ற வசனம் பிரசங்கிக்கிற ஊழியக்காரர்களுக்கும் பொருந்தும்.

 

எனவே பிரியமானவர்களே, இன்றைக்கு நம்மை நாமே நிதானித்து அறிவோம்,நாம் ஜனங்களுக்கு  பிரசங்கிக்கிற உபதேசத்துக்கு நாமே கீழ்படியவில்லை என்ற காரியத்திலிருந்து மனம் திரும்புவோம்.தேவனிடம் மன்னிப்பு கேட்போம்.ஊழியம் செய்தால் தேவனுக்காக உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்வோம். பயத்தோடும் நடுக்கத்தோடும் ஊழியம் செய்வோம்.தேவனுக்காக செய்வதை விட தேவன் செய்ய சொன்னதை செய்வதே மேலானது. ( நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15 )  ஆமென்.