உன்னில் மகிமைப்படுகிற கர்த்தர்
சகோதரி. அனு ஃபெஸ்லின்
உலகத்தின் தெரிந்துகொள்ளுதலுக்கும் தேவனின் தெரிந்துகொள்ளுதலுக்கும் வித்தியாசம் உண்டு. சிறந்த மனிதர்களை தெரிந்தெடுத்து பணியில் அமர்த்துவது உலக இயல்பு. ஆனால் ஒன்றுக்கும் உதவாத குறைவுள்ள மனிதர்களையும் தெரிந்தெடுத்து போதித்து மகத்தான காரியங்களை செய்ய வைப்பது தேவனின் சிறந்த இயல்பு. நம் இருதயத்தை அவருக்கு திறந்து கொடுக்கும் போது அவருடைய வல்லமையினால் நம்மை நிரப்பி நம்மில் மகிமைப்படுகிறார்.
யோசுவாவின் காலத்திற்கு பின் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த ஒரு தலைவனோ ராஜாவோ இல்லை. இதனால் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.அப்பொழுது தேவன் நியாயாதிபதிகளை ஏற்படுத்தினார். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த பன்னிரெண்டு நியாதிபதிகளை தெரிந்துக்கொண்டார். இந்த பன்னிரெண்டு பேரில் நான்கு பேர் மட்டுமே விசுவாசவீர்களின் பட்டியல் என அழைக்கப்படும் எபிரேயர் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். வேதம் கூறுகிறது பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ் சொல்ல வேண்டுமானால் காலம் போதாது[எபிரெயர்:11:32]. இந்த நான்கு நியாதிபதிகளையும் அவர்களது குணாதிசயங்களையும், தேவன் அவர்களை எப்படியாய் பயன்படுத்தினார், அவர்களில் எப்படியாய் மகிமைப்பட்டார் என்பதையும் நாம் வேதத்தின்படி தியானிக்கலாம்.
பயந்த சுபாவமுள்ள கிதியோனை பராக்கிரமசாலியாய் மாற்றின தேவன்
மீதியானியர் கையில் சிறுமைப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க தேவன் கிதியோனை தெரிந்தெடுத்தார். கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி கிதியோனிடம் “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்... உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ” என்று கூறி அவனை தம் பணி செய்ய அழைத்தார். கர்த்தருடைய தூதன் கிதியோனிடம் அவன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்கதகன பலி செலுத்த சொன்ன போது கிதியோன் கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்[நியாயாதிபதிகள்:6:26,27]. தன் தகப்பனின் பலிபீடத்தையே பகலில் தகர்த்துபோட பயந்த கிதியோனை வெடுக்கிளிகளைப் போல பரவியிருந்த மீதியானியரை முறியடிக்க கர்த்தர் அழைக்கிறார்.
அதுமட்டுமல்ல கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் நீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால், அடையாளங்களை காண்பியும் என இரண்டு முறை அடையாளங்களை கேட்கிறான். இது அவனுடைய பெலவீனத்தைக் குறிக்கிறது. ஆனாலும் கர்த்தர் முன்னூறு பேரை மாத்திரம் கொண்டு சேனையினிடத்திற்குப் போ அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்கிறார். தேவன் கிதியோனின் பயந்த சுபாவத்தை நன்கு அறிந்தவராய் அவனிடம் நீ போகப் பயப்பட்டாயானால், முதலில் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய், அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்: பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார் [நியாயாதிபதிகள்:7:9-15]. பயந்த சுபாவமும் பலவீனமான விசுவாசமுள்ளவனாயும் இருந்த கிதியோனை தேவன் தெரிந்தெடுத்து அவனை விசுவாசத்தில் பலப்படுத்தி பராக்கிரமசாலியாய் மாற்றினார். இதனால் வெட்டுக்கிளிகளை போலவும் கடற்கரை மணலத்தனையாயும் பரவியிருந்த மீதியானியரை, கிதியோன் தேவனின் துணையோடு மிக எளிதாக முறியடித்தான்.
அன்பானவர்களே நம்முடைய பெலவீனங்களை நன்கு அறிந்தவர் நம் தேவன். மனிதர்களாகிய நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியாது ஆனால் நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்து நம்மோடு இருக்கும் போது எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலன் தருகிறார்.பவுலைப் போல என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு என்று அறிக்கை செய்வோம்[பிலிப்பியர்:4:13]. நாம் இருக்கிற நிலைமையிலே நம்மை தாழ்த்தி அவர் சொல்லுக்கு மாத்திரம் கீழ்படிய அர்பணிக்கும் போது நம்மையும் பெலவானாய் மாற்றி நம்மை கொண்டு பெரிய காரியங்களை செய்வார் என்பதில் ஐயமில்லை.
தனித்து போரிட தைரியமற்ற பாராக்கை தலைவனாக மாற்றிய தேவன்
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்த போது கர்த்தர் அவர்களை கானானியர் கையிலே விற்றுப்போட்டார். அக்காலத்திலே தெபோராள் என்னும் தீர்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். இந்த தெபோராள் பாராக்கை வரவழைத்து சிசெராவையும் அவன் சேனையையும் உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்கு கட்டளையிடவில்லையா என்று கேட்கிறாள். அதற்கு பாராக் நீ என்னோடே கூட வந்தால் போவேன், என்னோடே கூட வராவிட்டால் நான் போகமாட்டேன் என்றான்[நியாயாதிபதிகள்:4: 4-15]. பாராக்கை நாம் பார்க்கும் போது தனியாக செயல்பட தைரியமில்லாத மனிதன். பொதுவாக ஆண்கள் தான் படைக்கு முன்னின்று போரிடுவார்கள்.ஆனால் இங்கு பாராக் ஒரு பெண் தீர்க்கத்தரிசியை போருக்கு அழைக்கிறான்.
பாராக்கிடம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அவன் தன்னோடு தேசத்தின் பராக்கிரமசாலிகளை அனுப்பு என்று கேட்கவில்லை. மாறாக அவன் தேவனை விசுவாசித்ததால் தேவனுடைய தீர்க்கத்தரிசி தன்னோடு இருந்தால் கர்த்தருடைய வார்த்தைகளை தனக்கு பெலனாய் இருக்கும் என நம்பினான். இதனை அறிந்துக்கொண்ட தெபோராள் எழுந்து பாராக்கோடேகூட சென்று அவனை தைரியப்படுத்தி “எழுந்து போ...கர்த்தர் உனக்கு முன்பாக புறப்படவில்லையா?” என்கிறாள். அப்பொழுது பாராக் பதினாயிரம் பேரோடு சென்று கானானிய படையை கலங்கடித்தான். என்ன ஆச்சரியம் பாருங்கள் தனித்து செல்ல தைரியமில்லாத ஒரு சேனைத்தலைவனாகிய பாராக்கோடு தேவன் இருந்து கானானிய படைகளை முறியடித்தார்.
இன்று நம்மில் பலர் தேவனுக்காய் ஏதாவது செய்ய வேண்டும் என வாஞ்சிப்போம். ஆனால் என்னால் தனியாக எதையும் செய்ய முடியாது யாராவது என் கூட இருந்தால் மட்டுமே என்னால் செய்ய முடியும் என இந்த பாராக்கை போல தயங்குவோம். தேவன் எனக்கு முன்பாக போகிறார் அவர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் எனக்காக செய்து முடிப்பார் என்பதை நம் மனம் அறிந்து கொள்ளாததே இந்த தைரியம் இல்லாத சூழ்நிலைக்கு காரணம். பாராக்கின் கடுகளவு சிறிய விசுவாசம் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றதாய் இருந்தது. ஆம் அன்பானவர்களே நாம் தைரியற்றவர்களாய், எதையும் செய்ய திராணியில்லாதவர்களாய் இருக்கலாம். ஆனால் நமக்குள் தேவனை பற்றும் விசுவாசம் கீழ்படிதல் உற்சாகம் இருந்தால்தேவன் நம்மோடுகூட இருந்துபாராக்கை போல எழுந்து செயல்படுகிறவர்களாய் நம்மையும் மாற்றுவார்.
சுயகட்டுபாடற்று விழுந்துபோனாலும் தன் பணியை நிறைவேற்றிய சிம்சோன்
இஸ்ரவேல் புத்திரரை நாற்பது வருடங்கள் பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுத்த தேவன் அவர்களை இரட்சிக்க சிம்சோனை தெரிந்துக்கொண்டார். சிம்சோன் பிறக்கும் முன்பே அவனை தேவனுக்கென்று நாசரேயனாய் தெரிந்தெடுத்து அவன் இஸ்ரவேலை பெலிஸ்தியர் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான் என அவன் தாய்க்கு அறிவிக்கப்பட்டது. சிம்சோன் பிறக்கும் முன்பே தெரிந்தெடுக்கப்பட்டவன். கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதால் அவன் ஆட்டை கிழிப்பது போல சிங்கத்தையே கிழித்தவன். ஆனால் சிம்சோனின் வாழ்க்கையோ உலகத்தாரின் பார்வையில் அருவருப்பாய் இருந்தது. சிம்சோனின் விசுவாச வாழ்க்கையின் துவக்கம் நன்றாய் இருந்தாலும் அவனுடைய கோபம், ஆகாத நட்பு, இச்சையடக்கமில்லாமை(மாம்சத்தின் இச்சை) ஆகிய குணங்கள் தோல்வியை தழுவியது. சிம்சோன் தேவனுடைய ஆவியை பெற்றிருந்தும் ஆவியானவருக்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்காததால் மாம்சம் அவனை மேற்கொண்டது. வேதம் கூறுகிறது பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். [நீதிமொழிகள்:16:32]. சிம்சோனுக்கு தேவனுடைய ஆவியின் அனுக்கிரகம் இருந்தது பலமிருந்தது ஆனால் தன்னுடைய ஆவியை அடக்க கற்றுக்கொள்ளத்தால் தோல்வியை தழுவினான். இது நமக்கும் எச்சரிக்கையே. சிம்சோனின் சுயகட்டுபாடற்ற பாவ வாழ்க்கை மரணத்தை தழுவியது. இது பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது.
பராக்கிரமசாலியான சிம்சோன் தெலிலாளின் வஞ்சனையில் அகப்பட்டு பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட்டு தான் மரிக்கும் தருவாயில் பெலிஸ்தியரை பழிவாங்கும்படி இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே என்னை பலப்படுத்தும் என மன்றாடுகிறான்[நியாயாதிபதிகள்:16:28-30]. சிம்சோன் தேவனை விட்டு பின்வாங்கி போனாலும் தன் பாவநிலை அறிந்து தன் பணியை உணர்ந்தவனாய் மீண்டும் தேவனையே நோக்கி பார்த்தான். அவனுடைய மரண நேரத்திலும் தேவன் தனக்கு உதவுவார் என அவன் விசுவாசித்து தேவனை நோக்கி பார்த்ததால் தேவன் அவனுக்கு இரங்கினார். அவன் உயிரோடிருக்கும் போது கொன்றவர்களை பார்க்கிலும் மரிக்கும் போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாய் இருந்தார்கள். ஆவியானவருக்கு நம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து மாம்சத்தின் கிரியைகளை மேற்கொள்ளுவோம். அப்பொழுது தேவன் நம்மில் மகிமைப்படுவார்.
துரத்திவிடபட்ட யெப்தாவை சேனாதிபதியாய் மாற்றின தேவன்
யெப்தா பலத்த பராக்கிரமசாலி. அவன் பரஸ்திரீயின் குமாரனானதால் அவன் தகப்பனின் குமாரர் அவனிடம் எங்கள் தகப்பன் வீட்டிலே உனக்கு சுதந்தரமில்லை என்று சொல்லி அவனை துரத்தினார்கள்.அதனால் அவன் சகோதரரை விட்டு ஓட்டிபோனான். வீணரான மனுஷர்கள் அவனோடு கூடிக்கொண்டு, யெப்தாவோடே சேர்ந்து யுத்தத்திற்கு போவார்கள். அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரர் மேல் யுத்தத்திற்கு வந்த போது அவர்களோடு யுத்தம் பண்ணவும் சேனாதிபதியாய் இருக்கவும் யெப்தாவை அழைத்தனர். ஆனால் இப்பொழுது யெப்தா பேரம் பேசுகிறான். நான் யுத்தத்தில் வெற்றியோடு திரும்பி வந்தால் என்னை தலைவர்களாக வைப்பீர்களா? என்று யெப்தா இஸ்ரவேளின் மூப்பர்களிடம் பேசி யுத்தத்திற்கு செல்கிறான். யெப்தா தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி அவரை விசுவாசித்து பொருத்தனை செய்து யுத்தத்திற்கு சென்றான். தேவன் யுத்தத்தில் அம்மோனியர்களை முறிந்தோட செய்தார். யெப்தாவின் பொருத்தனைபடி அவன் தன் மகளை பலியிடவேண்டிய நிர்பந்தமான சூழ்நிலை வந்தது. ஆனாலும் யெப்தா பின்வாங்காமல் தன் பொருத்தனையை செலுத்தினான் [நியாயாதிபதிகள்:11].
யெப்தா உலகத்தின் பார்வையில் ஒரு வீணான மனுஷனாய் பரஸ்திரீயின் குமாரானாய் துரத்தப்பட்டிருக்கலாம். ஆனால் மனுஷரால் தூக்கி எறியப்பட்ட யெப்தாவை தேவன் உயர்த்தினார். யெப்தாவை கொண்டு அம்மோனியர்கள் கையிலிருந்து இஸ்ரவேலை காப்பாற்றி அவனை நியாயாதிபதியாய் உயர்த்தினார். தன் மகளையே தேவனுக்காய் பலி செலுத்த தூண்டிய யெப்தாவின் விசுவாச வாழ்க்கை அவனை விசுவாச வீரர்கள் பட்டியலில் சேர்த்தது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உடைக்கப்பட்ட பாத்திரங்களாகிய கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா ஆகிய நான்கு பேரையும் அவர்களின் குறைகளை பாராமல் தேவன் தெரிந்தெடுத்து அவர்களை மகிமையுள்ள பாத்திரங்களாய் வனைந்தார். பயந்த சுபாவமுள்ள கிதியோன் கீழ்ப்படிந்ததால் அவனை பராக்கிரமசாலியாய் மாற்றினார். கிதியோன் மீதியானியரை முறியடித்து இஸ்ரவேலரை மீட்டான். சுயமாய் எதையும் செய்ய தைரியமற்ற பாராக்கை கொண்டு தேவன் கானானியரை முறியடித்தார். தன் சகோதரர்களால் துரத்திவிடப்பட்ட வீணான மனுஷனாய் எண்ணப்பட்ட யெப்தாவை கொண்டு அம்மோனியர்களை முறியடிக்கும்படி கிருபை பாராட்டினார்.தன்னுடைய உணர்சிகளை கட்டுபடுத்த முடியாமல் வஞ்சிக்கப்பட்டு பெண்களினால் தன் பலத்தை இழந்தாலும் பலவீன நேரத்திலும் தன்னை நோக்கி பார்த்த சிம்சோனை கொண்டு பெலிஸ்தியரை முறியடித்தார். நல்ல பலசாலிகள் திறமையுள்ளவர்கள் தகுதியனார்கள் இருத்தும் தேவன் அவர்களை தெரிந்துக்கொள்ளவில்லை. தேவன் மனிதர்களின் இருதயத்தை பார்த்து தெரிந்தெடுக்கிறார். இந்த நான்கு மனிதர்களிடமும் குறைகள் பல இருந்தும் தேவனைப் பற்றும் விசுவாசம் இருந்தது. ஒவ்வொருவரையும் அவர்களின் விசுவாச அளவின்படியே தேவன் வித்தியாசமாக மகிமைப்டுத்தினார். பவுல் கூறுகிறார் இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம் [2கொரிந்தியர்:4:7] . வெறுமையான பாத்திரங்களாகிய அவர்கள் தேவ வல்லமையினால் நிறைந்த போது தேவனுக்காய் மகத்தான காரியங்களை செய்தார்கள்.
அன்பானவர்களே நீங்கள் குறைவுள்ள, உடைக்கப்பட்ட, தூக்கி எறியப்பட்ட, வெறுமையான பாத்திரங்களாய் இருக்கலாம். பாவி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவன் என உலகம் உங்களை ஒதுக்கலாம். எந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் வெறுமையான பாத்திரங்களாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் போது அவருடைய மகத்துவமுள்ள வல்லமையினால் உங்களை அவர் நிரப்பி உங்களில் அவர் மகிமைப்படுவார் என்பதில் ஐயமில்லை. இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற நம் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறார்: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே[ஏசாயா:48:17]. தேவனை விசுவாசிப்போம் பிரயோஜனமாயிருக்கிறதை அவர் நமக்கு போதித்து நம்மை நல்வழிபடுத்தி உன்னதத்தின் மேன்மையான ஆசீர்வாதங்களினால் நம்மை நிறைத்து வழிநடத்துவாராக. ஆமென்.
---------------------------------------