top of page

கனிகொடுக்கிற கிறிஸ்தவ வாழ்க்கை 

 

சகோதரி. அனு ஃபெஸ்லின்

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன் [யோவான்:15:16]. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும் கனிகொடுக்க வேண்டும் என தேவன் எதிர்பார்க்கிறார். நாம் கனிகொடுக்கவே தேவன் நம்மை தெரிந்துக்கொண்டு ஏற்படுத்தி இருக்கிறார். ஒரு நாள் இயேசு கிறிஸ்து பசியாயிருந்த போது இலைகள் நிறைந்த அத்திமரத்தை கண்டு அதனருகே சென்றார். இலைகள் நிறைந்த அத்திமரத்தில் கனிகள் ஒன்றும் இல்லாததை கண்ட இயேசு  அந்த அத்திமரத்தை சபித்ததை நாம் வேதத்தில் காணலாம். நாம் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் கனிகள் இல்லாமல் இலைகளால் நம்மை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் நாமும் சபிக்கப்பட்ட அத்திமரத்திற்கு ஒப்பானவர்களே. தேவன் நம்மில் கனியை எதிர்பார்க்கிறவராய் ஒவ்வொரு வருடங்களையும் நம்முடைய ஆயுசு காலத்தில் கூட்டிக்கொடுக்கிறார். தேவனின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற, கனி கொடுக்கிற கிறிஸ்தவ வாழ்விற்கு வேதம் காட்டும் ஆலோசனைகளை நாம் தியானிப்போம்.

 

கர்த்தருடைய வேதத்தில் தியானமாய் இருந்து கீழ்படியும் போது   

 

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்.  கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமான வேத வசனங்களை அனுதினமும் வாசித்து தியானித்து அதின்படி நடக்கும் போது கனிகொடுக்க முடியும். நாம் தினந்தோறும் எவ்வளவோ வேத வசனங்களை, செய்திகளை  கேட்கிறோம். எத்தனை வசனங்கள் நம் இருதயத்திற்குள் செல்கின்றன? எத்தனை வசனங்களுக்கு நாம் கீழ்படிகிறோம்? சற்று சிந்தித்து பார்ப்போம்.வேதம் கூறுகிறது  நல்ல நிலத்தில் விழுந்த விதை  சிலது நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தந்தது. நிலம் நம்முடைய இருதயம். விதை தேவனுடைய வசனம். நல்ல நிலமாகிய இருதயத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனு மாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான். நாம் வசனத்தை கேட்கிறதால் தியானிக்கிறதால் அல்ல; அதனை உணர்ந்து நம் இருதயம் கீழ்படியும் போது நல்ல கனிகளை கொடுக்க இயலும்.  வேதம் கூறுகிறது எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால்  ஆசீர்வாதம்  பெறும். [எபிரெயர்:6:7].பூமி எப்படியாய் தன்மேல் விழுகிற  மழை நீரை உறிஞ்சிகிறதோ அதே போல வேத வசனங்களை நம்முடைய இருதயம் உறிஞ்சி ஏற்றுக்கொண்டு, அதனை உணர்ந்து அதின்படி வாழும் போது நாமும் கனிகொடுக்கிறவர்களாய் மட்டுமல்ல தேவனுடைய ஆசீர்வாதத்தையும் பெறுகிறோம் என்பதில் ஐயமில்லை.

 

பாவத்திற்கு செத்து பிழைக்கும் போது 

 

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்” [யோவான்:12:24]. இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவங்களுக்காய் தான் மரித்து பிதாவை மகிமைப்படுத்துகிற நேரத்தை உணர்ந்தவராய் இந்த வார்த்தைகளை தம்முடைய சீஷருக்கு கூறினார். எந்த ஒரு விதையும் பாதுகாப்பாய் அடைத்து வைக்கப்படும் போது  கனி கொடுப்பதில்லை. ஒரு விதை கனிகொடுக்க வேண்டுமானால் அது சாக வேண்டும். பூமியில் நடப்பட்ட எந்தவொரு விதையும் தான் செத்து, பின்பு   ஜீவனோடுள்ள புதிய செடியாய் பூமிக்கு வெளியே வந்து கனி கொடுக்கிறது. இயேசு கிறிஸ்து நம் எல்லாருக்காகவும் மரித்து உயிர்த்து முதற்பலனானார். வேதம் கூறுகிறது மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறான் [ரோமர்:6:7]. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தவனாய்  பாவத்திற்கு செத்து தேவ நீதிக்கு பிழைக்கும் போது மனிதன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளுகிறான். இப்படி இரட்சிக்கப்பட்ட புதிய மனிதன் கிறிஸ்து இயேசுவை தரித்தவனாய்  தேவ சித்தத்திற்கு தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுக்கும் போது கனிகொடுக்கிற  கிறிஸ்தவனாய் மாறுகிறான். வேதம் கூறுகிறது தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான் [யோவான்:12:25].இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன் இரட்சிப்பைக் காத்துக் கொண்டு கிறிஸ்துவை பிரதிபலித்து பிறரையும் இரட்சிப்புக்குள்ளாக நடத்தி இரட்சிப்பின் கனிகளை கொடுக்க தேவன் விரும்புகிறார்.

 

தேவன் நம்மிலும் நாம் அவரிலும் நிலைத்திருக்கும் போது  

 

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது[:15:4,5]. மெய்யான திராட்சை செடியாகிய இயேசு கிறிஸ்து நம்மிலும், கொடிகளாக நாம் அவரிலும் (ஐக்கியமாக) நிலைத்திருக்கும் போது அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறோம். பிதா இயேசுவில் அன்பாயிருக்கிறது போல இயேசு கிறிஸ்து நம்மில் அன்புகூருகிறார். கொடியாக அவரில் நிலைத்திருந்து அவருடைய அன்பை ருசித்து அந்த அன்பை வெளிபடுத்துவதே தேவன் நம்மில் எதிர்பார்க்கிற கனி. நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது [யோவான்:15:12].  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எப்படியாய்  பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருந்தாரோ அதே போல, நாமும் அவருடைய  கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், நாமும் அன்பின் கனிகளை கொடுத்து பிதாவை மகிமைப்படுத்த முடியும். இயேசு கிறிஸ்து கூறுகிறார் “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்”[யோவான்:15:8]. உலகப்பிரகாரமான எந்த தோட்டக்காரனும் தன்னுடைய தோட்டத்தில் கனிகளை எதிர்பார்க்கிறது போல திராட்சைதோட்டக்காரராகிய  பிதாவும் நம்மில் கனிகளை எதிர்பார்க்கிறார். வேதம் கூறுகிறது “அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்” [1யோவான்:2:28].தேவ உறவில் நிலைத்திருப்போம் அன்பின் கனிகளை பிரதிபலிப்போம்.

 

தேவன் நம்மை சுத்தம் பண்ணும் போது

 

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள் [யோவான்:15:1-3]. நம்முடைய தோட்டகாரரகிய பிதாவானவர்  நாம் அதிக கனிகளை கொடுக்கும்படிக்கு தம்முடைய வார்த்தையினால் நம்மை சுத்தம் பண்ணுகிறார். ஏனெனில் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது[எபிரெயர்:4:12].நாம் திராட்சை செடியாகிய கிறிஸ்துவில் நிலைத்திருந்தாலும் கனிகொடுக்க விடாதபடி நம்மில் காணப்படுகிற சுபாவங்களை தேவன் சுத்தம் செய்து நீக்கிப் போடுகிறார். தேவன் நம்மை சுத்தம் பண்ண தாழ்த்தி  ஒப்புக்கொடுப்போம்.  அவர் நம்மிலுள்ள மாம்சசிந்தைகளை அகற்றி தம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் நம்மை நிரப்பி அவருடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும்படிக்கு நம்மை சுத்திகரிக்கிறார்.இதனால் நாம் தேவன் விரும்புகிறபடி அதிக கனிகளை கொடுக்க முடியும்.

 

கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கும் போது

 

கர்த்தர் மேல்  நம்பிக்கை வைத்து,  கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீர் அண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான் [எரேமியா:17:7,8]. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம் நம்பிக்கையின் கன்மலையானவர். அவர் நீ மட்டும் என்னில் நிலைத்திருந்து கனி கொடு என்று சொல்லவில்லை. மாறாக நான் உன்னில் நிலைத்திருகிறேன் நீயும் என்னில் நிலைத்திரு என்று நம்மோடு கூட இருந்து நமக்கு உதவி செய்கிறார். துன்பம், உபத்திரவம், உலகக் கவலை, ஐசுவரியத்தின் மயக்கம் போன்ற காரியங்களை சத்துரு கொண்டு வந்து நம்மை தேவனில் வேரூன்றி வளர்ந்து கனிகொடுக்க விடாதபடி  செய்வான். ஆனால்  ஜீவதண்ணீரண்டையில்  நாட்டப்பட்டவனாய் தேவனில் வேரூன்றி நிலைத்திருப்பவன் எல்லா காலத்திலும் தப்பாமல் கனிகொடுப்பான்.வேதம் கூறுகிறது உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்[சங்கீதம்:37:5]. நாம் கர்த்தர் மேல் முழு நம்பிக்கையும் வைத்து நம்மை ஒப்புவிக்கும் போது அவர் நம்மோடு கூட இருந்து நம் நடைகளை சீர்படுத்தி கனிகொடுக்கிற வாழ்க்கைக்கு நேராய் நம்மை நடத்துவார்.

 

உலக ஆசைகளை சிலுவையில் அறையும் போது  

 

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. வேதம் கூறுகிறது கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்[கலாத்தியர்:25:22-26]. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் சொந்த ஆசைகள் விருப்பங்கள் எதிர்கால திட்டங்கள் உண்டு. இந்த ஆசைகளை முக்கியப்படுத்தி அதின்படி தான் வாழுவேன் என்றால் நம்மால் ஆவிக்கேற்றபடி வாழ முடியாது. ஆவியின் கனிகளை கொடுப்பது சுலபமான காரியம் அல்ல. நம்முடைய சொந்த ஆசை விருப்பங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் அறைந்து இயேசு கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்றும் போது மட்டுமே ஆவியின் கனிகளை கொடுக்க முடியும். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் “நான்  கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்”. ஆம் அன்பானவர்களே  கிறிஸ்துவின் சிலுவையை நாம் அனுதினமும் சுமக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப்  பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும் அனுதினமும் முயற்சிப்போம். நாம் வாஞ்சிக்கும் போது நிச்சயமாய் நம்மையும் அதிக கனிகளை கொடுக்கிறவர்களாய் தேவன் மாற்றுவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவன் நம் ஒவ்வொருவரையும் தெரிந்துக்கொண்டு நாம் கனி கொடுக்கும்படிக்கும், நம்மில் கனி நிலைத்திருக்கும்படிக்கும் ஏற்படுத்தி இருக்கிறார்.நம்முடைய வாழ்க்கையை நாம் சீர்தூக்கி பார்ப்போமா? தேவன் நம்மை இரட்சித்து பல வருடங்கள் ஆகிறதல்லவா, நாம் எப்படிப்பட்ட கனிகளை கொடுக்கிறோம்? தாம் தெரிந்துகொண்ட இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து “நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? என்று தேவன் கேட்டது போல  இன்று நம்மை பார்த்துக் கேட்கிறார். நாம் எங்கு நாட்டப்பட்டிருக்கிறோமோ அதற்கேற்ற கனிகளை கொடுப்போம். உலகத்தில் நிலைத்திருந்தால் உலகத்திற்கேற்ற கனிகளை கொடுப்போம். தேவனில் நிலைத்திருந்தால் தேவனுக்கேற்ற ஆவியின் கனிகளைக் கொடுப்போம். நாம் தேவனில் ஐக்கியப்பட்டு நிலைத்திராமல் ஒருநாளும் கனிகொடுக்க முடியாது. வேதம் கூறுகிறது “நல்ல  கனிகொடுக்காத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” இந்த  எச்சரிப்பின் தொனி ஒவ்வொரு நாளும் நமக்குள் தொனிக்கட்டும். இயேசு கிறிஸ்துவில்  கொடியைப் போல ஐக்கியப்பட்டு வாழ்ந்து கனிகொடுக்கிறவர்களாய் மாறுவோம். பழுத்த பழங்கள் நிறைந்த மரங்கள் மனிதர்களுக்கு பறவைகளுக்கு என எல்லாருக்கும் உபயோகமாய் இருக்கும். அதுபோல நாமும் ஆவியின் கனிகளால் நிறைந்து தேவனை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல புறஜாதிகளுக்கும் உபயோகமாய் மாறுவோம். நம்முடைய பிதாவானவர் விரும்புகிறபடி இயேசுவை பிரதிபலித்து அதிக கனிகளை கொடுத்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம். தேவன் நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

 

--------------------------------------

bottom of page