சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள்
சகோ. எட்வின் கார்டர் (சோஹார் - ஓமான்)
முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை வெளிப்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த உபதேசங்களை யாரெல்லால் ஆழ்ந்து தியானிக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் இயேசுவின் அன்பையும் தேவன் கொடுக்கிற இரட்சிப்பையும் நிச்சயமாக பெற்றுக் கொள்வார்கள் என்பது கிறிஸ்துவுக்குள் என் நம்பிக்கையாயிருக்கிறது.
இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் சிலுவை பயணத்திற்கு கடந்து செல்ல ஆயத்தமாய் இருப்போம் ஒது ஒரு சாதாரண பயணம் அல்ல, இது ஒரு ஆவிக்குரிய பயணமாக இருக்கும் என்பதை ஒருவரும் மறந்து போக வேண்டாம்.
இத்தகைய பயனம் ஆவிக்குரிய பயணமாக அதாவது இந்த உபதேசங்கள் ஆவிக்குரிய பயணமாக அமைய வேண்டுமானால் நாம் ஜெபத்தோடு எல்லாவற்றையும் தியானிக்க வேண்டும்.
-
முதலாம் உபதேசம்: மன்னிப்பு [ லூக்கா 23:34 ]
-
இரண்டாவது உபதேசம்: மனந்திரும்புதல் [ லூக்கா 23:43 ]
-
மூன்றாவது உபதேசம்: உண்மையான ஆறுதல் [ யோவான் 19:26,27 ]
-
நான்காவது உபதேசம்: ஜெபம் [ மத்தேயு 27:46, மாற்கு 15:34 ]
-
ஐந்தாவது உபதேசம்: ஆத்தும பசி [ யோவான் 19:28 ]
-
ஆறாவது உபதேசம்: பரிபூரணம் [ யோவான் 19:30 ]
-
ஏழாவது உபதேசம்: ஒப்புக் கொடுத்தல் [ லூக்கா 23:46 ]
-
1. முதல் உபதேசம்: மன்னிப்பு
வேதம் சொல்லுகிறது, லூக்கா 23:34 – அப்பொழுது இயேசு பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். இந்த வசனத்தின் மூலமாய் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்,
நமக்கு யாரையும் நியாயந்தீர்ப்பதற்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மற்றவர்கள் செய்கிற தவறுகளுக்கு தண்டனை கொடுக்கிற அதிகாரத்தைப் பெற்றிருந்த போதிலும் அவர் தனக்கு விரோதமாய் தவறு செய்த ஜனங்களைத் தண்டிக்காமல் அவர்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுவதை நாம் இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.
ஆனால் அனேக கிறிஸ்தவர்கள் அதாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு நீதிமான்களாக மாற்றப்பட்டவர்கள் இன்றைய நாட்களில் செய்கிற காரியம் என்னவாக இருக்கிறது என்று பார்ப்பீர்களானால் அது ஆண்டவருக்கு விரோதமான பகையாக காணப்படுகிறது எப்படியென்றால் யாராவது பாவம் செய்தவர்களை இவர்கள் பார்த்து விட்டால் உடனே அவர்களுக்கு பாவி என்கிற பட்டத்தைச் சூட்டி அவர்களை அதிகமாக வெறுப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதனால் இவர்கள் கர்த்தருக்கு பிரியமில்லாதவர்களாய் மாறி போகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
இத்தகைய காரியத்தை வேதத்திலிருந்து உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மத்தேயு 9: 11-13 வரை வாசிக்கும் போது நமக்கு ஒரு காரியம் தெள்ளத்தெளிவாக வெளிப்படும்
எப்படியென்றால், இதோ அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில் அனேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து இயேசுவோடும் அவர் சீஷரோடும் கூடப் பந்திருந்தார்கள்.
பரிசேயர் அதைக் கண்டு அவருடைய சீஷர்களை நோக்கி உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார்.
இந்த வசனங்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தராய் இருந்த போதிலும் பரிசுத்தத்திற்கு இம்மியளவும் தகுதியில்லாத ஜனங்களோடு தம்முடைய உறவை ஏற்படுத்திக் கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது எதற்காக அவர் அப்படி செய்தார் என்றால், ஒருவரையும் இழந்து போகக்கூடாது எல்லாரையும் தம்மோடு பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே.
ஆகவேதான் தாங்கள் செய்த கொடுமையான பாவத்தினிமித்தம் இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட கள்ளனையும் மன்னித்து தமக்கு நிகராக அவனை மாற்றி சிலுவையில் அவனை ஆசீர்வதித்தை நம்மால் உணர முடிகிறது.
ஒரு காரியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் அதுஎன்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறார் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பாருங்கள் பேதுரு ஆண்டவரிடம் வந்து ஆண்டவரே என்னுடைய சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு தரமட்டுமா? என்று கேட்ட போது அதற்கு ஆண்டவர் தருகிற பதில் என்னவாக இருந்தது, ஏழுதரம் மாத்திரமல்ல ஏழெழுபதுதர மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் – மத்தேயு 18:21,22. சிலுவையில் சொல்லப்பட்ட வார்த்தைகளை தியானித்தால் மட்டும் போதாது அதின்படி நடக்கவும் வேண்டும் ஆகவே இன்னும் யாரையெல்லாம் மன்னிக்க வில்லையோ அவர்களையெல்லாம் இப்பொழுதே மன்னித்து விடுங்கள்.
2. இரண்டாவது உபதேசம்: மனந்திரும்புதல்
வேதம் சொல்லுகிறது, லூக்கா 23:43 – இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஆண்டவர் யாரை பரலோகராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்லுகிறார் பல வருடங்களாக பாவம் செய்து கொண்டிருந்து அதனிமித்தமாக உலகத்தால் குற்றவாளியாக மாற்றப்பட்ட கள்ளனேயே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நமக்கு ஒரு காரியம் புரியாத புதிராகவே இருக்கும் இத்தனை பாவங்கள் செய்த மனுஷனை நோக்கி எப்படி பரலோக ராஜ்ஜியத்திற்கு அனுமதிக்க முடியும் இது அநீதியல்லவா என்று நாம் நினைக்க கூடலாம்.
வேதம் சொல்லுகிறது, அவர் நீதியுள்ளவர் இந்த மனுஷனுக்காகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதாவது இவனுடைய பாவத்தையும் தான் எடுத்துக் கொண்டார் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். எப்பொழுது அவன் மனந்திரும்பி இயேசுவை பாவமில்லாதவர் என்று அறிக்கை செய்தானோ அப்பொழுதே அவனுக்காக ஒரு இடத்தை தேவன் சொர்க்கத்தில் ஆயத்தம் பண்ணிவிட்டார் என்பதுதான் உண்மை.
பாருங்கள், இந்த மனந்திரும்புதல் அவனுக்குள் தேவனுக்குப் பயப்படுகிற ஒரு பயத்தை கொண்டு வந்தது எப்படியென்றால் மற்றவன் அவனை நோக்கி நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம் இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்து கொள்கிறான் [ லூக்கா 23:40,41 ] இதுதான் உண்மையான மனந்திரும்புதல், இந்த மனந்திரும்புதல் தான் அவனுக்கு தேவனைக் குறித்ததான வெளிப்பாட்டைப் பெற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று அனேகர் இயேசுவைக் குறித்ததான வெளிப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் அவர்களிடத்தில் இந்த மெய்யான மனந்திரும்புதல் நடைபெறுவதே இல்லை. ஆகவேதான் இன்றும் பலர் பாவியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேதம் சொல்லுகிறது, மனந்திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது – மத்தேயு 3:2
எனவே இப்பொழுதே மனந்திரும்புங்கள் இயேசுவை தரிசிப்போம்.
3. மூன்றாவது உபதேசம்: மெய்யான ஆறுதல்
வேதம் சொல்லுகிறது, அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே அதோ உன் மகன் என்றார் பின்பு அந்தச் சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார். இந்த வசனங்கள் என்ன சொல்லுகிறது என்றால் இயேசுதான் மெய்யான ஆறுதல் அவரால் மாத்திரமே இப்படிப்பட்ட ஆறுதலை இந்த பொல்லாத உலகத்தில் கொடுக்க முடியும் என்பதையே உணர்த்துகிறது.
அதுமட்டுமல்லாமல் பிசாசானவன் ஆண்டவருக்கு விரோதாமாக செய்ய நினைத்த திட்டத்தையும் கர்த்தர் இங்கு முறியடித்தார். பாருங்கள், பிசாசானவன் நினைத்திருக்கலாம் இந்த சிலுவை மரணத்திற்கு பிறகு இந்த தேவன் ஒருபோதும் இவர்களுக்கு ஆறுதலாய் இருக்க முடியாது என்பதாக ஆனால் என்ன நடந்தது. எப்படி இந்த உலகத்தில் மனுஷகுமாரனாய் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் எப்படி அனேகருக்கு மற்றும் தம்மை நேசித்த சீஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் ஆறுதல் காட்டி வந்தாரோ அதே போலவே இப்பொழுதும் அவர்களுக்குள் மெய்யான ஆறுதலை உருவாக்கிக் கொடுத்துவிட்டே அவர் சிலுவையில் மரித்தார் என்று சொல்ல வேண்டும். அதாவது எல்லா சூழ் நிலையிலும் அவரால் ஆறுதலை தர முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பாருங்கள் மோசமான சூழ் நிலைகளுக்குள் கடந்து போகும் போது பவுல் எழுதுகிற ஒரு காரியம் என்னவென்றால் கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னை பிரிப்பவன் யார் என்று பிசாசிற்கு சவால் விடுகிறார். ஏனென்றால் பவுலுக்கு தெரியும் எந்த ஒரு சூழ் நிலையிலும் இயேசு என்னை விட்டு விலக மாட்டார் என்பதை நன்றாக தன்னுடைய ஆவியில் அறிந்திருந்தார்.
எனக்குப் பிரியமான ஜனங்களே இயேசுவின் ஆறுதல் கொஞ்ச நாட்களுக்கு மாத்திரம் அல்ல அது நாம் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும் வரைக்கும் நம்மை பின் தொடர்ந்து வருகிறது என்பதை மறந்து விட வேண்டாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து சொல்லுகிற காரியம் என்னவென்றால், நான் உங்களை ஒருபோதும் திக்கற்றவர்களாக விடேன் – யோவான் 14:18.
4. நான்காவது உபதேசம்: ஜெபம்
வேதம் சொல்லுகிறது, மத்தேயு 27:46 மற்றும் மாற்கு 15:34 – ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். இந்த வார்த்தை நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது என்றால் நாம் ஒவ்வொரு சூழ் நிலையிலும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும் மற்றும் யாரிடம் ஜெபம் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
இதோ ஒரு பக்கம் பாவத்தின் நிமித்தம் அழிந்து கொண்டிருக்கிற ஜனங்கள் மற்றொரு பக்கம் அவர் தேவனாயிருந்த போதிலும் தான் எடுத்துக் கொண்ட அவதாரமாகிய மாமிசத்தில் ஏற்பட்ட வேதனைகள் இவைகள் நிமித்தம் அவர் யாரையும் குறை சொல்லவில்லை மற்றும் யாரையும் கடிந்து கொள்ளவும் இல்லை. ஆனால் மிகுந்த மன உருக்கத்துடன் தேவனாகிய பிதாவை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.
ஏனென்றால்? அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது பிதாதான் இத்தகைய காரியத்தை அனுமதித்தவர் ஆகவே ஆவர்தான் நம்முடைய வேதனைகளுக்கெல்லாம் பதில் தர முடியும்.
ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் பண்ணக்கடவன் என்பதாக யாக்கோபு 5:13 ல் நாம் வாசிக்கிறோம்.
நாமும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற வேதனைகளுக்காகவும் இழப்புகளுக்காகவும் புலம்பிக் கொண்டிராமலும் மனுஷர்களிடம் ஆறுதலுக்காக ஓடாமலும் எல்லாவற்றையுங் குறித்து கவலைப்படாமல் தேவனுக்கு முன்பாக முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய வாழ்க்கையில் புதிய வெளிச்சம் உண்டாகும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை. பாருங்கள் சங்கீதக்காரன் தனக்கு விரோதமாக செய்யப்படுகிற எல்லா காரியங்களுக்கும் அவன் பதில் செய்யாமல் எல்லாவற்றையும் தேவனுக்கு முன்பாக ஜெபத்தில் வைப்பதை நாம் எல்லாரும் வேதத்தில் பார்க்க முடிகிறது.
கிறிஸ்துவுக்காக உண்மையாய் வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனுபவித்த தாங்க முடியாத வேதனைகள் வரும் ஆகவே இதைக் குறித்து நாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை ஜெபத்தில் கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் தெய்வீக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
5. ஐந்தாவது உபதேசம்: ஆத்தும் பசி
வேதம் சொல்லுகிறது, யோவான் 19:28 – அதன் பின்பு எல்லாம் முடிந்த்து என்று இயேசு அறிந்து வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்.
இந்த வசனம் நமக்கு எத்தகைய காரியத்தை வெளிப்படுத்துகிறது என்றால் தேவனுடைய வருகை மட்டும் அல்லது நாம் இந்த உலகத்தில் இருக்கும் வரை தேவனுக்காக ஓடுவதில் ஒருபோதும் சோர்ந்து விடக் கூடாது அதாவது திருப்தியடைந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து விடக் கூடாது.
மாறாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவிடம் கேட்டது போல நாமும் தேவனிடம் இன்னும் அதிகமாக தாகமாய் இருக்க வேண்டும். முக்கியமாக இந்த தாகம் எதில் அதிகமாய் இருக்க வேண்டும் என்று சிந்திப்பீர்களானால், அது, எப்படி நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆத்துமாக்களுக்காக ஓடினாரோ அதே போல நாமும் மரித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாக்காளுக்காக பாரம் கொண்டவர்களாக மாற வேண்டும்.
ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, தப்பிப் போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன் – யாக் 5:20. இத்தகைய விலையேறப் பெற்ற ஆத்துமாக்களை இழந்து போக மனதில்லாதவராய் நம்முடைய ஆண்டவர் அத்தகைய மரண அவஸ்தையிலும் அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக கொடிய தாகமுள்ளவராய் மாறினார் என்பதையே இந்த வசனம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
ஆகவே நாமும் இயேசுவைப் போல ஆத்துமாக்கள் மேல் தாகமுள்ளவர்களாய் மாறுவோம் ஏனென்றால் ஆத்துமா ஆதாயம் செய்கிறவன் அதிக நன்மையைப் பிதாவிடம் இருந்து பெற்றுக் கொல்கிறான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த நாளிலிருந்து ஆத்துமாக்களுக்காக வாஞ்சையாய் ஓடுவோமாக.
6. ஆறாவது உபதேசம்: பரிபூரணம்
வேதம் சொல்லுகிறது, யோவான் 19:30 – இயேசு காடியை வாங்கினபின்பு முடிந்தது என்று சொல்லி தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக் கொடுத்தார். இந்த வசனம் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால் நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைவோடு இராதபடி எப்பொழுதும் பரிபூரணமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அதாவது எந்த ஒரு ஊழியத்தை செய்தாலும் அதை ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உலகம் நம்மை மாத்திரம் தூஷிக்காமல் தேவனுடைய நாமத்தையும் தூஷிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதா என்னவெல்லாம் தீர்க்கதரிசிகளைக் கொண்டு சொன்னாரோ அதை எல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நிறைவேற்றினார் என்று சொன்னால் அது மிகையாகாது. பிசாசானவன் எத்தனை இன்னல்களை அதாவது தேவனுடைய தீக்கதரிசினங்கள் நிறைவேறாதப்படி அனேக தடைகளைக் கொண்டு வந்தான்.
ஆனால் நம்முடைய தகப்பனோ அவைகள் எல்லாவற்றையும் தேவனின் துணைக் கொண்டு செய்து முடித்தார். ஆகவேதான் பிதா அவருக்கு எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தைக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். இன்று அனேகர் ஆவிக்குரிய ஓட்டத்தை முடிக்க திராணி இல்லாமல் போவதற்குக் காரணம், நம்மிடத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்த கீழ்ப்படிதல் இல்லை ஆகவேதான் நம்முடைய பணி எப்பொழுதும் குறைவுள்ளதாய் காணப்படுகிறது.
ஆனால் நம்முடைய ஆண்டவரோ எல்லாவற்றையும் செம்மையாக முடித்து விட்ட பிறகு இந்த மாமிசத்தைக் களைந்து விட்டு மகிமையின் சரீரத்திற்குள்ளாக கடந்து போனார் என்று பார்க்கிறோம். பாருங்கள் அப்.பவுல் சொல்லுகிறார், நல்ல போராட்டத்தைப் போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார் என்று 2தீமோத்தேயு 4:7,8 ல் யாரெல்லாம் பரிபூரணமாக தங்களுடைய ஆவிக்குரிய ஓட்டத்தை இந்த உலகத்தில் முடிக்கிறார்களோ அவர்களுக்கு மாத்திரமே இத்தகைய கிரீடம் கிடைக்கிறது என்று எழுதிவைத்திருக்கிறார்.
7. ஏழாவது உபதேசம்: ஒப்புக் கொடுத்தல்
வேதம் சொல்லுகிறது, லூக்கா 23:46 – இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். இந்த வசனம் நமக்கு என்ன சொல்லுகிறது என்றால் இத்தகைய வல்லமையான தேவன் தம்மை முழுவதுமாக பிதாவிடம் ஒப்புக் கொடுத்தார் ஆதாவது நாம் கடைசியாக செல்லப் போகிற இடம் எது என்பதை மிகவும் தெளிவாக தம்முடைய மரணத்தின் மூலம் வெளிப்படுத்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இன்று அனேகர் தாங்கள் செல்லுகிற இடம் மற்றும் தங்களை யாரிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதை தெரியாமல் தங்களுடைய வாழ்க்கையை பல வழிகளில் நஷ்டப்படுத்திக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள் – கொலோசேயர் 3:2 மேலும், உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள் ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை – 1யோவான் 2:15 எனவே நம்முடைய ஆவி பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டுமானால் நாம் இந்த உலகத்தை நேசிக்காமல் தேவன் நமக்காக ஆயத்தமாக வைத்திருக்கிற பரலோக வாழ்க்கை மேல் வாஞ்சையுள்ளவர்களாக இந்த உலகத்தில் ஒரு பரதேசியைப் போல் வாழ வேண்டும் அப்பொழுதுதான் சொர்க்கம் நம்முடைய சொந்த பூமியாய் மாறும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
ஆகவேதான் அப்.பவுல் அழகாக கொரிந்து சபைக்கு எழுதுகிறார் எப்படியென்றால்,
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும் தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் – 11 கொரி 5:1 எனவேதான் நம்முடைய பிதாக்கன்மார்கள் இந்த உலகத்தில் வாழ்ந்த போது ஒரு பரதேசியைப் போல் வாழ்ந்து தங்களுடைய வாழ்க்கையை முழுவதுமாக தேவனிடத்திலே ஒப்புக் கொடுத்திருந்தார்கள் என்று வேதத்தை வாசிக்கும் போது புரிகிறது.
இத்தகைய காரியம் எப்படி நடக்கும் என்றால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தோடு எந்தவொரு தொடர்பும் வைத்திராமல் எப்பொழுதும் பிதாவுடனே சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அதே போல நாமும் வாழும் போது நம்முடைய வாழ்க்கையும் தேவனிடத்தில் செல்லும் என்பதற்கு சந்தேகமேயில்லை.
எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுகளின் வழியாக சொன்ன இத்தகைய உபதேசத்தை நாமும் அவரைப் போல நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்துவோம். அப்பொழுதுதான் இந்த சிலுவைப் பயணத்தில் ஜெயம் எடுக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் இந்த செய்தியின் மூலம் ஆசீர்வதிப்பாராக ஆமென்!