top of page

கூர்மையாக்கப்பட வேண்டிய ஆயுதங்கள்

Bro. Edwin Corter (Sohar-Oman)

வேதம் சொல்லுகிறது, இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க அதை ஒருவன் தீட்டாற்போனால் அதிக பலத்தைப் பிரயோகம் பண்ண வேண்டியதாகும். பிரசங்கி 10:10 [முன்பகுதி]

இந்த வசனத்தின் மூலம் கர்த்தர் என்ன சொல்ல விரும்புகிறார் என்றால் நம்முடைய ஆயுதங்கள் பழுதாகாமல் போக வேண்டுமானால் நாம் எப்பொழுதும் அதை கூர்மையாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் நமக்கும் கர்த்தருக்கும் இடைவெளி வராமல் இருக்க வேண்டுமானால் நாம் கர்த்தரோடு கொண்டுள்ள உறவை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

பாருங்கள், ஏற்கனவே அபிஷேகம் பெற்ற தாவீது மறுபடியும் தனக்கு அபிஷேகம் வேண்டும் என்று கேட்பதை நாம் வேதத்தில் வாசிக்க முடிகிறது.

வேதம் சொல்லுகிறது, சங்கீதம் 92:10 – தாவீது எழுதுகிறார் நான் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.

எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே கர்த்தர் நம்மை இந்த ஓமன் தேசத்திற்கு அழைத்து வந்ததின் நோக்கம் ஒவ்வொருவரும் கர்த்தருக்குள் யுத்த வீர்ராக எழும்ப வேண்டும் எதற்காக தெரியுமா? உலகத்திலுள்ள ஒவ்வொரு மனுஷனுக்கும் யுத்தம் உண்டு என்று கர்த்தர் வேதத்தின் எல்லா ஆகமத்திலும் அழகாக செதுக்கி வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய காரியத்தை உள்ளடக்கிய ஒரு சில வசனங்களை உதாரணமாக இங்கு கொடுக்க ஆசைப்படுகிறேன்.

1.யோவான் 16:33 – உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு

2.அப்போஸ்தலர் 14:22 – நாம் அனேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்

3.அப்போஸ்தலர் 20:23 – எல்லா பட்டணத்திலும் எனக்கு யுத்தம் உண்டு என்பதை பரிசுத்த ஆவியானவர் காண்பித்து தருகிறார்

4.சங்கீதம் 144:1 – என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

5.சங்கீதம் 120:7 – நான் சமாதானத்தை நாடுகிறேன் அவர்களோ நான் பேசும் போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்

6.எபேசியர் 6:12 – பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு அதாவது யுத்தம் உண்டு

7.உபாகமம் 1:41 – கர்த்தர் நாம் யுத்தம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறார்

8.ஏசாயா 13:5 – கர்த்தர் யுத்தத்திற்கு ஆயத்தமாகிறார்.

எனக்கு பிரியமான தேவனுடைய பிள்ளைகளே என்னிடத்தில் ஜீவனுக்கு வேண்டிய அதாவது இந்த உலகத்தில் வாழ்வதற்கான எல்லாம் சம்பூரணமாய் இருக்கிறது, ஆகவே நாம் சமாதானமாய் வாழ்ந்துவிடலாம் என்று தப்பான எண்ணம் கொள்ளாதீர்கள். உலகம் ஒரு யுத்த களமாய் இன்றைய நாட்களில் காட்சி அளிப்பதை ஒரு நாளும் மறந்து விடாதீர்கள்.

இப்படிப்பட்ட யுத்தத்தில் நாம் நிற்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் கர்த்தருக்குள் ஒரு போர் வீர்ராய் மாற வேண்டும்.

அடுத்ததாக, யுத்தம் செய்வதற்கு நாம் போர் வீர்ராய் இருந்தால் மட்டும் போதாது, நம்முடைய கையில் என்ன வேண்டும் தெரியுமா? யுத்தம் செய்வதற்கான ஆயுதம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நமக்கு தேவையான ஆயுதம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தவர்களாக வாழ வேண்டும்.

இன்றைக்கு அனேக சபைகளில் யாருடன் யுத்தம் என்பதையும் எப்படிப்பட்ட ஆயுதம் நமக்கு வேண்டும் என்பதைப் பற்றியதான சரியான அறிவு இல்லாததினாலும் மற்றும் சபைகளில் இதைக் குறித்து போதிக்கப்படாதினாலும் இவர்கள் தேர்தல் என்கிற பேரில் கத்தியையும் கம்பையும் எடுத்து போதகர் மண்டையை உடைப்பதை நாம் நேரடியாக அல்லது பலவிதமான ஊடகங்களின் வழியாக நாம் காண முடிகிறது.

அப்.பவுல் எழுதுகிறார், வேதம் சொல்லுகிறது, எபேசியர் 6:12 – ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடும்மல்ல துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

நமக்கு மாம்சத்தோடு போராட்டம் இருக்குமானால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து இருக்க மாட்டார். இந்த உலகத்தில் வந்து எல்லாரையும் அழிப்பதற்காக, இன்று உலகத்தில் பேசப்படுகிற எல்லா ஆயுதங்களையும் அவர் கையில் எடுத்துக் கொண்டு, அவைகளைத் தம்முடைய பிள்ளைகளுக்கும் கொடுத்திருப்பார்.

ஆனால் அப்.பவுல் எழுதுகிறார்,2கொரி 10:~3,4 – நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும் மாம்சத்தின்படி போர் செய்கிறவர்கள் அல்லர்.

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல் அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது.

எனவே ஒவ்வொருவருடைய கையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கிற ஆயுதங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அது விசுவாசியானாலும் சரி ஊழியக்காரர் ஆனாலும் சரி இரண்டு பேரின் கையிலும் ஆவிக்குரிய ஆயுதங்கள் இருக்க வேண்டும். இன்று அனேக சபைகளில் போதகர்கள் மாத்திரம் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் விசுவாசிகளுக்கோ அவர்கள் ஒருபோதும் வாங்கிக் கொடுப்பதில்லை, ஆகவேதான் ஒவ்வொரு பிரச்சனைகள் வரும் போது நாம் ஊழியக்காரர்களைத் தேடி செல்ல வேண்டியதாய் இருக்கிறது. அல்லது எப்பொழுதும் தொலைபேசியை நாம் பக்கத்தில் வைத்திருக்க வேண்டியதாய் இருக்கிறது.

ஆனால் நெகேமியா 4:17 சொல்லுகிறது, தேவனுடைய அலங்கத்தைக் கட்டுகிற ஒவ்வொருவருடைய கையிலும் ஆயுதம் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆதியாகமம் 27:3 – வேட்டைக்கு செல்கிறவர்கள் ஆயுதங்களோடு செல்ல வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது.

ஏன் ஊழியக்காரர்களிடத்தில் மாத்திரமல்ல விசுவாசிகளிடத்திலும் ஆயுதம் இருக்க வேண்டும் தெரியுமா? சில நேரங்களில் ஊழியக்காரர்கள் விழுந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் சிலர் பெலவீனங்களின் நிமித்தம் சோர்ந்து போக நேரிடும் அப்படிப்பட்ட சூழ் நிலைகளில் விசுவாசிகள் தான் அவர்களைத் தூக்கி விட வேண்டும், இவர்கள் தங்கள் ஊழியக்காரர்களைத் தூக்கி விட வேண்டுமானால் இவர்களிடம் ஆயுதங்கள் இருக்க வேண்டும்.

இன்று அனேகர் ஆயுதம் இல்லாமல் வேட்டைக்குச் சென்று அந்த வேட்டையில் தங்களிடம் சரியான ஆயுதம் இல்லாததின் நிமித்தம் பிசாசினால் சாகடிக்கப்படுவதை நாம் அனுதின வாழ்க்கையில் காண முடிகிறது.

பாருங்கள், அப்போஸ்தலர் 19:14,15,16 – பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழு பேர் இப்படிச் செய்தார்கள், பொல்லாத ஆவி அவர்களை நோக்கி இயேசுவை அறிவேன் பவுலையும் அறிவேன் நீங்கள் யார் என்று சொல்லி பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள் மேல் பாய்ந்து பலாத்காரம் பண்ணி அவர்களை மேற்கொள்ள அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப் போனார்கள் எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே, கர்த்தர் நம்மை ஆயுதமாக மாற்ற விரும்புகிறார் என்பதை பின்வரும் வசனத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது, எரேமியா 51:20 – நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன் நான் உன்னைக் கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன் உன்னைக் கொண்டு ராஜ்ஜியங்களை அழிப்பேன்.

ஒரு காரியத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், கர்த்தர் உங்களை இந்த தேசத்திற்கு கொண்டு வந்த்தின் நோக்கம் என்ன தெரியுமா? உன்னை பெரிய யுத்த வீரனாக மாற்றி உன்னுடைய கையில் பலமான ஆயுதத்தைத் தரும்படியாக, எதற்காக தெரியுமா? இந்த உலகம் முழுவதிலும் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்டும்படியாகவும் பிசாசின் கோட்டைகளை உடைக்கும்படியாகவும் என்பதை மறந்து விட வேண்டாம். சுருங்கச் சொல்லப்போனால் பிசாசானவன் அடிமைப் படுத்தி வைத்திருக்கிற எல்லா ஆத்துமாக்களையும் விடுதலை செய்யும்படியாக என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக நம்முடைய ஆயுதம் எப்படியாக இருக்க வேண்டும்?

பிரசங்கி 10:10 ல் சொல்லப்பட்டது போல, ஆயுதம் இருந்தால் மட்டும் போதாது அது மிகவும் கூர்மையாக்கப்பட வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் அதிகமான போரட்டங்களை நாம் சந்திக்க நேரிடும்.

இன்று அனேகர் ஆவிக்குரிய வாழ்க்கையில் விழுந்து போவதற்கும் பின்மாறி செல்வதற்கும் காரணம் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த ஆவிக்குரிய ஆயுதம் மழுங்கலாக இருப்பதே ஆகும்.

பாருங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஆயுதங்களை அவர்கள் அவ்வப்போது தீட்டி கூர்மையாக்கி வைத்திருப்பார்கள் எதற்காக தங்களுடைய வேலை ஒழுங்காகவும் சீக்கிரமாகவும் முடிய வேண்டும் என்பதற்காக.

இதேபோலத் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையானலும் சரி குடும்ப வாழ்க்கையானலும் சரி தேவனோடு இருக்கிற ஆவிக்குரிய உறவு ஒவ்வொரு நாளும் தீட்டப்படவில்லையென்றால் அங்கு சமாதானம் இருக்காது, சந்தோஷம் இருக்காது மற்றும் செழிப்பை பார்க்க முடியாது.

நம்முடைய ஆயுதம் தீட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் சில வசன்ங்கள் மூலமாகவும் கர்த்தர் நமக்கு தெரிவித்திருப்பதை அறியலாம். அத்தகைய வசனங்களை பின்வருமாறு பார்க்கலாம்,

யாத்4:25 – அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து அதை அவன் காலகளுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்

சங்கீதம் 7:12 – துன்மார்க்கனை வெட்டும்படியாக கர்த்தர் தம்முடைய பட்டயத்தை கருக்காக்குகிறார்

சங் 45:5 – கர்த்தருடைய அம்புகள் கூர்மையானவைகள்

நீதி 5:4 – சாத்தன் கூட தன்னுடைய பட்டயத்தை கூர்மையாக வைக்கிறான்

ஏசாயா 41:15 – இதோ போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன். நீ மலைகளை மிதித்து நொறுக்கி குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.

சாட்சி:

 

ஒரு ஆவிக்குரிய குடும்பம் ஒரு சபையில் இருந்தது, அந்த குடும்பத்திற்கு கர்த்தர் ஒரு குழந்தையை தரப் போகிறேன் என்று தம்முடைய ஊழ்யக்காரரின் மூலம் தீர்க்கதரிசினமாக் சொன்னார். இதை கேட்ட அந்த குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். இப்படியாக நாட்கள் சென்றது பலரும் அவரிடம் கேட்டகத் தொடங்கினார் எப்படியென்றால் வருஷங்கள் அதிகம் கடந்து விட்டது. இன்னும் குழந்தை இல்லையே என்பதாக.

இதற்கு அந்த பெண்மணி சொன்ன பதில் கர்த்தர் எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்து கொடுத்திருக்கிறார் நிச்சயமாக எனக்கு குழந்தை பாக்கியத்தைத் தருவார் என்பதாக நாட்கள் சென்றது அந்த பெண்மணியும் அந்த பாக்கியத்தை பெற்றுக் கொள்ளவே இல்லை. ஒரு நாள் அவர்களுடைய நண்பர் ஒருவர் ஒரு ஊழியக்காரரை ஜெபிப்பதற்காக அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த ஊழியக்கார்ரும் அவர்களுக்கு ஜெபிக்க ஆரம்பித்தார். அவர் ஜெபிக்கும் போது அந்த பெண்மணியின் கர்ப்பத்தை பிசாசானவன் அடைத்து வைத்திருப்பதை அவர் அறிந்து கொண்டு, அந்த பிசாசைக் கடிந்து கொண்டு ஜெபித்தார், அப்பொழுது பிசாசானவன் அந்த பெண்மணியின் கர்ப்பத்தை விட்டு வெளியேறுவதை அந்த பெண்மணி உணர்ந்தாள் இதன் பிறகு சீக்கிரமாக அந்த பெண்மணி கர்ப்பதிவதியானாள். இந்த தாமதத்திற்குக் காரணம் அவளுடைய ஆயுதம் மழுங்கலாக இருந்ததே ஆகும் ஆகவே தான் அவள் ஆவிக்குரிய குருடராக காணப்பட்டாள். இப்படியாக ஆயுதத்தை தீட்டாமற் போனவர்களுடைய வாழ்க்கையில் நடந்த காரியங்களை நாம் வேதத்தின் அடிப்படையில் பின்வருமாறு பார்க்கலாம்.

1சாமு 17:11 – சவுலும் இஸ்ரவேல் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.

பெரிய பெரிய யுத்தத்தில் ஜெயம் எடுத்தவர்கள் இந்த இஸ்ரவேல் ஜனங்கள், அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய பெலத்தைக் கண்டு பயந்து போன பாலாக் என்கிற ராஜா இவர்களை சபிப்பதற்காக பிலேயாமை அழைத்து வருவதை நாம் வேதத்தில் பார்க்க முடிகிறது.

ஆனால் இவ்வளவு விசேஷித்தமான ஜனம் இப்பொழுது பயந்து நடுங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது, ஏன் இந்த பயம் கலக்கம் இவர்களுக்கு வந்தது. இவர்களுடைய ஆயுதம் கூர்மையில்லாமல் காணப்பட்டது என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. அதாவது இவர்களுக்கும் கர்த்தருக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதனால் இவர்களுடைய ஆயுதம் கூர்மையாக்கப்பட வேண்டிய இடத்தை அடைத்துப் போட்டார் என்று வேதம் நமக்கு காட்டுகிறது.

எப்படியென்றால் அன்றைய நாட்களில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் ஆயுதங்களை கூர்மையாக்க வேண்டுமானால் பெலிஸ்தருடைய இடத்திற்கு போக வேண்டும். வேதத்தை வாசிக்கும் போது இத்தகைய காரியம் நமக்கு புரிய வரும்.

1 சாமுவேல் 13:19,20,21,22 – எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால் இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொள்ளன் அகப்படவில்லை.

இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும் தங்கள் மண்வெட்டிகளையும் தங்கள் கோடரிகளையும் தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு பெலிஸ்தரிடத்துக்குப் போக வேண்டியதாயிருந்தது.

கடப்பாரைகளையும் மண்வெட்டிகளையும் முக்கூருள்ள ஆயுதங்களையும் கோடரிகளையும் தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது

யுத்த நாள் வந்த போது சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானனுக்குமேயன்றி சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது.

சில நேரங்களில் நம்முடைய ஆயுதத்தை கூர்மையாக்குவதற்காக சத்துருக்களை கர்த்தர் பெருகச் செய்கிறார். எனவே நமக்கு சத்துருக்கள், போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகள் அதிகரிக்கும் போது கவலைப்படாமல் மாறாக சந்தோஷப்படுங்கள் ஏனென்றால் நம்முடைய ஆயுதங்கள் கூர்மையாகிக் கொண்டே போகிறது என்பது அர்த்தமாகும்.

இதோ இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரைத் தள்ளி விட்டு சவுலை தங்களுடைய ராஜாவாக ஏற்படுத்தினர். இவன் தன்னுடைய ஜனங்களை தன்னுடைய ஆலோசனையின் படி நடத்தி கர்த்தரை விட்டு தூரமாக கொண்டு போய்விட்டான் இதனால் இவர்களுடைய ஆயுதம் மழுங்கலாகிப் போனது என்று பார்க்கிறோம்.

யாரெல்லாம் தங்களுடைய சுய நினைவுகளின் படியும் மற்றும் யாரெல்லாம் மனுஷர்களின் ஆலோசனைகளின்படியும் நடக்கிறார்களோ அவர்களின் நிலைமையும் சவுலுக்கும் அவனுடைய ஜனங்களுக்கும் ஏற்பட்ட பரிதாப நிலைமையே தொடரும் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.

வேதம் சொல்லுகிறது,  மனுஷர் மேல் நம்பிக்கை வைத்து மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 17:5.

இரண்டாவதாக, 2சாமுவேல் 12:15,16 – அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெர்ற ஆண்பிள்ளையை அடித்தார் அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனை பண்ணி உபவாசித்து உள்ளே போய் இராமுழுவதும் தரையிலே கிடந்தான் இதோ இராமுழுவதும் தாவீது ராஜா உபவாசித்து ஜெபித்த போதும் கர்த்தர் தாவீதுனுடைய ஜெபத்தைக் கேட்கவில்லையே இதற்குக் காரணம் என்ன? இதற்கு முந்திய அதிகாரங்களை வாசிக்கும் போது ஒரு காரியம் நமக்கு ஆச்சரியமாய் இருக்கும் அது என்னவென்றால் தாவீது எப்பொழுதெல்லாம் கர்த்தரை நோக்கி கூப்பிட்டாரோ அப்பொழுதெல்லாம் உடனே கர்த்தரிடம் இருந்து பதில் வந்தது என்று பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் 1சாமுவேல் 16:18, 17:37, 18:12,14 வசனங்கள் சொல்லுகிறது, கர்த்தர் தாவீதோடு கூட இருந்தார் இப்படியாக கர்த்தரோடு நெருக்கமாக இருந்த தாவீதின் ஆயுதம் ஏன் மழுங்கலாய் போனது?

2சாமுவேல் 11:1 – மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்த போது தாவீது யோவாபையும் அவனோடே கூடத் தன் சேவகரையும் இஸ்ரவேல் அனைத்தையும் அம்மோன் புத்திரரை அழிக்கவும் ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான் தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.

இதோ யுத்தத்திற்கு செல்ல வேண்டிய தாவீது ராஜாவோ எருசலேமில் ஓய்வு எடுக்கத் தொடங்கினார் இதற்குக் காரணம் அவருடைய வாழ்க்கையில் வந்த சோம்பேறித்தனம். இரத்தம் சிந்த வேண்டிய அவருடைய பட்டயம் இப்பொழுது உறையில் பத்திரப்படுத்தப்பட்டது. இந்த சோம்பேறித்தனம் அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தூங்க செய்தது. இதனிமித்தமே அவர் பெரிய பாவத்தை செய்தார் என்றும் பார்க்கிறோம். வேதம் தூக்கத்தை குறித்து என்ன சொல்லுகிறது?

நீதி 6:,9,10,11 – சோம்பேறியே நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தை விட்டு எழுந்திருபாய்?

இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக் கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப் போலவும் வரும்

இன்று அனேகர் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தூங்கி இளைப்பாறுவதற்குக் காரணம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுகிற சோம்பேறித்தனம். இதனால் அனேகர் தங்களுடைய வாழ்க்கையில் ஆசீர்வாதங்களைப் பெறாதப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் பலர் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய இழப்புகளை அநுபவித்து வருகிறார்கள்.

வேதம் சொல்லுகிறது, 1பேதுரு 5:8 – தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள் விழித்திருங்கள் ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

கர்த்தர் தாமே இந்த செய்தியின் மூலம் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

bottom of page