கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டு
சகோதரி. அனு ஃபெஸ்லின்
அன்றாட வாழ்க்கையில் எப்பொழுதும் தன்னிடத்தில் இருக்கிறவைகளையே மிகைப்படுத்தி மேன்மையாக கருதுவது மனித இயல்பு. சகமனிதர்களின் குறைவுகளை சுட்டிக்காட்டி தன்னுடைய திறமை, பொருள், செல்வம், அந்தஸ்து போன்றவற்றை பெருமையாக பேசி பிறரை காயப்படுத்தி மகிழ்கின்ற கூட்டத்தினரும் இவ்வுலகத்தில் உண்டு. தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் தேவன் தந்த ஆசீர்வாதங்களை நம் சுயபெலத்தால் பெற்றுக்கொண்டதை போல மேன்மைப்பாராட்டுவது தேவனுக்கு உகந்ததல்ல. “மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்; தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு கற்று தருகிறது [2கொரிந்தியர்:10:17,18]. உலக வாழ்க்கையில் தான் ஒரு சிறந்த ராஜாவாய் இருந்த போதிலும் தாவீது தன்னை குறித்து மேன்மை பாராட்டவில்லை. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். ஆம் அன்பானவர்களே தாவீது ராஜாவின் ஆத்துமா தன்னை சிருஷ்டித்த தேவனை எப்பொழுதும் புகழ்ந்து மகிழ்ந்தது. அதனை கேட்டு சிறுமைப்பட்டவர்கள் மகிழ்ந்தார்களாம். சங்கீதக்காரனாகிய என்ன அருமையான அனுபவம் பாருங்கள். நம்முடைய மேன்மைபாராட்டல் யாரைக் குறித்தது? சிந்திப்போம்? கிறிஸ்தவர்களாகிய நாம் எதைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டும் என்று வேதவசனங்கள் வாயிலாக தியானிப்போம்.
மனிதன் கர்த்தரைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டியவைகள்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டு
தாவீது ராஜா கூறுகிறார் “அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக[I நாளாகமம்:16:10, 35]. நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். அவரை தவிர பரிசுத்தவான் ஒருவனும் இந்த உலகத்தில் இல்லை. நம்முடைய பாவத்தினின்று நம்மை மீட்டு பரிசுத்தப்படுத்தின, விலையேறபெற்ற பரிசுத்த இரத்தத்துக்கு சொந்தக்காரர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. இந்த பரிசுத்த இரத்தம் இல்லாமல் நமக்கு இரட்சிப்பு இல்லை. பவுலடியார் கூறுகிறார் “இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே அந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே அவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார் [எபிரெயர்:10:10,14]. எவ்வளவு பெரிய பாக்கியவான்கள் நாம். நம்மிடத்தில் இருக்கிற எல்லாவற்றைவிடவும் விலையுயர்ந்த இரட்சிப்பை அவருடைய பரிசுத்த இரத்தத்தால் பெற்றுக்கொண்ட நாம் தேவனுடைய பரிசுத்த நாமத்தை குறித்து எப்போதும் மேன்மை பாராட்ட கடனாளிகளாய் இருக்கிறோம். இதனை நன்கு அறிந்திருந்த தாவீது ராஜா கூறுகிறார்” என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது”[சங்கீதம்:145:21].அவருடைய பரிசுத்தத்தை உணர்ந்தவர்களாகிய நமக்கு வேதம் கொடுக்கிற கட்டளை “ நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய்”[ஏசாயா:41:16]. பூமியில் மாத்திரமல்ல பரலோகத்தில் சிங்காசனத்தை சுற்றிலும் இருந்த நான்கு ஜீவன்களும், “ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லி கொண்டிருகின்றன. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், நாமும் மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்த ஒப்புகொடுத்தவர்களாய் அவருடைய பரிசுத்த நாமத்தை மாத்திரமே மேன்மைபாராட்டுவோம்.
கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற தேவனை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்து மேன்மைபாராட்டு
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம். மேன்மை பாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்; இவைகளின் மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர்சொல்லுகிறார்[எரேமியா: 9:23,24] . பொல்லாப்பானதை செய்து தங்கள் வழிகளில் நடந்து தங்கள் கபடத்தினிமித்தம் தேவனை அறியமாடோமென்றிருந்த இஸ்ரவேலரை பார்த்து தேவன் கூறிய வசனம் இது. நம்முடைய தேவன் கிருபையும் இரக்கமுள்ளவர். ஆனால் அவர் நீதியுள்ள நியாதிபதி. இஸ்ரவேல் ஜனங்களை கிருபையாய் நடத்தி வந்த தேவன் அவர்கள் பாவம் செய்த போது நீதியை சரிக்கட்டுகிற தேவனாய் செயல்பட்டார். வேதம் கூறுகிறது “கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்[ஏசாயா :16:5 ]. அவரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. அவர் கிருபையுள்ளவர். ஆனால் நமக்கு நீதியை சரிகட்ட வரப்போகும் நியாதிபதியும் அவரே. நம்முடைய தேவன் நீதியுள்ள நியாயாதிபதியாய் இருந்தும் அவருடைய கிருபையின் ஐசுவரியாயத்தினாலே பாவத்தின் தண்டனையினின்று நம்மை இரட்சித்தார். இப்படி தேவ இரக்கத்தையும் தயவையும் பெற்று இரட்சிக்கப்பட்ட நாம் தேவனை அறிய மனமற்றவர்களாய் அவரை மறந்து நம்முடைய பொல்லாத வழிகளில் நடக்கும் போது அவருடைய கிருபையை விருதாவாக்குகிறோம். இப்படிப்பட்டவர்களை பார்த்து தேவன் கூறுகிறார் “ நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய் [ஓசியா:2:19,20]. கிருபையின் காலத்தில் வாழ்கிற நாம் அவர் கொடுத்த கிருபையை விருதாவாக்கினால் அவர் நீதியுள்ள நியாயாதிபதியாய் வரும் போது தண்டிக்கப்படுவோம் என்பதில் ஐயமில்லை. தாவீது ராஜா கூறுகிறார் “நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்[சங்கீதம்:89:14]. அன்பானவர்களே நம் இஷ்டப்படி வாழ்ந்து நம் சுயத்தைக் குறித்து மேன்மைபாராட்டினது போதும். பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தரை அறிந்து உணர்ந்து கொண்டு அவரைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
தேவனுடைய நீதியைப் பற்றி மேன்மைபாராட்டு
கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப் பற்றியே மேன்மைபாராட்டுவேன்[சங்கீதம்:71:16]. நம்முடைய தேவன் நீதியுள்ளவர். அவர் நீதியை சரிகட்டுகிற தேவன். பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், அது அவர்களுக்கு நீதியாயிருக்கும்.ஆனால் புதிய உடன்படிக்கையின் விசுவாசிகளான நம்மை அவர் தமது இரத்தத்தினாலே நீதிமான்களாகி இருக்கிறார்.பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த காலத்தில் நாம் தேவநீதிக்கு நீங்கினவர்களாய் இருந்தோம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணினார். அதாவது இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறோம். [ரோமர்:3:24;ரோமர்:5:6-11].இப்படியாய் தேவநீதிக்கு நம்மை உட்படுத்தி ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் அவருடைய நீதியை பற்றியும் மேன்மைபாராட்ட எப்போதும் கடனாளிகளாய் இருக்கிறோம். வேதம் கூறுகிறது நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை. இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள் [ஏசாயா:45:21-25]. நம்மை இரட்சிக்கவும் நீதிமானாக்கவும் வல்லமையுள்ளவர் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. எனவே நம் உலகமேன்மைகளை தள்ளிவிட்டு நம்மை பிதாவின் முன்பாக நீதிமானாக நிறுத்த வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தையே கீர்த்தனம் பண்ணுவோம்.
சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டு
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன்[கலாத்தியர்:6:14]. பவுல் ஒரு சிறந்த அப்போஸ்தலர். பல நிருபங்களை சபைகளுக்கு எழுதியவர். பல இடங்களுக்கு சென்று சுவிசேஷத்தை போதித்தவர். அத்தனை பாடுகள் உபத்திரவங்கள் பட்டு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்த போதிலும் அதை குறித்து அவர் மேன்மை பாராட்டவில்லை. நானோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேன் என்று கலாத்தியருக்கு எழுதுகிறார்.அதற்கு காரணம் கலாத்திய சபையில் மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் சிலர் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கு ஜனங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள். விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் கலாத்திய ஜனங்களின் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு அவர்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள். இன்றைய நாட்களில் நம்முடைய சபைகளில் விசுவாசிகளும் ஊழியர்களும் போட்டி போட்டு ஞானஸ்நானம் எடுக்க புதுசபை உறுப்பினர்களை கட்டாயப்படுத்துவதை நாம் காணலாம். ஞானஸ்நானம் எடுத்த அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை கைகொள்ளுவது இல்லை வருகிற புது ஆத்துமாக்களை மனந்திரும்புதலுக்கு வழிநடத்துவதுமில்லை. ஆனால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் நான் இந்த ஆத்துமாவை ஆதாயம் பண்ணினேன் என்ற மாம்சத்துக்கேற்ற மேன்மையை பெறும்படி கட்டாயப்படுத்துவதை நாம் காணலாம். அப்படிப்பட்டவர்களுக்கு பவுலடியார் சொல்லுகிறார் நான் கிறிஸ்துவின் சிலுவையைப் பற்றியே மேன்மை பாராட்டுவேன். கிறிஸ்து இயேசுவுக்குள் புதுசிருஷ்டியே காரியம். சிலுவையில்லாமல் நாம் இயேசு கிறிஸ்துவை பின்பற்றவோ பிரசங்கிக்கவோ முடியாது. சிலுவையை சுமந்து கிறிஸ்துவின் மேன்மையை எடுத்துரைப்போம்.
மனிதன் தன்னை குறித்து மேன்மைபாராட்ட வேண்டியவைகள்
பலவீனங்களைக் குறித்து சந்தோஷமாய் மேன்மைப்பாரட்டு
கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்[2கொரிந்தியர்:12:5-9]. அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய தரிசனங்கள் வெளிப்படுத்தல்களின் மேன்மையினிமித்தம் தன்னை உயர்த்தாதபடிக்கு, தேவன் அவருடைய மாம்சத்திலே ஒரு முள் கொடுத்தார். அது தன்னைவிட்டு நீங்கும்படிக்கு அவர் மூன்று முறை கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டார். கர்த்தரோ “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று சொல்லி அவருக்கு பதிலளித்தார். ஆனாலும் துவண்டுபோகாமல், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் என்று பவுல் கூறுகிறார். அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். அநேகர் மாம்சத்திற் கேற்றபடி மேன்மை பாராட்டிக் கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன். நான் மேன்மைபாராட்ட வேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன் என்று சொல்லி கிறிஸ்துவுக்காக தான்பட்ட பாடுகளைக் குறித்து புத்தியீனமாய்ப் மேன்மைபாராட்டுகிறேன் என பவுலடியார் கூறுகிறார். ஆம் அன்பானவர்களே கிறிஸ்துவினிமித்தம் நமக்கு வரும் பலவீனங்கள் நிந்தைகள் போன்றவற்றை துக்கமாய் எண்ணாமல் சந்தோஷமாய் எண்ணி தேவ வல்லமையும் பெலனும் கிருபையும் நம்மை தாங்குவதை குறித்து மேன்மைபாராட்டுவோம்.
உபத்திரவங்களிலேயும் தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டு
உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். உபத்திரவங்களின் மத்தியில் தேவனை மகிமைபடுத்துபவர்களை காட்டிலும் அவரை தூஷிப்பவர்களே அதிகம். பேதுரு இயேசுவின் மேல் அன்பாய் இருந்தும் தனக்கு உபத்திரவம் வரும் என அறிந்து தேவனை மறுதலித்ததை நாம் காணலாம். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என இயேசு கிறிஸ்து நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்[யோவான்:16:33].நாம் உபத்திரவப்படும் போது பொறுமையாய் சகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தாவீது ராஜா கூறுகிறார் நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். கட்டுகளும் உபத்திரவங்களும் தனக்கு வைக்கப்பட்டிருந்ததை பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவித்திருந்தும் பவுலடியார் கூறுகிறார் காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது[2கொரிந்தியர்:4:17]. இயேசுவின் அன்பான சீஷன் யோவான் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷத்தில் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் திரளான கூட்டமான ஜனங்கள் நிற்கக்கண்டேன் என்கிறார். அந்த ஜனங்களை குறித்து யோவான் கூறுகிறார் “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் . இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.சிங்காசனத்தில் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றகளண்டைக்கு நடத்துவார். தேவன் தாமே அவர்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார் என்று அவர்கள் அடைய போகிற நித்திய கனமகிமையை குறித்து யோவான் கூறுகிறார். தனக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன் என்று கூறிய அப்போஸ்தலர் பவுலை நம் மாதிரியாக கொண்டு நாமும் உபத்திரவங்களில் பொறுமையாயும் சந்தோஷமாயும் இருந்து தேவமகிமையை அடைவோமென்கிற விசுவாசத்தோடு மேன்மைபாராட்டுவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே சர்வ சிருஷ்டிகராகிய தேவனை மேன்மைப்படுத்தி புகழ்ந்து பாட படைக்கப்பட்ட மனிதர்கள் நாம். சிருஷ்டிகர்த்தாவாம் தேவனை மறந்து சிருஷ்டியை குறித்து மேன்மைபாராட்டவது மனிதனுடைய புத்தியீனம். வேதம் கூறுகிறது நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆம் அன்பானவர்களே நித்திய ஜீவனை நமக்கு தந்து நித்திய அழிவினின்று நம்மை மீட்ட தேவாதி தேவனாம் இயேசு கிறிஸ்துவைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். தாவீது கூறுகிறார்” சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்[சங்கீதம்:20:7,8]. கர்த்தரைக் குறித்து மேன்மைபாராட்டுகிற மனிதனைக் கர்த்தர் உயர்த்துவார். கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் மேன்மைப்படுத்தி ஆசீர்வதிப்பாராக.ஆமென்.