சகலத்தையும் நன்மையாக மாற்றுகிறார்
Bro. Edwin Corter (Sohar-Oman)
வேதம் சொல்லுகிறது, அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28.
நம்முடைய வாழ்க்கையில் என்ன என்ன காரியங்கள் நமக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ அவைகள் எல்லாவற்றையும் கர்த்தர் நன்மையாக மாற்றப் போகிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது எதைக் குறித்தும் முறுமுறுக்காமல் எல்லாவற்றிலும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம்.
பாருங்கள் வேதத்தில் யோசேப்பு என்கிற மனுஷனைக் குறித்து வாசிக்கிறோம். அவன் பெற்ற வாக்குத்தத்தம் என்னத் தெரியுமா? சகலத்தையும் ஆளுகை செய்கிறவனாக கர்த்தரால் தரிசினம் பெறுகிறான், ஆனால் என்ன நடந்தது, உலகத்தில் உள்ள எல்லாக் காரியங்களும் அவனை ஆளுகை செய்ததை நாம் வேதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதனால் அவன் ஒருபோதும் சோர்ந்து போகாமல் மாறாக கர்த்தருடைய வேளைக்காக அவர் காத்திருப்பதை நாம் உணர முடிகிறது. காலங்கள் சென்றது ஒருவேளை பிசாசு நினைத்திருக்கலாம் யோசேப்பின் வாழ்க்கை இதோடு முடிந்து போய் விடும் என்று ஆனால் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் ஆகவே கர்த்தர் சகலத்தையும் அவருடைய வாழ்க்கையில் நன்மையாக மாற்றிக் கொடுத்தார்.
பாருங்கள் யோசேப்பு ஆதியாகமம் 45 ஆம் அதிகாரத்தில் தன் சகோதரர்களைப் பார்த்து இப்படியாக சொல்லுகிறார் நீங்கள் எனக்கு தீமை செய்ததற்காக கவலைப் பட வேண்டாம் ஏனென்றால் கர்த்தர் எல்லா தீமைகளையும் எனக்கு நன்மையாக மாற்றிக் கொடுத்தார்.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே எதைக் குறித்தும் கவலைப் பட வேண்டாம் உங்களுக்கு முன்பாக இருக்கும் சூழ் நிலைகளைப் பார்த்து பயப்படாமல் எல்லாவற்றையும் அதாவது கோணலானவைகளையும் நேராக்கி மாற்றிக் கொடுக்கிற இயேசுவைப் பார்த்து ஓடுங்கள் அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பிசாசானவன் கொண்டுவருகிற எல்லா துக்கங்களும் சந்தோஷமாக மாறும் என்பதை மறந்து விட வேண்டாம்.
ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் அற்புதம் சுகமளிக்கும் கூட்டம் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது, அந்த கூட்டத்திற்கு ஏறக்குறைய 54 வயது நிரம்பிய பெண்மணி ஒருத்தியை முடமாக வீல் இருக்கையில் வைத்துக் கொண்டு வந்தனர், அப்பொழுது அந்தக் கூட்டத்தை நடத்தின போதகர் ஒவ்வொரு மனுஷனுக்காக ஜெபித்துக் கொண்டு வரும் போது இந்த பெண்மணியை சந்திந்தார் அப்பொழுது அவர் கேட்ட கேள்வி எத்தனை வருடங்கள் நீங்கள் முடவராக இருக்கிறீர்கள் அதற்கு அந்த பெண்மணி சொன்ன பதில் பிறந்தது முதல், அதற்கு அந்த போதகர் அப்படியென்றால் உங்களுடைய வயது என்னவென்று கேட்டார் அதற்கு அந்தப் பெண்மணி சொன்னப் பதில் 54 வயது.
போதகர் கேட்டார் நீங்கள் மருத்துவரை சென்றுப் பார்க்கவில்லையா? அதற்கு அந்த பெண்மணி சொன்ன பதில் சென்று பார்த்தோம் என்னைப் பார்த்து விட்டு மருத்துவர் கொடுத்த பதில் இனிமேல் நீ நடக்கவே முடியாது. இதைக் கேட்ட போதகர் சொன்னார் மருத்துவர் அப்படியா சொன்னார் அப்படியென்றால் கர்த்தர் உன்னை குணமாக்கப் போகிறார் என்று சொல்லி அந்த பெண்மணி மேல் கைகளை வைத்து ஜெபித்த போது உடனே அவள் அந்த வியாதிலிருந்து குணப்பட்டு, 54 வருடங்களாக நடக்க முடியாமல் இருந்த அந்த பெண்மணி எழுந்து நடந்து சென்றாள்.
எனக்குப் பிரியமான ஜனங்களே வியாதியின் கொடுமையைப் பார்க்காதீர்கள் மற்றும் மனுஷர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு பயந்து விடாதீர்கள் ஒரு காரியத்தை மாத்திரம் உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள், கர்த்தராகிய இயேசுவினால் செய்யக் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை [ லூக்கா 1:37 ]
யாருக்கு கர்த்தர் நன்மைகளை செய்கிறார்?
இந்த வாக்குத்தத்தை நாம் சுதந்தரிக்க வேண்டுமானால் முதலாவது கர்த்தர் சொல்லுகிற நிபந்தனைக்கு கீழ்ப்படிய வேண்டும்.
அவர் சொல்லுகிற நிபந்தனை என்னத் தெரியுமா? வசனத்தின் முதல் பகுதி சொல்லுகிறது, யாரெல்லாம் தம்மிடத்தில் அன்பு கூறுகிறார்களோ அவர்களுக்கே எல்லா சூழ்நிலைகளையும் நன்மையாக மாற்றுகிறார்.
ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, என்னை சிநேகிக்கிறவர்களையே நானும் சிநேகிக்கிறேன் – நீதி 8:17, ஆகவேதான் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் அவர் அன்பைக் குறித்து எழுதிவைத்திருக்கிறார்.
யாத் 20:6 மற்றும் உபாகமம் 5:10 சொல்லுகிறது, என்னிடத்தில் அன்புகூர்ந்து என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறார்
உபா10:12,13 – அன்பை மாத்திரம் தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்
உபா 13:3 – நமக்கு அவர் சோதனையை எதற்காக அனுமதிக்கிறார் தெரியுமா? நம்முடைய அன்பின் ஆழம் எவ்வளவு என்பதை அறியும்படியாக
ஆகவேதான் யாக்கோபு 1:12 ல் கர்த்தர் இப்படியாக எழுதுகிறார் சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அப்படிப்பட்டவர்களுக்கே அவர் ஜீவ கிரீடத்தைக் கொடுக்கிறார்.
உபா 30:6 – ஒரு மனுஷன் அன்பினால் பிழைக்கிறான்
உபா 30:16 – கர்த்தருடைய அன்பு நம்மிடத்தில் இருக்கும் போது பெருக்கமும் ஆசீர்வாதமும் உண்டாகிறது.
நியா 5:31 – கர்த்தரிடத்தில் அன்பு கூருகிறவர்களோ வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருக்கக்கடவர்கள்
மாற்கு 12:33 – பலிகளைப் பார்க்கிலும் அன்பு பெரிதாயிருக்கிறது
கடைசியாக, 1கொரி 16:22 சொல்லுகிறது, ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற் போனால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் கர்த்தர் வருகிறார்.
அன்பை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தது இந்த பரிசுத்த வேதாகமம் ஆகும். எப்படியென்றால் பழைய ஏற்பாடு அன்பைப் பற்று பேசினது அந்த நாட்களில் யாரும் வேதம் சொன்ன அந்த அறிவுக்கெட்டாத அன்பை நேரடியாக பார்த்ததில்லை ஆனால் புதிய ஏற்பாடு அந்த அன்பை ஒவ்வொருவரும் பார்க்கும்படிச் செய்தது.
எப்படியென்றால், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நம்முடைய பாவங்களை நிவித்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 1யோவான் 4:8,9,10
கர்த்தரால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டவர் அப்.பவுல், இந்த மனுஷன் அதிக வெளிப்பாடுகளைப் பெற்றவர் என்று சொன்னால் அது சாலப்பொருந்தும். ஏனென்றால் இவரே வேதத்தில் அதிக நிருபங்களை எழுதியவர்.
இவருடைய வெளிப்பாடுகளைக் குறித்து பார்க்கலாம், 1கொரி 12 ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது அதில் பலவிதமான வரங்களைக் குறித்து எழுதியிருப்பார், சில அதிகாரத்தில் அன்னிய பாஷைகளை பேச வேண்டாம் என்றும் சில அதிகாரங்களில் அன்னிய பாஷைகளைப் பேச தடைப் பண்ணாதிருங்கள் என்றும் குறிப்பிட்டிருப்பார்.
இன்னும் சில அதிகாரங்களில் அதிகமாக தீர்க்கதரிசின வரங்களை நாடுங்கள் என்றும், இப்படியாக பலவிதமான வரங்களைக் குறித்து வெவ்வேறுவிதமான கோணங்களில் எழுதிவைத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது, ஆனால் இவர் 1கொரி 13 ஆம் அதிகாரத்தில் தான் ஒரு மேன்மையான வரத்தைக் குறித்து எழுதுகிறார், அந்த வரத்தின் பெயர் தான் அன்பு என்று வேதம் சொல்லுகிறது.
அந்த அதிகாரத்தில் ஒரு வசனம் இப்படியாக சொல்லுகிறது, நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போல பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன். நான் புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். 1கொரி 13:11
கடைசி வசனத்தில் எழுதுகிறார், எல்லாம் நிலைத்திருக்கிறது ஆனால் அன்பே எல்லாவற்றிலும் பெரியது என்று எழுதுகிறார்.
எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே அன்பு இல்லாமல் கர்த்தருக்கு பிரியமான ஊழியம் செய்ய முடியாது மற்றும் நாம் விரும்புகிற வாழ்க்கையையும் பெற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்
யாக்கோபு 2:13 சொல்லுகிறது, ஏனென்றால் இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்.
கடைசியாக, கர்த்தரிடத்தில் அன்பு கூர்ந்த பாத்திரங்களைக் குறித்துப் பார்க்கப் போகிறோம், அவர்கள் இந்த அன்பின் மூலம் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்ட பொக்கிஷங்கள் என்னவென்று பின்வருமாறு பார்க்கலாம்.
1. முதல் பாத்திரம்: பாவியான ஸ்திரீ
லூக்கா 7:36,37,38 – இந்த வசனங்களை வாசிக்கும் போது, பரிசேயன் ஒருவன் தன்னுடைய வீட்டில் ஆண்டவராகிய இயேசுவை அழைத்து விருந்து வைப்பதையும், அந்த இடத்தில் இயேசு வந்ததை அறிந்த ஒரு பாவியான ஸ்திரீ அந்த இடத்திற்கு இயேசுவைத் தேடி வருவதையும், அந்த இடத்தில் இயேசுவுக்கு இந்த ஸ்திரீ செய்த காரியத்தையும் நாம் இந்த வசனங்களின் மூலம் அறிய முடிகிறது.
வேதம் இந்த ஸ்திரீயின் பாவத்தைக் குறித்து என்ன சொல்லுகிறது என்பதைப் பார்க்கலாம்,
யோவான் 8:5 – இவள் நியாயப்பிரமாணத்தின் படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவள்
நீதி 5:5,9 – அவள் வீடு பாதாளத்தில் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் அனேகருடைய ஆயுசு நாட்களைக் கெடுத்துப் போடுகிறவளாகக் காணப்பட்டாள்
நீதி 6:32 – அவள் மதி கெட்டவள்
நீதி 9:18 – கர்த்தருக்கு முன்பாக மரித்தவளாக காணப்பட்டாள்
நீதி 11:22 – அவள் பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்
இப்படிப்பட்ட ஸ்திரீ எப்படி கர்த்தருக்குப் பிரியமானவளாய் மாறினாள் அவள் செய்தக் காரியம் என்ன? ஒருவேளை இந்த ஸ்திரீ எங்கேயாவது ஆண்டவராகிய இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம் ஆகவே எப்படியாவது அவரை பார்த்து விட வேண்டும் என்கிற நோக்கத்தோடு தன் பாவத்தினால் சம்பாதித்த விலையுயர்ந்த பரிமளதைலத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறாள்.
இதோ அவரைப் பார்த்த மாத்திரத்தில் தன்னுடைய கையில் இருந்த விலையுயர்ந்த பொருளை அவள் குப்பையாக எண்ணினாள் அதாவது அவருடைய மேன்மை இந்த அழிந்த போகிற பொருளைக் காட்டிலும் மேன்மையானது என்பதை உணர்ந்தாள்.
வேதம் சொல்லுகிறது, ஆகிலும் எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைச் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன், அதுமட்டுமல்லாமல் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன், பிலிப்பியர் 3:7,8, மேலும் அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:11.
இந்த ஸ்திரீயானவள் தன் கையில் இருக்கிற பொருள் அவருக்கு முன்பாக ஒன்றுமேயில்லை என்பதை அறிந்து கொண்டாள். எனவே அதை அவருடைய பாதத்தில் பூசினாள் இரண்டாவது தான் கர்த்தருக்காக அதாவது கர்த்தருடைய அன்பை பெறுவதற்காக அவமானப்படவும் வெட்கப்படவும் தன்னை ஒப்புக் கொடுத்தாள்.
வேதம் சொல்லுகிறது, சிலர் தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக நிந்தைகளையும் அவமானங்களையும் அநுபவித்தார்கள்.
இந்த ஸ்திரீயானவள் கர்த்தருக்காக தன்னுடைய முழுவாழ்க்கையை அர்ப்பணித்தாள் அதாவது எந்தவொரு குறைவும் இல்லாமல் தன்னை நிறைவாக கர்த்தருக்கு தன்னுடைய வாழ்க்கையைக் கொடுத்தாள். இப்படியாக தன்னை அர்ப்பணித்த ஸ்திரீயைப் பார்த்து கர்த்தர் என்ன சொன்னார்,
லூக்கா 7:47,48 – ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன் இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி அவளை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
வேதம் சொல்லுகிறது, சங்கீதம் 2:12- கர்த்தரை முத்தம் செய்யும் போது அவருடைய கோபம் நம்மை விட்டு மாறுகிறது நீதி 10:12 – அன்போ சகல பாவங்களையும் மூடும் நாமும் இப்படியாக கர்த்தரை அன்போடு முத்தம் செய்யும் போது நாம் செய்த அனேக பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
2.இரண்டாவது பாத்திரம்: நூற்றுக்கு அதிபதி
வேதம் சொல்லுகிறது, அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான் அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். லூக்கா 7:2,3 இந்த நூற்றுக்கு அதிபதி அந்த ஊரிலே ஒரு பெரிய மனுஷனாக இருந்த போதிலும் அவனுடைய வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவனுக்கு மிகவும் பிரியமானவன் அதாவது எல்லாவற்றிலும் விசுவாசமாயிருந்த அவனுக்கு மிகவும் பிரியமான வேலைக்காரன் இப்பொழுது மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறான். இதுவரை இயேசுவைப் பார்த்திராதவன் இந்த நூற்றுக்கு அதிபதி மற்றும் அவரைத் தேடி செல்லாதவன் இப்பொழுது கர்த்தரைத் தேடி செல்கிறான் என்ன நடந்தது, லூக்கா 7:10 சொல்லுகிறது அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்த போது வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டான் அதாவது மரண அவஸ்தையான சூழ் நிலையை கர்த்தர் நன்மையாக மாற்றினார். இது எப்படி நடந்தது. இந்த அதிகாரத்தை வாசிக்கும் போது இந்த மனுஷன் இந்த அற்புதத்தை பெற்றுக் கொள்வதற்கு பாத்திரமுள்ளவனாகக் காணப்பட்டான். கர்த்தரும் இத்தகைய காரியத்தை ஏற்றுக் கொண்டார்.
எப்படியென்றால் இதோ கர்த்தருடைய பிள்ளைகள் இந்த மனுஷனைக் குறித்துக் கொடுத்த சாட்சியைப் பாருங்கள், வேதம் சொல்லுகிறது அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான். நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள் – லூக்கா 7:5.
இந்த வசனம் இந்த மனுஷன் கர்த்தரை எவ்வளவுக்கதிகமாக நேசித்தான் என்பதை நமக்கு அழகாக வெளிப்படுத்துகிறது.
வசனத்தின் முன்பகுதி என்ன சொல்லுகிறது, இந்த மனுஷன் கர்த்தருடைய பிள்ளைகளை அதிகமாக நேசித்தான் என்று சொல்லுகிறது அவன் அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை மாறாக அவனுடைய இருதயத்தில் இருந்த ஒரு காரியம் இவர்கள் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதே. இது எதை வெளிப்படுத்துகிறது என்றால் இவனிடத்தில் காணப்பட்ட கள்ளம் கபடமற்ற உண்மையான அன்பை என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
வேதம் சொல்லுகிறது, மத்தேயு 25:40 – மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களா அதை எனக்கே [கர்த்தருக்கே] செய்தீர்கள் ஆம் இந்த மனுஷன் யூத ஜனங்களையல்ல, இந்த அன்பு மூலமாக கர்த்தரே நேசித்தான் என்று வேதம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. அப்படியென்றால் தேவனுடைய அன்பு நம்மிடத்தில் இருக்குமானால் நாம் நிச்சயமாக ஜாதி பார்க்கமாட்டோம், எந்த சபை என்று பார்க்காமல் பட்சபாதமற்ற அன்பை வெளிப்படுத்துவோம்.
வசனத்தின் இரண்டாம் பாகம் சொல்லுகிறது, அவன் கர்த்தருக்கென்று ஒரு ஜெப ஆலயத்தைக் கட்டினான், இத்தகைய காரியம் எதைக் குறிக்கிறது கர்த்தர் வாசம் செய்யும்படியாக தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கென்று ஒரு இடத்தை கட்டி வைத்திருத்தான் என்று அறிகிறோம்.
அன்றைய நாட்களில் கர்த்தருடைய மகிமை வெளிப்படுகிற கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி ஒவ்வொரு இடத்திற்காக கொண்டு செல்லப்பட்டது, இது கர்த்தருக்கு மிகவும் விசனமாக இருந்தது. ஆனால் வேதம் சொல்லுகிறது தாவீது என்கிற மனுஷன் கர்த்தருக்கென்று ஒரு நிலையான வாசஸ்தலத்தைக் கட்டினான் [ஆவிக்குரிய கூடாரம்]. இத்தகைய காரியத்தை நாம் சங்கீதம் 132 ஐ வாசிக்கும் போது தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறது.
தாவீதுக்கு தெரியும் கர்த்தர் எப்பொழுதும் தன்னோடு இருப்பாரானல் தன்னுடைய வாழ்க்கை எப்படியிருக்கும் ஆகவே தான் கர்த்தருக்கென்று தன்னுடைய வாழ்க்கையில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்து கொடுத்தான், இதைத்தான் இந்த நூற்றுக்கு அதிபதியும் செய்தான் என்று பார்க்கிறோம்.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே உங்களுடைய வாழ்க்கையில் கர்த்தருக்கென்று ஒரு வாசஸ்தலத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களா என்பதை சிந்தித்து பாருங்கள்.
ஏனென்றால் விடுதலை வேண்டும், சூழ் நிலைகள் மாற வேண்டும், தீமைகள் நன்மைகளாக மாற வேண்டும் என்று விரும்புகிறவர்கள், முதலாவது கர்த்தருடைய ஆவி வேண்டும், கர்த்தருடைய ஆவி நம்மிடத்தில் இருக்க வேண்டுமானால் அவர் வாசம் செய்கிற இடமாக நாம் மாற வேண்டும் அப்பொழுது மாத்திரமே தேவ அன்பு நமக்குள் நிறைந்து காணப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இப்படியாக அன்பு கூர்ந்த இந்த நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து கர்த்தர் கொடுத்த சாட்சி என்னத் தெரியுமா? இப்படிப்பட்ட மனுஷனை என்னுடைய ஜனங்கள் மத்தியில் பார்த்ததேயில்லை என்பதாக.
3.மூன்றாவது பாத்திரம்: யோசபாத்
வேதம் சொல்லுகிறது, 2நாளா 18:31 – ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில் இவன் தான் இஸ்ரவேளின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான் கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார் அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.
பாருங்கள் கர்த்தருக்கு பிரியமில்லாத இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபோடு இவன் கைக்கோர்த்தான் இதனால் கர்த்தர் யோசபாத் மேலும் கோபம் கொண்டார், இந்த விஷயத்தில் யோசபாத் ராஜா கர்த்தருக்குச் செவிகொடுக்காமல் போனான் என்று பார்க்கிறோம். இதனால் யோசபாத் ஆபத்தான சூழ் நிலையில் சிக்கிக் கொண்டான் என்று வேதத்திலிருந்து அறிகிறோம்.
ஆனால் கர்த்தரோ அவன் மேல் இரக்கங் கொண்டு அந்த ஆபத்தான சூழ் நிலையை அவனுக்கு நன்மையாக மாற்றிக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஏன் கர்த்தர் யோசபாத்தை இவ்வளவு அதிகமாக நேசிக்க வேண்டும்.
11நாளாகமம் 17 ம் அதிகாரம் 3,4,8,9 இந்த வசனங்கள் மூலம் யோசபாத் கர்த்தர் மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கர்த்தர் யோசபாத்தோடிருந்தார் அவன் பாகால்களைத் தேடாமல் தன் தகப்பனாகிய தாவீது முன் நாட்களில் நடந்த வழிகளில் நடந்து தன் தகப்பனுடைய தேவனைத் தேடி இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல் அவருடைய கற்பனைகளின்படி நடந்து கொண்டான் கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங் கொண்டது அவன் மேடைகளையும் விக்கிரத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான். அதுமாத்திரமல்ல கர்த்தருடைய வார்த்தையை மிகவும் நேசித்தான் ஆகவே கர்த்தருடைய உபதேசத்தை சொல்லும் படியாக நியமித்த ஒவ்வொருவருடைய கையிலும் வேத புஸ்தகத்தை கொடுத்திருந்தான் என்றும் பார்க்கிறோம்.
இத்தகைய வசனங்களே இவன் கர்த்தர் மேல் வைத்த அன்புக்கு சான்றாக சொல்லப்படுகிறது. இத்தகைய அன்மே யோசபாத்தை பெரிய ஆபத்திலிருந்து உயிர் பிழைக்கச் செய்தது என்று சொன்னால் அது மிகவு சரியானதாக இருக்கும்.
4.நான்காவது பாத்திரம்: எசேக்கியா ராஜா
வேதம் சொல்லுக்கிறது, அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான், அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவனை நோக்கி நீர் உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும் நீர் பிழைக்கமாட்டீர் மரித்து போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் 2இராஜாக்கள் 20:1.
இந்த வசனத்தைப் பார்க்கும் போது எசேக்கியாவின் வாழ்க்கை முடிவுக்கு வருவதை அதாவது அவன் மரணத்தை ருசிபார்க்க போகிறார் என்று தம்முடைய ஊழியக்காரர் மூலம் கர்த்தர் வெளிப்படுத்துகிறார்.
ஆனால் நான்காவது மற்றும் ஐந்தாவது வசனத்தை வாசிக்கும் போது நமக்கு ஆச்சரியமாய் இருக்கும் ஏனென்றால் எசேக்கியா மரிக்கப் போகிறார் என்று சொன்ன கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார் நான் எசேக்கியாவின் சூழ் நிலையை மாற்றி அவனுக்கு நன்மை செய்யப்போகிறேன்.
இத்தகைய காரியம் எப்படி நடந்தது, ஏசாயா எசேக்கியாவின் மரணத்தை அறிவித்து விட்டு பாதி முற்றத்தைத்தான் தாண்டியிருப்பார் கர்த்தருடைய மனம் மாறிற்று என்று பார்க்கிறோம்.
இதற்குக் காரனம் என்ன எசேக்கியா ராஜா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தார் அந்த விண்ணப்பத்தில் தான் கர்த்தரிடம் எவ்வளவாய் அன்பு வைத்திருந்தேன் என்பதையும், அவருடைய கற்பனைகளின் படி நடந்ததையும் தெளிவுப்படுத்துவதை நாம் வேதத்தின் மூலம் பின்வருமாறு காணலாம்.
வேதம் சொல்லுகிறது, அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக் கொண்டு கர்த்தரை நோக்கி, ஆ கர்த்தாவே நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான் 2இராஜா 20:2,3. இத்தகைய வார்த்தையைக் கேட்டு கர்த்தர் கொடுத்த மறுமொழியைப் பாருங்கள், உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவிப்பேன் 2இராஜா 20:6.
எனக்குப் பிரியமான கர்த்தருடைய பிள்ளைக்களே ஒரு நாளும் சூழ் நிலைகள் நமக்கு சாதகமாக இருக்கிறதா இல்லையா என்பதைக் குறித்து கவலைப்படாதிருங்கள். மாறாக எப்பொழுதும் கர்த்தரிடத்தில் நிலையான மாயமற்ற அன்பினால் அவரை சந்தோஷப்படுத்துங்கள். அப்பொழுது கர்த்தர் நம்முடைய எல்லா சூழ் நிலைகளையும் நமக்கு நன்மையாக மாற்றிக் கொடுப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை.
ஜெபம்:
எங்கள் அன்பு நேசரே நீர் எங்களிடம் காண்பித்த மாசில்லாத உம்முடைய அன்புக்காக ஸ்தோத்திரம், நாங்களும் உம்முடைய பிள்ளைகள் என்பதை இந்த உலகம் அறிய வேண்டுமானால் இத்தகைய பரிபூரணமான அன்பு எங்களிடத்தில் கிரியை செய்ய வேண்டும் ஆகவே இப்படிப்பட்ட அழிவில்லாத உமது அன்பை எங்கள் ஒவ்வொருவருக்கும் குறைவில்லாமல் தர வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன். ஆமென்
கர்த்தர் தாமே நம்ஒவ்வொருவரையும் தம்முடைய அளவில்லாத அன்பினால் நிரப்பி ஆசீர்வதிப்பாராக!