top of page

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

 

சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6-10.

இன்றைக்கு அநேகர் தேவனை நம்பாமல் தங்கள் விசுவாசத்தை பணத்தின் மீதும் பொருள்களின் மீதும் வைப்பதால் தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்து போகின்றனர்.  2 தீமோ 3-2 ல் கடைசிகாலத்தில் அநேகர் பணப்பிரியர்களாக மாறிவிடுவார்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.

 

மேலும், அநேகர்  பலரை ஏமாற்றி தவறாக அபகரித்த பணம் அவர்களுடைய  கடைசி நாள்களில் சாபமாக அவர்களையும் அவர்கள் சந்ததிகளையும் உருவ குத்துகிறது. அநேகரை ஏமாற்றி சொத்துக்களை குவித்தவார்கள் ஏமாற்றபட்டவர்களின் சாபத்தினால் இன்று வேதனை அனுபவிக்கின்றனர்.

 

ஊழியங்களில் கூட ஊழியக்காரர்கள் பணத்தை அதிகமாக சம்பாதிக்கும் பொருட்டு தேவன் சொன்னதை செய்யாமல் தங்கள் சுயசித்தத்தையும் சுயதிட்டத்தையும் செய்து தங்கள் தரிசனங்களை இழந்து போய்விடுகிறார்கள். ஊழியக்காரர்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிற ஏழைகளுக்கு இரங்காமல் காணிக்கை பணத்தினால் தேவைகக்கு அதிகமாக கார்களையும் பொருள்களையும் வாங்கி வைத்து கொண்டு சுயநலமாக டாம்பீகமாக வாழ்வது தேவனுக்கு பிரியமானதல்ல. ஒரு ஊழியக்காரன் பணத்துக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு தேவன் தந்த அபிஷேகத்தை அடகு வைக்க கூடாது. தன் செய்திகளையும் ஜனங்களை பிரியப்படுத்த மாற்றி கொள்ள கூடாது. எலிசாவின் வைராக்கியம் நம்மிடம் இருக்க வேண்டும், அன்றைக்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்களோடு மகா தடப்புடலோடு நாகமான் என்ற அதிகாரி எலிசாவை பார்க்க வந்தான். தன் அந்தஸ்தை கண்டு எலிசா வெளியே வந்து தனக்கு பிரார்த்தனை செய்து தன்னை கவுரவிப்பான் எனற எண்ணத்தில் அவன் வந்திருக்க கூடும். ஆனால் எலிசா தன் வேலைக்காரனை அனுப்பி ஏழு முறை யோர்தானில் மூழ்கி விட்டு போ என்று சொல்லி விட்டான். நாககமான் எலிசாவிடம் தன்னிடம் உள்ள பரிசு பொருள்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று கெஞ்சினான், ஆனால் எலிசாவோ சற்றும் தலைகுனியாமல் அதை வாங்க மறுத்தான்.

 

தேவன் அனுமதிக்காமல் எந்த காரியத்தையும் பெற்று கொள்ளாதவன் தான் உண்மையான தீர்க்கதரிசி. பிசாசு இன்றைக்கு ஊழியக்காரர்களை வீழ்த்த பயன்படுத்துவது பண இச்சை மற்று பொருளாசை என்ற ஆயுதம். இதில் விழுந்து போய் தங்கள் தரிசனங்களை இழந்தவர்கள் அநேகம் பேர். விக்கிரக ஆராதனையான பொருளாசைகாரர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பங்கடைவதில்லை(எபே 5-5) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

 

இன்றைக்கு பலர் தங்கள் வருமானத்துக்கு அதாவது தேவைக்கு மிஞ்சி அதிகமான காரியங்களை செய்து பணப்பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்கள். மேலும் அடுத்தவர்களை Compare பண்ணி நாமும் இப்படி செய்ய வேண்டும்,இதைப் போல வாங்க வேண்டும்,இவர்களை போல வாழ வேண்டும் என்று கடன் வாங்கி எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசியில் வாங்கிய கடனை  அடைக்க முடியாமல் எல்லாவற்றையும் விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். (நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.எபிரேயர் 13-9).

 

எனக்கு தெரிந்த ஒருவர் கடன் வாங்கி ஒரு கோடி ரூபாய்க்கு ஆடம்பரமாக வீட்டை கட்டி அதை video எடுத்து எல்லாரிடமும் காண்பித்து கொண்டிருந்தார். கடந்த நாள்களில் மழை பெய்து வெள்ளம் வந்து அவரது வீடு மூழ்கி  எல்லா பொருள்களும் நாசமடைந்து விட்டது. இன்றைக்கு அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை  தாங்க முடியாமல் depression ல் இருக்கிறார்.

 

அடுத்ததாக, தேவனுக்கு கொடுப்பதில் நாம் கஞ்சத்தனம் செய்கிறோம். அநேகர் பிச்சைகாரர்களுக்கு கொடுப்பது போல தேவனுக்கு காணிக்கை கொடுக்கிறார்கள். தேவன் தனக்கு கொடுத்ததை பலமடங்கு திருப்பி கொடுக்கிறார்.அவர் பூமியின் நிறைவை உடையவர். எனக்கு தசமபாகம் கொடுக்கும் போது வானத்தின் பலகணிகளை திறந்து இடம் கொள்ளாமல் போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனா என்று தன்னை சோதித்து பார்க்க சொன்னார். (மல்கியா-3)இயேசு கிறிஸ்து தசமபாகமும் கொடுக்க வேண்டும் தேவனுடைய நீதியையும் செய்ய வேண்டும் என்றார்.நாம் நேசிக்கிறவர்களுக்கு என்னவெல்லாம் வாங்கி கொடுக்கிறோம்.

 

ஒன்றுமில்லாத காரியத்துக்கெல்லாம் பணத்தை செலவிடுகிறோம், நம்மை நேசிக்கிற நமக்காக தன் ஜீவனையே தந்த தேவனை நேசிக்காமல் பணத்தை நேசிக்கிறபடியால் தேவனுக்குறியதை நாம் தேவனுக்கு கொடுப்பதில்லை. அதாவது பண விஷயத்தில் தேவனை வஞ்சிக்கிறோம். தேவனுக்கு கொடுப்பதில் நாம் குறைவுள்ளவர்களாக இருப்பதால் நம்முடைய கையின் பிரயாசமும் குறையுள்ளவையாகவே இருக்கிறது.

 

அடுத்ததாக, அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பணத்தை பெற்று கொண்டு அதை திரும்ப கொடுக்காமல் அபகரிப்பது திருடுவதற்கு சமம். அநேகர் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப கொடுப்பதில்லை,இவர்கள் கடனை திரும்ப கொடுக்கும்படி இவர்கள் தேவையை தேவன் சந்திக்கும் போது அவர்கள் அந்த பணத்தை வேறு காரியங்களுக்கு செலவிடுகிறார்கள். பிறர் உதவி கரம் நீட்டி கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் இருக்கும் போது தேவன் நம்மை ஒருபோதும் ஆசீர்வதிக்க முடியாது. ஒரு நாள் தேவன் ஒரு ஊழியக்காரரிடம் அவர் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய வெறும் நூறு ரூபாயை திரும்ப கொடுக்க சொன்னார். இவரும் நூறு ரூபாயை எடுத்து கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்து அவரிடம் அந்த பணத்தை கொடுத்தாராம். அந்த பணத்தை வாங்கியவர் இந்த 100 ரூபாய் பணத்துக்காக இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து வந்தீர்களா என்று கேட்க ,இவர் சொன்னாராம் ஜயா உங்களுக்கும் எனக்கும் இது அற்பமாக இருக்கலாம் ஆனால் தேவனுடைய பார்வையில் இது பெரிதாக இருக்கிறது என்றாராம். துன்மார்க்கன் கடன் வாங்கி செலுத்தாமல் போகிறான்(நீதி 37-21)என்று வேதம் சொல்கிறது.எனவே உங்களுக்கு கடன் கொடுத்தது உதவியவர்களின் பணத்தை உடனடியாக திருப்பி கொடுப்பதே நீதியாகும். கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை (நீதி 22-7)என்று வேதம் சொல்கிறது.நாம் எந்த ஒரு அடிமைதனத்துக்குள் இருப்பதை தேவன் விரும்புவதில்லை. எனவே தான் நீ கடன் கொடுப்பாய் ஆனால் கடன் வாங்குவதில்லை என்ற வாக்குதத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார்.

 

நாம் நம் கையிட்டு செய்யும் வேலைகளில் உண்மையற்றவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் இருக்கிறபடியால் இந்த வாக்குதத்தத்தை நம்மால் சுதந்தரிக்க முடிவதில்லை.ஆகவே தான் பண விஷயத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.

 

சபைகளில் ஜனங்கள் கஷ்டப்பட்டு உழைத்து ஆண்டவருக்கு கொடுக்கும் காணிக்கைகளை கூட தேவ சித்ததிற்கு மாறாக செலவு செய்வது தவறு.காணிக்கை பணம் என்பது ஆண்டவருக்காக கொடுத்தது.எனவே அந்த பணத்தை மிகவும் ஜாக்கிரதையாக தேவ சித்தத்தின் படி பயன்படுத்த வேண்டும்.காணிக்கை பணத்தை எந்த விதத்திலும் விரயம் செய்ய கூடாது.

 

அடுத்ததாக வரதட்சனை என்ற பேரில் பெண்ணின் தகப்பனார் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை அபகரிப்பது பாவம். உங்கள் மகனுக்கு படிக்க ஞானத்தை கொடுத்து தேவையெல்லாம் சந்தித்து வேலையையும் கொடுத்தது தேவன் தானே, அதை மறந்து நான் என் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறேன் என்று சொல்லி வரதட்சணை வாங்குவது தேவ நீதியல்ல. நாட்டு சட்டபடி குற்றமாக கருதகூடிய காரியத்தை செய்வது தேவனுக்கு உகந்தது அல்ல. நீங்கள் வரதட்சணையை கேட்டு வாங்கும் போதோ லஞ்சம் என்ற பெயரில் பணத்தை தவறாக பெற்று கொள்ளும் போதோ அல்லது லஞ்சம் கொடுக்கும் போதோ தேசத்தின் சட்டத்தின் படி நீங்கள் குற்றவாளியாக கருதப்படுகிறீர்கள். எனவே தேவனுடைய பார்வையில் இது பாவம்.

 

ஆகவே பிரியமானவர்களே பணத்தை நேசிக்கும் இச்சையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பணத்தை கையாளும் காரியங்களில் நாம் உண்மையுள்ளவர்களாக இருப்போம். தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் போது ஏழைகளுக்கும் திக்கற்றோர்களுக்கும் உதவி செய்வோம். தேவன் நமக்கு தரும் பணத்தை அநாவசியமாக வீணாக செலவு பண்ணாமல் ஞானத்தோடே செலவு செய்வோம். பெற்றோர்களே பிள்ளைகளுக்கு பொக்கிஷங்களை  சேர்த்து வைக்க வேண்டும்(2 கொரி12-24) என்று வேதம் சொல்கிறது.எனவே தேவன் உங்களை ஆசீர்வதிக்கும் போது உங்க பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக சேமிப்பது நல்லது. ஆனால்  லட்சக்கணக்கில் லஞ்சமாக பணத்தை கொடுத்து தேவ சித்தத்திற்க்கும் நாட்டு சட்டத்திற்க்கும் விரோதமாக உங்கள் பிள்ளைகளுக்கு Seat வாங்காதீர்கள்.

 

உங்கள் பிறந்த நாள் திருமணம் போன்ற கொண்டாட்டங்களில் கடன் வாங்கி டாம்பீகமாக பெருமைக்காக பணத்தை விரயம் செய்யாதீர்கள். ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருப்பவர்களே பாக்கியவான்கள் என்று இயேசு சொன்னார்,தேவன் உங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களை (தாலந்துகள்)குறித்து தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.

 

ஊழியக்காரன் கூட காணிக்கையை குறித்து தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எனவேநாம் ஆசீர்வதிக்கப்படும் படியாக அநியாயமாக அபகரித்த பணத்தை உடனடியாக திரும்ப கொடுப்போம். பண விஷயத்தில் நேர்மையுள்ளவர்களாகவும் உண்மையுள்ளவர்களாக இருப்போம். உண்மையுள்ளவன் பரிபூரணஆசீர்வாதத்தை பெற்று கொள்வான் என்கிற வாக்குதத்தம் நம் வாழ்க்கையில் நிறைவேற நாம் தகுதியுடையவர்களாக காணப்படுவோம். ஆமென்.

bottom of page