நீங்கள் தேவனுக்கு பிரியமானவர்களா??
இன்றைக்கு நீங்கள் ஊழியம் செய்யலாம், தசமபாகம் கொடுக்கலாம், தவறாமல் ஆலயத்துக்கு போகலாம், நகையை கழற்றியிருக்கலாம் , அந்நிய பாஷையில் ஜெபிக்கலாம் ஆனால் தேவனுக்கு பிரியமாக வாழ்கிறோமா??
(அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டி கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.1 யோவான் 3-22 )
இன்றைக்கு நாம் தேவனை விட மனிதர்களை பிரியப்படுத்துகிறோம். கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் வேலைக்காரன் எஜமானனையும் ஊழியக்காரன் ஜனங்களையும் பலர் தங்களுடைய நண்பர்களையும் பிரியப்படுத்த அநேக காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாரும் தேவனை பிரியப்படுத்தி வாழ்வதில்லை. எனவே தான் தங்கள் வாழ்க்கையில் பல நிலைகளில் குறைவுள்ளவர்களா௧வும் தோல்வியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர். தானியேலை சந்தித்த காபிரியேல் தூதன் நீ தேவனுக்கு பிரியமானவானாயிருக்கிறபடியால் நீ வேண்டி கொள்ள தொடங்கிய போதே கட்டளை வெளிப்பட்டது என்றான். மேலும் நாம் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படியாமல் நாம் சார்ந்திருக்கும் ஸ்தாபன சட்ட திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்து நம் ஸ்தாபனங்களுக்கே பிரியமாக செயல்படுகிறோம். ஆனால் அவருடைய கற்பனைகளை கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமானதை செய்கிறவர்கள் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூட பிதாவாகிய தேவனை எப்பொழுதும் பிரியப்படுத்தினார்.
(என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார். யோவான் 8 -29)
ஊழியத்தில் கூட அநேகர் தேவ சித்தத்தை செய்யாமல் மனுஷரை பிரியப்படுத்தும் படி பல காரியங்களை செய்வதால் ஊழியத்தில் தேவ மகிமையற்றவர்களாய் மாறி விடுகின்றனர். நீங்கள் மனுஷரை பிரியப்படுத்தி போதித்தால் நீங்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரல்ல. என்று கலா 1-10 ல் பவுல் எழுதுகிறார். மேலும் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.(எபே 6-6 )என்று கர்த்தருடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது.
இன்றைக்கு அநேகர் தேவனுக்கு பிரியமான அவருடைய சித்தத்தை செய்யாமல் தங்கள் சுய சித்தத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களது ஜெபத்துக்கு பதில் கிடைப்பதில்லை. ஒரு வேளை தேவனுக்கு கீழ்படியாமல் பணத்துக்காகவும் புகழுக்காகவும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து அவைகளை பெற்று கொண்டாலும் இவர்கள் தேவனுடைய மேலான ஆசீர்வாதத்தை ஒருகாலும் பெற்று கொள்வதில்லை. வேதம் இப்படியாக சொல்கிறது கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.
(எபேசியர் 5:9-11) மேலும் நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் என் பிதா மகிமைபடுவார் எனக்கும் சீஷாராய் இருப்பீர்கள் என்று இயேசு சொன்னார்.நம்முடைய நற்கிரியைகளாகிய கனியுள்ள வாழ்க்கையே தேவனுக்கு பிரியமானது.கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.இன்றைக்கு நம்முடைய கனியற்ற அந்தகார கிரியைகளினால் இயேசுவின் நாமம் புறஜாதி ஜனங்கள் முன்பாக தூசிக்கப்படுகிறது. இந்த காரியத்திலிருந்து நாம் உடனடியாக மனம் திரும்ப வேண்டும். ஏனென்றால் புறஜாதி ஜனங்கள் கிறிஸ்துவை அறிவதற்க்கு இடறலாயிருக்கிற நாம் தண்டனைக்கு தப்பவே முடியாது.
எனவே இந்த கடைசி நாட்களில் தேவனுக்கு பிரியமானவர்களாக மாற நம்மை ஒப்பு கொடுப்போம்,சங்கீத காரன் சொல்வது போல நம் வாயின் வார்த்தைகளூம் நம் இருதயத்தின் எண்ணங்களும் தேவனுக்கு முன்பாக பிரியமா இருப்பதாக.
(உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன், உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. சங்கீதம் 143:10) ஆமென்.