top of page

அதிகாலையில் ஜெபிக்கிறவர்கள்

 

என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன் அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். நீதிமொழிகள் 8-17. அதிகாலையில் தேவனை தேடுகிறவர்கள் அவரை காண்கிறார்கள். அவர் உலாவுவதை உணர்கிறார்கள். அவர் குரலை கேட்கிறார்கள்.

 

வேதாகமத்தில் அதிகாலையில் எழுந்து ஜெபிப்பது விஷேசமாக கருதப்படுகிறது.143 ம் சங்கீதத்தில் அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்,நான் உம்மை நம்பியிருக்கிறேன் என்று தாவீது சொல்வதை பார்க்கலாம். இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டவராக இருந்தார், அவர் அதிகாலையில் தொடர்ந்து ஜெபிக்கும் வழக்கத்தை உடையவராக இருந்தார். (அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.மாற்கு 1-35) இயேசு கிறிஸ்து தூங்கி கொண்டிருந்த பேதுருவை பார்த்து விழித்திருந்து ஜெபிக்க கூடாதா என்றார்? (பின்பு அவர் வந்து அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா?  ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?  என்றார். மாற்கு 14-37).

 

இன்றைக்கு நம்மையும் பார்த்து இதே கேள்வியை கேட்கிறார். தங்கள் வாழ்க்கையில் படிப்பதற்க்கு, வேலைக்கு போவதற்க்கு அல்லது வேறு காரியங்களுக்கு அதிகாலையில் எழும்புகிற அநேகர் ஜெபிப்பதற்க்காக அதிகாலை நேரத்தை ஒதுக்குவதில்லை. அநேகர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அதிகாலையில் எழும்புகிறார்கள். ஆனால் தங்களுக்கு பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்த தேவனுக்கு அதிகாலை நேரத்தை கொடுப்பதில்லை.  (மனுஷன் படுத்துக் கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதுமில்லை, நித்திரை தெளிந்து விழித்திருக்கிறதும் இல்லை. யோபு 14-12)

 

தேவனை முழு பெலத்தோடு நேசிக்கிறவர்கள் மாத்திரமே அதிகாலையில் விழித்து தேவ சமூகத்தில் தரித்திருப்பார்கள். அதிகாலை நேரம் சுகமாக தூங்க கூடிய நேரம் எளிதாக எழும்பி ஜெபம் பண்ண முடியாது. ஆனால் தேவன் அதிகாலையில் என்னை தேடுகிறவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். அதிகாலையில் ஜெபிக்கிறவர்கள் அதிகமாக தேவ பிரசன்னத்தை உணருகிறார்கள், சிலரை தேவன் தேவ மகிமையால் மூடுகிறார். தேவன் முதல் பெலனை எனக்கு கொடுப்பாயாக என்றார். அடுத்ததாக முதலாவதாக தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுங்கள் அப்பொழுது எல்லாம் கூட கொடுக்கப்படும் என்றார். எனவே தேவன் நமக்கு கொடுக்கும் நாளில் முதல் பகுதியில் அதாவது அதிகாலையில் தேவ சமூகத்தில் ஜெபிக்கிறவர்கள் அளவிட முடியாத தேவ ஆசீர்வாதத்தை  பெற்று கொள்கிறார்கள். ஒரு முறை ஒரு வாலிபன் தன் ஜெப அனுபவத்தை பகிர்ந்து கொண்டான். தினமும் அதிகாலையில் எழுந்து தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டு தேவ சமூகத்தில் காத்திருந்து இயேசு கிறிஸ்து தன்னோடு பேசும் வரை ஜெபிக்கிற பழக்கம் அந்த வாலிபனுக்கு இருந்தது. கர்த்தர் அந்த வாலிபனோடு கூட இருந்து அவன் படிப்பிலே பெரிய வெற்றியை கொடுத்தார். படித்தவுடனே ஒரு அரசாங்க வேலையையும் கொடுத்தார். அந்த வேலையிலும் கர்த்தர் அவனை உயர்த்தி ஒரு பெரிய அதிகாரியாக்கி உயர்ந்த இடத்தில் வைத்தார்.

 

இன்றைக்கு கிறிஸ்துவை ஏற்று கொண்ட புறமத ஜனங்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு தேவனை தொழுது கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனை முழு உள்ளத்தோடு நேசிக்கிறார்கள். ஆனால் நாமோ தூங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு ஊழியம் செய்கிற அநேகர் கூட அதிகாலையில் தேவசமூகத்துக்கு போகாமல் தூக்கத்துக்கு அடிமையாகி விட்டதால் சோதனை வரும் போது சோர்ந்து போய் விழ்ந்து விடுகிறார்கள்.. ஆனால் அதிகாலையில் சுகமான தூக்கத்தை தியாகம் செய்து தேவ சமூகத்தில் காத்திருந்து கிரயம் செலுத்துகிறவர்கள் தேவனை தரிசிக்கிறார்கள்.அதிகாலையில் தேவசமூகத்தில் இயற்கைக்கப்பாற்பட்ட தேவ வல்லமையையும் தேவ மகிமையையும் பெற்று கொண்ட இவர்களே தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படுகிறார்கள் .இவர்களே தேவனிடமிருந்து மேலான ஆசீர்வாதத்தை பெற்று கொள்கிறார்கள். ஆமென்.

bottom of page