நீ பெரியவனா? / நான் பெரியவனா?
முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன். 1 கொரிந்தியர் 11-18 என்று பவுல் எழுதுகிறார், இன்றைக்கு சபைகளில் ஒருமனமில்லாமை மேலும் நம்முடைய ஜெபங்கள் கேட்கபடாமல் இருப்பதற்கு சபையில் காணப்படும் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற பிரிவினையே முக்கிய காரணம்.
இங்கிலாந்து தேசத்தில் ஒரு சபையில் சபை முடிந்தவுடன் எல்லா பெண்களும் சேர்ந்து சபை போதகரின் அனுமதியுடன் தேசத்துக்காகவும் ஆத்துமாக்களுக்காகவும் பாரத்தோடு ஜெபிக்க ஆரம்பித்தார்கள். இந்த காரியம் அந்த போதகரின் மனைவிக்கு பிடிக்கவில்லை ஏனென்றால் தனது ஆலோசனையை கேட்காமல் ஜெபிக்கிறார்களே என்ற கோபம். அவரும் ஜெபிக்க வருவதில்லை ஜெபிக்கிறவர்களையும் ஜெபிக்க விடுவதில்லை. இறுதியில் அந்த போதகர் முலமாகவே அந்த ஜெபத்தை தடை செய்தார்கள். அதன் பிறகு அந்த சபை உடைந்து விட்டது எல்லாரும் பிரிந்து போய் விட்டார்கள்.
இன்றைக்கு சபையில் ஊழியக்காரர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், ஜெபிக்கிறவர்கள் எழும்பாததற்கு ஊழியக்காரர்களே காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிருபை நிறைந்தவர்களை சபையில் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் ஜனங்கள் அவர் பக்கம் போய் விடுவார்களே என்ற பயம். ஏனென்றால் இவர்கள் எப்பொழுதுமே தாங்களே பெரியவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஆனால் இயேசு இப்படியாக சொன்னார் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்ததை விட பெரிய காரியங்களை செய்வான். என்றார், தனக்கு கீழ் உள்ள விசுவாசிகளோ ஊழியக்காரர்களோ தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படும் போது பெருமிதம் கொண்டு அவனை உயர்த்துகிற இயேசுவின் சிந்தை உள்ளவனே இயேசுவின் மாதிரியை பின்பற்றுகிற உண்மையான ஊழியக்காரன். பர்னபா ஊழியத்தில் அதிக அனுபவம் வாய்ந்தவன், ஆனால் பவுலை தேவன் வல்லமையாக பயன்படுத்தியதை உணர்ந்த பர்னபா பவுலை முன் நிறுத்துகிறான். அதே மாதிரி ஊழியக்காரர்களும் சபைகளில் கிருபையும் வரங்களும் பெற்று தேவனால் அழைக்கப்பட்டவர்களை பயன்படுத்த வேண்டும். விசுவாசிகளும் கிருபையின் வரங்களை பெற்று கொண்டு தேவனால் பயன்படுத்தபடும் போது நான் பெரியவன் என்று தங்களை ஊழியக்காரனுக்கு மேலாக உயர்த்தி கொள்ள கூடாது, அது மாத்திரமல்ல இப்படி பெரியவனாக விரும்புகிறவர்கள் தனியாக செயல்பட ஆரம்பித்து இறுதியில் வீழ்ச்சியடைகிறார்கள். சீஷர்கள் நடுவே யார் பெரியவன் என்ற வாக்குவாதம் வந்த போது இயேசு கிறிஸ்து நான் உங்கள் நடுவே பணிவிடைகாரனை போல இருக்கிறேன் என்றார். (பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
லூக்கா 22-27) (உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது, உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். மத்தேயு 20-26).
இன்றைக்கு இப்படி பட்ட இயேசுவின் சிந்தை நிறைந்த ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் நிறைந்த சபைகளில் மாத்திரமே ஆவிக்குறிய எழுப்புதல் உண்டாகும். இத்தகய சபையில் உள்ளவர்களின் ஜெபம் கேட்கப்பட்டு அவர்கள் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்று கொள்வார்கள்.
இன்றைக்கு பிசாசானவன் சபைகளில் ஊழியக்காரர்களையும் விசுவாசிக்கிறவர்களையும் கீழே வீழ தள்ள பயன்படுத்துகிற ஆயுதம் நான் பெரியவன் என்ற பெருமை. சீஷர்களையும் இது விட்டு வைக்க வில்லை. அவர்களுக்குள் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற வாக்குவாதம் வந்த போது இயேசு கிறிஸ்து அவர்களின் கால்களை கழுவி உங்களை தாழ்த்துங்கள் மற்றவர்களை மேன்மையாக எண்ணுங்கள் என்ற மாதிரியை காண்பித்தார். விண்ணிலிருந்து வந்த ஆண்டவரே மனிதனின் காலை கழுவி நான் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்று தங்கள் தாழ்மையை காட்டும் போது மண்ணிலிருந்து வந்த நாம் எவ்வளவு தாழ்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கால் கழுவுகிற சபைகளில் கூட நீ பெரியவனா நான் பெரியவனா என்ற பிரிவினைகள் இருக்க தான் செய்கிறது. ஏனென்றால் ஆண்டவர் செய்து காட்டிய தாழ்மை என்ற மாதிரியை சபைக்குள்ளே பாரம்பரியமாக செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் சபைக்கு வெளியே நம்முடைய கிரியைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. சபையில் பாரம்பரியமாக கால்களை கழுவுகிற நாம் சபைக்கு வெளியே இயேசு விட்டு சென்ற தாழ்மையின் படி நடப்பதில்லை. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11-29 என்று இயேசு சொன்னார்.
இன்றைக்கும் இருதயத்தில் மனதாழ்மை கொண்ட ஊழியர்கள் மிகவும் குறைவு. ஊழியக்காரர்கள் இருமாப்பாய் சபையை ஆளுகிறார்கள். அடுத்தவர்கள் வல்லமையாய் தேவனால் பயன்படுத்தப்படும் போது எரிச்சலும் பொறாமையும் கொண்டு இறுதியில் அவர்களை மறைமுகமாக குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும், இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். (லூக்கா 11-15) இன்றைக்கு பெருமையினால் தங்களை உயர்த்தி கொண்டு மற்றவர்களை அற்பமாக பேசுகிற பரிசேய ஆவியை உடையவர்கள் இருக்கும் வரை சபை ஒருமனப்படுவதில்லை. உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது, உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். லூக்கா 22-26 இன்றைக்கு நாம் உலகத்தார்களை போல பெரியவானாக இருக்க ஆசைப்படுகிறோம் .ஆனால் இயேசு சொன்னதோ பெரியவன் சிறியவனை போல இருக்க வேண்டும் என்றார்.
உங்கள் சபையில் இயேசு சுட்டி காட்டிய தாழ்மை கொண்டவர்கள் இருக்கிறார்களா?தன்னை ஒரு பொருட்டாக எண்ணுகிறவர்கள் தான் அதிகம், ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். மத்தேயு 18-4 என்று இயேசு சொன்னார். இன்றைக்கு தங்களை பெரியவனாக்கி கொள்கிறவர்கள் இந்த உலகத்தில் தங்கள் பலனை அடைந்து விட்டார்கள்.
ஆனால், ஊழியத்தில் எவ்வளவு வல்லமையாக பயன்படுத்தப்பட்டாலும் தங்களை தாழ்த்தி தங்களை சிறியவனாக எண்ணி கொள்கிறவர்களை பரலோகத்தில் தேவன் பெரியவனாக்குவார், நீங்கள் உலகத்தில் பெரியவனாக வேண்டுமா? பரலோகத்தில் பெரியவனாக வேண்டுமா? எது முக்கியம் உலகமா? பரலோகமா? அன்றைக்கு இயேசுவை பார்த்து பரலோக ராஜ்ஜியத்தில் எவன் பெரியவானாயிருப்பான் என்று சீஷர்கள் கேட்ட போது இயேசு ஒரு பிள்ளையை தன்னிடத்தில் அழைத்து நீங்கள் மனம் திரும்பி பிள்ளைகளை போல உங்களை தாழ்த்தாவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று சொல்லிவிட்டார்.
எனவே பிரியமானவர்களே நான் பெரியவன் என்கிற பெருமை நம்மிடம் இருக்குமானால் நாம் மனம் திரும்புவோம். நம்மை தேவ சமூகத்தில் ஒப்பு கொடுப்போம். (ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். பிலிப்பியர் 2-3) ஆமென்.