திறவுகோல்கள்
Bro. Edwin Corter (Sohar-Oman)
வேதம் சொல்லுகிறது, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளி 3:8.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபையை பார்த்து சொல்லுகிறார் உங்களுக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறேன். அதாவது வாசல்களை திறப்பதற்கான திற்வுகோல்களை உங்களுக்குத் தந்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். இன்று அனேகருடைய வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்ப்பீர்களானால் தெரியும், அவர்கள் கர்த்தர் கொடுத்திருக்கிற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், பொக்கிஷங்களையும் அநுபவிக்க முடியாமல் இருக்க காரணம் அவர்களிடத்தில் கர்த்தருடைய திறவுகோல்கள் இல்லாமல் இருப்பதே, இன்னும் சுருங்கச் சொல்லப்போனால் இப்படிப்பட்டவர்கள் இன்னும் கர்த்தருடைய வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள்.
ஆகவேதான் அவர்களுடைய வாழ்க்கையில் பிசாசானவன் கொண்டு வருகிற சோர்வுகள், போராட்டங்களை எதிர்கொள்வதற்கான பெலன் இல்லாமல் போய்விடுகிறது. ஏமாற்றமான சூழ்நிலைகள் வரும் போது என்ன செய்ய வேண்டுமென்று அறியாமல் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.
கணவன் மனைவி இடையில் அடிக்கடி பிரச்சனைகள், குறைந்த சம்பளத்தில் இருக்கிறோம் என்கிற தாழ்வு மனப்பான்மை அதிகமான ஆசீர்வாதங்கள் இருந்தும் அதை சமாதானமாய் அநுபவிக்க முடியவில்லை. இப்படி அனேக உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
முதாலவதாக, கர்த்தரிடத்தில் இருக்கும் திறவுகோல்கள் என்னவென்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மத் 16:19 – பரலோகராஜ்ஜியத்தில் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்.
வெளி 1:18 – நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்
வெளி 3:7 மற்றும் ஏசாயா 22:22 – தாவீதின் திறவுகோலை உடையவர்
இப்படியாக கர்த்தரிடத்தில் பலவிதமான திறவுகோல்கள் இருப்பதை அறிகிறோம். இவைகள் எதற்காகவென்றால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் திறக்க வேண்டியதை திறக்கவும் மற்றும் பூட்டவேண்டியதை பூட்டவும் ஆகும்.
ஏன் இந்த திறவுகோல்களை கர்த்தர் நமக்குத் தர வேண்டு? திறந்த வெளியாய் அதாவது ஆதியிலே கர்த்தர் இந்த உலகத்தை உருவாக்கும் போது எந்தவிதமான கதவுகள் அதாவது வாசல்கள் இல்லாமல் தான் உருவாக்கினார், ஏனென்றால் அந்த நாட்களில் மனுஷனுடைய ஐக்கியம் தேவனோடு மாத்திரமே இருந்தது. ஆகவே அவனுக்கு திருடனைக் குறித்தோ பயம் இல்லை. சோதனை இல்லை, போராட்டங்கள் இல்லை, வெறுப்பு இல்லை, வஞ்சகம் அவனுக்குள் இல்லை.
ஆனால் எப்பொழுது அவனுடைய ஐக்கியம் பிசாசோடும் மனுஷனோடும் சென்றதோ அப்பொழுது அவன் பாவம் செய்தான். பாவியான மனுஷனாய் மாறினான். அவன் தேவனுடைய இடத்திற்கு பிசாசு வருவதற்கு அனுமதித்தான், இதனால் கர்த்தர் அந்த இடத்திற்கு கதவுகளைப் போட்டு அதற்கென்று பிரத்தியோகமான திறவுகோல்களை உருவாக்கினார்.
அதன்பிறகு கர்த்தருடைய வீட்டிற்குள் நுழைய முடியவில்லை, ஏனென்றால் அவர்களிடம் அந்த வீட்டிற்கான திறவுகோல்கள் இல்லை. அதன்பிறகு பார்ப்பீர்களானால் பழைய ஏற்பாட்டில் அனேக வாசல்கள் அடைக்கப்பட்டன என்று பார்க்கிறோம். உதாரணமாக சில காரியங்களைப் பார்க்கலாம்,
ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவரை ஆசீர்வதித்த கர்த்தர் அவருடைய ஆசீர்வாதங்களை அவருடைய சந்ததிக்கும் தருவேன் என்று கர்த்தர் ஆணையிட்டார். அத்தகைய வாக்குத்தத்தத்தை அவருடைய சந்த்தியார் எளிதாக பெற முடிந்ததா? இல்லை அதற்கும் ஒரு வாசலை கர்த்தர் உண்டுபண்ணினார் அதாவது உத்தமமாய் இருந்தால் மட்டுமே இந்த வாக்குத்தத்தம் சொந்தமாகும் என்பதாக, ஆபிரகாம் கர்த்தருக்கு முன்பாக உத்தமமாக நடந்ததால் இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்தார் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.
அடுத்ததாக நியாயப்பிரமாணத்தை உருவாக்கி அது இஸ்ரவேல் ஜனங்களுக்கென்று சொல்லி ஒரு வாசலை ஏற்படுத்தினார்.
அடுத்ததாக, ஆலயத்தைக் கட்டச் சொன்னார், அதிலும் பலவிதமான வாசல்களை கர்த்தர் ஏற்படுத்தச் சொன்னார். எப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட வாசல்வரைதான் ஜனங்களுக்கும் சில வாசல்கள் வரை ஆசாரியர்களும், பிரதான ஆசாரியர்களும் வர முடியும் என்பதான ஒரு கோட்பாட்டை கர்த்தர் உருவாக்கிவைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அந்த நாட்களில் ஆசாரிய ஊழியம் ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தார் அதாவது லேவி கோத்திரத்தாருக்கு மட்டுமே அருளப்பட்டது. மற்றவர்களுக்கு இந்த ஊழிய வாசல் அடைக்கப்பட்டிருந்தது.
ஆகவேதான் ஏசாயா தீக்கதரிசி இப்படியாக எழுதுகிறார், இதோ இரட்சிக்கக் கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஏசாயா 59:1,2.
இப்படியாக பழைய ஏற்பாடு நம்மை வாசல் பக்கமே நிறுத்திவைத்திருக்கிறதை நாம் உணரமுடிகிறது. ஆனால் எப்பொழுது புதிய நியமம் உண்டானதோ அதாவது நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தாரோ அப்பொழுதே நமக்குரிய திறவுகோல்களை அதாவது பிசாசினால் அடைக்கப்பட்ட வாசல்களை திறக்கும்படியாக திறவுகோல்களையும் இந்த உலகத்திற்கு கொண்டு வந்தார்.
அடுத்ததாக இந்த திறவுகோல்கள் எப்படிப்பட்டதாக இருந்தது. இந்த திறவுகோல்கள் என்ன செய்கிறது என்பதைக் குறித்து பின்வருமாறு தியானிக்கப்போகிறோம்.
மூன்றுவிதமான திறவுகோல்கள்,
1.கர்த்தருடைய வார்த்தை
2.ஜெபம்
3.அபிஷேகம்
1. முதலாவது திறவுகோல்: கர்த்தருடைய வார்த்தை
வேதம் சொல்லுகிறது, வெளி 3:20 – இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடேபோஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
ஏழு சபைகளில் ஒரு சபையான லவோதிக்கேயா சபையைப் பார்த்து தேவன் சொல்லுகிறார், தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்கு ரொம்ப தூரமாக இருக்கிறது. இதற்குக் காரணம் தேவனுடைய வார்த்தை இந்த சபையில் இல்லை. இவர்கள் பிசாசின் சத்தத்திற்கும் மனுஷருடைய சத்தத்திற்கும் செவி கொடுக்கிறார்கள் ஆனால் தேவனுடைய சத்தத்தை அறியாமல் போகிறார்கள் இவர்களுடைய சபைகளில் சரியான சத்தியத்தைக்குறித்து போதிக்கப்படவில்லை அதாவது அதற்கான போதகர்கள் இவர்களுடைய சபைகளில் இல்லை.
எப்படியென்றால் தேவனுக்கென்று பேசுகிற தேவனைப் பிரியப்படுத்துகிற ஊழகியக்காரர்கள் இல்லை. ஆகவேதான் இந்த சபையினர் உலகத்திலுள்ள ஆசீர்வாதம் தான் மேலானது என்று தங்களிடத்தில் இருக்கிற அழிந்து போகிற ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்கு முன்பாக சாட்சியாகச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
எப்படியென்றால், வெளி 3:17 – நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும் பரிதபிக்கப்படத்தக்கவனும் தரித்திரனும் குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் நான் ஐசுவரியவானென்றும் திரவிய சம்பன்னனென்றும் எனக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லுகிறபடியால்.
பாருங்கள் இந்த சபைகளில் செழிப்பு காணப்படுவது உண்மைதான் ஆனால் இந்த செழிப்பு எப்படியிருக்கிறது என்று கர்த்தர் சாட்சிக்கொடுக்கிறார் பாருங்கள், இது இவர்களை பரலோகத்திற்கு கொண்டு போகிற செழிப்பு அல்ல மாறாக இது நரகத்தை நோக்கி நடத்துகிற செழிப்பாக இருப்பதை இந்த சபைக்கு சுட்டிக் காட்டுகிறார்.
இதற்குக் காரணம் ஆவிக்குரிய காரியங்களை தெரிந்து கொள்வதற்கான எல்லா கதவுகளும் இவர்களுக்கு விரோதமாக பூட்டப்பட்டிருக்கிறது அதாவது இந்த கதவிற்கான திறவுகோலாகிய கர்த்தருடைய வார்த்தை இந்த சபையில் இல்லை.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இந்த நாட்களில் நீங்கள் அதிகமாக வாசிக்க வேண்டிய புஸ்தகம் வேத புஸ்தகம் ஆகும். அப்பொழுதுதான் நாம் பிசாசின் தந்தரங்களோடு எதிர்த்து நிற்க முடியும். இன்று பிசாசு அனேகருடைய வாழ்க்கையில் ஐக்கியம் வைத்திருப்பதற்குக் காரணம் இவர்களிடத்தில் அவனைத் துரத்துகிற கர்த்தருடைய வார்த்தை இல்லை.
மத்தேயு 4 ஆம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நடக்கும் சோதனையைக் குறித்து வாசிக்கிறோம். அந்த சோதனை எப்படியாயிருக்கிறது முழுக்க முழுக்க அவன் வேதத்தில் இருந்து தான் கேள்விகளைக் கேட்டு சோதிக்கிறான், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அவன் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் வேதத்தில் இருந்துதான் அழகாகப் பதில் சொல்லுகிறார்.
இதனால் பிசாசினால் இவருடைய வல்லமையான வார்த்தைக்கு முன்பாக நிற்க முடியாமல் போய்விடுகிறது. இன்று பிசாசு கொண்டு வருகிற சந்தேகங்களுக்கு சரியான பதில் வேதத்தின் அடிப்படையில் நம்மிடத்தில் இல்லாததினால் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின் தங்கி உள்ளோம்.அதுமட்டுமல்லாமல் அனேகர் இன்று ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் என்னவென்பதையும் இன்றும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பாருங்கள், பிசாசானவன் யோபுவை நேர்முக தேர்வு செய்கிறான், அவன் யோபுவிடம் சொல்லுகிறான். உனக்கு விரோதமாக எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டதே அதாவது உன்னிடத்தில் உள்ள எல்லா திறவுகோல்களும் எடுக்கப்பட்டுவிட்டதே ஆனால் இன்னும் நீ உயிரோடிருக்க காரணம் என்ன? என்று கேட்கிறான். அதற்கு யோபுக் கொடுத்த பதில் என்னவென்பதை நாம் பின்வரும் வசனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்,
வேதம் சொல்லுகிறது,
யோபு 23:12 – அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக் கொண்டேன்.
ஆம் தேவப் பிள்ளைகளே, மேலே சொல்லப்பட்ட வசனத்திலிருந்து என்ன அறிகிறோம் என்றால் ஒரு மனுஷன் பிழைப்பதற்கு இந்த உலகத்தில் மாமிச உணவு எவ்வளவு அவசியமோ? அதை விட பரலோகத்திற்கு ஜீவனோடு செல்ல வேண்டுமானால் நமக்கு கர்த்தருடைய வார்த்தை மிகவும் அவசியம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வாறாக வேதத்தில் எழுதிவைத்திருக்கிறார்,
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து பிறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:4, இத்தகைய வார்த்தையின் மகத்துவத்தை அறிந்து கொண்ட நூற்றுக்கு அதிபதி இயேசுவைப் பார்த்து சொல்ல சொன்ன ஒரு காரியம் உண்டு, ஆண்டவரே என்னிடத்தில் இந்த உலகத்தில் உள்ள எல்லாக்காரியங்களும் நிறைவாய் இருக்கிறது ஆனால் ஒரே ஒரு குறைவு மாத்திரம் என்னிடம் உண்டு அது உம்முடைய வார்த்தை, ஆகவே என் வேலைக்காரனை குணப்படுத்துகிற உம்முடைய வல்லமையான பிசின் தைலத்தைக் கொடுத்து அனுப்பும் அது எனக்கு போதும், அப்பொழுது மாத்திரமே என்னுடைய வேலைக்காரன் மரண அவஸ்தையிலிருந்து எழுந்திருப்பான் என்று அவன் தன்னுடைய வேலைக்காரனிடம் சொல்லி அனுப்புகிறான். லூக்கா 7 ஆம் அதிகாரம்.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே, கர்த்தருடைய வார்த்தையை சதாரணமாக நினைத்து வாழாதீர்கள் அது எப்படிப்பட்டது என்பதை வேதத்தை வாசிக்கும் போது மட்டுமே நமக்குத் தெரியும்.
யோவான் 5:39 – கர்த்தருடைய வார்த்தை நித்திய ஜீவனைத் தருகிறது.
சங்கீதம் 107:20 – கர்த்தருடைய வார்த்தை நோயிலிருந்து விடுதலைத் தருகிறது.
சங்கீதம் 119:1,2 – கர்த்தருடைய வார்த்தை பாக்கியவானாய் மாற்றுகிறது.
சங்கீதம் 119:9 – கர்த்தருடைய வார்த்தை பரிசுத்தமாக்குகிறது.
சங்கீதம் 119:25 – கர்த்தருடைய வார்த்தை உயிர்ப்பிக்கிறது.
சங்கீதம் 119:49,50 – கர்த்தருடைய வார்த்தை ஆறுதலைத் தருகிறது.
சங்கீதம் 119:92 – கர்த்தருடைய வார்த்தை மனமகிழ்ச்சியைத் தருகிறது.
சங்கீதம் 119:105 – கர்த்தருடைய வார்த்தை வெளிச்சத்தைத் தருகிறது.
சங்கீதம் 119:128 – கர்த்தருடைய வார்த்தை பொய்வழிகளை வெறுக்கச் செய்கிறது.
சங்கீதம் 119:165 – கர்த்தருடைய வார்த்தை சமாதானத்தைத் தருகிறது.
இப்படியாக அனேக காரியங்களை கூறி கொண்டே போகலாம், ஆகவே வாழ்க்கைக்குத் தேவையான இந்த திறவுகோல் நமக்கு மிகவும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த திறவுகோல் ஒரு மனுஷனிடம் இருக்கும் போது அவனால் எல்லா அடைக்கப்பட்ட வாசல்களையும் திறக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
2.இரண்டாவது திறவுகோல்: ஜெபம்
வேதம் சொல்லுகிறது, எபேசியர் 6:19,20 – சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேச வேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள் விசுவாசியானாலும் சரி ஊழியக்காரனாலும் சரி அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு தேவையான குறைந்தபட்ச தகுதி ஜெபம் ஆகும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பிசாசின் ராஜ்ஜியத்தோடு போராடிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு சபைக்கும் மிகவும் முக்கியமான திறவுகோல் ஜெபம் ஆகும்.
எப்படி தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையோ அதே போல உண்மையாய் ஜெபிக்கிறவனுடைய வாழ்க்கையிலும் முடியாத காரியம் ஒன்றுமே இல்லை என்பதை மறந்து விடாதீர்கள்.
எஸ்தர் புஸ்தகத்தை வாசிக்கும் போது அந்த புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள யூதருடைய வாழ்க்கையை பார்க்கும் போது அந்த இடத்தில் ஜெபம் வெற்றி பெற்றதைப் பார்க்க முடிகிறது.
பாருங்கள் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும், ஆளுகை செய்கிறவர்களாகவும், விசேஷித்தவர்களாகவும் படைக்கப்பட்ட யூத ஜனங்கள் இப்பொழுது அன்னிய ராஜாவாகிய விருத்தசேதனமில்லாதவனாகிய அகாஸ்வேருவின் வாசற்படியில் நாய் மாதிரி உட்கார்ந்திருக்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதுமாத்திரமல்ல பிசாசானவன் அந்த ஜனங்களை அழிக்கும் படி ஒரு பெரிய திட்டத்தையும் செய்துவிட்டான்.
இந்த சூழ்ச்சியை அறிந்த மொர்தெகாய் எப்படியாவது இந்த திட்டத்தை தடுத்து விட வேண்டும் என்று இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கிறான், அதுமட்டுமல்லாமல் இந்த திட்டம் உடைக்கப்பட வேண்டுமானால் ஒன்றில் அகாஸ்வேருவின் தயவு கிடைக்க வேண்டும் அல்லது ஆமானின் தயவுக்காக அவனிடம் கெஞ்ச வேண்டும் என்று மொர்தெகாய் நினைத்திருந்தான். ஆகவே மொர்தெகாய் எஸ்தரை அகாஸ்வேருவிடம் சென்று இதற்காக பேசும்படியாக கேட்டுக் கொண்டான். அதவது அவளை நிர்ப்பந்தப்படுத்தினான் என்று பார்க்கிறோம்.
ஆனால் எஸ்தரோ மொர்தெகாய் சொன்னபடி செய்யாமல் , எஸ்தர் 4:16 – நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச் செய்து மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம், இவ்விதமாய்ச் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன், நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
அவள் கர்த்தரை நோக்கி உபவாசித்து ஜெபிக்க தன்னையும் தன்னோடு குடின கூட்டத்தையும் ஆயத்தப்படுத்தினாள். இதனால் யாருக்கும் நீட்டப்படாத செங்கோல் அதாவது அகாஸ்வேருவிடம் எஸ்தருக்கு தயவு கிடைத்த்து என்று வேதம் சொல்லுகிறது.
இதனால் பிசாசின் ஒரு பெரிய திட்டமே உடைந்து போனது அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தை அவன் பல நாட்களாக செய்து கொண்டிருந்தான். ஆனால் எஸ்தர் ஜெபம் ஒரு சில நொடிகளில் அதை இடித்துப் போட்டது என்று பார்க்கிறோம். ஆகவே ஜெபிக்கிற மனுஷனுக்கு ஒரு போதும் தோல்வி வருவதில்லை என்பதை வேதம் நமக்கு உறுதி செய்துவைத்திருப்பதை நாம் உணர முடிகிறது.
மோசேயின் 40 நாள் ஜெபம் அவருடைய வாழ்க்கையையும் ஊழியத்தையும் பிரகாசமாக மாற்றினது
அன்னாளின் ஜெபம் அவளை உலகத்திற்கு தீர்க்கதரிசியாகவும் கர்த்தரால் மாத்திரமே ஒரு மனுஷனுக்கு நிலையான சந்தோஷம் வருகிறது என்பதையும் காண்பித்துக் கொடுத்தது.
ஆகவே ஜெபம் என்கிற திறவுகோல்களை ஒவ்வொருவரும் வருகிற நாட்களில் எடுத்து கொள்வோம். இதன் மூலம் பிசாசானவன் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பூட்டி வைத்திருக்கிற கதவுகளை திறந்து அவர்களை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு ஆயத்தப்படுத்துவோம்.
வேதம் சொல்லுகிறது, ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார். லூக்கா 21:36.
3. மூன்றாவது திறவுகோல்: அபிஷேகம்
வேதம் சொல்லுகிறது, ஏசாயா 45: 1,2,3,4 – கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும் அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும் அவனைப் பார்த்து அவன் வலதுகையைப் பிடித்துக் கொண்டு அவனுக்குச் சொல்லுகிறதாவது, நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
என்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு வெண்கலக் கதவுகளை உடைத்து இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன் நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும் நான் தெரிந்து கொண்ட இஸ்ரவேலினிமித்தமும் நான் உன்னைப் பெயர் சொல்லி அழைத்து நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.
யார் இந்த கோரேஸ் இவன் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட கோத்திரங்களில் ஒருவனா? அல்லது கர்த்தரால் அழைக்கப்பட்ட ஜாதியைச் சார்ந்தவனா? அல்லது ஆபிரகாமின் வாக்குத்தத்தத்திற்கு உட்பட்டவனாய் இருந்தானா? இல்லை இவன் விருத்தசேதனமில்லாத விக்கிர ஆராதனை செய்கிற அருவருப்புகளை நடப்பிக்கிற பெர்சிய ராஜ்ஜியத்தை சேர்ந்தவன், இப்படிப்பட்ட ஒரு மனுஷனைத் தெரிந்து கொண்டு, அவனை தம்முடைய அபிஷேகத்தினால் நிரப்புகிறர் என்று பார்க்கிறோம்.
எதற்காக இந்த அபிஷேகத்தை அவனுக்குத் தந்தார், எந்த ஜனங்கள் தங்களுடைய தேவ மகிமையை இழந்து இருளில் இருக்கிறார்களா? அவர்களை மறுபடியும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காகவும் மறுபடியும் தம்முடைய ஆலயத்தையும் பிரஸ்தாபப்படுத்துவதற்காகவும், இழந்த மகத்தான தம்முடைய தேவ மகிமையாகிய புதயல்களை மறுபடியும் குழியில் இருந்து வெளியே எடுக்கவுமே இப்படிப்பட்ட மனுஷனைத் தெரிந்து கொண்டார். இதிலிருந்து ஒரு காரியத்தை கர்த்தர் நமக்கு படிப்பித்துக் கொடுக்க விரும்புகிறார் அதுஎன்னவென்றால் எந்த மனுஷனையும் கர்த்தரால் பயன்படுத்த முடியும்.
ஒருவேளை நாம் நினைக்கலாம் இவனை கர்த்தர் சாதாரணமாக பயன்படுத்தியிருக்கலாமே என்று ஆனால் இந்த இருளுக்குப் பின்பாக ஒளிந்திருப்பவன் சாதாரண மனுஷன் அல்ல அவனுடைய நுகத்தை முறிக்க வேண்டுமானால் கர்த்தருடைய அசாத்திய சக்தியினால் மாத்திரமே முடியும். ஆகவேதான் தம்முடைய வல்லமையான ஆவியை அவனுக்கு கொடுத்தார்.
இந்த அபிஷேகம் எப்படி தேவ மகிமையை கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டு வந்த்து என்பதை பின்வருமாறு பார்க்கலாம்,
1. முதலாவது இந்த தேவ மகிமை கத்தருடைய ஆலயத்திற்குள் வர வேண்டுமானால் தேவ மிகைக்கு சொந்தக்காரர்களான யூத ஜனங்களின் கயிறுகள் இந்த உலகத்திலிருந்து அவிழ்க்கப்படவேண்டும், இத்தகைய கட்டுகளை உடைப்பதற்கு அபிஷேகத்திற்கு மாத்திரமே அதிகாரம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்த போது கடைசியாக அவர் தம்மை சுமப்பதற்காக ஒரு கழுதைக் குட்டியைக் கொண்டுவரும்படியாக சீஷர்களிடம் கேட்டுக் கொண்டார் அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் நீங்கள் இந்த கழுதைக்குட்டியை அவிழ்க்கும் போது யாராவது இந்த கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டால் அது இயேசுவுக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்.
பாருங்கள் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் நீங்கள் போய் அவிழ்த்துக் கொண்டுவாருங்கள் என்று சொல்லவில்லை ஏன் என்றால் அவருக்கு தெரியும் இவர்களால் அதை கொண்டு வர முடியாது ஏன் என்றால் இவர்கள் இன்னும் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ தம்முடைய ஊழியத்தை அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட பிறகே தொடங்கினார். ஆகவே தான் கர்த்தர் ஏன் இந்த கோரேஸை அபிஷேகத்தினால் நிரப்பினார் என்பது இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஆகவே சபைகளில் தேவ மகிமையைக் கொண்டுவர வேண்டுமானால் அத்தகைய காரியம் அபிஷேகம் பெற்றப் பிள்ளைகளால் மாத்திரமே முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
2. தேவ மகிமை பிரயாணம் செய்ய வேண்டுமானால் ஜனங்களுடைய வாழ்க்கை பரிசுத்தமாக இருக்க வேண்டும் எனவே இந்த அபிஷேகம் அவர்களுடைய கோணலான வாழ்க்கையை நேராக்கி மாற்றினது.
3. ஒரு தகப்பன் யாரை பேர் சொல்லி கூப்பிட முடியும் தம்முடைய சொந்த பிள்ளைகளை மாத்திரமே ஆகவேதான் இந்த அபிஷேகம் உலகத்தின் பிள்ளைகளாக இருந்த இஸ்ரவேலை மறுபடியும் கர்த்தர் பேர் சொல்லி அழைக்கும் படியாக செய்தது.
4. அந்தகாரத்திலும் ஒளிப்பிடத்திலும் மறைக்கப்பட்டுள்ள தேவ மகிமையையும் ஆவிக்குரிய பொக்கிஷத்தையும் வெளியே கொண்டு வருவதற்குத் தடையாக இருந்த பாவம் மற்றும் சாபம் என்கிற வெண்கலக் கதவுகளையும் இருப்புத் தாழ்ப்பாள்களையும் இந்த அபிஷேகம் உடைத்தது என்று பார்க்கிறோம்.
எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே நன்றாக ஜெபிக்க வேண்டும் நல்ல ஊழியத்தைச் செய்ய வேண்டும் குடும்பங்களில் விடுதலை வேண்டும். வேலை ஸ்தலங்களில் உயர்வு வேண்டும். கர்த்தருக்காக வாழ வேண்டும் மற்றும் ஆத்துமாக்களை அறுவடை செய்ய வேண்டும் இந்த உலகத்தைப் பாதுகாக்க வேண்டும், ஊழியங்களுக்கு உதவி செய்ய வேண்டும், பிசாசு கொண்டு வருகிற சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இந்த அபிஷேகம் ரொம்ப ரொம்ப முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
வேதம் சொல்லுகிறது,
1யோவான் 2:20,27 – அபிஷேகம் சகலவற்றையும் போதிக்கிறது.
அப் 1:8 – அபிஷேகம் உங்களை சாட்சியாக மாற்றுகிறது.
யோவேல் 2:28 – அபிஷேகம் உழியக்காரர்களாக மாற்றுகிறது.
ஏசாயா 10:27 – அபிஷேகம் நுகத்தை முறிக்கிறது.
அப் 3ம் அதிகாரம் – அபிஷேகம் நோயிலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுதலையைப் பெற்றுத் தருகிறது.
ஏசாயா 61:1,2,3 – அபிஷேகம் நீதியின் விருட்சங்களாக மாற்றுகிறது.
பிலிப்பியர் 3:21 – அபிஷேகம் அற்பமான சரீரத்தை மகிமையான சரீரமாக மாற்றுகிறது.
ஆகவே அபிஷேகத்தை அசட்டையாக எண்ணாதீர்கள், ஏனென்றால் அபிஷேகம் பெற்ற மனுஷருக்குள் மாத்திரமே கர்த்தரால் உலாவ முடியும் என்று வேதம் சொல்லுகிறது.
கர்த்தர் தாமே இந்த திறவுகோல்களை உங்களுக்குத் தந்து உங்களை பரிபூரணப்படுத்துவாராக! ஆமென்!