top of page

பழைய பிசைந்த  மாவாகிய பாரம்பரியம்

 

ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு,பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. 1 கொரிந்தியர் 5-7.

நாம் ஜெபிக்காமலே தேவனுடைய உதவியை தேடாமலே பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லாமலே நீங்கள் பிரசங்கித்து அநேக காரியங்களை செய்யலாம். ஆனால் அவைகள் தேவனுடைய பார்வையில் மரமும் வைக்கோலும் புல்லுமாயிருக்கும். உங்கள் பேச்சு திறமையினாலே   ஜனங்களுக்கு விருந்தளித்து நேரம் போவதே தெரியாமல் உங்கள் பேச்சை கேட்கும்படி ஜனங்களை கவர்ந்து கொள்ளவும் முடியும், சத்தியத்தை போதிக்கிறேன் என்று சொல்லி சபையின் உபதேச சட்டங்களை வைராக்கியமாக திணித்து சபையை நடத்தவும் முடியும். ஆனால் இவையெல்லாம் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்டதா என்பது தான் முக்கியம்.

 

இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் தங்கள் சொந்த ஆவியின் ஏவுதலால் பேசிவிட்டு ஆவியானவர் சொல்கிறார் என்று சொல்லி கொள்கின்றனர். அதாவது பரிசுத்த ஆவி மூலம் பெற்ற பெலத்தினால் நாம் ஊழியம் செய்தால் மாத்திரமே அந்த ஊழியம் நித்திய காலமும் நிலைத்திருக்கும். பரிசுத்தாவியின் ஒத்தாசை இல்லாமல் உங்கள் ஊழியத்தில் எதை சாதித்திருந்தாலும் அது இந்த உலகத்தோடே அழிந்துவிடும். நாம் ஊழியம் என்ற பெயரில்  அழிந்து போகிற எதையாவது செய்து நேரத்தை வீணடிக்க கூடாது. தேவன் தரும் ஆலோசனையையும் தேவன் வழங்கும் வல்லமையையும் சார்ந்தே நாம் ஊழியம் செய்திட வேண்டும்.

அடுத்ததாக நம்முடைய தகுதி தேவனால் மாத்திரமே உண்டாயிருக்க வேண்டும். இயேசுவின் நாள்களில் பரிசேயர்கள் மாபெரும் வேத அறிஞர்களாக இருந்தார்கள். இவர்கள் தங்கள் உபதேசங்களில் வைராக்கியமாக நிலைத்திருந்தார்கள். இவர்கள் இயேசுவிடம் வந்து உம்முடைய சீஷர்கள் ஏன் இதை செய்தார்கள் ஏன் இதை செய்யவில்லை என்று கேட்டு கொண்டே இருந்தார்கள். மேலும் இவர்கள் தாங்கள் கற்ற பாரம்பரியங்களை இயேசுவுக்கு சுட்டிக்காட்டி அவரும் அவருடைய சீஷர்களும் அந்த பாரம்பரியங்களை எந்த இடத்தில் மீறினார்கள் எனவும் குற்றப்படுத்தி கொண்டே வந்தனர்.

 

இன்றைக்கு ஊழியத்திலும் சபைகளிலும் குறை சொல்லி விமர்சிக்கும் மனப்பான்மையை கொண்ட விசுவாசிகள் ஏராளம். இன்றைக்கு ஏராளமான வேத அறிஞர்கள் செத்த நிலையில் வாழ்ந்து கொண்டு சரியான உபதேசங்களை பேசுகிறார்கள். இவர்கள் ஆவியில் செத்தவர்கள் ஆனால் வெளிப்புறத்தில் சரியானவர்கள். பல விசுவாசிகளும் இதே பரிசேய ஆவியை உடையவர்களாக இருக்கின்றனர். சரியான உபதேசத்தின் படி ஞானஸ்நானம் எடுத்து கொண்டு ஆவிக்குறிய வாழ்க்கையில் உலர்ந்து போய் செத்த நிலையில் இருந்தால் என்ன பிரயோஜனம்.??

 

சபையின் உபதேசத்துக்காக  நகையை கழற்றி விட்டு கனி கொடாமல் சாட்சியற்ற வாழ்க்கை வாழ்வதால் ஒரு பயனும் இல்லை.!! தலையை மூடிக்கொண்டு வெள்ளை ஆடை அணிந்து கொண்டு பொய் சொல்கிறவர்களாகவும் கபடுள்ளவர்களாகவும் இருதயத்தில் கசப்பையும் பொறாமையையும் கொண்டவர்களாகவும் வாழ்வதில் ஒரு பயனும் இல்லை.

 

நம்முடைய ஜீவியமும் ஆவிக்குறிய தன்மையுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும். இயேசு சொன்ன முக்கியமான கட்டளையான  ஞானஸ்நானத்துக்குள் ஜனங்களை நடத்தி விட்டு அவர்களை சத்தியத்துக்குள் நடத்தவில்லையென்றால் ஜனங்கள் இன்னும்  அடிமைதனத்துக்குள் தான் இருப்பார்கள். ஏனென்றால் சத்தியம் தான் விடுதலையாக்கும், ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே தான் விடுதலை. அன்றைக்கு ஜெபம் பண்ண போன பரிசேயன் தான் பாரம்பரியமாக செய்து வந்த காரியங்களை சொல்லி தேவ சமூகத்தில் வைராக்கியமாக அறிக்கையிட்டான் ஆனால் ஆயக்காரனோ தன்னை தாழ்த்தி தன்னுடைய உண்மையான ஆவிக்குறிய நிலைமையை தேவனிடம் பயத்தோடே சொன்னான் அவன் நீதிமானாய் திரும்பி போனான்.

 

இன்றைக்கும் இப்படி பட்ட பரிசேயர்கள் நாங்கள் தான் உண்மையான ஆவிக்குறியவர்கள் என்று வீம்புகளில் மேன்மை பாராட்டுகிறார்கள் இவர்கள் தேவனை அறிந்திருக்கிறோம் என்று அறிக்கை பண்ணுகிறார்கள் கிரியைகளில் அவரை மறுதலிக்கிறார்கள். பரிசேயர்களிடம் இயேசு நீங்கள் தேவநீதியையும் அன்பையும் விட்டு விட்டு எல்லா பாரம்பரியத்தையும் செய்து வருகிறீர்கள் என்று எச்சரித்தார், இன்றைக்கும் எச்சரிக்கிறார். ஒரு சமயம் பரிசேயர்கள் உமது வார்த்தைகளை கண்டு இடறலடைந்தார்கள் என்று சீஷர்கள் சொன்ன போது இயேசு அதற்கு அவர்கள் குருடருக்கு வழி காட்டும் குருடர்கள் என்று கூறி என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கி போடப்படும்.(மத் 15-12,13) என்றும் கூறினார், அவர் சொன்ன அந்த கடைசி வார்த்தையில் நீங்கள் உபதேசிக்கும் போது ஒரு விதையை நீங்கள் விதைக்கிறீர்கள் அந்த விதை தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் அது ஒரு நாள் பிடுங்கப்பட்டு போகும் என்ற உண்மையை தான் வெளிப்படுத்தினார். இன்றைக்கு பெந்தேகோஸ்தே முதல் மற்ற திருசபைகளின் ஊழியக்காரர்கள் தேவ நீதியை விட தங்கள் பாரம்பரிய சபை உபதேச சட்டங்களை வைராக்கியமாக போதிக்கிறார்கள். இத்தகய மார்க்க பிரசங்கிகள் ஜனங்களை தேவனுக்கு நேராக திருப்பாமல் தங்கள் மார்க்கதானாக்குகிறார்கள்.

 

ஏனென்றால்?? இவர்கள் தங்கள் ஸ்தாபன உபதேசங்களுக்கு ஒத்த வேஷம் தரிக்கும் பரிசேய ஆவியை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.  இயேசு இப்படியாக சொன்னார் பரிசுத்தாவி உங்களிடத்தில் வரும் போது அவர் சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார் என்றார்.நம்முடைய உபதேசங்களும் போதனைகளும் பரிசுத்தாவியானவரால் உண்டாயிருக்கிறதா என்பதே முக்கியம்.

 

அடுத்ததாக  இத்தகய பரிசேய ஆவியை உடையவர்கள் இயேசு உருவாக்க சொன்ன சீஷர்களுக்கு பதிலாக பரிசேயர்களையே உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் ஏன் தெரியுமா இவர்கள் புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக தகுதி பெறவில்லை? பரிசுத்த ஆவியானவர் நம்மை  ஆயத்தப்படுத்தி தகுதியுள்ளவர்களாய் மாற்றினாலன்றி நாம் புதிய உடன்படிக்கையின் ஊழியர்களாக மாற முடியாது!! மாறாக நாம் ஒரு மார்க்க பிரசங்கியாக இருப்போம், இயேசுவும் நம்மை பார்த்து உங்கள் பாரம்பரியத்தால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள் என்பார். (நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.மாற்கு 7-13).

எனவே இந்த கடைசி நாள்களில் சபை பாரம்பரியத்துக்கு ஒத்த வேஷம் தரித்து  ஊழியம் செய்யாமல் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையை பெற்று கொண்டு  தேவனுடைய ராஜ்ஜியத்துக்காக ஊழியம் செய்வோம். ஆமென்.

bottom of page