தேவ வல்லமை நிறைந்த பிரசங்கம்
௧ர்த்தரோ எனக்குத் துணையாக நின்று,என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும்,என்னைப் பலப்படுத்தினார்.
2 தீமோத்தேயு 4-17.நீங்கள் பிரசங்கம் பண்ணும் போது ஜனங்கள் கேட்கும்படியாகவும் நீங்கள் சொன்ன தேவ வசனங்கள் கிரியை செய்யும்படியாக முதலாவது தேவன் உங்களை பலப்படுத்த வேண்டும்.அதாவது பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிறைந்து தேவ பிரசன்னத்தோடு பிரசங்கம் பண்ணவேண்டும்.இயேசு கிறிஸ்துவும் ஆதி அப்போஸ்தலர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையோடு பிரசங்கித்தார்கள்.அவர்கள் பிரசங்கித்த போது கேட்டவர்கள் உணர்த்தப்பட்டார்கள். ஜனங்கள் பரிசுத்தாவியானவரால் நிரப்பபட்டார்கள், அநேகர் மனம் திரும்பினார்கள். அதற்கு காரணம் அவர்கள்மேலிருந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இதற்க்காக அவர்கள் கிரயம் செலுத்தினார்கள் எப்பொழுதும் தேவ சமூகத்தில் உபவாசத்தோடும் ஜெபத்தோடும் தரித்திருந்தார்கள்.மேல் வீட்டறையில் தேவ வல்லமையை பெற்று கொண்டு பேதுரு பிரசங்கம் பண்ணிய போது பிரசங்கத்தை கேட்டவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.இன்றைய பிரசங்கிகள் தேவசமூகத்தில் காத்திருப்பதில்லை.
ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுவதை கேட்க இவர்களுக்கு நேரமில்லை!!!? ஏனென்றால் ஊழியத்தை அதிகமாக செய்ய ஆரம்பித்து தேவ சமூகத்தில் தரித்திருப்பதை குறைத்து விட்டார்கள். தேவனுக்கு காத்திருப்பவர்கள் கழுகுகளை போல பெலனடைவார்கள் என்று வேதம் சொல்கிறது, ஆனால்இவர்களோஉலக காரியங்களில் தங்கள் நேரங்களை மிகுதியாக செலவிடுவதால் இவர்களிடம் மாம்ச பெலன் தான் இருக்கிறது. இவர்களுடைய செய்திகளும் போதனைகளும் சுய அறிவினாலும் வெறும் வேத அறிவினாலும் உண்டாயிருக்கிறது. தேவன் யோனாவிடம் நான் சொன்னதை ஜனங்களிடம் பிரசங்கி என்று சொல்வதை பார்க்கலாம், தேவன் சொல்ல சொன்னதை யோனா பிரசங்கம் பண்ணிய போது ஜனங்கள் மனம் திரும்பினார்கள்.
இன்றைக்கு தேவன் சொல்ல சொன்னதை பிரசங்கிக்கிற ஊழியக்காரர்கள் மிகவும் குறைவு.எனவே தான் சபைகள் பக்திவிருத்தியடையாமல் இருக்கிறது. இன்றைய பிரசங்கிகள் சபையில் தங்களுக்கு பிடிக்காதவர்களை மறைமுகமாக தாக்கி பேசுவதற்க்காக பிரசங்க மேடையை தவறாக பயன்படுத்துகிறார்கள். இவர்கள் தேவ வசனத்தை பயன்படுத்தி பிரசங்க மேடையில் சபையின் விசுவாசிகளை தாக்கி பேசுகிறார்கள், சில ஊழியக்காரர்கள் தங்களிடம் ஆயிரம் குறைகளை வைத்து கொண்டு அரசியல்வாதிகளை போல பிற ஊழியக்காரர்களையும் பிற ஊழியங்களையும் கிண்டல் செய்து ஓயாமல் குறை சொல்லி பேசுகிறார்கள், மேலும் பலர் தங்களுக்கு ஊழியம் செய்ய கிருபைகளையும் வரங்களையும் கொடுத்த தேவனை மறந்து தாங்கள் பல வருடங்கள் ஊழியம் செய்ததையும் தான் அதை செய்தேன் இதை செய்தேன் தீர்க்கதரிசனம் உரைத்தேன் என்று தங்களை பற்றியே பெருமையாக பேசி கொண்டே யிருப்பார்கள்.
தேவ பிரசன்னம் இல்லாத இத்தகய மாயமாலமான பிரசங்கிகளால் யாரும் உணர்த்தப்படுவதில்லை!!?? மேலும் சிலர் வேத அறிவினால் அனேக புள்ளி விபரங்களை வைத்து கொண்டு தங்கள் பேச்சு திறமையினாலும் நயவசனிப்பினாலும் ஜனங்களை கவர்ந்து கொள்கிறார்கள். மேடை பேச்சாளர்களுக்கும் இவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.இவர்கள் மனித புகழ்ச்சியை பெற்று கொள்ளும்படிக்குநயவசனிப்பாக பேசுகிறார்கள்,இவர்கள் ஜனங்களை தங்களிடம் ஈர்த்து கொள்ளுகிறார்களே தவிர ஜனங்களை தேவனுக்கு நேராக ஒரு போதும் திருப்புவதில்லை. நயவசனிப்பான இத்தகய பிரசங்கங்களை கேட்கும் ஜனங்கள் உணர்ச்சிவசப்பட்டு பிரசங்கித்த ஊழியக்காரரையும் அவரது பிரசங்கத்தையும் பற்றி புகழ்ந்து பேசுகிறார்களே தவிர அவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. (என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது.1 கொரிந்தியர் 2-5) என்று பவுல் சொன்னது போல நம்முடைய பிரசங்கம் பரிசுத்த ஆவியினால் உருவாக்கபட்டு அவரது வல்லமையால் மாத்திரமே பிரசங்கிக்கப்படவேண்டும்.
மாம்சீக பெலத்தினால் சத்தமாக பிரசங்கிப்பதாலேயோ அருமையான வார்த்தைகளை உபயோகிப்பதாலேயோ ஜனங்கள் மத்தியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. அப் 16 ம் அதிகாரத்தில் பவுல் பிரசங்கம் பண்ணும் போது லீதியாள் என்ற பெண் கேட்டு கொண்டிருந்தாள்.பவுல் சொல்லியவைகளை கேட்கும்படியாக தேவன் அவள் இருதயத்தை திறந்தார். உடனே அவளும் அவள் வீட்டாரும் உணர்த்தப்பட்டு வசனத்துக்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் பெற்றார்கள், இங்கு பவுல் பிரசங்கம் பண்ணும் போது தேவன் கிரியை செய்வதை காணலாம்.இன்றைக்கு நாம் பிரசங்கங்களை கேட்கிறோம் ஆனால் சத்தியத்துக்கு கீழ்படிவதில்லை.அதாவது பல வருடங்களாக வசனத்தை கேட்டும் கேளாதவர்களாகவே இருக்கிறோம். ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்யவில்லை.ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலை உண்டு.அவரே சகல சத்தியத்துக்குள்ளும் நம்மை நடத்துகிறவர்.அவரே பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாய தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துகிறவர்.
உங்கள் சபையை குறித்து கூட பெருமையாக பேசாதீர்கள் கிறிஸ்துவே சபைக்கு தலையாயிருக்கிறார். ஆலயத்திலும் பெரியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நீங்கள் அவருடைய அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்பதை மறந்துவிடாதீர்கள்.(அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். மாற்கு 16-20)
பிரியமானவர்களே நீங்கள் பிரசங்கம் பண்ணும் போது தேவன் சொல்ல சொன்னதை மாத்திரமே பேசுங்கள்,உங்களுக்கு பிடிக்காதவர்களை திட்டி பேச இது அரசியல் மேடையல்ல. தேவனுடைய வார்த்தையை பேசுவதற்கான பரிசுத்தமான இடம் என்பதை மறந்து விடாதீர்கள்.எந்த சூழ்நிலையிலும் உங்களை பற்றியோ தேவன் உங்களை வல்லமையாக பயன்படுத்தினதையோ பெருமையாக அதாவது ஜனங்கள் உங்களை உயர்வாக எண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் பேசாதிருங்கள். தேவன் சொல்ல சொன்னால் மாத்திரம் தேவனை மகிமைபடுத்தும்விதமாக சொல்லுங்கள்.பிரசங்க பீடத்தில் நீங்கள் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து ஒரு நாள் கணக்கொப்புவிக்க வேண்டும். (தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.பிரசங்கி 5-2)
நீங்கள் பிரசங்கம் பண்ணுவதற்கு முன் தேவ சமூகத்தில் காத்திருங்கள், கிரயம் செலுத்துங்கள். தேவ வல்லமையோடு தேவன் எதை பேச சொல்கிறாரோ அதை மாத்திரம் பேசுங்கள்.தேவன் அங்கு கிரியை செய்வார் அப்போழுது அநேகர் தொடப்படுவார்கள்,அநேகர் மனம் திரும்புவார்கள்,அநேகர் இரட்சிக்கபடுவார்கள்,உங்கள் ஊழியங்களில் தேவ மகிமை வெளிப்படுவதை காண்பீர்கள்,ஆமென்.
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது. நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.1 தெச1-5