top of page

நூறு மடங்கு ஆசீர்வாதம் 

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்.  அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான் ஆதியாகமம் 26:12,13.

ஈசாக்கு தேவனுக்கு கீழ்படிந்து தேவன் சொன்ன தேசத்துக்கு சென்ற போது தேவன் அவன் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்தார் அவனை துரத்திவிட்ட ராஜா அவனை தேடி வந்து அவனோடு உடன்படிக்கை பண்ணி கொண்டான், அவன் ஜசுவரியவனாகி வரவர விருத்தியடைந்தான், மகா பெரியவனானான் என்று வேதம் சொல்லுகிறது, ( ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது, தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர், உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு, எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

1 நாளாகமம் 29:12.கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும்,ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமா யிருக்கிறார். அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர்.1 சாமுவேல் 2:7)

 

இன்றைக்கு சிலர் புதிய உடன்படிக்கையில் வெறும் ஆவிக்குறிய ஆசீர்வாதம் மாத்திரம் தான் உண்டு என்று தவறாக வாதிடுவார்கள்  இப்படி சொல்கிறவர்கள் ஜசுவரியவான்களாக இருப்பார்கள்.ஆனால் தேவனுடைய ராஜ்ஜியத்தை முதலாவது தேடுகிறவர்களுக்கு எல்லாம் கூட கொடுக்கப்படும் என்று இயேசு கிறிஸ்து சொன்னார். ஆனால் இன்றைக்கு உலக ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே அநேகர் தேவனை தேடுகிறார்கள். தேவனுக்கு காணிக்கை கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் இருதயத்தை அவருக்கு கொடுப்பதில்லை.  இப்படி இம்மைக்கான உலக ஆசீர்வாதத்தை மாத்திரம் தேடுவீர்களென்றால் எல்லா மனிதர்களை காட்டிலும் பரிதபிக்கபட்டவர்களாக ஆவீர்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. தேவன் ஈசாக்கை பார்த்து நான் உன்னோடே கூட இருந்து என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியை பெருக பண்ணுவேன் என்றார்.ஆபிரகாம் தேவனுக்கு கீழ்படிந்து தேவனுடைய நீதியையும் நியாயத்தையும் கைக்கொண்டபடியினாலே தேவன் அவன் சந்ததியை ஆசீர்வதித்தார். (ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும்என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 26:4,5)

( கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 18:19)

 

இன்றைக்கு பிள்ளைகள்  ஆசீர்வதிக்கபடாததற்க்கு முக்கிய காரணம் பிதாக்கள் செய்யும் பாவம்.இவர்களும் சத்தியத்தில் நடப்பதில்லை தங்கள் பிள்ளைகளையும் சத்தியத்தில் நடத்துவதில்லை.பக்தியுள்ள சந்ததியை உருவாக்க தேவன் நமக்கு பிள்ளைகளை தந்திருக்கிறார். இன்றைக்கு  சத்தியத்தை அறிந்து கொண்டு துணிகரமாக பாவம் செய்து கொண்டிருப்பவர்களின் சந்ததிகளின் வாழ்க்கையில் நியாயத்தீர்ப்பு  வெளிப்படுகிறது. தேவன் பிதாக்களுடைய பாவத்தை பிள்ளைகளுடைய மடியில் சரிகட்டுகிறார் என்று வேதம் எச்சரிக்கிறது.எனவே பிதாக்கள் நிதியையும் நியாயத்தையும் காத்து நடக்கும் போது பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.அன்றைக்கு தாழ்மையில் இருந்த நேரத்தில் தேவனை தேடினவர்கள் தேவன் அவர்களை ஆசீர்வதித்து உயர்த்திய போது தேவனை தேவனை தேடுவதை விட்டு விட்டு பணத்தை நம்பி அதன் மேல் நம்பிக்கை வைத்து தேவனை மறந்து போனார்கள்.இன்றைக்கு பணமும் ஜசுவரியமும் வந்தவுடன் எல்லாம் நான் சம்பாதித்தது என்று பெருமையினால் அநேக காரியங்களை செய்கிறார்கள்.ஜீவனத்தின் பெருமை புல்லின் பூவை போல அழிந்துவிடும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.(என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிரு.உபாகமம் 8:17)

என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். எரேமியா 2:13)என்று தேவன் சொல்கிறார்.

இன்றைக்கு பணமும் பொருளும் வந்தவுடன் தேவனை விட்டு விலகி துணிகரமாக உலக ஆசை இச்சைகளின் படி வாழ்கிறவர்களின்   பிள்ளைகளுடையவாழ்க்கையில் ஆசீர்வாதங்களுக்கு பதிலாக சாபங்களும் குறைவுகளும் நிழலிடுகிறது.உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.(ஓசியா 4-6.)என்று தேவன் எச்சரிக்கிறார்.

 

பிரியமானவர்களே உங்கள் பிள்ளைகளின் ஆசீர்வாதம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது எனவே சத்தியத்தை கேட்கிறவர்களாக இராமல் அதன்படி நடக்கிறவர்களாக ஜாக்கிரதையாக இருங்கள்.இன்றைக்கு நீங்களும் உங்கள் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்படும் படிக்கு தேவனுக்கு பிரியமில்லாத உங்கள் முரட்டாட்டங்களிலிருந்து மனம் திரும்புங்கள். பிறரை ஏமாற்றி அபகரித்த பணத்தை சகேயு திரும்ப கொடுத்தது போல உடனடியாக திரும்ப கொடுங்கள். இன்றைக்கு உங்களை நிதானித்து அறியுங்கள்,உங்கள் தொழிலில் உண்மையுள்ளவர்களாக இருங்கள். பண விஷயங்களில் நேர்மையுள்ளவர்களாக இருங்கள், நீங்கள் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துகளில் நம்பிக்கை வைக்காதீர்கள். மனித புயபலத்தை நம்புகிறவன் சபிக்கப்பட்டவன் என்று வேதம் சொல்கிறது. உன்னை போல பிறனை நேசி, உனக்கு தீமை செய்கிறவனுக்கு நன்மை செய் என்று இயேசு கிறிஸ்து சொன்ன சத்தியத்துக்கு விரோதமாக பிறனுக்கு அநியாயம் செய்யாதீர்கள், நீங்கள் செய்யும் அநியாயத்தின் விளைவுகள் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையிலும் தொடர்ந்து வரும்.நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள், பிறருக்கு நியாயக்கேடு செய்தால் உங்களுக்கும் அப்படியே செய்யப்படும்.நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும் நீதியுள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும் போது ஆபிரகாமின் நீதியினிமித்தம் ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டது போல உங்கள் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.தாழ்வில் நம்மை நினைத்தவரை துதியுங்கள்.

 

அதாவது உங்களை ஒன்றுமில்லாமையிலிருந்து உயர்த்தினவரை எக்காலத்திலும் முழு இருதயத்தோடு அன்பு கூறுங்கள். ஒருவன் என் மேல் அன்பாயிருந்தால் என் கற்பனைகளுக்கு கீழ்ப்படிவான் என்று இயேசு சொன்னார். இந்த உலகத்தில் தேவன் உங்களுக்கு கொடுத்த நாள்களில் நன்மை செய்து உங்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தை சேர்த்து வையுங்கள். (தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். 1 பேதுரு 3-9)ஆமென்.

bottom of page