top of page

மாயை! மாயை!

சகோதரி. அனு ஃபெஸ்லின்

தாவீது ராஜாவின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய சாலொமோன்  கூறுகிறார் "மாயை, மாயை, எல்லாம் மாயை". பூமியிலுள்ள சகல ராஜாக்களைப் பார்க்கிலும் சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாய் இருந்தான் என வேதம் கூறுகிறது. இப்படி  ஞானத்தில் தலைசிறந்து விளங்கி , உலக இன்பங்களை அனுபவித்து வாழ்க்கையை நன்றாய் ஆராய்ந்து பார்த்த பிரசங்கி  கூறுகிறார் "சூரியனுக்கு கீழே செய்யப்படுகிற காரியங்களை எல்லாம் கவனித்து பார்த்தேன்; இதோ எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாய் இருக்கிறது". அதாவது தன வாழ்க்கையை நன்றாய் ஆராய்ந்து பார்த்து ஞானமான செயலினால் உண்டாகும் பலனை அறிந்தவராய் நமக்கு  கற்றுத்தருகிறார். தேவனற்ற, தேவனை மகிமைப்படுத்தாத எல்லா காரியங்களும் மாயையே. மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் என தாவீது ராஜா தேவனை நோக்கி மன்றாடுகிறார்[சங்கீதம் 119:37]. உலக மாயை மனிதனில்  தன்னைக் குறித்து மிதமிஞ்சின எண்ணத்தை உருவாக்கி பெருமைக்கொள்ள வைக்கிறது. உலகத்தின் மாயை என்ன என்று நாம் அறிந்துகொண்டால் மட்டுமே மாயையான காரியங்களை விட்டு நம் மனதை திருப்ப முடியும். பிரசங்கி ஆராய்ந்து வகையறுத்து  சொல்லியிருக்கிற மாயையான காரியங்களைக் குறித்து நாம் வேத வசனங்கள் வாயிலாக தியானிப்போம்.

  • மனித வாழ்வு

 

மனுஷன் பிறக்க ஒரு காலமுண்டு;  இறக்க ஒரு காலமுண்டு அதை மனிதன் அறியான் [பிரசங்கி :2:1-11].தேவன் மாத்திரமே அறிவார். எனவே மனித வாழ்க்கையும் மாயையே. மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்[சங்கீதம் :144:4] மனிதனுடைய நாட்கள் கொஞ்சமானது. வேதம் மனிதனுடைய வாழ்க்கையை புல்லுக்கு, புகைக்கு ஒப்புமைப்படுத்துகிறது. மாயையான இந்த உலக வாழ்க்கையில் அதிக கரிசனைக்கொண்டு அதிக வருடம் உயிரோடு வாழ வேண்டும் என மனிதன் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் மாயையானது. மனிதனுடைய ஓட்டம் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமானது. தாவீது ராஜா கூறுகிறார் இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்[சங்கீதம் 39:5 ].  பக்தனாகிய யோபு கூறுகிறார் "நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது[யோபு:8:9]" இன்றைக்கு நாம் வாழுகிறோம். அடுத்த நொடி நாம் உயிரோடு இருப்போமா என்பதே நமக்கு தெரியாது. நம்முடைய   மாயையான இந்த வாழ்க்கையில் எத்தனை கசப்புகள் வெறுப்புகள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். நம்முடைய நாட்களின் தொகையை அறிந்தவர் தேவன் மாத்திரமே.  பிரயோஜனமானதை நமக்கு போதித்து நம்மை நல்வழியில் நடத்துகிற தேவன் அவர்.எனவே பிரயோஜனமற்ற இந்த உலக வாழ்க்கையின் மேல் பற்றுக்கொள்ளாமல் பிரோயோஜனமானதை நமக்கு போதித்து நம்மை நித்தியவழியில் நடத்துகிற தேவனையே பற்றிக்கொள்ளுவோம்.

 

  • மனித ஞானம்

 

தேவனிடத்தில் ஞானம் வேண்டும் என கேட்ட பெற்றுக்கொண்ட சாலொமோன் ஞானி கூறுகிறார் “ மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன். மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான். உலக  ஞானம் பிரயோஜனமற்றது” [பிரசங்கி :2:15,16]. இன்றைக்கு உலக ஞானத்தை நாம் அடையவும் நம் பிள்ளைகளுக்கு புகட்டவும் எவ்வளவோ பிரயாசப்படுகிறோம். நம்மை ஞானி என்று காட்டிக் கொள்ளுவதில் பெருமைப்படுகிறோம். ஆனால் வேதம் கூறுகிறது "ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். இவ்வுலகத்தின்  ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாய் இருக்கிறது[1கொரிந்தியர்:3:18,19]. யோபு கூறுகிறார்  "ஆண்டவருக்கு  பயப்படுவதே ஞானம்"[யோபு:28:28]. கர்த்தருடைய சொல்லை வெறுத்துபோட்டவர்களுக்கு ஞானமேது? என தேவன் எரேமியா தீர்க்கரிடம் இஸ்ரவேலரைக் குறித்து கூறுகிறார்[எரேமியா:8:9].  கர்த்தருக்கு பயந்து அவர் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து தேவன் நமக்கு கொடுக்கும் பணிகளை செய்வதே தேவ ஞானம். அப்படி பணிசெய்கிறவர்களுக்கு பரலோகத்தில் பலனுண்டு. நம் சுயஞானத்தினால் இன்றைக்கு பல காரியங்களை நாம் தேவனுக்கு செய்கிறோம். அவை அனைத்தும் மாயையே.

 

  • மனிதனுடைய பிரயாசம்

 

 

ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன். ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது[பிரசங்கி:2:19-21]. மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது. மனிதன் பிரயாசப்பட்டு எதை சேர்த்து வைத்தாலும் தன்  அடுத்த சந்ததி அதை மதியீனமாய் செலவிட்டு அழிக்கிறான்.  உலகத்துக்காக மனிதன்  படுகிற எல்லா பிரயாசமும் வீண். ஆனால் நாம் தேவனுக்காய் படுகிற பிரயாசம் ஒருநாளும் வீணாய் போகாது. வேதம் கூறுகிறது "கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும்இருப்பீர்களாக"[1கொரிந்தியர்:15:58]. சாலொமோனின் தந்தையாகிய தாவீது எல்லாவற்றையும் தன் குமாரருக்கு சேர்த்தாலும்  முக்கியமாக "கர்த்தரை தேட வேண்டும் என்ற அறிவை" தன் குமரனுக்கு சொல்லிக் கொடுத்தார். தாவீது ராஜா தன குமாரனிடம் "என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.[1நாளாகமம்:28:9,10]". தாவீது ராஜா சாலொமோனுக்கு கர்த்தரை தேட வேண்டும் என்ற அறிவையும்  கர்த்தருக்காக  பிரயாசப்பட வேண்டும்   என்பதையும்    கற்றுக்கொடுத்தார். ஆனால் சாலொமோன் தன் குமாரனாகிய ரெகொபெயாமுக்கு  அதை கற்றுக்கொடுக்கவில்லை. இந்த அறிவு இல்லாமையால் ரெகொபெயாம் தவறான ஆலோசனைகளுக்கு செவிகொடுத்து தன் தகப்பனின் பிரயாசத்தை அழித்துப் போட்டான். ரெகொபெயாம் காலத்தில் ராஜ்ஜியம் பிளவுப்பட்டதை நாம் அறிவோம். தேவனை தேடவும் அவருக்காய் பிரயாசப்படவும் நாம் கற்றுக்கொண்டு நம் சந்ததிக்கும் கற்றுக்கொடுப்போம்.      

 

  • மனிதனுடைய சம்பத்து

 

 

தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது[பிரசங்கி :2:26;6:1,2]. இன்றைக்கு அநேக மனிதர்கள் உண்ணாமல் உறங்காமல் பல தீயவழிகளில் சம்பாதிக்க  பிரயாசப்படுவதை நாம் காண்கிறோம். தீயவழிகளில் சம்பாதித்த எல்லாரும் அதை அனுபவிப்பதில்லை. தேவனின் பார்வைக்கு நாம் நல்லவர்களாக நீதிமான்களாக வாழும் போது மட்டுமே அதை சம்பாதிக்க ஞானத்தையும் அறிவையும் அளிக்கிறார். நாம் சம்பாதித்ததை அனுபவிக்கவும் வாய்ப்பை கொடுக்கிறார். நாம் நீதிமானாய் வாழுவதையே தேவன் எதிர்பார்க்கிறார். ஏனெனில் வேதம் கூறுகிறது பொல்லாத மனுஷன் புழுதியைப் போல பணம் சேர்த்தாலும் அவன் சேர்த்ததை நீதிமான் உடுத்திக்கொள்ளுவான்[யோபு:27:6,7]. நல்லவன் தன் பிள்ளைகளுக்கு சுதந்தரம் வைத்துப்போகிறான். பாவியின் ஆஸ்தி நீதிமானுக்கு வைக்கப்படும்[நீதிமொழிகள்:13:12]. நாம் நம் பிள்ளைகளுக்கு இயேசுவை சுதந்தரமாக வைத்து செல்வோம். உயர்ந்த சம்பத்தாகிய வேதத்தை கற்றுக்கொடுத்து நீதியின் வழியில்  வாழ கற்றுக்கொடுப்போம். அழிந்து போகிற உலக சம்பத்துக்களை சேர்ப்பதை விட தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு பொக்கிஷத்தை சேர்த்துவைக்க கற்றுக்கொடுப்போம்.

 

  • பேராசை

 

 

பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.  ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை[பிரசங்கி 4:7,8]. அதாவது தனிமையாயிருந்து எல்லாமே எனக்கு மட்டும்  தான் வேண்டும் என்று சம்பாதிப்பவன் திருப்தியடைவதில்லை. இன்றைய மனிதர்களில்  பெருபான்மையானோர்  இப்படி தான் யாரோடும் சேராமல் சுயநலத்தோடு தான் உண்டு தன் வேலை உண்டு, எவ்வழியிலானாலும் தனக்கு சேர்க்க வேண்டும்  என்ற பேராசையோடு ஓடுவதை நாம் காணலாம்.  பவுலடியார் கூறுகிறார் "அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக"[பிலிப்பியர்:2:4]. கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவைப் போல மனதுருக்கம் உள்ளவர்களாய் நம்மோடு  சுற்றி இருக்கிற விசுவாசிகளின் நலனில் அக்கறை கொண்டவர்களாய்  உதவி செய்வோம். அன்பானவர்களே உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும். கிறிஸ்து நமக்கு கொடுத்த பணி அப்படிப்பட்டது. ஒருவன் விதைப்பான். மற்றவன் அறுப்பான். மகிமை தேவனுக்கே.

 

  • புகழ்

 

 

சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன். அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது[பிரசங்கி:4:16]. சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்து உள்ள பெரியவர்களை சார்ந்திருப்பதும் மாயையே.  தாவீது ராஜாவின் மகனாகிய அப்சலோம் கர்த்தருடைய திட்டத்திற்கு மாறாக தனக்கு தானே புகழ் தேடி ஆட்களை சேர்த்துக்கொண்டு தானும் நியாயம் விசாரிப்பேன் என்று ராஜாவாக திட்டமிட்டான். இதனால் பெரியவர்கள், தாவீதின் ஆலோசனைக்காரன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு தாவீதுக்கு எதிராக யுத்தம் செய்து இறுதியில் மரணத்தை தழுவினான். புகழ் தேடுவது பயனில்லை. கர்த்தர் சொல்லுகிறார் கட்டளைகளைக் கைக்கொண்டால் கீழாக்காமல் மேலாக்குவேன்; வாலாக்காமல் தலையாக்குவேன் [உபாகமம்:28:13].

 

 

  • செல்வம்

 

 

பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே[பிரசங்கி:5:10;6:1,2]. பணம் தேவையை திருப்தியாக்குவதில்லை. தேவையை அதிகரிக்கும். எந்த ஒரு செல்வந்தனும் தனக்கு இருக்கிறது போதும் என திருப்பியடைந்ததை நாம் கண்டதில்லை.  பணம் மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும். இப்படி மனுஷன் வாயை கட்டி வயிற்றை கட்டி சம்பாதிப்பதை பல நேரங்களில் அவன் அனுபவிப்பதில்லை. எனவே அதுவும் மாயயையாய் இருக்கிறது. வேதம் கூறுகிறது பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் [1தீமோத்தேயு:6:10,11]. நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு[[1தீமோத்தேயு:6:10,11].நாம் சம்பாதிக்கும் செல்வம் நிலையற்றது. நிலையான செல்வம் நம் இயேசு ஒருவரே.  எனவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் பண ஆசையினால் விசுவாச வாழ்க்கையை விட்டு விலகாமல் தேவனுடைய குணாதிசயங்களை சம்பாதிக்கும் படி நாடுவோம். வேதம் கூறுகிறது போதுமென்ற மனதுடன் கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். பண ஆசை கொண்ட சகேயுவை ஒருநாள் இயேசு சந்தித்தார். பண ஆசை போனது. இரட்சிப்பை கண்டு கொண்டான். இரட்சிப்பை பெற்றுக்கொண்ட நாம்  விசுவாசத்திலிருந்து நம்மை விலக செய்யும் பணஆசையை உதறி தள்ளிவிட்டு  நல்ல போராட்டத்தை போராடி நித்திய ஜீவனுக்கென்று ஓடுவோம்.

 

  • பொருளாசை

 

 

ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது [பிரசங்கி:6:9]. பொருளாசைக்கு எல்லை இல்லை. இன்றைய வர்த்தக உலகம் மனிதனின்  தேவைக்கு வாங்குகிற கோட்பாட்டையே மாற்றி உலகத்தை கண்களின் இச்சைக்கு அடிமைப்படுத்தி பொருட்களை வாங்க நம்மை நிர்பந்திக்கிறது. இலவசம்,சலுகை என மனிதனுக்கு ஆசைகாட்டி , தேவையா இல்லையா என்பதை  சிந்திக்க விடாமல் மனித மூளையை செயலிழக்க பண்ணுகிறது. இந்த கண்களின் இச்சியினின்று கிறிஸ்தவர்களாகிய நாம் விடுதலை பெற வேண்டும். .உதாரணமாக நாம் ஒரு வாகனம் வாங்க வேண்டுமானால் ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து தேவைக்காக ஜெபித்து வாங்க சென்ற காலம் மாறி விளம்பர சலுகைகள்  போட்டிருப்பதை  பார்த்து முடிவெடுக்கிற காலத்தில் வாழுகிறோம். துன்மார்க்கன் தான்   இச்சித்ததை பெற்றதினால் பெருமைபாராட்டுகிறது போல இன்றைய விசுவாசிகளும் உலக பொருட்களை சேர்த்துக்கொண்டு அதனை பலரிடம் காட்டி பெருமை பாராட்டுவதுண்டு. வேதம் கூறுகிறது விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே [எபேசியர்:5:5]. பொருளாசையை உண்டுபண்ணும் அவயவத்தை அழித்துப் போடுங்கள் என வேதம் நம்மை எச்சரிக்கிறது.அன்பானவர்களே " வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்" என்ற வேதத்தில் படிக்கிறோம். இந்த ஆலோசனையை நாம் பின்பற்றுவோம்[நீதிமொழிகள் 24:3 ]. குறிப்பாக ஸ்திரீகள் புத்தியினால் வீட்டை கட்டுவோம். அநேக நேரங்களில் நாம் இச்சித்த காரியங்களுக்காய் ஜெபித்து பதில் கிடைக்கவில்லையென்றால் சோர்ந்து போவதுண்டு. வேதம் கூறுகிறது நீங்கள் இச்சையை நிறைவேற்ற விண்ணப்பம் பண்ணுவதால் பெற்றுக்கொள்ளவில்லை. உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. உலகப்பொருட்களால் வீட்டை நிரப்புவதை விட்டு தாவீது ராஜா எப்படியாய் தேவாலயம் கட்ட பொருள் சேர்த்தாரோ, அதே போல தேவனுடைய ராஜ்ஜிய விஸ்தாரத்திற்காய் பொருள் சேர்ப்போம். தேவனுக்கு கொடுப்போம்.

 

  • மூட நகைப்பு

 

 

மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே[பிரசங்கி:7:6]. தீயில் எரிகிற முட்கள் கொஞ்ச நேரத்தில் தான் சாம்பலாவதை உணராமல்  சத்தமிடும். அதே போல தான் நாமும் பிறரின் சூழ்நிலை அறியாது அவர்களை பார்த்து நகைப்பது நிலைக்காது, படபடவென்று சலசலப்பு உண்டாகும். சீக்கிரம் அணைந்து போம். விசுவாசிகளாகிய நாம் பல நேரங்களில் நம் சகவிசுவாசிகளின்  சூழ்நிலைகளை அறியாது அவர்களை குறித்து பரிகசித்து குறை கூறும் போது தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்கிறோம் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.  இஸ்ரவேலில் சாணி தான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது. அது மெதுவாக எரியும் என்பதால் முட்களை எரிப்பது வேகமான செயலுக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். அதே போல தான் மூடநகைப்பும்  நிலைநிற்காது. சீக்கிரத்தில் அணைந்து போம். கர்த்தர் இருதயங்களை ஆராய்ந்து அறிகிறவர். கர்த்தர் நம் சிந்தைகளை அறிந்தவர் என்பதை உணர்ந்தவர்களாக பிறரைக் குறித்து நகைப்பதை நிறுத்துவோம். தேவனுக்கு சாட்சியாய் வாழுவோம்.

 

  • அங்கீகாரம்

 

 

பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே... பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்[பிரசங்கி:8:10-14]. இந்த வசனங்கள் மனிதனுடைய அங்கீகாரத்தை குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் சமூகத்தில், சபையில், வேலைஸ்தலத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பான். இந்த அங்கீகாரம் மாயையானது. மாயையான இந்த அங்கீகாரம் கிடைக்க நாம் பல நேரங்களில் மாய்மாலமாய் நடிக்கிறோம். பாவிகளும் இந்த உலகத்தில் அங்கீகரிக்கப்படுகிறார்கள். அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவே தவறு செய்கிறார்கள். அனால் வேதம் கூறுகிறது துன்மார்க்கர் வாழ்ந்த   பட்டணத்திலேயே அவர்கள் மறக்கப்பட்டு போனார்கள். பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன் என சாலொமோன் ஞானி கூறுகிறார். கர்த்தருக்கு பயப்படுதலே நாம் தேடிக்கொள்ள வேண்டியது. நாம் பெற வேண்டிய  அங்கீகாரம் இயேசுவின் பிள்ளை என்பதே. அந்த அங்கீகாரம் புறஜாதியாரை கிறிஸ்துவினிடம் அழைத்து செல்லட்டும்.

 

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே எல்லாம் மாயை என்று சொன்ன பிரசங்கி ஆக்கியோன் இறுதியாக கூறுகிறார் "காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்"[பிரசங்கி:12:13,14]. உலகத்தின் எல்லா காரியங்களும் மாயையானது. நம்முடைய ஆஸ்தி, அந்தஸ்து, ஞானம்,சம்பத்து, ஐசுவரியம், புகழ், பொருள், மூடநகைப்பு, வெற்றி, அங்கீகாரம் எல்லாம் நிலையற்றது. இவைகள் ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது. உலக ஞானத்தையல்ல பரத்திலிருந்து வருகிற ஞானத்தை தேடுவோம். உலகத்தின் ஆஸ்தி ஐசுவரியம் பொருள் அல்ல பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைப்போம். உலக அங்கீகாரத்தையல்ல "வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே" என்ற இயேசுகிறிஸ்து அழைக்கும் பரலோகத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்குவோம். மூடநகைப்பினால் அல்ல பரிசுத்த முத்தத்தோடு பிறரை வாழ்த்துவோம். உலக வெற்றியை அல்ல பரலோகத்தின் ஜீவ கிரீடத்தை நாடுவோம். மாயையான உலகத்தில் மாயமற்ற வாழ்க்கை வாழுவோம். வேதம் கூறுகிறது தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாதவன் கர்த்தருடைய கூடாரத்திலே தங்குவான்; அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான். வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளாமல்  கர்த்தரையே நம்பியிருப்போம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. ஆமென்.

bottom of page