top of page

உன்னை நிதானித்து பார்

தன்னை தானே நிதானித்து அறிந்தால் நியாயம் தீர்க்கபடோம் (1கொரி 11-31) இன்றைக்கு நாம் பிறரை நிதானித்து அறிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறோம். அது மட்டுமல்லாமல் ஒருபடி மேலே போய் அவர்களை நீயாயம் தீர்த்து விடுகிறோம். ஊழியம் செய்கிறவர்கள் கூட தங்களை நிதானித்து அறியாமல் தங்கள் தப்பிதங்களை உணராமல் பிறருடைய குறைகளை நிதானித்து பார்த்து உடனடியாக பலர் முன்னிலையில் அவர்களை தரக்குறைவாக பேசி விடுகின்றனர்.

 

வாழ்க்கையில் நீதியையும் நியாயத்தையும் தூய்மையையும் கடைபிடிக்காதவர்கள்,அதாவது தங்கள் மனைவிக்கும்,கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் முன்பாக சாட்சியாய் உத்தமமாய் ஜீவிக்காதவர்கள் தங்கள் தப்பிதங்களை நிதானித்து அறியாமல் அடுத்தவர்களின் வாழ்க்கையை தோண்டி துருவி ஆராய்ந்து குறை சொல்லி கொண்டிருக்கின்றனர். உதாரணமாக இன்றைக்கு பண விஷயத்தில் உண்மையற்ற நேர்மையற்ற நிலையில் இருப்பவர்கள் கூட தங்களது தவறை நிதானித்து அறியாமல் பிறரின் நேர்மையற்ற நிலையை  விமர்சித்து அவர்களை குற்றவாளியாக நியாயம் தீர்த்துவிடும் போது அதன் விளைவுகள் அவர்கள் மீது திரும்பி வருகிறது. (ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.ரோமர் 2-1).

 

இப்படிப்பட்டவர்களை தான் இயேசு மாயக்காரனே முதலாவது உன்னிடம் இருக்கும் குறையை எடுத்து போடு பிறகு உன் உன் சகோதரனிடம் உள்ள குறையை எடுத்து போட வகைப்பார்ப்பாய் என்றார்.( மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். மத்தேயு 7:5)

 

நாம்  ஆவிக்குறியவர்களா? அல்லது மாம்சத்துக்குறியவர்களா?நம்மிடம் வெளிப்படுவது ஆவியின் கனியா அல்லது மாம்சத்தின் கிரியைகளா?நம் பார்வையிலும் நாவின் வார்த்தைகளிலும் பரிசுத்தம் இருக்கிறதா?தேவன் விரும்பும் பரிசுத்தம் நம் எண்ணங்களிலும் நினைவுகளின் தோற்றங்களிலும் செய்கைகளிலும் காணப்படுகிறதா?நீதியும் சமாதானமும் பரிசுத்தாவியானவர் தரும் ஜக்கியத்தினால் உண்டாகும் சந்தோஷம் நம் வாழ்க்கையில் இருக்கிறதா?பிறரது குறைகளை உற்று பார்க்கும் நாம் முதலாவது நம்மை நிதானித்து பார்ப்போம்.உங்கள் குடும்பத்தில் ஜக்கியம் இல்லாமல் இருக்கும் போது அடுத்த குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை நிதானித்து அறிந்து விமர்சிப்பதை நிறுத்துங்கள்.சகோதரனிடம் குறைகளை வைத்து கொண்டு காணிக்கை போட தகுதி இல்லாத நீங்கள் உங்களை நிதானித்து அறியாமல் தேவனுக்கு ஊழியம் செய்யாதீர்கள்.தேவனை தரிசித்த ஏசாயா தீர்க்கதரிசி நான் அசுத்த உதடுள்ள மனுஷன்,அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்று தன்னை நிதானித்து அறிந்து உணர்வடைந்தான்(ஏசா6-5)பவுல் நான் விரும்புகிற நன்மையை செய்யாமல் விரும்பாத தீமையை செய்கிறேன்.ஆனால் கிறிஸ்து இயேசுவின் ஆவியின் பிரமாணம் இந்த பாவத்திலிருந்து என்னை விடுதலையாக்கிற்றே என்று அறிக்கையிடுகிறான்.பேதுரு இயேசுக்கு முன்பாக தன்னிடம் இருந்த பாவத்தை நிதானித்து அறிந்து நான் பாவியாகிய மனுஷன் என்னை விட்டு போய்விடும்(லூக்5-8 )என்று சொல்வதை பார்க்கலாம். உண்மையிலே தேவ பிரசன்னத்தில் இருப்பவன் தன்னை தானே நிதானித்து அறிந்து தன் குறைகளை சரி செய்து பரிசுத்தம் மேல் பரிசுத்தமடைவான். இவன் தான் பரிசுத்த ஆவியானவராலே நடத்தபடும் மெய்யான ஆவிக்குறியவன்.அதாவது ஆவிக்குறியவன் எல்லாவற்றையும் நிதானித்து அறிகிறான்.(நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான், இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். லூக்கா 6:45   

 

மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும்,கொலை பாதகங்களும்.களவுகளும், பொருளாசைகளும்,துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். மாற்கு 7:21-22)

 

நல்ல மரம் கெட்ட கனிகளை கொடுக்காது.கெட்ட மரம் நல்ல கனிகளை கொடுக்காது என்று இயேசு சொன்னார்.இன்றைக்கு நம்மிடம் இருப்பது நல்ல பொக்கிஷமா?அல்லதுகெட்ட பொக்கிஷமா?நாம் நல்ல கனியை கொடுக்கிற மரமா இருக்கிறோமா?அல்லது மாம்சத்தின் கிரியைகள் நம் நடக்கைகளிலும்செய்கைகளிலும் வெளிப்படுகிறதா? ஏனென்றால் கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.ஜெபம் பண்ண சென்ற இரண்டு பேரில் ஆயக்காரன் தன்னை நிதானித்து அறிந்து உணர்வடைந்து  பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என்று வேண்டி கொண்டான். பரிசேயனோ தன் ஆவிக்குறிய பெருமைகளை சொல்லி கொண்டு ஆயக்கரனை குறிப்பிட்டு இவனை போல நான் இல்லை என்று பெருமையாக பேசினான்.ஆயக்காரனோ நீதிமானாய் திரும்பி சென்றான். இயேசு சொன்ன இந்த உவமை நமக்கு பல செய்திகளை சொன்னாலும் தன்னை தானே நிதானித்து அறிந்து உணர்வடைந்து மனம் திரும்புகிறவனுக்கு பரலோக ராஜ்ஜியம் நிச்சயம் உண்டு,ஆனால் தன்னிடம் பல குறைகளை வைத்து கொண்டு பிறரிடம் உள்ள குறைகளை சதா காலமும் சுட்டி காட்டி அவர்களை தூசித்து கொண்டிருப்போமானால் தேவன் நம்மை பார்த்து மாயக்காரனே என்று சொல்லுவார்.

 

எனவே இந்த கடைசி நாள்களில் நம்மை நாமே நிதானித்து அறிந்து தேவனுக்கு பிரியமில்லாக காரியங்களை விட்டு விலகி தேவனுக்கு பிரியமாக வாழ நம்மை ஒப்பு கொடுப்போம். (ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.1 கொரிந்தியர் 2-15) ஆமென்.

bottom of page