
செவிதினவுள்ளவர்களும் சுய இச்சைக்கேற்ற போதகர்களும்
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணிகடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. 2 தீமோத்தேயு 4:1-5 வேத வசனத்துக்கு புறம்பாக கற்பனை கதைகளை சொல்லி ஜனங்களை வஞ்சிக்கும் உபதேசம் ஒரு பக்கம். சபையில் பாவத்தை குறித்து கடிந்து பேசாமல் அங்குள்ள மூப்பர்களுக்கு சாதகமாக பிரங்கிக்கும் பிரசங்கிகள் ஒரு பக்கம்.இன்றைக்கு சபைகள் சத்தியத்தை விட்டு விலகி செல்கிறது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. அவரது சபையில் மூப்பர்கள் குடிப்பவர்களாகவும் வெளியரங்கமாகபுகை பிடிப்பவர்களாகவும் இருக்கின்றனர். அங்குள்ள போதகர் இத்தகய பாவத்தை குறித்து பேசினால் உடனே அவரை Transfer பண்ணிவிடுவார்கள். அந்த ஊழியக்காரரும் அமைதியாக நமக்கு எதற்கு வம்பு என்று அமைதியாக பிரசங்கம் பண்ணி விட்டு வந்து விடுவார், சில சபைகளில் துணிகரமாக விபச்சாரம் என்ற பாவத்தை செய்கிறவர்கள் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் எல்லாவித சபைகளிலும் வேதாகம சட்ட திட்டங்களுக்கு புறம்பாக பணம் பலம் படைத்தவர்களுக்கே பதவி கொடுக்கப்படுகிறது. இவர்கள் எப்படி அங்குள்ள வாலிபர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும்.இவர்கள் முன்பாக அந்த சபையின் போதகர் மது குடிக்காதே விபச்சாரம் செய்யாதே என்று எப்படி பிரசங்கிப்பார்.இன்றைய சபைகள் எங்கே போய் கொண்டிருக்கிறது. பாழாக்கும் அருவருப்பு சபைகளில் வந்து விட்டது,சபையில் இருக்கும் மூப்பருக்கு கூட இரட்சிப்பு என்றால் என்ன என்று தெரியாது. பலருக்கு நித்திய ஜீவன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். பரிசுத்தாவியானவர் வரும் போது பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
இந்த கடைசி நாள்களில் சபைகள் பரிசுத்தம் மேல் பரிசுத்தமடைந்து இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படும் காலம். ஆனால் சபைகள் ஏதோ ஒரு மறுமலர்ச்சி மன்றம் மாதிரி நடத்தப்படுகிறது. ஆவியோடும் உண்மையோடும் பயத்தோடும் தடுக்கத்தோடும் தேவனை ஆராதிக்கும் சபைகள் எங்கே?? ஊழியக்காரனே நீ தேவனால் ஊழியத்துக்கு அழைக்கபட்டாயென்றால் பணத்துக்காக சுய இச்சைக்கேற்றப்படி பிரசங்கிக்காதே. உன் வாயில் தேவனுடைய வார்த்தையை தேடுவார்களே?பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்கு சொல்வதை காதுள்ளவன் கேட்க கடவன் என்று வேதம் சொல்கிறது.பரிசுத்த ஆவியானவர் சபைக்கு பேச சொல்வதை தைரியமாக சொல்.நீ தேவனுடைய ஊழியக்காரன்,ஊழியத்தில் மனிதர்களுக்கும் உலகத்துக்கும் உன் வாழ்வாதாரத்துக்காக ஒத்த வேஷம் தரித்து பிரசங்கிக்காதே. ஜனங்கள் பக்திவிருத்தியடையவும் இரட்சிக்கப்பட்டு சகல சத்தியத்துக்குள் நடத்தப்படவும் சபைகள் ஏற்படுத்தப்பட்டது,( அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. அப்போஸ்தலர் 9-31)
இன்றைக்கு சபைகளில் கர்த்தருக்கு பயப்படும் பயம் இல்லை.சபையில் ஊழியம் செய்ய வேண்டுமென்றால் பரிசுத்தவானாக சாட்சியாக வாழ வேண்டும்.(ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியமுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும் போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். 1 தீமோத்தேயு 3:2-4,12) இப்படி பட்ட நல்ல நடக்கைக்குறிய மூப்பர்கள் சபையை நடத்தும் போது சபை பக்திவிருத்தியடையும். பாரம்பரிய பெந்தேகோஸ்தே சபைகளில் கூட படிப்பு மற்றும் மற்றும் வேலை போன்ற சலுகைகளுக்காக இந்து பெயரை வைத்து கொண்டு சபையில் வந்து தேவனை ஆராதித்து விட்டு வேலைத்தலத்தில் இந்து என்று பொய் சொல்லி அரசாங்கத்தையும் ஏமாற்றி இயேசுவையும் மறுதலிக்கும் மாயமாலமான பொய்யர்கள் இருக்கின்றனர்.இவர்கள் புதிதாக கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் அல்ல.பல வருடங்களாக சபைக்கு சென்று சத்தியத்தை அறிந்தவர்கள். இவர்களின் பிள்ளைகள் அரசாங்க வேலைகளை பெறுவதற்க்காக அவர்களை இந்துக்களாக ரகசியமாக பதிவு செய்கின்றனர்.இவர்கள் குடும்பங்களில் திருமணம் போன்ற காரியங்களை சபையில் நடத்துவதில்லை.ஏனென்றால் அரசாங்கத்துக்கு தெரிந்து விட்டால் தங்கள் வேலை பறி போய்விடும் என்ற பயம் தான். மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிப்பவனை பிதாவின் முன்பாக நான் மறுதலிப்பேன் என்று இயேசு எச்சரித்தார்.ஐனங்களை வெளிப்புறமான பாரம்பரியத்தில் வைராக்கியமாக நடத்தும் இத்தகய ஊழியக்காரர்களுக்கு அரசாங்கத்தையும் தேவனையும் ஏமாற்றும் இவர்களுடைய இரட்டை வேடம் தெரிந்திருந்தும் இவர்களை கண்டிப்பதில்லை.ஏனென்றால் காணிக்கையும் எண்ணிக்கையும் தான் இவர்களுக்கு முக்கியம்.இயேசு சொன்னது போல இவர்கள் இத்தகய மாயமாலத்தை கண்டித்து உணர்த்தாமல் இவர்களை தங்கள் மார்க்கத்தானாக்கி நரகத்தின் பிள்ளைகளாக்குகிறார்கள்.
இன்றைக்கு சபைகள் சுத்திகரிக்கப்படாததற்க்கு முக்கிய காரணம் தகுதியில்லாத மூப்பர்களூம் சுயஇச்சைக்கேற்ற ஊழியக்காரர்களும் தான். இன்றைக்கு இயேசு கிறிஸ்து நமக்கு பெற்று தந்த விலையேறப் பெற்ற இரட்சிப்புக்குள்ளாகவும் நித்திய ஜீவனை பெற்று கொள்ளவும் சபைகள் ஜனங்களை நடத்த வேண்டும். இதற்க்காக தொடர்ந்து ஜெபியுங்கள். அடுத்ததாக ஊழியம் செய்து விட்டு நரகத்துக்கு போவதை விட ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்கு போவது நலமாயிருக்கும். ஊழியக்காரர்களே மூப்பர்களே விசுவாசிகளே தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து சபையை கள்ளர் குகையாக்கி கொண்டிருக்கிற உங்கள் மேல் தேவனுடைய கோபாக்கினை சடுதியாக வரும் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். சபையின் ஒருமனதுக்கு எதிராக கூட்டம் சேர்த்து கொண்டு சபையில் அரசியல் பண்ணி கொண்டு சபையை பாழ்கடிக்கிற அனேகருடைய வாரிசுகளின் வாழ்க்கையில் சாபங்கள் கடந்து வருகிறது.எனவே முதலாவதாக தேவனுக்கு பிரியமில்லாத இந்த காரியங்களிலிருந்து மனம் திரும்புங்கள்.
அடுத்ததாக இந்த கடைசி நாள்களில் ஜனங்களையும் தேவனையும் வஞ்சிக்காமல் ஊழியத்தை பயத்தோடும் நடுக்கத்தோடும் செய்யுங்கள்.மனிதர்களை பிரியப்படுத்தாமல் சகல சத்தியத்துக்குள்ளும் ஜனங்கள் நடத்துங்கள். (இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.கலாத்தியர் 1-10)
(நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
2 தீமோத்தேயு 4:5)ஆமென்.