top of page

கைகளை வைப்பார்கள் !!!

 

இன்றைக்கு அநேகர் கைகளை வைப்பது ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே கீழே விழுதல் போன்ற காரியங்களை தங்கள் சொந்த ஞானத்தினாலே தவறாக விமர்சனம் செய்கிறார்கள்.

 

ஒரு முறை எனக்கு தெரிந்த ஒரு ஊழியக்காரர் தன் சபை விசுவாசியிடம் கைகளை வைப்பதினால் கீழே விழுவதை நான் நம்பவில்லை அது பரிசுத்தாவியானவரால் நடக்கும் காரியமல்ல என்று தன் சுய ஞானத்தினால்  கூறினார். அவர் கூறிய சில நாள்களில் ஒரு கூட்டத்தில் ஒரு வாலிபனை அவர் கையை நீட்டி அழைத்த போது அவன் கீழே விழுந்தான். அந்த நேரத்தில்அவர் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தால் நிரம்பியிருந்ததாகவும் தன் கைகளிலிருந்து வல்லமை புறப்பட்டு சென்றதை பிரத்தியேகமாக உணர்ந்ததாகவும் சொன்னார்.

 

மேலும் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட்ட அந்த வாலிபன் தெய்வீக சுகத்தை பெற்று கொண்டான். உடனே அவர் அந்த சபை விசுவாசியை அழைத்து தான் பரிசுத்த ஆவியானவருக்கு  எதிராக பேசியது தவறு என்று தன்னிலை விளக்கம் அழித்தார். இயேசு கிறிஸ்து பரிசுத்தாவியானவரின் வல்லமையால் நிறைந்திருந்தார்.யோவான் 18 ம் அதிகாரம் 6 ம் வசனத்தில் அவரை பிடிக்க வந்தவர்களை பார்த்து என்னையா தேடுகிறீர்கள் என்று கேட்ட போது அவரிடமிருந்து வல்லமை புறப்பட்டு சென்று அவர்களெல்லாரும் பின்னிட்டு விழுந்தார்கள். எசேக்கியா தீர்க்கதரிசி தேவனின் மகிமையின் சாயலின் தரிசனத்தை கண்ட போது முகம் குப்புற விழுந்ததை எசேக்கியல் 1-28 ல் காணலாம். சாலமோன் கட்டின ஆலயத்தில் ஆசாரியர்கள் ஆராதித்த போது  தேவமகிமை இறங்கின வேளையில் ஆசாரியர்கள் ஊழியம் செய்ய முடியாத படி தேவ வல்லமை ஆலயத்தில் காணப்பட்டது பேதுருவின் நிழல்பட்டு அநேக பிணியாளிகள் சுகமடைந்தார்கள். பவுலின் உடையிலிருந்து தேவ வல்லமை புறப்பட்டு சென்றது, தேவன் படைத்த காற்றுக்கும் கடலுக்கும் முன்பாக மனிதனால் நிற்க முடியவில்லை.

 

அப்படியானால் காற்றையும் கடலையும் உண்டாக்கின, மேலும் செங்கடலை இரண்டாக பிளந்த பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.  மேலும் தேவ ஊழியக்காரர்கள் கைகளை வைத்து ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபடுவதையோ கீழே விழுவதையோ உங்கள் சுய அறிவைக் கொண்டு தவறாக விமர்சிக்காதீர்கள்.

 

பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கபடாது என்று கர்த்தராகிய இயேசு சொன்னதை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.எனவே உங்கள் சுய அறிவினால் எதையும் வியாக்கியானம் செய்து ஜனங்களிடம் தவறாய் போதிக்காதீர்கள். தேவனுடைய இயற்கைக்கப்பாற்பட்ட ஆவிக்குறிய கிரியைகளை நம்மால் ஆராய்ந்து அறிய முடியாது.ஒரு வேளை ஒரு ஊழியக்காரன் தங்கள் சுயபெலத்தால் அல்லது அந்நிய வல்லமைகளால் மக்களை வஞ்சிக்கும் படி செய்யும் காரியங்களை நாம் பகுத்தறிய வேண்டும்.( உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1 யோவான் 4-1)

 

இப்படிப்பட்ட ஆட்டு தோலை போர்த்திய ஓநாய்களை தேவன் நிச்சயம் நியாயம் தீர்ப்பார்.    அடுத்ததாக கைகளை மேலே வைக்கிற ஒருவர் யார் மேல் கைகளை வைக்கிறாரோ அவருக்கு தேவனிடமிருந்து பெற்ற ஆன்மீக ஆசீர்வாதம் அல்லது அதிகாரத்தை பாயச் செய்கிறார்.யார் மேல் கைகள் வைக்கப்படுகிறதோ அவரை ஒரு குறிப்பிட்ட பணிக்கோ அல்லது தேவனுடைய பணிக்கோ ஒப்படைக்கிற காரியத்தை கைகளை வைக்கிறவர் செய்கிறார். (கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு என்றார். எண்ணாகமம் 27:18-20).

 

மோசே தேவனுடைய இந்த கட்டளையை நிறைவேற்றினான், யோசுவாவின் மேல் மோசே கைகளை  வைத்ததான். இந்த செயல் யோசுவா என்ற தனி மனிதனுக்கும் முழு சபையாகிய இஸ்ரவேலுக்கும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது.கைகளை வைத்து ஆசீர்வதிக்கிற செயல்  பழைய ஏற்பாட்டில் பல நிகழ்வுகளில் செய்யப்பட்டாலும் புதிய ஏற்ப்பாட்டிலும் தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது.மாற்கு 16-17,18 ல் என் நாமத்தினாலே...வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.அதாவது நோயுற்றவர்கள் சுகம் பெறுவதற்கு இயேசுவின் நாமத்தினாலே அவர்கள் மேல் கையை வைக்க வேண்டிய செயல் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.சில நேரங்களில் நோயுற்றோர் மேல் கைகள் வைக்கப்பட்டவுடன் உடனடியாக முழு சுகம் கிடைக்கிறது.சிலருக்கு படிப்படியாக சுகம் கிடைக்கிறது.மேலும் அங்கே உண்மையான விசுவாசம் இருக்குமானால் உடனடியாக சுகம் கிடைக்கும்.எபேசில் பவுல் அங்குள்ள சீஷர்கள் மேல் கைகளை வைத்த பிறகே பரிசுத்தாவியை பெற்று கொண்டார்கள்.அப்போஸ்தல நடபடிகளில் சுமார் 50% பேர்கள் கைகளை வைத்ததின் மூலம்  பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தை பெற்று கொண்டார்கள்.ஆனால் மேல்வீட்டறையிலும் கொர்நேலியுவின் வீட்டிலும் கூடியிருந்தவர்கள் மேல் கைகளை வைக்காமலே இந்த அனுபவத்தை நேரடியாக பெற்று கொண்டார்கள்.பவுல் தீமோத்தேயுவின் அனுபவத்தில் இதை தெளிவாக மேற்கோள் காட்டுகிறார். (மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்த போது தீர்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே. 1 தீமோத்தேயு 4:14.

இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 2 தீமோத்தேயு 1:6).

மேற்கண்ட வசனங்களிலிருந்து தீமோத்தேயு கைகளை வைத்ததினால் தெளிவான ஆவிக்குறிய வரத்தை பெற்று கொண்டான்.அந்த கார இருளின் வல்லமையால் ஆளுகை செய்யபட்டாவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் அனுமதியின்றி கைகளை வைக்க கூடாது. எனக்கு தெரிந்த ஊழியம் செய்கிற ஒருவர் அவசரப்பட்டு பிசாசு பிடித்த ஒருவர் மேல் கைகளை வைத்த போது இவர் பாதிக்கப்பட்டு சுகவீனமடைந்து படுத்த படுக்கையாகிவிட்டார். (ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே. மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே. உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள். 1 தீமோத்தேயு 5:22).

 

கைகளை வைத்து ஜெபிக்கும் போது இரண்டு ஆவிகளுக்கிடையில் உள்ள தொடர்பில் இரண்டு பேரில் ஒருவருக்கோ அல்லது இரண்டு பேருக்குமோ ஆன்மீக பாதிப்பு ஏற்படலாம். அதாவது ஒரு விசுவாசியிடம் அறிக்கை செய்யப்படாத பாவம் இருக்குமானால் அல்லது தீமை செய்கிற நபர்களோடு உறவு இருக்குமானால் அல்லது அசுத்த ஆவி அவருக்குள் இருக்குமானால் அந்த ஆவி முற்றிலும் தூய்மையற்றதாக இருக்கும். அப்போது அந்த அசுத்த ஆவியினால் அடுத்த விசுவாசியின் ஆவி மாசு பட்டு போக கூடும். இந்த ஆபத்தை தான் பவுல் ஒருவர் மேல் சீக்கிரமாய் கைகளை வைக்காதே மற்றவர் செய்யும் பாவத்துக்கு உடன்படாதே உன்னை சுத்தவானாய் காத்து கொள் எனறு எச்சரிக்கிறார்.

 

தேவனுடைய சத்துவத்திலும் வல்லமையிலும் பெலப்படாமல் அசுத்த ஆவியின் வல்லமையால் பிடிக்கபட்டவர்கள் மேல் தேவ ஆலோசனையின்றி கைகளை வைப்பது நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.து ணிகரமான பாவத்தில் விழுந்து போய் தேவனுடைய கோபாக்கினையை பெற்றவர்கள் மேல் கரங்களை வைத்து தேவன் உங்களை ஆசீர்வதிக்கிறார் என்றோ இயேசுவின் நாமத்தை கொண்டோ ஜெபித்து தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதீர்கள். முன் பின் தெரியாத எந்த ஊழியக்காரனிடமும் ஜெபிப்பதற்காக தலையை கொடுக்காதீர்கள். ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் பகுத்தறியுங்கள். ஊழியக்காரர்களை அவர்களின் கனிகளால் நிதானித்து அறியுங்கள்.

 

எனக்கு தெரிந்த சில ஊழியக்காரர்கள் மறைந்திருந்து ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் ஜெபிக்கும் போதோ கைகளை நீட்டும் போதோ பேசும் போதோ  ஜனங்கள் தேவ ஆவியினால் நிறப்பபடுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்களை வெளிப்படுத்துவதில்லை. அடுத்ததாக தன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நடத்தும் கிரியைகளை இணையதளத்தில் வெளியிட்டு மனித புகழ்சியை நாடி தேவனுடைய மகிமையை தனக்காக்கி கொள்ளும் ஊழியக்காரர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். பரிசுத்த ஆவியானவர் சொல்ல சொன்னால் மாத்திரம் உங்கள் மூலமாய் தேவன் செய்த மகத்துவங்களை பக்தி விருத்திக்காக மாத்திரம் வெளிப்படுத்துங்கள். பவுலின் உடையிலும் பேதுருவின் நிழலிலும் தேவ வல்லமை நிறைந்திருந்தது.பேதுரு பிரசங்கம் பண்ணிய போது கேட்டவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறப்பபட்டார்கள்.

 

இந்த கடைசி நாள்களில் பரிசுத்த ஆவியானவர் பலரை வல்லமையாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார். எனவே கடைசி நாள்களில் தேவ ஊழியக்காரர்கள் மூலமாய் பரிசுத்தாவியானவர் செய்யும் கிரியைகளை உங்கள் குறைந்த அறிவினால் தவறாக பேசாதீர்கள். ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1 கொரிந்தியர் 2-15 ஆமென்.

bottom of page