top of page

வசனமே உங்களை நியாயம் தீர்க்கும்

 

நியாய தீர்ப்பு  முதலாவதாக சர்வவல்ல நித்திய உடன்படிக்கையின் படி  பிதாவாகிய ஆண்டவரை சார்ந்ததாக இருக்கிறது. பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிற பிதா என்று (1பேதுரு 1-17)பேதுரு கூறுகிறான். இங்கே எல்லா மனிதரையும் நியாயம் தீர்க்கிற அதிகாரம் பிதாவாகிய தேவனுடையது என்று குறிப்பிடபட்டிருக்கிறது.ஆனால் நியாயந்தீர்க்கிற பொறுப்பை குமாரனிடம் விட்டு விட்டதாக கிறிஸ்து யோவான் 5ம் அதிகாரத்தில் வெளிப்படுத்துகிறார். (அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

 
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். யோவான் 5:23) (ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். யோவான் 5:26.27)          (மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் (பிதா)தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.அப்போஸ்தலர் 17-31)

 

இயேசு கிறிஸ்து மனுஷ குமாரனாகவும் தேவ குமாரனாகவும் இருந்தார்.அதாவது தெய்வீக தன்மையோடு மனித தன்மையையும் அவர் தரித்து கொண்டிருக்கிறார், மேலும் இயேசு கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் இறுதி அதிகாரத்தை தன்னுடைய சொந்த தன்மையிலிருந்து தேவனுடைய வார்த்தைக்கு மாற்றிவிட்டார். (ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை, நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். யோவான் 12:47-48), என்று எச்சரித்தார்.

 

எனவே தேவனுடைய நியாயதீர்ப்பின் அனைத்து அளவு கோல்களும் அவருடைய வார்த்தைக்குள் அடங்கியிருக்கிறது.அதாவது எல்லா நியாயதீர்ப்புக்கான இறுதி அதிகாரம் தேவனுடைய வார்த்தையில் அடங்கியிருக்கிறது.ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 2:1,2 தங்களை நிதானித்து அறியாமல் மற்றவர்களை நியாயம் தீர்க்கிறவர்களின் மேல் தேவனுடைய நியாயதீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கிறது என்று பவுல் எழுதுகிறார்.யோவான் 17-17 ல் இயேசு பிதாவை நோக்கி உம்முடைய வசனமே சத்தியம் என்கிறார்.

 

இந்த கடைசி நாள்களில் சத்தியத்துக்கு செவியை விலக்கி கட்டு கதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வருகிறது. அநேக ஸ்தாபனங்கள் தேவனுடைய வசனத்தை புரட்டி சத்தியத்துக்கு எதிராக போதிக்கிறார்கள். இன்றைக்கு சத்தியத்தை வைராக்கியமாக போதிக்கிறவர்கள் கூட தாங்கள் போதித்த சத்தியத்துக்கு கீழ்படிவதில்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே என்னைக்குறித்து சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5-39) என்று இயேசு சொன்னார். ஊழியக்காரனோ,உங்கள் சபையோ அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் ஸ்தாபனமோ   ஏதாவது ஒரு வசனத்துக்கு புறம்பாக போதித்தால் வேதாகமத்தில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள்.இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் வேதத்தை தியானிப்பதேயில்லை.(குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை.
ஏசாயா 38-18)

 

பிரியமானவர்களே நீங்கள் நியாயந்தீர்க்கபடாதபடிக்கு வேதாகமத்தை தேடி வாசியுங்கள். சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.பரிசுத்த ஆவியானவர் வரும் போது சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை நடத்துவார்.பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்க்காதீர்கள். அவர் வருகிறார் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 96-13 என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.எனவே இன்னும் நாம் சத்தியத்தை அறிந்து கொள்ளாமல் அதற்கு கீழ்படியாமல் இருந்தால் எல்லா மனிதர்களை காட்டிலும் பரிதபிக்கபட்டவர்களாக இருப்போம். 


என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசாயா 66-2.

 

இன்றைக்கு தேவனுடைய வார்த்தைக்கு நடுங்குகிறவர்கள் இல்லை.ஒருவன் என் மேல் அன்பாயிருந்தால் என் வார்த்தைக்கு கீழ்ப்படிவான் என்று இயேசு சொன்னார்.இன்றைக்கு உலகத்தை நேசித்து கொண்டு   சத்தியத்துக்கு விலகி  உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கும் மாயமாலமான வாழ்க்கைக்கு உடனடியாக விலக வேண்டும் ஏனென்றால் உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று வேதம் எச்சரிக்கிறது.அடுத்ததாக ஜனங்கள் தங்கள் சபையின் பாரம்பரியங்களையும் உபதேச சட்டங்களையும் தேவனுயை வசனத்தை விட அதிகமாக நேசிப்பதால் சத்தியத்தை புறக்கணிக்கிறார்கள்.எனவே இயேசு கிறிஸ்து சொன்ன வசனமே உங்களை நியாயம் தீர்க்கும் என்ற காரியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 


 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமும் வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.  எபிரேயர் 4:12.13. ஆமென்

bottom of page