top of page

தன்னைவிட்டெடுபடாத நல்ல பங்கு

 

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் லூக்கா 10-42.

 

இன்றைய நாள்களில் ஆண்டவருக்காக எதையாவது செய்ய வேண்டுமென்று பிரயாசம் எடுத்து அநேக காரியங்களை செய்கிறார்கள். ஆனால் தேவ பாதத்தில் காத்திருந்து தேவன் சொல்வதை கேட்க யாரும் வருவதில்லை. இன்றைக்கு ஊழியம் செய்வதையோ வேதாகமத்தை படிப்பதையோ சாத்தான் தடை ஒரு போதும் தடைசெய்வதில்லை. ஏனென்றால் ஓயாமல் ஊழியம் செய்கிறவர்கள் ஒரு நாள் சோர்ந்து போய் வீழ்ச்சியடைந்து போவார்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். கள்ள உபதேசத்தை போதிக்கிறவர்கள் கூட தங்கள் உபதேசத்துக்காக வேதாகமத்தை மணிக்கணக்காக படிக்கிறார்கள். ஆனால் ஒரு விசுவாசியோ அல்லது ஊழியக்காரனோ   தேவ சமூகத்துக்கு போவதை அவன் தடை செய்கிறான். தேவ சமூகத்தில் காத்திருப்பவன் தேவனுடைய குரலை கேட்கிறவனாய் இருப்பான். தேவ சமூகத்தில் காத்திருப்பவன் தேவ பிரசனத்தையும் தேவவல்லமையையும் பெற்றவனாக இருப்பான். தேவ பிரசன்னத்தில் தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமான சித்தத்தை அறிந்து கொள்ளுவான். அன்றைக்கு ஆதி அப்போஸ்தலர்கள் ஜெபத்திலும் உபவாசத்திலும் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு இருந்தார். அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை அவர்களுக்கு சொன்னார். அதற்கு அவர்கள் கீழ்படிந்து சூழ்நிலைகள் மேல் நடந்து சென்றார்கள்.

 

இன்றைக்கு ஊழியங்களில் தங்கள் சுயசித்தம் செய்கிறவர்களே அதிகம். தேவனுடைய பாதத்தில் காத்திருத்து தேவ சித்தத்தை அறிந்து கொள்ளாததால்  தங்கள் மாம்சமும் மனசும் விரும்பினவைகளை ஊழியத்தில் செயல்படுத்தி கடைசியில் தங்கள் சுயமகிமைக்காக அநேக காரியங்களை செய்து கொண்டு பிசாசை போல தங்களை உயர்த்தி கொள்கிறார்கள். தேவ பாதத்தில் காத்திருந்து தேவபெலனை பெற்று கொள்ளாதவர்கள் ஊழியத்தில் போராட்டங்கள் வரும் போது மார்த்தாளை போல சோர்ந்து போய் முறுமுறுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இயேசுவோ மரியாளை போல தேவ பிரசனத்தை வாஞ்சிப்பதே மேன்மையானது என்று சொன்னார்.லூக்கா 3ம் அதிகாரத்திலே அன்னாள் என்ற விதவை இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணி ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.ஒரு விதவை இரவும் பகலும் தேவசமூகத்தில் தரித்திருந்து ஜெபிக்கும் போது ஊழியம் செய்கிற நாம் எவ்வளவு நேரம் ஜெபிக்கிறோம்?? அன்றைக்கு இயேசு கிறிஸ்து சீஷர்களால் விரட்ட முடியாத பிசாசை பற்றி சொல்லும் போது இது ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும் அன்றி போகாது என்று சொன்னார்.

 

ஊழியம் செய்ய வந்து விட்டாலே தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்து கொண்டவர்களாய் பிசாசின் சகலவல்லமைகளை மேற் கொள்ளும் திராணியையுடையவர்களாய் இருக்க வேண்டும்.ஏனென்றால் துரைத்தனங்களோடும் அதிகாரங்களோடும் இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும் வான மண்டலத்தின் சேனைகளோடும் நமக்கு போராட்டம் உண்டு. தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல தேவ பெலத்திலே உண்டாயிருக்கிறது. உலக வேலையை செய்வது போல தேவனுடைய ஊழியத்தை செய்வீர்களென்றால் அது மணல் மேல் கட்டப்பட்ட வீட்டை போல தான் இருக்கும்.பரிசுத்த ஆவியானவர் துணையின்றி செய்யக்கூடிய எந்த காரியமும் வெறும் மனுஷீகமாக தான் இருக்கும்.மேல் வீட்டறையில் தேவ வல்லமையை பெற்று கொண்ட இயேசுவின் சீஷர்கள் இயேவுக்காக மரிக்கும் படியான சூழ்நிலை வந்த போது சிறிதும் பயப்படாமல் தங்களை ஒப்பு கொடுத்தார்கள். அன்றைக்கு ஸ்தேவானை கல்லறிந்த போது அவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் வானத்தை பார்த்து அங்கு பிதாவாகிய தேவனையும் அவர் வலது பாரிசத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் தரிசித்தான்.இன்றைக்கு நாம் பூமிக்குறிய காரியங்களை அதிகமாக வாஞ்சிப்பதாலும்  நம் தரிசனக்கண்கள் அடைக்கப்பட்ட குருடர்களாக இருக்கிறோம். அன்றைக்கு 40 நாட்கள் தேவ சமூகத்தில் காத்திருந்த மோசேயின் முகத்திலிருந்த மகிமையை பார்க்க முடியாதபடிக்கு இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை முகங்களை மூடி கொண்டார்கள்.

 

இந்த கடைசி நாள்களில் தேவன் உங்களை வல்லமையாக பயன்படுத்த விரும்புகிறார். நீங்கள் ஒரு விசுவாசியாகவோ அல்லது ஊழியக்காரனாகவோ இருக்கலாம்.நீங்கள் ஆண்டவருடைய பாதத்தில் காத்திருந்து தேவ பெலனை பெற்று கொள்ளுங்கள். தேவன் உங்களை வல்லமையாக பயன்படுத்துவார். உங்கள் உலர்ந்து போன ஆவிக்குறிய வாழ்க்கை உயிர்பிக்கப்படும். பிசாசின் சகல தந்திரங்களையும் வல்லமைகளையும் மேற்கொள்வீர்கள்.ஊழியத்தில் உங்களுக்கு எதிராய் வரும் மலை போன்ற எந்த சூழ்நிலைகளின் மேலும் நடந்து செல்வீர்கள்.நீங்கள் விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக மாறி விசுவாசத்தை பேசுவீர்கள்.நீங்கள் கால் மிதிக்கும் இடத்தில் செயல்படும் பாதாளத்தின் வல்லமைகள் தகர்க்கபடும். நீங்கள் கைகளை உயர்த்தும் போது பிசாசின் கோட்டைகள் அழிக்கப்படும். உங்கள் நாவின் வார்த்தைகளுக்கு அதிகாரம் கொடுக்கப்படும்.நீங்கள் பிரசங்கிக்கும் போது ஜனங்கள் அந்தகார வல்லமைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். தேவையானது ஒன்றே தேவ பாதத்தில் காத்திருந்து பெற்று கொள்ள கூடிய தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கு. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.ஏசாயா 40-31.

தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. ஏசாயா 64-4 ஆமென்

bottom of page