top of page

கிறிஸ்துவின்தாழ்மையை பின்பற்றுவோம்

 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பழைய ஏற்பாட்டிலே முன்குறித்து சொல்லப்பட்டது, இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனோடு இருந்தவர்.தேவனாயிருந்தவர். பிதாவுக்கு சமமாக இருந்த போதிலும் அடிமையின் ரூபமெடுத்து தன்னை தானே தாழ்த்தினார், பூமியும் அதன் நிறைவும் அவருடையது என்றாலும் அவர் பிறப்பு மிகவும் நிந்தையானது. மரியாள் பிரசவிப்பதற்கு சத்திரத்தில் கூட இடமில்லை முன்னனையில் அவர் வைக்கப்பட்டிருந்தார், அவரை பின்பற்றின சீஷர்கள் நான் பெரியவனா நீ பெரியவானா என்று தங்களுக்குள் வாக்குவாதம் பண்ணிய போது இயேசு கிறிஸ்து தன்னை தானே தாழ்த்தி ஒரு அடிமையை போல சீஷர்களின் கால்களை கழுவினார் அவருடைய பிறப்பு அந்த நாள்களில் அற்பமாக எண்ணப்பட்ட மேய்ப்பர்களுக்கு வெளிபடுத்தப்பட்டது அந்த நாள்களில் ஊழியம் செய்த வேதபாரகர்களுக்கோ ராஜாக்களுக்கோ உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களுக்கோ அவரது பிறப்பு அறிவிக்கபடவில்லை.

 

இன்றைக்கு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதில் அவர் நமக்கு விட்டு சென்ற மாதிரி இல்லை ஆடம்பரங்களோடும் டாம்பீகத்தோடும் சபையில் நான் பெரியவன் என்ற நம்முடைய பணக்காரத்தனத்தை காட்டி கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த சபையில் ஏழைகள் ஒதுக்கப்பட்டு ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை இயேசுவும் அவர்களோடு தான் இருந்திருப்பார் மேலும் நிச்சயமாக அவர்களோடு வெளியே சென்றிருப்பார்.போதகர்களே விசுவாசிகளே ஒரு காலத்தில் நீங்களும் ஏழைகளாக இருந்திருக்க கூடும், இயேசு தானே உங்களை ஆசீர்வதித்து உயர்தினார்,அப்படி இருக்கும் போது சபைகளில் ஏழைகளையும் அந்தஸ்தில் குறைந்தவர்களையும் புறக்கணிக்கிறீர்களே?? இன்றைக்கு குடும்பங்களிலும் சபைகளிலும் மேலும் உங்களை சுற்றி இருக்கும் ஏழைகளை புறக்கணிக்கும் விசுவாசிகளே ஏழைகளாகிய இந்த சிறியரில் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசு சொன்னதை மறந்து விட்டீர்களா??(இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 18-10)

 

இன்றைக்கு இயேசு கிறிஸ்து காட்டிய மனத்தாழ்மை என்ற நுகத்தை அணிந்து கொள்ளாமல் தங்கள் அந்தஸ்தை காட்டுவதற்காக கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதில் என்ன பயன்?? இயேசு தன்னை போல பிறனை நேசிக்க சொன்னார், இந்த உயர்ந்த கொள்கையை சபையிலே பின்பற்றுவதில்லையே!! இயேசுவின் சிந்தை உடையவர்களாக இருங்கள் என்றும் கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனில்லை என்று வேதம் சொல்கிறது, நான் உலகத்தை இரட்சிக்கவே வந்தேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னார் பாவிகளை இரட்சிக்கவே இயேசு பிறந்தார்.இயேசுவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்குள் உண்டாயிருக்கிறது.இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்த நோக்கம் நம் வாழ்க்கையில் நிறைவேறாமல் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவதில் ஒரு பிரயோஜனம் இல்லை!!?. 

 

இன்றைக்கு அநேக சபைகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இரட்சிப்பு என்பதற்கு அர்த்தம் தெரியாது, ஆனால் புறமதத்திலிருந்துஇயேசுவை ஏற்று கொண்டவர்கள் இரட்சிப்பு என்பது உலகத்தில் விலைமதிக்க முடியாதது, இயேசுவால் நாங்கள் இரட்சிக்கப்பட்டோம் மேலும் இருளிலிருந்து வெளிச்சத்துக்குள் வந்தோம் என்று சொல்கிறார்கள்.

 

கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் கிறிஸ்மஸ் தினத்தில் அதிக மதுபானம் விற்க்கப்படுகிறது!!!! இதற்கு  காரணமென்ன அங்குள்ள போதகர்கள் ஜனங்களை இரட்சிப்புக்கு நேராகவும் பரிசுத்ததிற்கு நேராகவும் நடத்துவதில்லை, மது குடிப்பது என்பது கிறிஸ்துவின் ஆலயமாகிய நம்முடைய சரீரத்தை தீட்டு படுத்துவது. மது குடிப்பது பாவம் என்ற உணர்வு இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களிடம் இல்லை.மனம் திரும்பாமல் பாவமன்னிப்பு அடையாமல் இயேசு கிறிஸ்து எதற்காக பிறந்தார் என்கிற அறிவே இல்லாமல் கிறிஸ்து பிறப்பை குடித்து வெறித்து கொண்டாதீர்கள். இயேசு விரும்பாத பாவத்தை செய்து கொண்டு அவர் பிறப்பை கொண்டாடி அவரை துக்கப்படுத்தாதீர்கள். நான் பிரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்றுதேவன் நம்மை எச்சரிக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

கிறிஸ்து பிறப்பு என்ற பெயரில் புறஜாதி ஜனங்கள் இயேசுவின் நாமத்தை தூசிக்கும் படி நடந்து கொள்ளாதீர்கள். குடித்து வெறித்து ஆடம்பரமாக ஆடை உடுத்தி உலக சிற்றின்பங்களில் ஈடுபடுவதற்கல்ல இந்த கிறிஸ்மஸ் பண்டிகை. அப்படி செய்கிறவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல, இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பதை விட நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்பதை குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.

 

இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்து  விலைமதிக்க முடியாத இரட்சிப்பை சிலுவையில் பெற்று தந்ததை நீங்கள் சுதந்தரிக்கவில்லையென்றால் அவரது வருகையில் கைவிடப்படுவீர்கள், எனவே கிறிஸ்து பிறப்பை இயேசுவின் சிந்தையோடு நம்மை நாமே தாழ்த்தி ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் உதவி செய்து தேவ நாமத்தை மகிமைபடுத்துவோம். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி இன்றைக்கு நியாதிபதியாக வாசலண்டையில் நிற்கிறார். அவர் வருகை சமீபமாயிருக்கிறது என்பதை வேதாகமத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி கொண்டிருப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். எனவே அவர் வருகைக்காக ஆயத்தப்படுவோம்.

 

எனவே இந்த கடைசி நாள்களில் இயேசு கிறிஸ்துவை பிரியப்படுத்தும் படிக்கு நாம் கிறிஸ்து பிறப்பை நினைவு கூறுவோம்.(ஆதலால்  அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள் பிலிப்பியர் 2-12)  ஆமென்.

bottom of page