top of page

தேவாலயத்தில் குழந்தை இயேசு

சகோதரி. அனு ஃபெஸ்லின்


அன்பு சகோதர சகோதரிகள் யாவருக்கும்  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.  யூதர்கள் மேசியாவின் வருகைக்காக எதிர்நோக்கி கொண்டிருந்த காலம் அது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பரலோக மேன்மையை  துறந்து நம்மை இரட்சிக்க மனிதனாய் இவ்வுலகத்தில் தோன்றினார். பிதாவாகிய தேவன் நம்மேல் வைத்த அநாதி அன்பின் அடையாளமாக இயேசு கிறிஸ்து இம்மண்ணில் பாலகனாய் அவதரித்தார்.  தேவனுடைய மீட்பின் செயல் தொடங்கியதற்காய் பரலோகமே களிகூர்ந்தது. விண்சேனைகள் "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக" என்று தேவனை துதித்து பாடினார்.  எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் இந்த நற்செய்தி தேவதூதனால் முதலாவது மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது. கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை கண்ட ஞானிகளும் இயேசுவை தேடினர், கண்டடைந்தனர். இப்படி யூதர்கள் அனைவரும் மேசியாவின் வருகைக்காக எதிர்நோக்கி கொண்டிருந்தாலும், பலர் இயேசு பாலகனை ஒரு யூத குழந்தையாய் கண்டாலும், இரண்டு பேர் மாத்திரமே குழந்தை இயேசுவை மேசியாவாக அறிந்துக்கொண்டனர். அதாவது சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது, முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும் பாலன் இயேசுவை எருசலேமுக்கு கொண்டு போனார்கள். அப்பொழுது சிமியோனும், அன்னாள் என்கிற தீர்க்கதிதரிசியும் பாலகனாகிய இயேசு கிறிஸ்து தான் மேசியா என அறிந்துக்கொண்டு அவரை புகழ்ந்து பாடினார்.. இவர்கள் எப்படியாய் மேசியாவை கண்டுகொண்டனர் என்பதையும் குழந்தை இயேசுவை எப்படி வரவேற்றனர் என்பதையும் நாம் வேத வசனங்கள் வாயிலாக தியானிக்கலாம்.
ஆயத்தத்தோடு காத்திருந்தனர்.

 

  

தீர்க்கத்தரிசிகளின் காலத்திற்கு பின்பு நானூறு ஆண்டுகளை இருண்ட காலம் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்நாட்களில் தீர்க்கதரிசனங்கள் இல்லாமல் தேவனுக்கும் மனிதனுக்கும் தொடர்பு இல்லாத காலம். இந்த இருண்ட காலத்திலும்   பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு  தேவனோடு நடந்த மனிதன் சிமியோன். அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான் [லூக்கா:2:25]. இதே ஆலயத்தில் அன்னாள் என்ற தீர்க்கத்தரிசியும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். அன்னாளும் எருசலேமின் மீட்புக்காக காத்திருந்தாள்[லூக்கா:2:36,37]. கிறிஸ்துவின் முதல் வருகையில் குழந்தை இயேசுவைக் காண சிமியோனும், அன்னாளும் ஆயத்ததோடு தேவாலயத்தில் காத்திருந்தனர். இயேசுகிறிஸ்து நீதியுள்ள நியாதியாதியாய் மீண்டும் வரப்போகிறார். சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்கிறோமா? அவர் வரும் நாழிகையையும் வேளையையும் நாம் அறியோம். மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு,  அன்னாளைப்  போல எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருப்போம். சிம்சோனைப்  போல தேவனுக்கு பயந்து பரிசுத்தமும் நீதியும் உள்ள வாழ்க்கை வாழுவோம். ஆம் அன்பானவர்களே நாமும் ஆவியானவரால் ஆட்கொண்டு நடத்தப்படும் போது சிமியோனுக்கு பரிசுத்த ஆவியானவரால் அறிவிக்கப்பட்டபடி தேவன் நமக்கும் வரும் காரியங்களை வெளிப்படுத்துவார். வேதம் கூறுகிறது நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக[1யோவான்:2:29]. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை  ஓப்புக்கொடுக்கும் போது  அவர் பிரயோஜனமானவைகளை நமக்கு போதித்து நித்திய வழியிலே நம்மை நடத்துவார்.

2.   இஸ்ரவேலின் மீட்புக்காய்  காத்திருந்தனர்  

ரோம ஆட்சியாளர்கள் யூதர்களை ஆட்சிபுரிந்த அந்த காலத்தில், ஜனங்கள்  ஒரு  இரட்சகர் தோன்றி  தங்களை   விடுவிக்க  மாட்டாரா என ஏங்கினார்கள். மேசியா ராஜாவாக தோன்றி தங்களை விடுவிப்பார் என  நம்பினார்கள். இந்த சூழலில் தான் நீதிமானாகிய சிம்சோன் இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்[லூக்கா:2:25]. அன்னாளும் எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் மேசியாவைக் குறித்து அறிவித்தாள் என வேதம்  கூறுகிறது. எனவே யூதரின் ஒரு கூட்டத்தினர் எருசலேமின் மீட்புக்காய் காத்திருந்தனர் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். சிமியோன் இஸ்ரவேலின் ஆறுதலுக்காக மேசியா தோன்ற காத்திருந்தான். இஸ்ரவேல்  ஜனங்கள்   பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தேவனால் மீட்பை பெற வேண்டும் என மனதுருக்கம் நிறைந்தவனாய் காத்திருந்தான். இப்படிப்பட்ட மனத்துருக்கம்  உள்ள மனிதர்களை தேவன் பிரயோஜனப்படுத்துகிறார். வேதம் கூறுகிறது, கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்[ஆமோஸ்:3:7]. எனவே தான் இஸ்ரவேலின் ஆறுதலுக்காய் காத்திருந்த சிமியோனுக்கு ஒரு தனிப்பட்ட அழைப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது.  கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. சிமியோனும் இஸ்ரவேலின் ஆறுதலாகிய பாலன் இயேசுவை  காண  ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர். இரட்சகரை கண்டதும் இஸ்ரவேலுக்கு மீட்பர் தோன்றினார், அவர் ஆறுதல் அளிப்பார்  என சிமியோன் சமாதானமடைந்தான் . இன்றைக்கும் எத்தனையோ ஆத்துமாக்கள் தேவனை அறியாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அன்பானவர்களே சுயநலமாய் நான் இரட்சிக்கப்பட்டால் போதும் என்று வாழாமல், இரட்சிக்கப்படாதவர்களுக்காக  பாரத்தோடு ஜெபிப்போம்.  அழிந்து போகும் ஆத்துமாக்களை குறித்து மனதுருக்கம் கொள்ளுவோம். பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து உலகத்தில் தோன்றினார் என்பதை உணர்ந்தவர்களாக  கிறிஸ்துவின்  மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற பிரயாசப்படுவோம்.

 


3. மேசியாவைக் அறிந்துகொண்டனர்  


தேவாலயத்தில் காத்திருந்த சிமியோனும் அன்னாளும் மேசியாவை கண்டுகொண்டனர். அந்த குழந்தை தான் மேசியா என அறிந்துகொண்டனர். தேவனை அறிந்து கொள்ளுவது மிகவும் முக்கியம். தேவனை நாம் அறிந்துகொண்டால் மட்டுமே நாம் அவரை பிரதிபலிக்க முடியும். ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்த சிமியோன்  அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர் என்றான். எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள். கிறிஸ்துவை கண்டு மரிக்க வேண்டும் என ஏங்கி காத்திருந்த  சிமியோனின் ஆத்துமா, உலக இரட்சகரை கைகளில் சுமந்து  தேவனை ஸ்தோத்தரித்தது . உலகத்தை உதறி தள்ளிவிட்டு தேவனோடு நெருங்கி வாழ்ந்த சிமியோன் பரலோக திட்டத்தினை கண்டுகொண்டான். பரலோக திட்டத்தின் ஒரு அங்கமாய் பிரயோஜனப்படுத்தப்பட்டான். முதலாவது சிமியோன் பரலோக திட்டத்தை அறிந்துக்கொண்டான். இரண்டாவதாக தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாகிய பாலகன் இயேசுவைக் கண்டுகொண்டான். மூன்றாவதாக சிமியோனின் கண்கள் தேவனின் இரட்சிப்பைக் கண்டுகொண்டது. இஸ்ரவேலின் ஆறுதலுக்காய் காத்திருந்த சிமியோன் இஸ்ரவேலுக்கு மகிமையாக குழந்தை இயேசுவைக் கண்டுக்கொண்டான். நான்காவதாக புறஜாதிகளின் ஒளியாக இயேசுவை அறிந்துகொண்டான்.  நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு வழிநடத்தப்படும் போது மட்டுமே தேவனுக்குரியவைகளை அறிந்துக்கொள்ள முடியும். யூதர்கள் மேசியாவின் வருகைக்காய் காத்திருந்தும் மேசியாவை அறிந்துகொள்ளவில்லை.அதனால் தான் அவரை சிலுவையில் அறைந்தார்கள்.இயேசுவின் சீஷர்கள் அவரோடு கூட இருந்தும் அநேக நேரங்களில் இயேசு  கூறிய வார்த்தைகளை அறிந்துகொள்ளவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டும்  என்று பவுல் எபேசு சபைக்காக விண்ணப்பம் பண்ணுகிறார் [எபேசியர்:1:17-19]. அன்பானவர்களே விசுவாசிகளாகிய நம்முடைய விண்ணப்பமும் அப்படியாய் இருக்கட்டும். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து வேதத்தில் எத்தனையோ தீர்க்கத்தரிசனங்கள் இருந்தும் நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை.  தேவனுடைய வருகைக்காய் பரலோகம் ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், நடக்கவேண்டும். நாம் தேவனுடைய காரியங்களை அறிந்து கொள்ளவும் அவருடைய மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற பங்குள்ளவர்களாகும்படிக்கு தேவன் தாமே பிரகாசமுள்ள மனக்கண்களைக் நம் ஒவ்வொருவருக்கும் தந்தருளுவாராக.

4. மேசியாவைக் குறித்து அறிவித்தனர் 

 


சிமியோன் குழந்தை இயேசுவை கையில் ஏந்தியவனாய் "புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள்" கண்டது என்றான். பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். சிமியோன் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் தேவனுடைய மீட்பின் திட்டத்தை முழுமையாய் அறிந்தவனாய் குழந்தை இயேசுவைக் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கிறான். சிமியோனின் கண்கள் இரட்சிப்பை கண்டது. இயேசு கிறிஸ்து உலக இரட்சகராய் சிலுவையில் மரிக்க வேண்டியதை அறிந்தவனாய் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என இயேசுவின் தாயாரிடம் அறிவிக்கிறான். அதே நேரத்தில் அன்னாள் தீர்க்கத்தரிசியும் வந்து குழந்தை இயேசுவைக் கண்டு அவரை புகழ்ந்து பாடி எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த யாவருக்கும் அவரைக் குறித்து பேசினாள். அன்னாள் பேசின வார்த்தைகள் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த இருவரையும் பார்க்கும் போது சாதாரண மனிதர்கள், ஆனால் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டவர்கள். தேவனுடைய மீட்பின் திட்டத்தை தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். மேசியாவை உலக இரட்சகராக கண்டு மற்றவர்களுக்கும் அறிவித்தனர். நாமும் இரட்சிக்கப்பட்டோம் அல்லவா? இயேசுவை உலக இரட்சகர் என அறிந்துள்ளோம். பிறருக்கு அறிவிக்கிறோமா? சிமியோன் தேவனோடு நடந்ததால் தேவ வெளிப்பாடுகளை அறிந்து அறிவித்தான். நாமும் சிமியோனைப் போல தேவனோடு நடப்போம். தேவனுடைய வெளிப்பாடுகளை பெற்று கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிப்போம். இந்த கிறிஸ்து பிறப்பின் நாட்களில் கிறிஸ்துவே உலக இரட்சகர் என்பதை மட்டுமல்ல  நம்மை பரலோகம் அழைத்து செல்ல இயேசு கிறிஸ்து  மீண்டும் வருகிறார் என்ற நற்செய்தியையும்  அறிவிப்போம்.


அன்பானவர்களே  குழந்தையாய் பிறந்த பாலன் இயேசு ராஜாதி ராஜாவாய் மீண்டும் வரப்போகிறார். அவர் வரும் நாளை நாம்  அறியாததால் எப்போதும் ஆயத்தமாய் வாழுவோம். நாம் தேவனுக்காய் பக்திவைராக்கியமாய் வாழும் போது  அவர் மீட்பின் திட்டத்தை நிறைவேற்ற  நம்மையும் உபயோகிப்பார். கிறிஸ்துவின் மகிமையின் ஒளி இந்த பண்டிகை காலங்களில் நம் ஒவ்வொருவரின் இருதயத்தையும்  பிரகாசிக்கட்டும்.தேவ அன்பும் சமாதானமும் சந்தோஷமும் நம் ஒவ்வொருவரையும் ஆட்கொண்டு வழிநடத்தட்டும். ஆமென்.
 

bottom of page