top of page

புதிய வருடத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்!!?

ஓடுவது நதியல்ல தண்ணீர் தான், கடப்பது காலமல்ல நாம் தான். இன்றைக்கு நம் வாழ்க்கையில் எத்தனையோ வருடங்கள் கடந்து போனது.எத்தனையோ புதிய வருடங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் நம்முடைய வாழ்க்கை ஒரு முடிவை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதை அறியாமல் போகிறோம். இன்றைக்கு பவுல் சொன்னது போல நித்திய ஜீவன் என்ற  இலக்கை நோக்கி சரியான பாதையில் நாம் பயணித்து கொண்டிருப்போமானால் அதுவே மகிழ்ச்சியான விஷயம்.( கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3-14)

ஆனால் நம்முடைய வாழ்க்கையில் இவ்வளவு நாள்கள் கடந்து வந்த போதும் நாம் மாறாமல் அப்படியே இருக்கிறோம். இந்த நாள்களில் தேவன் நம்மிடம் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார். அது அவரை நேசித்து அவருக்கு பிரியமாக வாழும்படியான சாட்சியுள்ள வாழ்க்கை, இன்றைக்கு இந்த விஷயத்தில் நாம் குறையுள்ளவர்களாகவே இருக்கிறோம், இன்றைக்கு புது வருட வாக்குதத்த வசனங்களை வாஞ்சிக்கிறோம்.ஆனால் அந்த வாக்குதத்தங்கள் தேவன் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்கள் தான் ஆனால் ஒவ்வொரு ஆசீர்வாதங்களுக்கு முன் தேவன் ஒரு கட்டளையை கொடுத்திருக்கிறார்.நீ இதை செய்தால் நான் இதை தருவேன் என்பதே. ஆனால் நாம் அந்த கட்டளையை கைக்கொள்ளாமல் வெறும் ஆசீர்வாதங்களை மாத்திரம் வாஞ்சிப்பதால் தேவனுடைய ஆசீர்வாதங்களை நம் வாழ்க்கையில் பெற்று கொள்ளாமல்  இன்னும் குறைவுடையவர்களாகவே இருக்கிறோம். ஆபிரகாம் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்ததினால் அவனும் அவனது சந்ததியினரும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். (ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,  நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.  ஆதியாகமம் 26:4,5).

இன்றைக்கு  நாம் சபையில் கொடுக்கபடும் வாக்குதத்த அட்டைகளை வாங்கி வீட்டில் மாட்டி வைத்திருக்கிறோம், ஆனால் அந்த வாக்குதத்தத்தின் ஆசீர்வாதங்களை  அநேகர் பெற்று கொள்வது இல்லை. ஏனென்றால் நாம் தேவனுடைய கற்பனைகளின் படி நடப்பதில்லை. (அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். 1 யோவான் 3 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் 20-6)

 

எத்தனையோ புதிய வருடங்களுக்குள் நாம் கடந்து போன போதும் நம் சுபாவங்கள் மற்றும் நம் நடக்கைகள் அப்படியே தான் இருக்கிறது.எத்தனை புதிய வருடங்களை கடந்த போதும் தேவன் விரும்பும் மாற்றம் நம்மிடம் ஏற்படவில்லை.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் எப்படி நடக்க வேண்டும் என்ற  மாதிரியை வைத்து விட்டு சென்றிருக்கிறார். (நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் 13-15

 

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 1 பேதுரு 2-21)

 

எனவே அவர் காட்டிய வழியில் அவரை போல சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நாம் வாஞ்சிப்போம். (அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,   உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.  எபேசியர் 4:22-24

எனவே கொலோ 3-9 ல் சொல்லப்பட்டபடி பழைய மனுஷனையும் அவனது செய்கைகளையும் களைந்துவிட்டு இயேசுவை போல வாழ நம்மை ஒப்பு கொடுப்போம்.(.இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17)

 

எனவே இந்த புதிய வருஷத்தில் அவரது கட்டளைகளை கைக்கொண்டு கர்த்தராகிய இயேசு காட்டிய வழியில் நடந்து  பரிசுத்தம் மேல் பரிசுத்தமடைந்து சாட்சியுள்ள கனி கொடுக்கிற ஒரு புதிய மனிதனாய் மாறுவதே நம்முடைய பிரதான நோக்கமாயிருக்கட்டும்.ஆமென்.

bottom of page