top of page

அப்பிரயோஜனமான ஊழியக்காரனும்

விதைக்காத இடத்தில் அறுக்கிற எஐமானனும்

 

 

சென்னையில் ஒரு ஊழியக்காரர் மறைந்த சாம் சுந்தரம் ஜயா அவர்கள் ஸ்தாபனத்தில் ஊழியம் செய்து வந்தார். இரண்டு சபைகளில் அவருக்கு ஊழியம் கொடுக்கப்பட்டிருந்தது, அவருக்கு பைக் கொடுத்திருந்தார்கள், அவர் இந்து மதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டவர்.

 

ஒரு நாள் ஊழியத்துக்கு போகும்போது விபத்துக்குள்ளாகி முதுகில் அடிப்பட்டு விட்டது, மருத்துவர்கள் இனிமேல் பைக் ஓட்ட கூடாது என்று சொல்லி விட்டார்கள். இப்படியிருந்த போதிலும் சரீர வேதனையோடு ஊழியத்தை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார். வேதனை அதிகரித்து ஊழியம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.அப்பொழுது இவரது மனைவியும் Medical certificate எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாம் சுந்தரம் ஐயாவை பார்த்து பாதிக்கப்பட்ட என் உடல் நிலையை கருத்தில் கொண்டு அலுவலக்கத்திலே ஒரு ஊழியத்தை கொடுங்கள் என்று கேட்கும் படிக்கு அவரது அலுவலகத்தில் காத்திருந்தார்கள். சிறிது நேரத்துக்கு பின் அந்த தேவமனிதர் திடீரென்று வெளியே வந்து நீங்கள் செய்யும் ஊழியத்தை தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.இவருக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது,ஏன் என் உடல் நிலையின் வேதனையை கூட அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை என்று தன் மனைவியிடம் வேதனையோடு சொன்னார்.அதற்கு அவரது மனைவி அவர் தேவசமூகத்தில் தரித்திருக்கும் தேவமனிதர்.தேவன் சொல்லாமல் எதையும் சொல்ல மாட்டார்.எனவே அவர் சொன்னபடி ஊழியத்தை தொடர்ந்து செய்யுங்கள் என்றார்கள்.இவர்  வேதனையோடு தேவன் தந்த ஊழியத்தை உண்மையாக உத்தமத்தோடு  தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார்.ஆனாலும் மனதில் தேவன் என் வேதனையை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் ஜெபித்து கொண்டிருக்கும் போது தேவ வல்லமை தன்னை தொடுவதை உணர்ந்தார், அந்த நிமிடமே அவர் மருத்துவர்கள் ஆச்சரியப்படும்படி பூரண சுகத்தை பெற்று கொண்டார்.சில நேரங்களில் தேவன் நம்மை கடினமாக நடத்துவார்.பல ஊழியக்காரர்களுக்கு பாலைவனமான வழிகளை கடந்து சென்ற அனுபவங்கள் உண்டு ஏனென்றால் ஆண்டவராகிய எஜமான் தன் வேலைக்காரர்களை நடத்துவது வித்தியாசமானது. (உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?

நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?

தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.

அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17:7-10).

 

ஆண்டவராகிய இயேசு சொன்ன வசனத்தின் படி பவுல் சுவிசேஷத்தை குறித்து மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என்றார். மேலும் அவர் தேவனே விளைய செய்கிறவர் நாங்கள் வெறும் நீர் பாய்சுகிறவர்களும் நடுகிறவர்களுமாயிருக்கிறோம் என்றார்.அன்றைக்கு ஒன்றுமில்லாமையிலிருந்து  தேவனால் நடத்தி செல்லப்பட்ட அநேக  ஊழியக்காரர்கள் தங்கள் ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டு பெருகினவுடன் தங்களை Founder என்று போட்டு  கொள்கின்றனர். நான் அதை தவறாக சொல்லவில்லை. ஆனால் தேவன் உங்கள் மூலமாக உருவாக்கியது என்று சொல்வது தான் சரியானது. நம்மை உருவாக்கியவர் யார்? வரங்களையும் அதிகாரங்களையும் தந்தது யார்?. இரட்சிக்கபட்டவர்களை சபையில் சேர்த்தவர் யார்?ஜனங்கள் உங்களை Founder என்று சொல்வதற்கும் ஜனங்கள் உங்களை Founder என்று சொல்லும்படியாக நீங்களே உங்களை Founder என்று  விளம்பரபடுத்திக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. கர்த்தராகிய இயேசு ஊழியத்தை செய்து முடித்த பிறகு அப்பிரயோஜனமான ஊழியக்காரன்... கடமையை மாத்திரம் செய்தேன் என்று  என்று சொல்ல சொன்னதை நாம் செய்து காட்ட வேண்டும்.

 

மேலும் இன்றைக்கு சில ஸ்தாபனங்களின் Founder களை ஜனங்கள் இயேசுவுக்கு மேலாக உயர்த்தி மகிமைபடுத்துகின்றனர். அவர்கள் வகுத்த ஸ்தாபனத்தின் கொள்கைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கடைபிடிக்க சொன்ன சத்தியத்துக்கு மாறாக இருக்கிறது. பிரியமானவர்களே உங்கள் ஸ்தாபன தலைவர் வகுத்த உபதேசத்துக்கு கீழ்படிகிறீர்களா?கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கீழ்படிய செய்ய சொன்ன உபதேசத்துக்கு கீழ்படிகிறோமா?உங்களை நிதானித்து அறியுங்கள்.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினை தீர்ப்பு  உண்டு என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. (பார்க்க 2 தெச 1-7) 

 

அடுத்ததாக நம் எஜமானன் விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்று இயேசு சுட்டி காட்டுவதை பார்க்கலாம். ஊழியங்களில் அவரது வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் செயல்படுவதை காண்கிறோம். அவர் கிரியை செய்யவில்லையென்றால் இரட்சிப்பு இல்லை. பரிசுத்த ஆவியானவர் மூலம் தான்ஆதி அப்போஸ்தலர்கள் அற்புதங்களை செய்தார்கள்.பேதுருவின் நிழலுக்கு கூட வல்லமை கொடுக்கப்பட்டது பவுலின் உருமால்களிலிருந்து தேவ வல்லமை கடந்து சென்றது,  இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் மாத்திரமே ஊழியங்களில் அற்புதங்கள் நடக்கிறது. அப்படியிருக்க இன்றைய ஊழியக்காரர்கள் கர்த்தர் தன் மூலமாக செய்த காரியங்களை தான் செய்ததாக பலவிதங்களில் தங்களை உயர்த்தி கொள்ளவே விரும்புகிறார்கள். (அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனலுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றம் அறிந்திருந்தாயே. (மத்தேயு 25-24)இந்த வசனத்தில் இயேசு சொன்னதை புரிந்து கொண்டீர்களா?அவர் தான் ஒன்றுமில்லாத இடத்தில் விளைய செய்கிறவர்.நாம் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள்.ஆமென்.

அடுத்ததாக மத்தேயு 20 ம் அதிகாரத்தில் திராட்சை தோட்டத்தில் முந்தி அமர்த்தபட்டவர்களுக்கும் பிந்தி வேலைக்கு வந்தவர்களுக்கும் ஒரே கூலியை எஜமான் கொடுப்பதை காணலாம். எனவே நாம் ஐம்பது வருடம் ஊழியம் செய்தாலும் ஒரு வருடம் ஊழியம் செய்தாலும்  அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் தான்.இயேசு கிறிஸ்துவே மூன்றரை வருடங்கள் தான் ஊழியம் செய்தார், ஆனால் இன்றைக்கு நான் இத்தனை வருடங்கள் ஆண்டவருக்காக ஊழியம் செய்தேன் என்று உலகத்துக்கு சொல்லி கொள்ளும் ஊழியக்காரனே...நீ அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்பதை அறிக்கையிடு,அது தான் முற்றிலும் உண்மை, இத்தனை வருடங்கள் ஆண்டவர் என்னை விழுந்து போகாமல் என்னை பயன்படுத்தி அவரது ராஜ்ஜியத்தை கட்டும்படியாக பயன்படுத்தினார் என்று உன்னை அவருக்கு முன்பாக தாழ்த்து மனிதர்களுக்கு முன்பாக உன்னை உயர்த்தி கொள்ள முயற்சிக்காதே, மனித புகழ்சியை தேடுகிறவன் தேவனுடைய ஊழியக்காரன் இல்லை என்று வேதம் சொல்கிறதே.நான் அப்பிரயோஜனமான ஊழியக்காரன். கடமையை மாத்திரம் செய்தேன் என்று சொல். நீ செய்த ஊழியத்துக்கு பரலோகத்தில் உனக்கு அவர் கொடுக்கும் பலன் மிகுதியாயிருக்கும்.  ஆமென்.

bottom of page