top of page

தேவனுடைய பார்வையில் நீங்கள் கொடுக்கும் காணிக்கை

 

இன்றைக்கு சில ஊழியக்காரர்கள் சபையில் அதிகமாக செலவு பண்ணுகிறவர்களையும் அதிகமாக காணிக்கை கொடுப்பவர்களையும் கனப்படுத்துகிறார்கள். ஊழியக்காரன் அதிகமாக காணிக்கை கொடுப்பவர்களின் முகத்தை பார்க்கிறான். தேவனோ அவர்களது இருதயத்தை ஆராய்ந்து அறிகிறார். அன்றைக்கு சபையில் அநேகம் பேர்கள் தங்கள் பரிபூரணத்திலிருந்து காணிக்கை போட்டார்கள்.ஆனால் அந்த ஏழை விதவை தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள், அந்த ஏழை விதவையை தேவன் கனப்படுத்தினார்.அவள் நிச்சயமாக தேவனால் பல மட ங்கு ஆசீர்வதிக்கபட்டிருப்பாள்.இன்றைக்கும்  ஊழியக்காரர்கள் சபையில் காணிக்கை போடும் எழைகளை புறக்கணிக்கிறார்கள். பணக்காரர்களை தூக்கி தலை மேல் வைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் ஏழைகள் கொடுக்கும் காணிக்கையே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றதாக இருக்கிறது.

 

இன்று எத்தனையோ விசுவாசிகள் ஏராளமாய் பெற்றிருந்தும் தேவனுக்கோ மிக சிறிய அளவே தருகிறார்கள். ஆனால் சிலராய் இருக்கும் விசுவாசிகள் மிக குறைவாய் பெற்றிருந்தாலும் தேவனுக்கோ மிக அதிகமாய் தருகிறார்கள். இது போன்ற மிக உண்மையுள்ளவர்களை கொண்டே தேவன் தன் சபையை கட்டி கொண்டிருக்கிறார். இவர்களில் அநேகர் இந்த பூமியில் அறியப்படாதவர்களாய் இருக்கலாம், ஆனால் இவர்களோ நித்தியத்தில் நட்சத்திரங்களாய் ஜொலிப்பார்கள், ஆனால் தங்கள் பரிபூரணத்திலிருந்து எல்லாரும் அறியும்படியாக தேவனுக்கு கொடுப்பவர்களை ஊழியக்காரன் மாத்திரமே கனப்படுத்துவான்.ஆனால் தேவனோ உன் பலியையும் காணிக்கையையோ விரும்பவில்லை என்று சொல்லிவிடுவார்.மேலும் தாங்கள் தேவனுக்கு கொடுக்கும் காணிக்கையை குறித்து அந்தரங்கமாக கொடுக்காமல் பிறர் பார்க்கும் படி  வெளியரங்கமாக கொடுப்பவர்கள் தங்கள் பலனை இந்த உலகத்திலே பெற்று கொள்வார்கள். பரலோகத்தில் அவர்களுக்கு பலன் இல்லை. அடுத்ததாக,  இயேசு சொன்ன முக்கியமான காரியம் (ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத்தேயு 5-23,24

என்று கட்டளையிட்ட காரியத்துக்கு நம்மில் அநேகர் கீழ்படிவதில்லை இன்றைக்கு அநேகர் தங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரர்களோடு பேசுவதேயில்லை. இயேசு சொன்ன கட்டளை படி காணிக்கை போடுவதற்கு முன்  தங்கள் சகோதர சகோதரிகளிடம் உள்ள குறையை சரி செய்து விட்டுநாம் தேவனுக்கு காணிக்கை போட தகுதியுள்ளவர்களாக மாற வேண்டும்.பிரியமானவர்களே தேவனுக்கு காணிக்கை கொடுக்கும் விஷயத்தில் நாம் தேவ நீதியை நிறைவேற்றாத பட்சத்தில் நம்முடைய வாழ்கையில் குறைவுகள் தான் காணப்படும்.அடுத்ததாக இயேசுபரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. லூக்கா 11-42 என்றார்.

 

தசமபாகம் காணிக்கை கொடுத்து விட்டு தேவ நிதி,நியாயம் இரக்கம் மற்றும் அன்பை கடைபிடிக்காதவர்களுக்கு ஐயோ என்று சொன்ன இந்த வார்த்தைகளுக்கு நம்மில் எத்தனை பேர் செவிக்கொடுக்கிறோம்.சபைகளில் காணிக்கை மற்றும் தசமபாகத்தை பற்றி அடிக்கடி ஜனங்களை எச்சரிக்கிற ஊழியக்காரர்களே இயேசு சொன்ன வெறும் தசமபாகத்தை மாத்திரம் கொடுத்து விட்டு தேவ நீதியை நிறைவேற்றாத அநேகம் பேரை எச்சரிக்காத பட்சத்தில் சந்திப்பின் நாளிலே தேவன் உங்களிடம் கணக்கு கேட்பார்.அன்றைக்கு காயீனும் நல்ல காணிக்கையை தான் தேவனுக்கு கொண்டு வந்தான்.ஆனால் ஏன் அவனது காணிக்கை தேவனால் அங்கிகரிக்கபடவில்லை??? பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம். அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. 1 யோவான் 3-12

 

காயீன் தேவனுக்கு முதன்மையான காணிக்கையை கொடுத்த போதும் அவனது கிரியைகள் பொல்லாதவையாக இருந்ததால் அவனது காணிக்கை தேவனால் ஏற்று கொள்ளபடவில்லை. ஆபேலின் கிரியைகள் நீதியுள்ளதாக இருந்ததால் அவன் படைத்த காணிக்கையை தேவன் அங்கீகரித்தார்.

 உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை என்று சர்தை சபைக்கு ஆவியானவர் சொல்வதை காணலாம். (வெளி 3-2)

 

அன்றைக்கு ஆலயத்துக்கு போன பரிசேயன் வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். (லூக்கா 18-12.)

 

ஆனால் தேவன் அவனது காணிக்கையையும் ஜெபத்தையும் அங்கிகரிக்கவில்லை. பிரியமானவர்களே இந்த உலகத்தில் தேவன் நமக்கு தந்த ஆசீர்வாதத்திலிருந்து நாம் தேவனுக்கு காணிக்கை கொடுப்பதற்கு முன்பு நம்மை நாமே நிதானித்து பார்ப்போம்.காணிக்கை போடுவதற்கு முன்போ அல்லது காணிக்கை போடும் போதோ தேவன் செய்ய சொன்ன நீதியையும் நியாயத்தையும் செய்வோம், ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்வோம், ஆமென்.

bottom of page