top of page

ஆபிரகாமின்  பயணம்

சகோதரி. அனு ஃபெஸ்லின்

 

தேவன் தம்முடைய வேலையை பூமியில் நிறைவேற்ற ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு நபரை தெரிந்துக்கொண்டு அவர்களை அழைத்து பயன்படுத்தினார். கிறிஸ்துவுக்கென்று ஒரு புது  சந்ததியை ஆயத்தம் பண்ண அதாவது ஒரு புது ஜாதியை உண்டாக்க தேவன் ஆபிரகாமை அழைத்தார். தாம் தெரிந்துக்கொண்ட  ஜனங்களை வழிநடத்தி ஒரு புது தேசத்திலே கொண்டு போகும்படி மோசேயை அழைத்தார். தன் ஜனங்களின் அறியாமையை உணர்த்தி தன் ஜனங்களை தன் வசம் நடத்த சாமுவேலை அழைத்தார். அந்த அழைப்பின் பாதையில் அவர்கள் செய்த பணிகளை விட, அந்த அழைப்பின் நோக்கத்தை முக்கியமாக கொண்டதினால் அவர்கள் ஜெயம் பெற்றார்கள்.

வேதம் கூறுகிறது “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்[Iபேதுரு:2:9]. என்னையும்  தேவன் அழைத்திருக்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ஏதோ ஒன்றை செய்யும்படி தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ஏதோ ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலோ அல்ல ஏதோ ஒரு காரியத்தை தேவன் நம்மூலம் நிறைவேற்றவே  நம்மை அழைத்திருக்கிறார். ஆயத்துறையிலிருந்த மத்தேயுவை தம் சீஷராக இயேசு கிறிஸ்து அழைத்த போது ஜனங்கள் எல்லாரும் எதிர்த்தார்கள். அப்பொழுது இயேசு “நீதிமான்களை அல்ல பாவிகளையே மனந்திரும்ப அழைக்க வந்தேன்” என்று சொன்னார். நாம் நம்மை  நீதிமான் என்று சொல்வோம் என்றால் தேவனிடத்தில் ஒன்றும் நமக்கு இல்லை. தேவனின் அழைப்பையும், அதின் வழியிலே வருகிற இடர்பாடுகளையும், தேவனுடைய எதிர்நோக்குதலையும் குறித்து நாம் விசுவாசிகளின் தந்தையாகிய ஆபிரகாமின் வாழ்க்கையிலிருந்து தியானிக்க போகிறோம். ஆபிரகாமின் வாழ்க்கை  பாதையில் ஏற்பட்ட தடுமாற்றங்களையும், தேவனின் பொறுமையையும் குறித்து வேத வசனங்கள் வாயிலாக நாம் தியானிக்கலாம்.

 

ஆபிரகாமின் அழைப்பு

 

ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயர் பட்டணத்தை சேர்ந்தவன். இந்த பட்டணம் ஒரு விக்கிரகக்கோட்டையாய் இருந்தது.  ஆபிரகாமுடைய தகப்பனாகிய தேராகு விக்கிரகங்களை செய்பவர். ஆபிரகாமின் தந்தை தேராகு தன் குமாரனாகிய ஆரான் மரித்த போது ஆபிரகாமையும் சாராயையும் அழைத்துக்கொண்டு அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயர் பட்டணத்திலிருந்து கானானுக்கு தேசத்துக்கு போக புறப்பட்டு ஆரான் மட்டும் வந்த போது அங்கே இருந்துவிட்டார்கள்.  தேவன் “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என அழைத்தார்[ஆதியாகாம்:12:1,2]. வேதம் கூறுகிறது நம்முடைய ஆபிரகாம் ஆரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே(ஊர் பட்டணத்தில்) இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமானார் [அப்போஸ்தலர்:7:2]. தேவனின் நோக்கம் ஆபிரகாம் தன் தகப்பனின் தெய்வம் ,கலாச்சாரம்,பண்பாடு  தேசம் எல்லாவற்றையும் விட்டு விட்டு முழுமையாக தேவனுக்கு கீழ்படிந்து புறப்பட்டு வர வேண்டும் என்பதே.ஒரு புது விசுவாச சந்ததியை ஆபிரகாமைக் கொண்டு உருவாக்க தேவன் திட்டமிட்டிருந்தார். அதற்காக தான் விக்கிரக வழிபாடு செய்கிற ஜனங்கள் இருக்கிற தன் தேசம், இனம், தகப்பன் வீடு எல்லாவற்றையும் விட்டு தேவன் ஆபிரகாமை புறப்பட கூறினார்.

 

 தேவனுடைய அழைப்புக்கு முதலிடம் கொடு

 

ஆபிரகாமை தேவன் அழைத்திருந்தும் அவன் தன் தகப்பனின் மரணம் வரை தகப்பனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஆரானில் குடியிருந்தான். ஏனென்றால் பாபிலோனிய கலாச்சாரப்படி குடும்பத்தின் முதியவர் தான் குடும்பத்தை வழிநடத்துவார். அதனால் ஆபிரகாமால் அதை மீறி ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. சில சூழ்நிலைகளில் உறவுகள் கலாசாரம் ஆகியவை தேவ கட்டளைக்கு நம்மை கீழ்ப்படிய அனுமதிக்காது. வேதம் கூறுகிறது எபேசியர் 6:1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். தனக்கு பிடித்ததை மாத்திரம் கீழ்ப்படிவேன் என்றும் அல்ல. பெற்றோர் சொல்லும் அனைத்தையும் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அல்ல. கர்த்தருக்குள் பெற்றோருக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். எல்லாவற்றிலும் கர்த்தரே மேலானவர். அவரே நமக்கு பரம தகப்பன். நாம் கர்த்தருக்கு முதலிடம் கொடுத்து அவரை முன் வைத்து தீர்மானங்கள் எடுக்க முற்பட  வேண்டும்.பெற்றோர் தேவன் நமக்கு தந்த ஆசீர்வாதம். அவர்களை தந்த தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும். தேவதிட்டத்திற்கு பெற்றோர் இடையூறாக இருக்கும் போது தேவைகளை பெற்றோரிடம் சொல்லுவதோடு நின்று விடாமல் தேவன் அவர்களோடு இடைபட நாம்  ஜெபித்து தேவனுக்கு கீழ்படிய நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். இன்று தேவனை அறிந்த பலர் ஞானஸ்நானத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் இருப்பது பெற்றோர், கலாச்சாரம் போன்ற காரணங்கள் தான். தேவன் அழைத்த யாரையுமே அதே சூழ்நிலையில் பயன்படுத்தினது இல்லை. அவர்கள் சூழ்நிலையை மாற்றி பயன்படுத்தினார். தேவனின் திட்டம் தந்தை தேராகுவிடம் இருந்து ஆபிரகாமை பிரிப்பது அல்ல.  விக்கிரகத்திற்கு அடிமைபட்டிருந்த குடும்பத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து தேவ திட்டத்திற்கு அவனை உருவாக்கி பயன்படுத்துவதே.  தன் தகப்பன் தேராகு மரணமடைந்ததும் ஆபிரகாம் தேவன் அழைத்த அழைப்பை நினைவு கூர்ந்து உடனடியாக அங்கிருந்து புறப்படுகிறான்.

 

தேவனுடைய அழைப்பை விட்டு தூரம் போகாதே   

 

ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்[ஆதியாகமம்:12:]. ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து புறப்பட்ட பின்பு தான் தேவன் மீண்டும் ஆபிரகாமிடம் பேசுகிறார். “உன் சந்ததிக்கு இந்த  தேசத்தை கொடுப்பேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணுகிறார்.தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வந்த ஆபிரகாம் தேவன் சொன்ன உடன் அங்கே தங்கி இருக்க வேண்டும். இங்கே என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னீரே என்னை ஆசீர்வதியும் என்று கேட்டிருக்க வேண்டும். அது ஒரு சம பூமி. அந்த சம பூமியில் சூழ்நிலைகள் கஷ்டமாக இருந்திருக்கலாம். பக்கத்திலே ஒரு மலை பிரதேசத்தை காண்கிறான். கண்ட உடனே உலகத்தின் செழிப்பை பார்த்து அங்கே போக அவன் மனம் தீவிரிக்கிறது.

நம் வாழ்க்கையிலும் அநேக நேரங்களில் இப்படி தான். தேவன் சொல்லும் காரியங்கள் நமக்கு புரியும். இது தான் தேவன் நமக்கு தந்தது என்று தெரியும். ஆனாலும் நம் மனம் நல்ல சூழ்நிலைகளை (Convenience) தேடி ஓடும். அப்படி போகும்போது குற்ற உணர்வு வரும். ஆபிரகாமிற்கும்  அந்த குற்ற உணர்வு தான் வந்திருக்கும். அந்த குற்ற உணர்வை போக்க ஆபிரகாம் அங்கேயும் ஒரு பலி பீடம் கட்டுகிறான். குற்ற உணர்வு வருமாயின், தேவனுடைய அழைப்பை விட்டு நாம் தூர போகிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம் தவறை உணர்ந்து திரும்பி பழைய ஆதி அன்பிற்கு திரும்ப வேண்டும். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்கிற வசனம் ஞாபகத்திற்கு வர வேண்டும்.

 

உதாரணமாக ஆலயத்திலே உபவாச ஜெபம் இருக்கும்போது நாம் போகாமல் வீட்டில் இருந்தால் ஒரு குற்ற உணர்வு வரும். அந்த குற்ற உணர்வு வந்தால் உடனே அந்த ஜெபத்திற்கு போக தீர்மானிக்கவோ இல்லை அடுத்த முறை முதல் கண்டிப்பாக போவேன் என்ற தீர்மானமோ எடுக்க மனம் துணிவதில்லை. மாறாக, இருக்கிற இடத்திலே அந்த குற்ற உணர்வு மறையும்படி ஒரு காரணம் கண்டுபிடித்து மனதை தேற்றுவோம்; அல்லது ஒரு சிறு ஜெபம் செய்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பிப்போம். கால போக்கில் அந்த குற்ற உணர்வு நமக்கு மறந்து மறைந்து போகும். எந்த தவறு செய்தாலும் அது நம்மை குற்றப்படுத்தி காட்டாது. கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியிடம் சொன்னார் இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.ஆனாலும் அவர்கள்: அது கூடாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள் [எரேமியா:18:11,12].கர்த்தர் உணர்த்தும் போது  நாம் உணர்வடைய வேண்டும். இல்லையென்றால்  தேவகோபாக்கினை நம்மேல் வரும் என்பதை மறந்து போக வேண்டாம். வேதம் கூறுகிறது “உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே. தேவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு மிக வித்தியாசமான தன்மை மனசாட்சி. நம் மனசாட்சி நம்மை குற்றபடுத்துமானால் நாம் நம் இருதயத்தை கடினப்படுத்தாமல் தேவ சமூகத்தில் நம் பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிட்டு தேவனிடம்  கிட்டிச்சேர வேண்டும்.

 

தேவனுடைய  அழைப்பில் சுய திட்டம் வேண்டாமே !  

 

ஆபிரகாம் பிரயாசப்பட்டு நல்ல ஒரு சூழ்நிலையை தேடி ஓடி போகிறான். ஆனால்  அவன் மனம் திருப்தி அடையவில்லை.மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை[பிரசங்கி:6:7] வாய் நிறைய பேசுவதற்கும், வாய் நிறைய உண்பதற்கும். வாய் நிறைய மற்றவர்களை குற்றப்படுத்துவதற்கும் தான் நாம் தேடி போகும் சூழ்நிலைகள் பயன்படும். வசதியை தேடி ஓடிக்கொண்டிருக்கிறவர்கள் ஓடிகொண்டே இருப்பார்கள். அந்த மலை தேசத்திலே தங்கி இருக்காமல் ஆபிரகாம் தென் திசை நோக்கி போகிறான். பஞ்சம் கொடிதாகிறது. பஞ்சம் வந்தபோதாவது அவன் உணர்ந்து இருக்க வேண்டும். கொடிதாகிறது வரை ஓடி பின் பஞ்சத்திலிருந்து தப்பிக்க வழி தேடுகிறான். இப்பொழுது “உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்ன தேவனை” மறந்து எகிப்து நோக்கி போகிறான்.  வேதம் கூறுகிறது அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.
 எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள்.
ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்[ஆதியாகமம்:12:10-12]. என்ன வித்தியாசம்?? என்னை கொன்று உன்னை எடுத்துகொள்வார்கள்;இல்லையேல் என்னை உயிரோடு வைத்து உன்னை எடுத்துகொள்வார்கள்.தேசத்தில் பஞ்சம் வந்த போது ஆபிரகாம் எகிப்தை நோக்கி ஓட காரணம் அது  வணிகத்தில் சிறந்த தேசம். தேவனுடைய அழைப்பை மறந்து தன்னுடைய வசதியை  தேடி ஓடிய ஆபிரகாம் எகிப்தின் பாவத்தை குறித்து அறிந்திருந்தும் தேவதிட்டத்தை தள்ளிவிட்டு தனக்கு தானே திட்டம் வகுத்து தன் உயிரைக் காப்பாற்ற தன் மனைவியை சகோதரி என்று பொய் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

 

உறவு முறையில் சாராய் சகோதரியாய் இருந்தாலும் சாராய் அவன் மனைவி. எகிப்தின் பாவ வழிகளை தெரிந்துக்கொண்டதால் சாராளை பார்வோன் மனைவியாக்குகிறான். ஆனாலும் கர்த்தர் இரங்கி  பார்வோனை வாதைகளால் வாதித்து சாராயை காப்பாற்றுகிறார் என்ன பரிதாபம் பாருங்கள்! எகிப்து  மோசமான பட்டணம் என்று தெரிந்தும் அங்கே செல்கிறதர்க்கு அவன் மனம் துணிகிறது.மனசாட்சி செத்துபோனால் இப்படி தான். தவறு என்று எத்தனை பேர் சொன்னாலும் அது நமக்கு தவறு என்று தெரியாது. நமக்கு என்று ஒரு நியாயம் எப்போதுமே இருக்கும். தவறு என்று நினைக்கிற காரியங்களை நாமே மறுபடியும் செய்வோம்.

 

வேதம் கூறுகிறது மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்[நீதிமொழிகள்:14:12].நாம் நம்முடைய வசதியான சூழ்நிலைகளில்  இருந்து கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. அப்படி முயற்சிக்கும்போது நம் மன திட்டம் (மன கடினம்) எகிப்தின் பாவங்களில் நம்மை வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

 

தேவனின் அழைப்பிற்கு கீழ்ப்படிந்து  அதில் நிலைத்திரு  

 

தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டு போனான். அங்கே ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தை தொழுதுக் கொண்டான்[ஆதியாகமம்:13:4]. எகிப்த்தின் பிரச்சனைகளுக்கு பின் ஆபிரகாம் தேவனுடைய அழைப்பைக் குறித்து உணர்வடைந்திருக்கலாம். தேவன் காட்டின அந்த பழைய இடத்திருக்கு திரும்பி போய் கர்த்தரை தொழுது கொண்டான். ஒருவேளை மனதிலே தேவன் சொன்ன காரியங்களையும் தான் செய்த தவறுகளையும் நினைத்து வருந்தியிருக்கலாம். தேவன் ஆபிரகாமிடம் உன் தேசத்தையும் உன் இனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் விட்டு புறப்பட்டு வா என்றார். ஆனாலும் ஆபிரகாம் லோத்துவை தன்னோடு அழைத்து வந்தான். தேவனே என்னை தனியே வர அழைத்தீரே நானோ லோத்துவை கூட அழைத்து வந்திருக்கிறேனே என்று வருந்தியிருக்கலாம். இந்நேரத்தில் ஆபிரகாமின் மேய்ப்பருக்கும் லோத்துவின் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வந்தது. அப்பொழுது ஆபிரகாம் லோத்துவை விட்டு பிரிந்து தேவன் காட்டிய இடத்திற்கு செல்கிறார் ஆபிரகாம் தேவனின் அழைப்பிற்கு முழுமையாய் கீழ்படிந்த போது தான் தேவன் அவனோடு மறுபடி பேசுகிறார்.  

கர்த்தர் ஆபிரகாமை மீண்டும் ஆசீர்வதித்தார். கர்த்தர் ஆபிரகாமிடம்  உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன் என்றார்[ஆதியாகமம்:13:14-18]. ஆபிரகாம் தேவனின் அழைப்புக்கு கீழ்ப்படிந்து அந்த தேசத்தில் சேர்ந்தது மட்டும் அல்ல அங்கேயே குடி இருந்தான்.

 

அழைப்பில் விசுவாசத்தோடு தேவனை சார்ந்து நில்

 

ஆபிரகாம் தேவனுடைய அழைப்புக்கு முழுமையாய் கீழ்படிந்த போது  அவன் தேவனோடு அடிக்கடி பேச ஆரம்பிக்கிறான். தேவனுக்கு ஒரு நண்பன் ஆகிறான். கர்த்தர் அவனுக்கு வாக்குத்தத்தங்களை தருகிறார்.  எதிர் கால திட்டங்களை அவனுக்கு அறிவிக்கிறார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்[ஆதியாகமம்:15].இந்த சூழ்நிலையில் ஆபிரகாம் தேவனிடம் நான் பிள்ளையில்லாதிருக்கிறேன் என்ற கூறிய போது தேவன் அவனிடம் “ உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் “என்று சொல்லி, அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்று வாக்குபன்னினார். ஆனால் சாராள் தன் இயலாமையை எண்ணி தேவதிட்டத்திற்கு புறம்பாக அடிமைப்பெண் ஆகாரை ஆபிரகாமுக்கு மனைவியாக கொடுத்தாள். இதனால் இஸ்மவேல் பிறந்தான். தேவன் ஆபிரகாமிடம் உன் கற்பப்பிறப்பாயிருப்பவனே உனக்கு சுதந்தரவாளி என்ன சொல்லி இருந்தும் அவன் சாராளுக்கு செவிகொடுத்து  தேவ திட்டத்தை மீறினான். அதனால் தேவன் ஆபிரகாமிடம் இருந்து இஸ்மவேலை பிரித்தார். ஏனென்றால் ஆபிரகாம் தேவனின் திட்டத்தை தன் சுயவழியில் நிறைவேற்ற நினைத்தான். தேவன் நமக்கு வைத்திருக்கும் திட்டங்களை அவிசுவாசத்தினாலே  சுயவழியில் அடைய நாம் முயற்சிக்கும் போது தேவ திட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறோம்  என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய தேவன் வாக்குமாறாதவர். சொன்னதை நிறைவேற்றுவர் என்று  விசுவாசிக்க வேண்டும். தேவன் தம்முடைய அழைப்பின் நோக்கத்திற்கு இடையூறாக இருந்த இஸ்மாவேலிடமிருந்து ஆபிரகாமை பிரித்தெடுத்து தம் உன்னதமான அழைப்புக்கு பாத்திரவானாய் மாற்றினார்.

 

தேவ அழைப்பின் திட்டத்திற்கு முழுமையாய் அற்பணி

 

தேவன் ஆபிரகாமின் மேல் இரக்கங்கொண்டு தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியே சாராள் மேல் கடாட்சமாகி ஆபிரகாமின் நூறுவயதிலே   ஈசாக்கை கொடுத்து ஆசீர்வதித்தார்[ஆதியாகமம்:22]. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.இப்பொழுது ஆபிரகாம் சற்றும் தாமதியால் உடனடியாக தேவ திட்டத்திற்கு விசுவாசத்தோடு கீழ்ப்படிகிறான்.நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்று தேவன் கூறினார். வேதம் கூறுகிறது விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார் என்று எண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான் [எபிரேயர்:11:17-19]. ஆபிரகாம் முழுமையான விசுவாசத்தோடும் உண்மையோடும்  தன்னை தேவனுக்கு அற்பனித்தான்.தேவன் ஆபிரகாமை அபரிமிதமாய் ஆசீர்வதித்தார். ஆம் பிரியமானவர்களே வேதம் கூறுகிறது உன் விசுவாசமே உன்னை இரட்சித்தது. ஆபிரகாமைப் போல நம் ஆதி வாழ்க்கை தடுமாற்றம் நிறைந்ததாய் தேவனுக்கு தூரமானதாய் இருந்தாலும், தேவன் நம்மோடு பேசும் இந்த தருணத்தில் நம் அழைப்பை உணர்ந்து விசுவாச வீரராய் மாறுவோம். தேவனுக்காய் விசுவாச சந்ததியை உருவாக்குவோம்.

எல்லா மனிதனுக்கும் ஒரு பழைய வாழ்க்கை உண்டு. தேவன் அதை பார்த்து நம்மை தள்ளி விடுகிறவர் அல்ல. நமக்காய் காத்து இருக்கிறவர்.இந்த இடத்தில் நாம் வந்து இருப்பது ஒரு நோக்கம் உண்டு. கலாசாரம், உறவுகள் தேவன் நம் மூலம் வைத்த திட்டத்திற்கு தடையாய் இருக்கிறதா என்பதை நாம் நம் வாழ்க்கையில் ஆராய்ந்து அறிவோம். ஆபிரகாமை போல அந்த காரியத்தை விட்டு புறப்படுவோம். தேவன் நமக்கு கொடுக்கும் ஊழியத்திலே, சூழ்நிலைகளிலே நிலைத்து இருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்ப்போம். துணிகரமான பாவங்கள் நம் வாழ்க்கையில் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்போம். தேவன் நமக்கு கொடுத்த ஊழியங்களுக்கு நாமே தடைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோமா? நம்மை நாமே சிந்திபோம்.தேவன் நமக்காய் வைத்த பணியை நாமே நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.அதற்காக தேவன் நம்மை உலகத்திலிருந்து பிரித்தெடுத்து உருவாக்குவார்.

ஆபிரகாமை முதலாவது விக்கிரக வழிபாடு செய்கிற தன் தகப்பன் வீட்டார், இனம், தேசத்திலிருந்து பிரித்தெடுத்தார். இரண்டாவது உலக செழுமை, ஐசுவரியத்தின் மேல் நோக்கம் கொண்ட லோத்துவிடம் இருந்து பிரித்தெடுத்தார். மூன்றாவதாக தேவ திட்டத்திற்கு புறம்பாக ஆபிரகாம் செயல்பட்டதால் இஸ்மவேலிடம் இருந்து பிரித்தெடுத்தார். நான்காவதாக ஆபிரகாமின் விசுவாசத்தை சோதிக்க அவன் சொந்த குமாரனயிடமிருந்து   பிரித்தெடுத்தார். ஆபிரகாம் உறுதியான விசுவாசத்திற்கு உகந்த பாத்திரமாய் மாறினான். இதே அற்பணிப்பை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். தேவனின் அழைப்பின்  திட்டத்திற்கு தடையாக இருக்கிறவைகளை நம்மை விட்டு அகற்றுவோம். தேவனின் அழைப்பை உணர்ந்து அவர் நம்மை வழிநடத்துவார் என விசுவாசித்து முழுமையான அற்பனத்தோடும் உண்மையோடும்  தேவனுக்கு பின்செல்வோம். நம்முடைய விசுவாச யாத்திரையில் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தேவன் நம்மை பெலப்படுத்தி விசுவாசத்தில் மேலோங்கி வளரச் செய்வார்.ஆபிரகாமுக்கு இரங்கின தேவன் நம்மையும் விசுவாச சந்ததிகளாய் உருவாக்குவாராக. தேவன் நம் ஒவ்வொருவரையும் வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மனலைப்போலவும் பெருகச் செய்து ஆசீர்வதிப்பாராக.ஆமென்.

 

bottom of page