top of page

தேவனுடைய வித்தியாசமான நடத்துதல்

 

தேவன் தான் அழைத்த ஊழியக்காரர்களை போஷிக்க வல்லவராக இருக்கிறார். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. சங்கீதம் 123-2.

 

இன்றைக்கு தேவனால் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் தேவனை நம்புவதை பார்க்கிலும் மனிதர்களின் கரங்களை நம்புவதால் அவர்கள் குறைவிலும் நெருக்கத்திலும் இருக்கிறார்கள்.தேவன் தான் அழைத்த ஊழியக்காரர்கள் தன்னை சார்ந்தே இருந்து கொண்டு தன் சித்தத்தை மாத்திரமே செய்ய விரும்புகிறார்.

 

ஒரு முறை ஒரு ஊழியக்காரர் தன் சபையிலிருந்து ஒரு குடும்பம் வேறு சபைக்கு சென்று விட்டதற்காக மனம் நொந்து போனார். ஏனென்றால்? அவர்கள் இருவரும் மருத்துவர்கள், நல்ல உயர்ந்த அந்தஸ்தை உடையவர்கள், ஆனால் ஏழை விசுவாசிகள் சபைக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஊழியக்காரர்கள் கவலைப்படுவதில்லை மேலும் அவர்களை விசாரிப்பதுமில்லை.

 

வெளிநாடுகளுக்கு ஊழியம் செய்ய வருகிறவர்களில் சிலர் பணக்காரர்களிடம் அதிக தொடர்பு வைத்து கொள்கின்றனர். நான் அதை தவறாக சொல்லவில்லை, தேவனால் ஆசீர்வதிக்கபட்டவர்கள் மூலம் அவர்கள் தேவைகள் சந்திக்கப்படலாம். ஆனால் அங்குள்ள சாதாரணமான வேலை செய்கிறவர்களின் பெயரோ அல்லது அவர்கள் சொன்ன ஜெப விண்ணப்பமோ அவர்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை. தேவன் எலியாவை போஷிக்க சாறிபாத் ஊரிலுள்ள பிரபுக்களிடம் அனுப்பவில்லை அங்கு பஞ்ச காலத்தில் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்த விதவையிடம் அனுப்பினார். தேவன் சொன்ன கட்டளைபடி எலியா அந்த விதவையிடம் வந்த போது விறகு பொறுக்கி கொண்டிருந்த அவள் அவனை நோக்கி என்னிடம் ஒரு பிடி மாவும் கொஞ்சம் எண்ணெய் மாத்திரமே இருக்கிறது.நாங்கள் இதை சாப்பிட்டு விட்டு சாகப்போகிறோம் என்று சொன்னாள்.அந்த எதிர்மறையான பதிலை கேட்டு அவன் சோர்ந்து போகவில்லை.சர்வ வல்லமையுள்ள தேவன் சொன்ன கட்டளையை அவன் நம்பினான்.தேவனுடைய வழிநடத்துதலை அறிந்து கொள்ளும்படிக்கு தேவனோடு நெருங்கிய உறவு வைத்திருந்தான். எனவே தான் உணவுக்கே வழியில்லாத விதவையிடம் முதலாவது எனக்கு ஒரு அடையை பண்ணி கொண்டு வா.பிறகு நீயும் உன் மகனும் சாப்பிடலாம் என்று தைரியமாக எலியாவால் சொல்ல முடிந்தது.தேவன் அவளை ஆசீர்வதித்ததினால் அவள் தன் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதமாக மாறினாள்.  தேசம் பஞ்சத்தில் வாடினாலும் அவளும் அவள் வீட்டாரும் செழிப்பாக வாழ்ந்தார்கள்.  என் வழிகள் உன் வழிகளல்ல,என் நினைவுகள் உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

 

இன்றைக்கு ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் தங்கள் தேவைகளுக்காக தேவனை விட்டு விட்டு மனிதனை நம்புவதால் சதாகாலமும் குறைவிலே இருக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட தரித்திரத்தையும் உபத்திரவத்தையும் தேவன் நடத்தும் பாதை என்று  சொல்லி கொள்கின்றனர்.  தேவன் சிலரை உருவாக்குவதற்காக பாலைவனமான பாதைகளில் நடத்துகிறார். ஆனால் அதுவே நிரந்தரமல்ல அவர் பூமியையும் அதன் நிறைவையும் உடையவர்,ஐசுவரியமும் கனமும் அவர் கரத்தில் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது, இப்படியிருக்கும் போது நாம் இரட்சிக்க திராணியற்ற மனிதர்களை நம்புவதால் எப்படி ஆசீர்வதிக்கபட முடியும். தேவன் ஆத்துமாக்களை கொடுக்கும் போது தேவனை விட்டு விட்டு ஆத்துமாக்களை நம்புகிறார்கள்.தேவன் ஆசீர்வதிக்கும் போது தேவனை மறந்து விட்டு ஆசீர்வாதத்தை பிடித்து கொள்கிறார்கள். கடைசியில் தேவன் செய்ய சொன்னதை விட்டு விட்டு பணத்துக்காக சுய சித்தத்தை செய்ய ஆரம்பித்து ஊழியத்தில் தேவ திட்டத்தை உதாசினப்படுத்துகிறார்கள்.(என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். எரேமியா 2-13).

 

எனக்கு தெரிந்த ஒரு சுவிசேஷகர்  எங்கு ஊழியத்துக்கு போனாலும் காணிக்கை வாங்க மாட்டார். ஒரு தடவை வெளிநாட்டுக்கு ஊழியத்துக்கு வந்த போது யாரிடமும் காணிக்கை வாங்கவில்லை. அவரது விசுவாசம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. வட இந்தியாவுக்கு ஊழியத்துக்கு போகும் போது அவரது ஊழியத் தேவைக்கான பணத்தை தேவன் யார் மூலமாவது சந்தித்து விடுவாராம். தன் மகனை BTech வரை படிக்க வைத்திருக்கிறார். தேவனை நம்பி தேவனை சார்ந்து தேவசித்தப்படி ஊழியம் செய்பவர்களை தேவன் ஒரு போதும் கைவிடுவதில்லை. (மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 17:5.

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத்தன்வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். எரேமியா 17:7,8

 

இன்றைக்கும் தங்கள் தேவைகளுக்காகதேவனை நம்பி விசுவாசத்தோடு தேவனுடைய கரத்தை நோக்கி கொண்டிருக்கிற ஊழியக்காரர்களையும் விசுவாசிகளையும் தேவன் குறைவில்லாமல் நடத்துகிறார். (அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. சங்கீதம் 34-5) உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

சங்கீதம் 145-18 ஆமென்.

bottom of page