top of page

நொறுங்குண்டு பணிந்த ஆவியை உடையவன்

 

நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்:  உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.  ஏசாயா 57:15

ஒரு உண்மையான ஊழியக்காரனின் உள்ளம் எப்பொழுதும் மென்மையாக இருக்க வேண்டும்,அவன் ஒரு உடைந்த மனிதனாக இருப்பான். கண்டிப்புள்ளவனாக இருப்பான் ஆனால் கடினமாக இருக்க மாட்டான். மேடையில் ஆக்ரோஷமாக பேசினாலும் அறையில் குழந்தையை போல அழுது கொண்டிருப்பான். அவன் கண்கள் எப்பொழுதும் நனைந்து கொண்டிருக்கும்.அப்படிபட்டவர்களே எழுப்புதலை கொண்டு வருவார்கள்.அவர்கள் தான் கண்ணீரோடு விதைப்பார்கள்.கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அவர்கள் உயிர்பிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.ஒரு ஊழியக்காரனின் உள்ளம் உடைப்பட்டு கசிந்து உருகும் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.  அவனது போதனையால் மற்றவர்களின் இதயம் உடைப்பட்டு நொறுங்கும், தேவ வசனத்துக்கு கீழ்படியும்.இத்தகய ஊழியக்காரனே தேவன் தன் புத்திக்கு எட்டாத எதை சொன்னாலும் கேள்வி கேட்காமல் கீழ்படிவான்.தேவன் தன்னை பற்றி சொல்வதை தாழ்மையோடு ஒப்பு கொள்வான். மனிதன் பார்க்கும்படியாக மனிதனை பார்க்காமல் தேவன் பார்க்கும்படியாக மனிதனை பார்ப்பான்.அவனே பணிந்த ஆவியையுடையவன். அவனே ஆவியில் நொறுங்குண்டு தேவனை நோக்கி விண்ணப்பம் செய்வான் தேவதூதன் மரியாளைப் பார்த்து பெண்களிலே பேறு பெற்றவள். இயேசுவுக்கு தாயாக போகிறவள் என்று புகழ்ந்து பேசினான்.ஆனால் மரியாளோ இதோ நான் ஆண்டவருக்கு அடிமை உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.இது தான் உடைந்த இருதயம் பணிதலுள்ள இருதயம்.சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு தேவவசனத்துக்கு நடுங்கும் உள்ளம். (என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.  ஏசாயா 66:2).

இன்றைய திருசபையை மாபெரும் எழுப்புதலுக்கு கர்த்தர் ஆயத்தமாக்கி கொண்டு வருகிறார்.பேதைகளும் அற்பமாய் எண்ணப்பட்டவர்களும் அசாதாரண அபிஷேகத்தோடும் வல்லமையோடும் எழும்பி கொண்டிருக்கின்றனர். தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று பெருமையில் திளைத்த பலர் தாழ்த்தப்படுகின்றனர்.தேவனால் பயன்படுத்தப்பட்ட பலர் மனித புகழ்சிக்கு அடிபணிந்து தங்கள் தரிசனங்களை இழந்து தேவமகிமையற்று  போனார்கள்.ஆனால் தேவன் இன்றைக்கு ஆவியில் நொறுங்குண்ட பணிந்த ஆவியுடையவர்கள் உயிர்ப்பித்து பலவான்களாக மாற்றி வல்லமையாக பயன்படுத்துகிறார்.பலரது இதயங்கள் தேவனுக்கு நேராக சத்தியங்களுக்கு நேராக திரும்பி கொண்டிருக்கிறது.திருச்சபை தேவதிட்டங்களுக்கு தன்னை அற்பணித்து கொண்டிருக்கிறது.இந்த கடைசி கால எழுப்புதலில் நீங்கள் பங்குள்ளவர்களாக மாறும் படி இயேவை நோக்கி பாருங்கள்.லூக்கா 19 ம் அதிகாரத்தில் இயேசுவை  திரள் கூட்ட ஜனங்களும் சீஷர்களும் தாங்கள் கண்ட அற்புதங்களை குறித்து சந்தோஷப்பட்டு மிகுந்த சந்தோஷத்தோடே புகழ்ந்து பாடி அவரை வரவேற்றார்கள்.அவர் போகையில் அவர்கள் தங்கள் வஸ்திரங்களையெல்லாம் வழியிலே விரித்தார்கள்.ஆனால் இயேசுவோ எருசலேம் நகரத்துக்கு சமீபமாக வந்த போது அதற்காக கண்ணீர் விட்டழுதார். அவர் ஜனங்களுக்காக மனதுருகினார்.ஜனங்களுக்காக பிதாவிடம் மன்றாடினார்.

 

அவர் நொறுங்குண்டு பணிந்த ஆவியையுடையவராயிருந்தார்.அவருடைய அடிசுவடை பின்பற்றும் படியாக நம்மை ஒப்பு கொடுப்போம். (அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன்,  அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 யோவான் 2-6)  ஆமென்.

bottom of page