top of page

நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்

நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

 


பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவன் ஆபிரகாமோடு பேசின போது நானே கர்த்தர் என தம்மை வெளிப்படுத்தினார் . மோசேயோடு  முட்செடியின் நடுவிலிருந்து பேசின போது " ஆண்டவரே உம்முடைய நாமம் என்ன என்று நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு சொல்லுவேன்" என மோசே கேட்கிறார். அப்பொழுது  தேவன்  "இருக்கிறவராகவே இருக்கிறேன்", இதுவே என்றென்றைக்கும் என் நாமம்;  தலைமுறைக்கும் தலைமுறைக்கும் என் பேர்ப்பிரஸ்தாபம்  என்று தம்முடைய பரிசுத்த நாமத்தை வெளிப்படுத்துகிறார். அதே தேவன் தம்முடைய குமாரனின் சாயலில் தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்திய போது நானே என்று தம்மை அறிமுகப்படுத்துகிறார்.  நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம், நானே மெய்யான திராட்சை செடி, நானே உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கிறேன் என இயேசு கிறிஸ்து தம்முடைய தெய்வீக தன்மைகளை குறித்து வெளிப்படுத்தியதை  யோவான் மிக அழகாக தொகுத்துள்ளார். 

 


இயேசு கிறிஸ்து ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக்  கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்ததைக் கண்ட யூதர்கள் இயேசுவை மெய்யான தீர்க்கதரிசி எனக் கண்டுகொண்டனர். எனவே அவரை பிடித்து ராஜாவாக்கும்படி மனதாயிருந்தனர். இதனை அறிந்தவராய்  இயேசுகிறிஸ்து அவர்களை விட்டு விலகி சென்றாலும்  ,  ஜனங்கள் தொடர்ந்து  அவருக்கு பின்சென்றனர். அப்பம் புசித்து திருப்தியானதினாலே தன்னை ஜனங்கள் தேடுகிறார்கள் என்பதை  அறிந்த இயேசு கிறிஸ்து அவர்களிடம் "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்" என்றார். இப்படி மேசியா என அவரை விசுவாசியாமல் அழிந்து போகிற போஜனத்திற்காக அவரை பின்பற்றின யூதர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து "ஜீவ அப்பம் நானே" என்று தன்னை வெளிப்படுத்துகிறார். இந்த புதிய ஆண்டிலே நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.  அழித்து போகிற உலக காரியங்கள் நிறைவேற்றப்பட தேவனை தேடி ஓடுகிறோமா? இல்லை நித்திய ஜீவன் வரை நிலைநிற்கிற போஜனத்திற்காய் கிரியை நடப்பிக்கிறோமா? பிதாவாகிய தேவன் வானத்திருந்து மெய்யான அப்பமாகிய இயேசுகிறிஸ்துவை  கொடுத்திருந்தும் அதை உணர்ந்து கொள்ளாமல்  இந்த அப்பத்தை எங்களுக்கு எப்பொழுதும் தரவேண்டும் என்று கேட்ட யூதர்களுக்கு  இயேசுகிறிஸ்து சில ஆலோசனைகளை கூறினார். ஒவ்வொரு புதிய ஆண்டிலும் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே எதிர்நோக்கி  தேவனை தேடுவோமானால் இந்த ஆலோசனைகள் தியானிப்பது நமக்கும் பிரயோஜனமாக இருக்கும் என கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.

1. வாருங்கள் 

 


 ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்[யோவான்:6:35].
அப்பம் புசித்து திருப்தியானதினாலே தன்னை ஜனங்கள் தேடுகிறார்கள் என்பதை  அறிந்த இயேசு கிறிஸ்து “நானே உங்களுக்கு ஜீவனை கொடுக்கிற அப்பம். என்னிடத்தில் வாருங்கள் என அழைக்கிறார்.  இயேசுவை மேசியா என அறிந்துக் கொள்ளமுடியாமல் இருந்த யூத ஜனங்களுக்கு ஒரு அழைப்பை விடுக்கிறார். அப்பம் யூதர்களின் அன்றாட முக்கியமான உணவு.  உலகில் ஒரு  மனிதன் உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல நம்முடைய ஆத்துமா  ஜீவனுள்ளதாய்  வாழ மெய்யான அப்பமாகிய  இயேசுகிறிஸ்து மிகவும்  முக்கியம். உலக பிரகாரமான அப்பம் மனிதனின் சரீர பசியை அடக்குவது போல தேவ வார்த்தையாகிய அப்பத்தை நாம் உட்கொள்ளும் போது  ஆத்தும பசியை அடக்கும்.    நாம் யூதர்களை போல அழிந்து போகிற ஆசீர்வாதங்களுக்காய் அவரை தேடி பின்செல்லாமல் உண்மையாய் பின்செல்ல அழைக்கப்பட்டிருக்கிறோம். வேதம் கூறுகிறது ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்[ஏசாயா :55:1-3]. 
இரட்சிப்பை இலவசமாய் கொடுக்கிற தேவன் வாருங்கள் என நம்மை அழைக்கிறார். இரட்சிக்கப்பட்டிருந்தும் இன்னும் பழைய பாவ வாழ்க்கையில், உலக சிற்றின்பங்களில் மூழ்கி இரட்சிப்பின் சந்தோஷத்தை உண்மையாய் அனுபவிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறாயா? உலகவழிகளையே நாடி ஒடிக்கொண்டிருக்கிற  மகனே/மகளே பழைய ஆண்டின் பாவ வழிகளை தூக்கி  எறிந்துவிட்டு மெய்யான ஜீவ அப்பமாகிய தேவனிடம் வா. அவருக்கு உண்மையாய் செவிகொடுத்து ஜீவனில் பிரவேசி. வேதம் கூறுகிறது மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.  ஆம் அன்பானவர்களே தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் வல்லமையுள்ளது ஜீவனுள்ளது. இயேசுகிறிஸ்துவால் மட்டுமே நம் ஆத்துமபசியையும் சரீர பசியையும் போக்க முடியும். தன்னிடத்தில் உண்மையாய் வருகிறவனை அவர் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை. அவருக்கு உண்மையாய் செவிகொடுத்து தேவன் தந்த வார்த்தையாகிய மன்னாவை அனுதினமும் உட்கொள்ளுவோம். நித்திய ஜீவனில் நிலைத்திருப்போம் .

 

 

2. விசுவாசியுங்கள் 

 


ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான் [யோவான்:6:35]. பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு இயேசுவினிடம் வந்த நாம் இரட்சிப்பின் ஊற்றில் அனுதினமும் விசுவாசத்தோடு பருக வேண்டும். இயேசுவைக்  கண்டிருந்தும் விசுவாசியாமலிருந்த யூதர்களுக்கு இயேசு கூறுகிறார்  "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது". விசுவாசமில்லாமல் நாம் இரட்சிக்கப்படவோ இரட்சிப்பின் அனுபவத்தில் நிலைத்திருக்கவோ முடியாது. நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தோம்; இரட்சிக்கப்பட்டோம், ஆனால் முடிவுப்பரியந்தம் நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய விசுவாசம் அனுதின வாழ்க்கையிலே கிரியை செய்கிறதாய் தேவரீர் தந்த இரட்சிப்பை வெளிப்படுத்துகிறதாய் இருக்க வேண்டும். 


தன்  சொந்த குமாரனைக்  கொடுக்கும் அளவுக்கு  ஆபிரகாமின் விசுவாசம் கிரியையில் வெளிப்பட்டது. விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே  கூட முயற்சி செய்து கிரியைகளினாலே பூரணப்பட்டது. [யாக்கோபு:2:22]. நம்முடைய விசுவாசம் எப்படியாய் இருக்கிறது? சற்று சிந்தித்து பார்ப்போம்? போராட்டங்கள் பாடுகளில் நம்முடைய விசுவாச வாழ்க்கையின் மூலம் தேவனின் மகத்துவத்தை உலகத்தார் அறிந்து தேவனை மகிமைப்படுத்துகிறார்களா? இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசத்தோடு எகிப்தை விட்டு புறப்பட்டனர். ஆனால் பாதையில் போராட்டங்கள் கஷ்டங்கள் வந்த போது சர்வ வல்லமையுள்ளவராய் தேவன் அவர்களோடிருந்ததை மறந்து அவிசுவாசத்தினால் முறுமுறுத்தனர். அநேக சூழ்நிலைகளில் நம்முடைய விசுவாசமும் இஸ்ரவேல் ஜனங்களைப் போல குன்றிப்போகிறது அல்லவா? வேதம் கூறுகிறது பிதா அனுப்பின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாய் இருக்கிறது. நம் தேவாதி தேவன் சர்வ வல்லமையுள்ளவர்; சர்வ லோகாதிபதி, எல்லாவற்றையும் அறிந்தவர். நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எல்லாவற்றையும்  அறிந்தவர் அவர் ஒருவரே. இம்மானுவேலராய் அவர் என்றென்றைக்கும் நம்மோடிருக்கிறார். என்னுடைய எல்லா தேவைகளையும் என்  தேவன் பார்த்துக் கொள்ளுவார் என்ற விசுவாசம் நம் ஆழ்மனதில் ஒலிக்கட்டும். எனவே இந்த புதிய ஆண்டில் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து உற்சாகத்தோடு தேவனுக்காய் ஓடுவோம். நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளுவோம்.

3. புசியுங்கள்

 


நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்[யோவான்:6:51].


வானத்திலிருந்து இறங்கி வந்து நம்மை மீட்கும் படியாய் தம்முடைய சொந்த சரீரத்தையே பானபலியாக ஒப்புக்கொடுத்து தம் பரிசுத்த இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டவர் இயேசு கிறிஸ்து. அவர் கூறுகிறார் ஜீவஅப்பமாகிய என்னை புசியுங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள். ஆம் அன்பானவர்களே பாவத்தின் சம்பளம் மரணம். அவருடைய சரீரம் நமக்காய் ஒப்புக்கொடுக்கப்பட்டபடியினால் நாம் பாவத்தினின்று விடுதலையாகி மரணத்திற்கு நீங்கி பிழைத்துக்கொண்டோம். இயேசுகிறிஸ்து  அவருடைய இரத்தத்தினால் நம்மோடு புதுஉடன்படிக்கை செய்திருக்கிறார். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்[யோவான் 6:58]. வேதம் கூறுகிறது நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?[Iகொரிந்தியர்:10:16]. கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும் போது நாம் அவருடைய சரீரத்தின் அங்கமாகிறோம். பாவத்தினால் நமக்கும் தேவனுக்கும் இருந்து பிரிவினையை விலகி  கிறிஸ்துவின் இரத்தத்தினால் பிதாவோடு ஐக்கியபட்டிருக்கிறோம். அவருடைய பிள்ளைகளாய் கிருபாசனத்தண்டையில் சேரும் பாக்கியத்தை பெற்றுள்ளோம். இதனை பார்க்கிலும் மேன்மை நமக்கு எதுவுமில்லை.   
கடந்த ஆண்டில் எனக்கும் தேவனுக்குமான உறவு எப்படி இருந்தது? நம்மை சீர்தூக்கி பார்ப்போம் அன்பானவர்களே. இந்த புதிய ஆண்டில் தேவ உறவை இன்னும் பலப்படுத்துவோம். அவருடைய சரீரத்தின் அங்கமாய் உற்சாகத்தோடு அவருக்காய் உழைப்போம். இயேசு கிறிஸ்து வார்த்தையாய் ஜீவமன்னாவாய்  இன்றும் நம்மோடு ஜீவிக்கிறார். வேதம் கூறுகிறது கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள். உதாரணமாக நமக்கு முன்பாக ஒரு தட்டில் சுவையான உணவு இருக்கிறது என வைத்து கொள்ளுங்கள். நமக்குமுன் இருப்பதால் நாம் சுவையை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் அந்த உணவை எடுத்து வாயில் போட்டு சுவைத்து உண்டால் மட்டுமே அதின் ருசியை அறிந்துகொள்ள முடியும். அதே போல தான் தேவன் நம்மோடிருக்கிறார். அவருடைய வார்த்தைகள் நமக்கு மன்னாவாக உட்கொள்ள கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் அதை அனுதினமும் உட்கொண்டால் மட்டுமே தேவன் நல்லவர், தயை உள்ளவரென்பதை நம் வாழ்க்கையில் சுவைத்து அறிந்து கொள்ள முடியும். தேவ வார்த்தையாகிய   மன்னாவை அனுதினமும் சுவைத்து மகிழ்வோம். நம்  உள்ளான மனிதன் அனுதினமும் புதுப்பிக்கப்படட்டும், தேவ சாயலாய் மாறுவோம்.


கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இந்த புதிய ஆண்டு அற்பமாய் ஆரம்பிப்பதை போல நமக்கு தோன்றலாம் , ஆனால் முடிவோ சம்பூரணாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த ஆண்டு முழுவதும்  ஜீவஅப்பமாய் தேவன் நம்மோடிருக்க போகிறார். அல்லேலூயா! முதலாவது பழையன எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு இயேசுவிடம் வந்து சேருவோம். மகனே மகளே பழைய ஆண்டில் உன்னை உருக்குலைத்த  பாவங்கள்  தோல்விகள் பாடுகள் வெறுப்புகள் கசப்புகள் வைராக்கியங்கள் சோர்புகள் கண்ணீர்கள் கவலைகள் பயங்கள் நோய்கள் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு ஜீவஅப்பமாகிய என்னிடம் வா என்று நம் ஒவ்வொருவரையும் அன்புடன் அழைக்கிறார். இரண்டாவது அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல நித்திய ஜீவன் வரை நிலைத்திருக்கிற கிரியை நடப்பிக்க என்னிடத்தில் விசுவாசமாயிரு என்கிறார். சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவின் விசுவாசம் நம்மில் துளிர்க்கட்டும். மூன்றாவதாக ஜீவஅப்பமாகிய தேவ வார்த்தைகளை புசித்து தேவனில் ஐக்கியப்பட்டிருப்போம்.ஒப்புக்கொடுப்போமா?என்னிடத்தில் வா, விசுவாசத்தோடு என்னில் நிலைத்திரு; என்னோடு ஐக்கியப்பட்டிரு என்னுடைய உறவில் நிலைத்திரு என்ற அவரின் அழைப்பிற்கு செவிகொடுப்போம். 


அன்பானவர்களே இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்[Iகொரிந்தியர்:15:19]. ஆண்டவரே  இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்று கேட்ட பேதுருவிடம் இயேசு கிறிஸ்து , இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.ஆம் ஆண்பானவர்களே உண்மையாய்  தேவனிடத்தில் சேருவோம், விசுவாசத்தில் நிலைத்திருப்போம், தேவ உறவில்  ஐக்கியப்பட்டிருப்போம். இந்த புதிய ஆண்டில் தேவ ராஜ்ஜியத்தை கட்டும்படி புதிய உற்சாகத்தோடு புதிய பெலனோடு ஓடுவோம்.  கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் தேவன் நம்மை நிரப்பி வழிநடத்துவாராக. ஆமென்.

bottom of page