இழப்புகளைச் சரிசெய்கிறவர் [ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ]
வசனம்: நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சுகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். யோவேல் 2:25
இதே காரியத்தை சங்கீதக்காரன் ஜெபமாக செய்வதை பார்க்கலாம், எப்படியென்றால், தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். சங்கீதம் 90:15
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இந்த வருடமானது நஷ்டங்களை, இழப்புகளை சரிசெய்கிற ஒரு வருடமாகவும் மற்றும் எல்லா ஊழியத்திலும் அபரிதமான வளர்ச்சியையும் கொடுக்கிற ஒரு வருடமாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமேயில்லை, இத்தகைய காரியம் வேதாகமத்தில் இருக்கிறதா என்று பார்ப்பீர்களானால், வேதம் சொல்லுகிறது
லூக்கா 19:10 – இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். ஆம் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் ஏதேன் தோட்டத்தில் பாவத்தின் நிமித்தம் இழந்து போன வாழ்க்கையை பெற்றுத் தரும்படியாக வந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மறுபடியும் இந்த 2019 ஆம் வருடத்தில் நீங்கள் 2018 ஆம் வருடத்தில் சந்தித்த இழப்புகள், சமாதானமின்மை, வேதனைகள், கடன்பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஈடு செய்ய வந்திருக்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆகவே எவைகள் உங்கள் நஷ்டத்திற்கு காரணமாய் இருந்ததோ அவைகள் மூலம் உங்களுக்கு சமாதானத்தை கட்டளையிடப்போகிறார், பாருங்கள் இயேசு தம்முடைய சீஷர்களை விட்டு பரலோகத்திற்கு கடந்து போகும் போது சீஷர்கள் கவலையுடனும், குழப்பத்துடனும் காணப்பட்டனர்.
அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து சொன்னக் காரியம் உங்களுக்கு சமாதானத்தை வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிற பிரகாரம் உங்களுக்கு நான் கொடுப்பதில்லை, உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக என்றார், அவருடைய சமாதானம் எப்படியிருக்கிறது.
ஒரு தடவை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுடன் கடலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார் அப்பொழுது பயங்கரமான காற்றும் புயலும் அடித்தது, ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சுகமான நித்திரையில் இருந்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம், ஆம் இதேபோல இந்த வருடத்தில் நீங்கள் சுகமான நித்திரையை அனுபவிப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு முன்பாக இருக்கிற எல்லாத் தடைகளையும் கர்த்தர் இந்த வருடத்தில் உடைத்துப் போடப் போகிறார். எப்படியென்றால்
ஏசாயா 10:22 – அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையையும் உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும், அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
இதோ அனேக நாளாய் நீ சுமந்து கொண்டிருக்கிற பாரங்களை கர்த்தர் இந்த வருடத்தில் இறக்கி வைக்கப்போகிறார். எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே உங்கள் பாரங்கள் எதுவாக இருந்தாலும் இந்த நாளில் அதையெல்லாம் கர்த்தருடைய சமுகத்தில் இறக்கி வைத்து விடுங்கள். அவர் எல்லாவற்றையும் சுமக்க தயாராக இருக்கிறார். ஆகவேதான் கர்த்தர் இப்படியாக எழுதிவைத்திருக்கிறார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன். மத்தேயு 11:28. உங்கள் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் கர்த்தர் பதில் கொடுக்கிற ஒரு வருடமாய் இந்த 2019 ஆம் வருடம் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
முத்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் நம்மைப் பார்த்து சொல்லுகிறார் . ஆகாய் 2:9 ஏனென்றால் முந்தின ஆலயத்தைக் கட்டினது சாலமோன் ராஜா ஆனால் பிந்தின ஆலயத்தைக் கட்டப்போகிறது யார் என்றால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
கர்த்தர் நமக்கு கொடுக்கிற வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க வேண்டுமானால் மூன்றுவிதமான நிபந்தனைகளை தேவன் நமக்கு முன்பாக வைக்கார்.
1.கர்த்தரிடத்தில் திரும்புங்கள்
2.சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள்
3.கீழ்ப்படியுங்கள்
இந்த மூன்று காரியங்கள் உங்களுடைய வாழ்க்கையில் இருக்குமானால் நிச்சயமாக நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவதை எவராலும் தடுக்கவே முடியாது.
1.முதலாவது நிபந்தனை: கர்த்தரிடத்தில் திரும்புங்கள்
வேதம் சொல்லுகிறது, 11 நாளாகமம் 7:14 – என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன். ஏசாயா 44:22 – என்னிடத்தில் திரும்பு உன்னை நான் மீட்டுக் கொண்டேன். ஏசாயா 19:22 – கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார் அடித்துக் குணமாக்குவார், அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் விண்ணப்பதைக் கேட்டு அவர்களைக் குணமாக்குவார்
நீதி 1:23 – என் கடிந்து கொள்ளுதலுக்குத் திரும்புங்கள் இதோ என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்
வெளி 2:5 – ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக
ஏசாயா 55:7 – துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரர் தன் நினைவுகளையும் விட்டு கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன் அவர் அவன்மேல் மனதுருகுவார், நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன், அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
ரூத் அதிகாரத்தில் நகோமி என்கிற ஒரு ஸ்திரீயைக் குறித்துப் பார்க்கிறோம். அவர்கள் தங்கியிருந்த இடம் ஆசீர்வாதமான, சமாதானத்தைக் கொடுக்கிற அப்பத்தின் வீடாகிய யூதாவிலுள்ள பெத்தேலகேம் என்று பார்க்கிறோம். இந்த இடத்தில் நகோமி தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள்.
திடீரென இந்த ஆசீர்வாதமான இடத்தில் கர்த்தர் பஞ்சத்தை அனுமதிக்கிறார், இந்த பஞ்சம் நகோமியையும் விட்டு வைக்கவில்லை, ஆனால் இந்த தற்காலிமான பஞ்சத்தின் நிமித்தம் நகோமி ஆசீர்வாதமான இடத்தை விட்டு அதாவது கர்த்தரை விட்டு போக முடிவு செய்தாள், இதோ கர்த்தர் ஆசீர்வதித்தப் போது கர்த்தரைக் குறித்து சாட்சி சொன்னவள் இப்பொழுது கர்த்தர் வைத்த பரீட்சையை சந்திக்க முடியாமல் வேறே தேசத்துக்குக் கடந்து செல்கிறாள்.
எப்படிப்பட்ட தேசத்தை அவள் தேர்வு செய்கிறாள் தெரியுமா? கர்த்தரால் சபிக்கப்பட்ட கர்த்தர் அருவருக்கிற சந்ததியினர் வாழுகிற இடத்தை தேர்வு செய்கிறாள். இதற்கு காரணம் என்ன தெரியுமா? இவளுடைய உலக மயக்கம். இந்த ஸ்திரீயானவள் கர்த்தரை நேசிப்பதற்குப் பதிலாக கர்த்தர் கொடுத்த உலக ஆசீர்வாதத்தையே மேலாக எண்ணினாள் ஆகவே உலகம் இவளுடைய கண்களை கர்த்தருடைய கற்பனைகளைக் கவனிக்கக் கூடாதப்படிக்கு மறைத்து விட்டன. லோத்தைப் போல அதுவரைக்கும் தன்னை பராமரித்து வந்த ஆபிரகாமை உலகத்தின் செழிப்பை லோத் கண்டவுடனே ஆபிரகாமை மறந்து விட்டான்.
இன்று நம்மில் அனைவரும் இதேபோலத்தான் உலக மயக்கத்தினால் சூழப்பட்டு கர்த்தரை விட்டு விலகிப் போகிறவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதனால் நகோமி பிசாசின் பரீட்சையில் அகப்பட்டுக் கொண்டாள், சில நேரங்களில் நாம் கர்த்தர் வைத்த பரீட்சை சந்திக்காமல் தப்பித்து செல்லும் போது பிசாசின் சோதனைக்கு உள்ளாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
கர்த்தர் பரீட்சை வைக்கும் போது அவரும் நம்மோடு வருவார் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே நகோமி இப்பொழுது தன்னுடைய மனதை கர்த்தரிடம் திருப்பினாள் என்ன நடந்தது, கசப்பாய் இருந்தவள் இப்பொழுது மறுபடியும் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் மாறினாள் என்று ரூத் அதிகாரத்தை வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த புதிய ஆண்டிலே கர்த்தர் அற்புதங்களையும் அதிசயங்களையும் தன்னுடைய வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தயவு செய்து இந்த உலகத்தை மறந்து கர்த்தரிடம் திரும்புங்கள் என்று அறிவுரை சொல்லுகிறேன்.
கர்த்தரை சந்திக்க ஆயத்தப்படுங்கள், கர்த்தர் சீக்கிரமாய் வரப் போகிறார்
2.இரண்டாவது நிபந்தனை: சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும்
கர்த்தரிடத்தில் இருந்து அதாவது சொர்க்கத்திலிருந்து எதையாகிலும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அல்லது கர்த்தர் நமக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமானால் நமக்கு விசுவாசம் வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது, அதுமட்டுமல்லாமல் அந்த விசுவாசம் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? அதில் சிறுதும் கூட சந்தேகம் என்கிற கலப்படம் இருக்கக் கூடாது.
வேதம் சொல்லுகிறது, ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலில் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். யாக்கோபு 1:6
ஏன் நம்மால் பெரிய அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய முடியவில்லையென்றால் விசுவாசத்தை நமக்குள் கொண்டு வருகிற கர்த்தருடைய வார்த்தை நமக்குள் இல்லை. பிசாசானவனுக்கு நம்மிடத்தில் உள்ள பொன்னோ அல்லது வெள்ளியோ அல்லது பணமோ தேவையில்லை மாறாக நம்மிடத்தில் விதைக்கப்படுகிற கர்த்தருடைய வார்த்தை மாத்திரமே போதும்.
எதற்காக அவன் நம்மிடத்தில் கர்த்தருடைய வார்த்தையை திருட வேண்டும், வேதம் சொல்லுகிறது, விசுவாசம் கேளிவியினால் வரும் கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் 10:17
இதோ விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் வந்துக் கூடாது எனபதற்காகத் தான் அவன், லூக்கா 8:12 ல் சொல்லப்பட்டது போல, அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்கு பிசாசானவன் வந்து அவ்வசனத்தை நம்மிடத்தில் இருந்து எடுத்துப் போடுகிறான்.
எனக்குப் பிரியமான ஜனங்களே இந்த 2019 ஆம் ஆண்டில் விசுவாசத்தை அதிகமாக வளர்த்துக் கொள்ளுங்கள் அதுமட்டுமல்லாமல் வார்த்தையை அதிகமாக தியானியுங்கள் ஏனென்றால் விசுவாசமில்லாமல் கர்த்தருக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று எபிரெயர் 11:6 சொல்லுகிறது.
பாருங்கள், தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கன்வென்ஷன் கூட்டத்திற்காக ஒரு போதகர் கேரளா மாநிலத்தில் இருந்து வந்திருந்தார். அன்று கூட்டம் முடிந்தவுடன் ஒரு மனுஷன் ஜெபம் பண்ணும்படியாக அவரிடத்தில் கடந்து வந்தார். அந்த போதகரிடத்தில் இந்த மனுஷன் இவ்வாறாக சொன்னான்.
ஐயா ரொம்ப நாளாய் என்னுடைய கிணற்றில் தண்ணீரே இல்லை. ஆகவே எனக்காக ஜெபியுங்கள் என்று சொன்னார். அந்த போதகரும் ஜெபித்து விட்டு, நாளைக்கு உன்னுடைய கிணற்றிலே தண்ணீரை பார்ப்பாய் என்று விசுவாசத்துடன் சொன்னார். என்ன நடந்தது தெரியுமா? அடுத்த நாள் காலையிலே அந்த மனிதர் ஒரு பெரிய பாத்திரத்தை கயிற்றுடன் கட்டி நேராக அந்த போதகரின் வாசலில் நின்று கதவைத் தட்டினாராம், கதவு தட்டுகிற சத்தம் கேட்டு அந்த போதகரும் எழுந்து கதவைத் திறந்து பார்த்தார். வாசலில் ஒரு மனுஷன் பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்து உனக்கு என்ன வேணும் என்று கேட்டார்.
உடனே அந்த மனுஷன் ஐயா நேற்று நீங்கள் ஜெபித்து விட்டு சொன்னீர்கள் நாளை உன்னுடைய கிணற்றில் தண்ணீர் வரும் என்பதாக ஆகவே உங்களையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு போகலாம் என்று வந்தேன் என்றார். இதைக் கேட்ட அந்தப் போதகருக்கு சிறிய நடுக்கம் வந்தது, ஆனாலும் அந்த மனுஷன் ஐயா பயப்படாதேயுங்கள், நிச்சயமாக கர்த்தர் தண்ணீர் தருவார் என்று விசுவாசத்துடன் பதில் அளித்தார்.
என்ன அதிசயம் அங்கே சென்று பார்த்தப் போது இதோ கிணற்றில் மேல் வரை தண்ணீர் கிடந்தது. எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே நாம் அனேக நேரம் கர்த்தரை விசுவாசிக்காதக் காரணத்தினால்தான் நம்முடைய கிணற்றில் அடிக்கடி தண்ணீர் இல்லாமல் போகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
வேதம் சொல்லுகிறது, மேலும் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் இயேசு அவளை நோக்கி நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்றார். மத்தேயு 21:22 மற்றும் யோவான் 11:40
3.மூன்றாவது நிபந்தனை: கீழ்ப்படிதல்
1சாமுவேல் 15:22 – அதற்குச் சாமுவேல் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும் ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் அப்போஸ்தலர் 5:29 லும் இதே காரியத்தையே கர்த்தர் சொல்லியிருப்பார்.
சவுல் என்கிற மனுஷன் தன்னுடைய வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிதலைக் காண்பிக்கவில்லை ஆகவே தன்னுடைய ராஜ்ஜியத்தையே இழந்து போனான் என்று பார்க்கிறோம். கிறிஸ்தவ விசுவாசிகளின் வாழ்க்கையில் காணப்படுகிற நற்குண நலன்களில் ஒன்று கீழ்ப்படிதல் ஆகும். நாம் உலகத்திற்கு முன்பாக எஜமான்களாக இருக்கலாம்.
ராஜாக்களாக இருக்கலாம் அல்லது ஒரு ஸ்தாபனத்தின் அதிகாரியாக இருக்கலாம் ஆனால் கிறிஸ்துவுக்கு முன்பாக நாம் எல்லாரும் அடிமைகள் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் கர்த்தருக்கு தசமபாகம் கொடுக்கலாம், கோடிகோடியாக காணிக்கைகளை கொடுக்கலாம். ஆனால் கீழ்ப்படிதலை கொடுக்கவில்லையென்றால் உங்களுடைய வாழ்க்கையில் ஆசீர்வாதம் கடந்து வராது.
ஒருவேளை உலகத்தின் ஆசீர்வாதம் அதிகமாக இருந்தாலும் சமாதானமாக அவைகளை அநுபவிக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள். வேதம் சொல்லுகிறது,
யாக்கோபு 4:7 – ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படியுங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். நீங்கள் கர்த்தருக்கு ஆலோசனைக்காரராக இருக்க வேண்டும் அவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும்.
லூக்கா 5:4,5,6 – அதற்கு சீமோன் ஐயரே இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை ஆகிலும் உம்முடைய வார்த்தையின் படியே வலையைப் போடுகிறேன் என்றார்.
அந்தப்படியே அவர்கள் செய்து தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
எனக்குப்பிரியமான ஜனங்களே இந்த சீமோன் பேதுருவுக்கு கடலைப் பற்றி நன்றாக தெரியும், அந்த மனுஷனுக்கு எங்கே மீன்கள் இருக்கும் எந்த இடத்தில் மீன்கள் இருக்காது என்பதெல்லாம் நன்றாக தெரியும் ஆனாலும் அவர் இப்படியாக சொல்லுகிறார் ஆண்டவரே ஆனாலும் உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வலையைப் போடுகிறோம் என்பதாக இதனால் அதிக மீன்களைப் பிடிக்க முடிந்தது. நம்முடைய படகில் இயேசு கிறிஸ்து இருக்கிறாரா? மற்றும் இயேசுவுக்கு காண்பிக்கப்படுகிற கீழ்ப்படிதல் இருக்கிறதா? என்பதை சோதித்துப் பாருங்கள். அனேக நேரம் நம்முடைய படகில் இயேசு இல்லாததின் நிமித்தமே நம்முடைய படகு வெறுமையாகவும் அதிக இடத்தில் சேதம் அடைந்தவர்களாகவும் சமுத்திரத்தில் இருந்து திரும்பி வருகிறோம்.
ஆகவே இந்த 2019 ஆம் வருடத்திலாவது கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவரோடு கூட பிரயாணம் செய்வோம் அப்பொழுது மாத்திரமே இதுவரை இழந்தவைகளை நாம் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த கிழ்ப்படிதல் நம்மிடத்தில் வரவேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன தெரியுமா?
அப்.பவுல் எழுதுகிறார், ஆகிலும் எனக்கு லாபமாயிருந்தவைகள் எவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன் அதுமாத்திரமல்ல என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் – பிலிப்பியர் 3:7,8.
கர்த்தர் தாமே இந்த போஜனத்தின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!