top of page

ஜெபமும் தெளிந்த புத்தியும்

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 1 பேதுரு 4:7.

ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 12-12.

 

இந்த கடைசி காலத்தில் தேவ வல்லமை அதாவது பின்மாரியின் மழை ஊற்றப்படும் நேரம்.ஆனால் மறுபக்கம் பிசாசின் வல்லமைகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் பூமியில் இருப்பவர்கள் இருளின் வல்லமைகளாலும் அதிகாரங்களாலும் பாதிக்கப்படுவார்கள்.இதை தான் தீங்கு நாள்கள் வருவதால் தேவனுடைய சர்வாயுதவர்கத்தை தரித்து கொள்ளுங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். (ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.எபேசியர் 6:12,13).

மேலும் 18 ம் வசனத்தில் எந்த சமயத்திலும் பரிசுத்த ஆவியினாலே ஜெபம் பண்ணி எப்பொழுதும் விழித்து கொண்டிருங்கள் என்று பவுல் எச்சரிக்கிறார்.இன்றைக்கு உலகத்தில் எந்த பக்கம் பார்த்தாலும் போராட்டங்கள் பாவங்கள் அருவருப்புகள். மனிதர்கள் பணப்பிரியர்களாகவும் தற்பிரியர்களாகவும் சுபாவ அன்பு இல்லாதவர்களாகவும் மாறிவிட்டனர், எங்கு பார்த்தாலும் கொள்ளை நோய்கள். சபைகளில் தேவபயம் இல்லை. அநேக ஊழியக்காரர்கள் உலக ஆசை இச்சைகளில் மயங்கி விழுந்து விடுகின்றனர், அநேக ஊழியக்காரர்களும் விசுவாசிகளும்  உலகத்தை நேசித்து அன்னிய நுகத்தோடு பிணைந்து விடுவார்கள். ஜனங்களை பரிசுத்ததிலிருந்து விலகி செல்லும்படியான கள்ள உபதேசங்கள் தீவிரித்து வருகின்றன. அநேகருடைய இருதயங்கள் சோர்ந்து போகும். அநேகர் தேவன் மேலுள்ள  விசுவாசத்திலிருந்து விழுந்துவிடுவார்கள்.

 

எனவே தான் நிற்கிறேன் என்று சொல்கிறவன் விழாதபடி எச்சரிக்கையாக இருக்க கடவன் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.  (ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ லூக்கா 18-8 என்று இயேசு எச்சரித்தார்).

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்1 பேதுரு 5-8. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் ஜெபிக்க சென்றார்.அவர் சீஷர்களிடத்தில் வந்து அவர்கள் நித்திரை பண்ணுகிறதை கண்டு பேதுருவை  நோக்கி நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடே கூட விழித்திருக்க கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளது தான்,மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். இரண்டாவது தடவையும் அவர் வந்து பார்த்த போது இவர்கள் மீண்டும் நித்திரை பண்ணி கொண்டிருந்தார்கள்.ஜெபித்து கொண்டிருந்த இயேசுவோ சிலுவையில் தேவ சித்தத்தை நிறைவேற்றி வெற்றி சிறந்தார், தூங்கி கொண்டிருந்த பேதுருவோ கோபத்தில் போர் சேவகனின் காதை வெட்டினான்.அதுமாத்திரமல்ல வேலைக்காரியின் முன்பாக பயந்து போய் இயேசுவை மறுதலித்தான்.பேதுரு இயேசுவை மறுதலிப்பதற்கு முக்கிய காரணம் அவன் ஜெபிக்காமல் தூங்கி கொண்டிருந்ததேயாகும்.

 

இன்றைக்கு ஜெபிக்காத அநேகரை பிசாசானவன் வஞ்சித்து பாவத்திலும் கள்ள உபதேசத்திலும் அடிமைபடுத்தி விலைமதிக்க முடியாத இரட்சிப்பை விட்டு விலகி செல்லும்படி செய்கிறான். ஜெபிக்காத அநேகர் சத்தியத்தை விட்டு விலகி சடுதியில் நாசமடைகிறார்கள் என்பதே உண்மை. எனவே இந்த கடைசி நாள்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து  ஜெபிக்கும் காலம்.தேவ சமூகத்தில் காத்திருந்து சத்துவத்தையும் வல்லமையையும் பெற்று கொள்ளும் காலம். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புதுபெலனடைந்து கழுகுகளை போல செட்டைகளை அடித்து உயரே எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள்.நடந்தாலும் சோர்ந்து போகார்கள். அல்லேலுயா.அன்றைக்கு பிசாசினால் ஆளுகை செய்யப்பட்ட வாலிபன் பிசாசு துரத்தப்பட்டவுடன் புத்தி தெளிந்தவனாய் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்தான்.

 

இன்றைக்கு அநேகரிடம் தெளிந்த புத்தி மற்றும் அமர்ந்த தண்ணீரின் அனுபவங்கள் இல்லை.உலக ஆவியினால் ஆளுகை செய்யப்பட்டு உலகத்தானாகவே இருக்கிறார்கள். அவர்கள் உலகத்தின் ஆவியினாலே ஆளுகை செய்யப்படுவதால் சோதனை வந்தவுடன் தேவனை விட்டு விட்டு உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து விடுகிறார்கள்.ஆனால் தேவ சமூகத்தில் ஜெபிப்பவர்களோ தெளிந்த புத்தியை பெற்று கொண்டு சோதனையை மேற்கொண்டு சூழ்நிலைகளை தாண்டி செல்கிறார்கள். அதுமாத்திரமல்ல தேவ சமூகத்தில் உபவாசத்தோடு தரித்திருந்து ஜெபிப்பவர்களே பரிசுத்தம் மேல் பரிசுத்தமடைகிறார்கள். இவர்கள் தான் தேவனை தரிசிப்பார்கள். இந்த கடைசி காலத்தில்  அநேக சபைகள் ஜெபிக்காமல் தூங்கி கொண்டிருக்கின்றன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதிகாலையில் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுகிறவராகவே காணப்பட்டார்.அவரது ஊழியத்தில் அதிகமான நேரத்தை ஜெபத்திலே செலவிட்டார். ஊழியக்காரர்கள் ஜனங்களை இயேசு காட்டிய மாதிரியை பின்பற்றும்படி நடத்துவதில்லை.ஏனென்றால் அவர்களே இயேசுவின் அடிசுவடை பின்பற்றுவதில்லை. அவர்கள் அதிகமாக ஊழியம் செய்து சோர்ந்து போய்விடுகிறார்கள் என்பதே உண்மை.அநேக சபைகள் ஆராதனைகளிலும் பொழுது போக்குகளிலும் போலியான ஆவிக்குறிய காரியங்களிலும் தங்கள் நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கின்றனர்.விசுவாசிகள் நேரத்தின் முதல் பலனான அதிகாலை வேளையை தேவனுக்கு கொடுப்பது மிகவும் மேன்மையானது.    (என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;: அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

நீதிமொழிகள் 8-17)ஆனால் தேவனை நேசிக்கிற ஒரு கூட்டம் ஜனங்கள் அதிகாலையில் எழுந்து  தாகத்தோடு அவர் சமூகத்தில் காத்திருந்து அவரது கிருபையை அதிகமாக பெற்று கொள்கிறார்கள்.

எனவே இந்த கடைசி நாள்களில் உங்கள் பிள்ளைகள் மற்றும் வாலிபர்களை ஜெபிக்க வையுங்கள். ஜெபிப்பது என்றால் சாதாரணமான ஜெபம் அல்ல, தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ வல்லமையை தேவ மகிமையை பெற்று கொள்ளும்படியான ஜெபம், இதை தான் சீஷர்கள் மேல்வீட்டரையில் பெற்று கொண்டார்கள். தேவ வல்லமையை அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று கொண்டவர்கள் அதன் பிறகு முடிவு பரியந்தம் தேவனுக்கு சாட்சியாக காணப்பட்டார்கள்.இந்த கடைசி காலத்தில் நம்முடைய தனிப்பட்ட ஜெப வாழ்க்கை தான் நமக்கு ஜெயத்தை தந்து தேவனுக்கு முன்பாக நம்மை பாத்திரவானாக நிறுத்தும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் (லூக்21-36) என்று இயேசு சொன்னதற்கு நாம் கீழ்படிவோம். ஆமென்.

bottom of page